தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவும், தேர்வுகளில் (TNPSC, TET) முழு மதிப்பெண் பெறவும் இலக்கணத் தெளிவு மிக அவசியம். பிழைதிருத்தத்தில் நாம் கவனிக்க வேண்டிய நான்கு முக்கியப் பிரிவுகளை விரிவாகப் பார்ப்போம்.
TNPSC Group 2, 4 (VAO) மற்றும் TET தேர்வுகளில் பொதுத்தமிழ் (General Tamil) பகுதியில் மிக எளிதாக மதிப்பெண்களை அள்ளக்கூடிய தலைப்பு "சொல்லகராதி : பிழை திருத்துக" (Error Correction) ஆகும். தமிழ்மொழியின் இலக்கண விதிகளை அறிந்து, பிழையின்றி எழுதும் திறனை வளர்த்துக்கொள்வது அரசுத் தேர்வுகளுக்கு மட்டுமன்றி, நமது அன்றாடத் தகவல் தொடர்பிற்கும் மிக அவசியமானது. இக்கட்டுரையில், தேர்வு நோக்கில் பிழை திருத்துதல் (Error Correction) முறைகள்,எழுத்துப் பிழை, பொருட்பிழை, சொற்பொருட்பிழை மற்றும் சொற்றொடர்ப்பிழை போன்ற அனைத்து இலக்கணக் குறிப்புகளையும் மிக எளிமையான விளக்கங்கள், அட்டவணைகள் மற்றும் முந்தைய ஆண்டு வினா-விடைத் தொகுப்புகளுடன் (PYQ & Study Material PDF) விரிவாகக் காண்போம்.
TNPSC old syllabus - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 6. பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது.
இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும்.
TNPSC முந்தைய ஆண்டு வினா-விடைகள் (Previous Year Questions)
போட்டித் தேர்வுகளில் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்கள் மற்றும் அவற்றிற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. பிழையான தொடரைக் கண்டறிக (CCSE-II 2025):
விடையைக் காட்டு (Show Answer)
2. பிழை திருத்துக (CCSE-II 2025): "மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்."
விடையைக் காட்டு (Show Answer)
3. பிழையற்ற தொடரைத் தேர்க (CCSE-II 2025):
விடையைக் காட்டு (Show Answer)
4. பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக (CCSE-IV 2025):
விடையைக் காட்டு (Show Answer)
5. எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க (CCSE-IV 2025):
விடையைக் காட்டு (Show Answer)
6. பிழை திருத்துக (CCSE-IV 2025): "கூற்று: ஒரு அணில் மரத்தில் ஏறியது. காரணம்: உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு 'ஓர்' பயன்படுத்த வேண்டும்."
விடையைக் காட்டு (Show Answer)
7. பிழையான தொடரைக் கண்டறிக (CCSE-IV 2025):
விடையைக் காட்டு (Show Answer)
பாடத்தலைப்புகள்(toc)
இலக்கண விதிகள் சில
பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம், திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் வேண்டும்.
- தமிழ் இலக்கணமும் மொழித்திறனும் - Tamil Language Grammar Learning
- மரபுச்சொற்கள்
- வழு - வழாநிலை -வழுவமைதி
- வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்
- புணர்ச்சி
- வழக்கு
- எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள்
- தமிழ்ச்சொல் அறிவோம்
- போலிகள்
பிழை திருத்துக: தமிழாய் எழுதுவோம் - 12th Standard Tamil

மொழியை மிகச் சிறந்த கருவி என்பர். அதைத் திறம்படக் கையாண்டால் கலையாக மிளிரும். பிழை மலிய எழுதினால் வெறும் களையாகவே கொள்ளப்படும்.
தமிழில் பிழை இல்லாமல் எழுத முடியுமா? என்று ஐயம் கொள்ளத் தேவையில்லை. மொழியின் இயல்பை உணர்ந்தும் இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுதினால் பிழைகளைத்தவிர்க்க முடியும். சிறிதளவு முயற்சியும் பயிற்சியும் தவறில்லாமல் எழுதத் துணைபுரியும்.
🎯 கீழே உள்ள Video பிழை திருத்தத்திற்கான எளிய ஷார்ட்கட் உத்திகளையும், விரிவான விளக்கத்தையும் கண்டு பயனடையுங்கள்!
பிழை வகைகள்
எழுதும்போது ஏற்படும் பிழைகளைக் கீழ்க்காணும் வகைப்பாட்டில் பிரிக்கலாம்.
- எழுத்துப் பிழை
- பொருட்பிழை
- சொற்பொருட்பிழை
- சொற்றொடர்ப்பிழை
📌எழுத்துப் பிழை என்பது எழுத்து வடிவம் சார்ந்தது.பொருட்பிழை என்பது வாக்கியத்தின் ஒட்டுமொத்த கருத்து முரண்பட்டுத் தவறாக இருப்பது சார்ந்தது.சொற்பொருட்பிழை என்பது சொல்லின் பொருள் சார்ந்தது.சொற்றொடர்ப்பிழை என்பது வாக்கிய அமைப்பு சார்ந்தது.
எழுத்துப் பிழை
எழுத்துப் பிழை (Spelling Error) என்பது ஒரு சொல்லை எழுதும்போது, அதில் உள்ள எழுத்துகளைத் தவறாகவோ அல்லது மாற்றியோ எழுதுவதாகும். இது ஒரு மொழியின் இலக்கணத் தெளிவின்மையையும், உச்சரிப்புப் பயிற்சியின்மையையும் குறிக்கும்.
- தவறு: தமில், மலை (மழைக்கு), வாலப்பலம்.
- சரி: தமிழ், மழை, வாழைப்பழம்.
- கவனிக்க: 'ண, ந, ன' மற்றும் 'ல, ள, ழ' மற்றும் 'ர, ற' ஆகிய மயங்கொலி எழுத்துகளின் ஒலிப்பு வேறுபாட்டை உணர்ந்து எழுதினால் எழுத்துப் பிழைகளை எளிதில் தவிர்க்கலாம்.
📌எழுத்துப் பிழை ஏற்பட முக்கிய காரணங்கள்
- மயங்கொலி எழுத்துகள் (Mayangoli): ஒரே மாதிரியான ஓசை கொண்ட எழுத்துகளைத் தவறாக மாற்றி எழுதுவது.
- குறில், நெடில் வேறுபாடு: குறில் ஒலிக்க வேண்டிய இடத்தில் நெடிலையும், நெடில் ஒலிக்க வேண்டிய இடத்தில் குறிலையும் பயன்படுத்துவது.
- வல்லினம் மிகும்/மிகா இடங்கள் (சந்திப்பிழை): க, ச, த, ப ஆகிய எழுத்துகளுக்கு முன்னால் மெய் எழுத்துகள் வரவேண்டிய இடத்தில் வராமல் இருப்பது அல்லது தேவையற்ற இடத்தில் இருப்பது.
- உச்சரிப்புப் பழக்கம்: நாம் பேசும் வட்டார மொழி வழக்குச் சொற்களை அப்படியே எழுத்தில் கொண்டு வருவது.
அடிப்படைச் செய்திகள்
| எழுத்து வகை (Letter Type) | எண்ணிக்கை (Count) | விளக்கம் / உட்பிரிவுகள் (Classification) |
|---|---|---|
| (அ) உயிரெழுத்துகள் | 12 | குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும். |
| (ஆ) மெய்யெழுத்துகள் | 18 |
மூன்று வகைப்படும்: • வல்லின மெய்கள் - க், ச், ட், த், ப், ற் • மெல்லின மெய்கள் - ங், ஞ், ண், ந், ம், ன் • இடையின மெய்கள் - ய், ர், ல், வ், ழ், ள் |
| (இ) உயிர்மெய் எழுத்துகள் | 216 | உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126 என இருவகைப்படும். |
| (ஈ) ஆய்தம் | 1 | தனிநிலை எழுத்து (ஃ). |
| மொத்தம் | 247 | தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை |
மயங்கொலி எழுத்துகள்
ந, ண, ன, ற, ர, ல, ள, ழ இவற்றின் வேறுபாடு அறிந்து வாய்விட்டு ஒலித்துப் பழகுவது சாலச் சிறந்தது. இவ்வெழுத்துகளுக்கான சில அடிப்படை இலக்கணத்தையும் கசடறக் கற்றல் இன்றியமையாத கற்றல் பணியாகும்.
முதலில் வரும் எழுத்துகள், இடையில் வரும் எழுத்துகள், இறுதியில் வரும் எழுத்துகள்(முதல், இடை, கடை)
| அமைவு (Position) | எழுத்துகள் வரும் முறை (Rule) | எடுத்துக்காட்டுகள் (Examples) |
|---|---|---|
| முதல் (Beginning) | மேலுள்ள எட்டு எழுத்துகளில் நகரம் (ந) மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். | நண்டு, நாடகம் |
| இடை (Middle) | மற்ற மயங்கொலி எழுத்துகள் சொல்லுக்கு இடையில் வரும். | பந்து, கண்டு, கன்று, கற்று, பார்த்து, கால்கள், கொள்வது, புகழ்வது |
| கடை (End) | றகர மெய் (ற்) சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லின் இறுதியில் வரும். | கண், அவன், பார், கால், கொள், புகழ் |
மயங்கொலி எழுத்துகளின் உச்சரிப்பு முறை (Uchcharippu Murai)
| எழுத்து | உச்சரிப்பு முறை (Uchcharippu) |
|---|---|
| ண | நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது. |
| ன | நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது. |
| ந | நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது. |
| ல | நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது 'வ' போல இருப்பதால் 'வகர லகரம்' என்கிறோம். |
| ள | நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனை 'பொது ளகரம்' என்கிறோம். இது 'ன' போல இருப்பதால் 'னகர ளகரம்' என்று கூறுவர். |
| ழ | நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும் (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). இது 'ம' போல இருப்பதால் 'மகர ழகரம்' என்று கூறுவது இலக்கண மரபு. |
| ர | நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இது இடையின எழுத்து என்பதால் 'இடையின ரகரம்' என்கிறோம். |
| ற | நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் 'வல்லின றகரம்' என்கிறோம். |
மெய்யெழுத்துகளின் பிழை தவிர்க்க
தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை. அவ்வாறு வந்தால் அச்சொற்கள் தமிழில்லை.
- க்ரீடம், ப்ரியா - வடமொழி, க்ளிஷே - ஆங்கிலம்
| மெய்யெழுத்துக்கள் | க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் | 18 எழுத்துக்கள் |
| வல்லினம் |
க், ச், ட், த், ப், ற் | 6 எழுத்துக்கள் |
| மெல்லினம் | ங், ஞ், ண், ந், ம், ன் | 6 எழுத்துக்கள் |
| இடையினம் | ய், ர், ல், வ், ழ், ள் | 6 எழுத்துக்கள் |
வல்லினம் - க், ச், ட், த், ப், ற்
வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் தமிழ்ச் சொல்லன்று என்றுணர்க.
- பார்க் (Park), பன்ச் (Punch), பட் (But). போத் (Both), டப் (Tub) போன்றவை தமிழில்லை.
வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை.
- காட்ச்சி, முயற்ச்சி என்றெழுதுவது பிழை.
க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வாரா.
- காக்கை, பச்சை,பத்து, உப்பு.
ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும்.
- பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை
ட, ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. அவ்வாறு வந்தால் அவை தமிழ்ச் சொற்கள் இல்லை.
- டமாரம், றப்பர் - தமிழ் இல்லை.
வல்லினம் - இலக்கண விதிகள்
| தலைப்பு | இலக்கண விதி | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| மெய் முடிவு | வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் தமிழ்ச் சொல்லன்று என்றுணர்க. | பார்க் (Park), பன்ச் (Punch), பட் (But), டப் (Tub) - இவை தமிழில்லை. |
| ஈரொற்று | வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. | காட்சி, முயற்சி (காட்ச்சி, முயற்ச்சி என எழுதுவது பிழை). |
| மெய் வரிசை | க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வாரா. | காக்கை, பச்சை, பத்து, உப்பு. |
| ட், ற் மெய்கள் | ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும். | பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை. |
| சொல் முதல் | ட, ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. அவ்வாறு வந்தால் அவை தமிழ்ச் சொற்கள் இல்லை. | டமாரம், றப்பர் - தமிழ் இல்லை. |
ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும்.
- அஃது, எஃகு, கஃசு.
ஆய்த எழுத்து - இலக்கண விதிகள்
| தலைப்பு | இலக்கண விதி | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| ஆய்த எழுத்து | சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும். | அஃது, எஃகு, கஃசு |
மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்
மெல்லின எழுத்துகளில் ண, ன சொல்லின் தொடக்கமாக வாரா. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்குமுன் அவ்வல்லினமெய்யோ அவற்றின் இன மெல்லின மெய்யோ வரும். பிறமெய்கள் வருவதில்லை.
- தக்கை, தங்கை, பச்சை, இஞ்சி, பண்டு, பட்டம், பத்து, பந்து, தப்பு,பாம்பு, கற்று, கன்று.
மெல்லினம் - இலக்கண விதிகள்
| தலைப்பு | இலக்கண விதி | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| மெல்லின எழுத்துகள் | ண, ன ஆகிய எழுத்துகள் சொல்லின் தொடக்கமாக வாரா. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்திற்கு முன் அவ்வல்லின மெய்யோ (எ.கா: பக்கம்) அல்லது அவற்றின் இன மெல்லின மெய்யோ (எ.கா: தங்கை) மட்டுமே வரும். பிற மெய்கள் வருவதில்லை. | தக்கை, தங்கை, பச்சை, இஞ்சி, பண்டு, பட்டம், பத்து, பந்து, தப்பு, பாம்பு, கற்று, கன்று. |
| வல்லின மெய் | இனமான மெல்லின மெய் | இணைந்து வரும் முறை | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|---|
| க் | ங் | ங் + க் (ங்க) | தங்கை, பங்கு |
| ச் | ஞ் | ஞ் + ச் (ஞ்ச) | இஞ்சி, மஞ்சள் |
| ட் | ண் | ண் + ட் (ண்ட) | பண்டு, வண்டு |
| த் | ந் | ந் + த் (ந்த) | பந்து, அந்தம் |
| ப் | ம் | ம் + ப் (ம்ப) | பாம்பு, அம்பு |
| ற் | ன் | ன் + ற் (ன்ற) | கன்று, நன்று |
இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்
ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று / கள் விகுதி வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும்.
- தேய்க, நாய்கள், தாய்சேய், ஊர்க, ஊர்கள், ஊர்சூழ், செல்க, கால்கள், செல்கணம், வாழ்க, வாழ்தல், தோள்கள்.
ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள்வினைமுற்று தேய்க, செல்க, வாழ்க, ஊர்க என இயல்பாய் நிற்கும்.
கள் - விகுதி வரும்போது நாய்கள், கால்கள், ஊர்கள், தோள்கள் என இயல்பாய் நிற்கும்.
வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது தாய்சேய், செல்கணம், வாழ்தல் என இயல்பாய் நிற்கும்.
ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளபெடுத்தால் மட்டுமே வரும்.
- பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை.
தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வாரா. அவ்வாறு வந்தால் அவை பிறமொழிச் சொற்களாக இருக்கும்.
- அர்த்தம்.
தனிக்குறிலையடுத்து ரகர ஒற்று வரின் அதனைத் தமிழ் இயல்புக்கேற்பத் திருத்தி எழுதவேண்டும்.
- நிர்வாகம் - நிருவாகம்; கர்மம் - கருமம்,கன்மம்
ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துக்களும் வாரா.
- உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும். எ.கா. ஓர் ஊர், ஈரிரண்டு, ஈருலகம்.
- உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும். எ.கா. அஃது அறம், இஃது எளிது, எஃது ஆடை
இடையினம் மற்றும் பிற இலக்கண விதிகள்
| தலைப்பு | இலக்கண விதி | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| ஈரொற்று | ய், ர், ல், ழ், ள் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று, 'கள்' விகுதி, அல்லது வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும். | தேய்க, நாய்கள், தாய்சேய், செல்கணம், வாழ்தல். |
| ஈரொற்றாய் வருதல் | ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளபெடுத்தால் மட்டுமே வரும். | பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை. |
| தனிக்குறில் விதி | தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வாரா. அவ்வாறு வந்தால் அவை பிறமொழிச் சொற்கள். | அர்த்தம் (பிறமொழி). நிர்வாகம் - நிருவாகம் எனத் திருத்தவும். |
| ரகரம், ழகரம் | ரகரத்தை அடுத்து ரகர வரிசையும், ழகரத்தை அடுத்து ழகர வரிசையும் வாரா. | ஓர் ஊர், ஈருலகம், அஃது அறம். |
மற்றவை
ணகர ஒற்றினை அடுத்து றகரமும், னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை.
- கண்டு என்று வரும்; கன்டு என்று வருவதில்லை.
- மன்றம் என்று வரும்: மண்றம் என்று வருவதில்லை.
ஞ், ந், வ் என்னும் எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக உள்ளன.
- உரிஞ், வெரிந், பொருந், தெவ்.
பிறமெய்யெழுத்துகள் அளபெடுக்கையில் ஈரொற்றாய் வரும்.
- எங்ங்கிறைவன்.
மற்றவை - இலக்கண விதிகள்
| தலைப்பு | இலக்கண விதி | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| ஒற்று விதிகள் | ணகர ஒற்றினை அடுத்து றகரமும், னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை. | கண்டு (சரி), கன்டு (பிழை); மன்றம் (சரி), மண்றம் (பிழை). |
| முடிவு எழுத்துகள் | ஞ், ந், வ் என்னும் எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் தமிழில் மிகவும் அரிதாகவே உள்ளன. | உரிஞ், வெரிந், பொருந், தெவ். |
| பிற மெய்யெழுத்துகள் | பிற மெய்யெழுத்துகள் அனைத்தும் அளபெடுக்கையில் ஈரொற்றாய் வரும். | எங்ங்கிறைவன். |
லகர ளகர விதிகள் சில
லகர விதிகள் சில
நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது
புணர்ச்சி
ஆகும்.
வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு.
- கல் + சிலை = கற்சிலை, கடல் + கரை = கடற்கரை.
லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு.
- பல் + முகம் = பன்முகம்.
வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும்.
- சொல் + துணை = சொற்றுணை.
- கல் + தூண் = கற்றூண்.
வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு நகரமும் னகரமாக மாறும்.
- பல் + நூல் = பன்னூல்.
அல்வழியில், தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும்.
- அல் + திணை = அஃறிணை;
- பல் + துளி = பஃறுளி.
ளகர விதிகள் சில
ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு.
- மக்கள் + பேறு = மக்கட்பேறு.
ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு.
- நாள் + மீன் = நாண்மீன்.
நகர, னகர விதிகள் சில
இயக்குநர் என்பதே சரி. இயக்குனர் என்று எழுதுவது தவறு.
- இயக்கு, ஓட்டு, அனுப்பு, பெறு முதலான வினைகள்
பெயரிடைநிலையான ந் என்பதைப் பெற்று (ந்+அர்=நர்), ஓட்டுநர், அனுப்புநர், பெறுநர் என்று பெயர்ச்சொற்களாகின்றன.
உறுப்பினர், குழுவினர், ஊரினர் முதலானவை (உறுப்பு, குழு, ஊர்) பெயர்ச்சொற்கள். அதனால், அவை இன் என்னும் சாரியையைப் பெற்று முடிந்துள்ளன.
லகர, ளகர, நகர-னகர விதிகள் - இலக்கண விளக்கம்
| தலைப்பு | இலக்கண விதி | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| லகர விதிகள் | லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் றகரமாக மாறும்; மெல்லினம் வரின் னகரமாக மாறும். அல்வழியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரின் ஆய்தமாக மாறும். | கல்+சிலை=கற்சிலை, பல்+முகம்=பன்முகம், அல்+திணை=அஃறிணை. |
| ளகர விதிகள் | ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் டகரமாக மாறும்; மெல்லினம் வரின் ணகரமாக மாறும். | மக்கள்+பேறு=மக்கட்பேறு, நாள்+மீன்=நாண்மீன். |
| நகர, னகர விதிகள் | வினையடிச்சொற்கள் 'ந்+அர்' பெற்று முடிவன 'நர்' என முடியும். பெயர்ச்சொற்கள் 'இன்' சாரியை பெற்று முடியும். | ஓட்டுநர், அனுப்புநர், உறுப்பினர், ஊரினர். |
❌எழுத்துப்பிழை தவிர்க்க
எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துகள் வரும்முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.
எழுத்துகளின் ஒலிப்புமுறை, அவற்றுக்கான வரிவடிவ வேறுபாடு. அவை சொல்லில் வரும் இடங்களையும் (முதல், இடை, கடை) தெள்ளத் தெளிவாய் மனத்து பதித்துக்கொள்வதைக் கடமையாகக்கொள்ள வேண்டும்.
- சரியாக உச்சரித்தல்: சொற்களைத் தெளிவாகவும் மெதுவாகவும் உச்சரித்துப் பழகினால் எழுத்துப் பிழை தானாகவே குறையும். ந, ண, ன / ல, ள, ழ / ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
- எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும்.
- தமிழில் இவ்வெழுத்துகள் வரும் முறையையும், அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
- எழுத்துகளை எழுதப் பழகும் போது வாய்விட்டோ, மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.
- வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிவகுக்கும்.
- கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய எழுத்துகளின் குறில் / நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.
பொருட்பிழை (Semantic/Logical Error)
எழுத்துகளில் பிழை இல்லையென்றாலும், சொல்லின் பொருள் மாறுபடுவதால் ஏற்படும் குழப்பமே "பொருட்பிழை" எனப்படும். ஒரு மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும், அம்மொழியின் சொல் அமைப்பையும், அதன் பொருளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
❌பொருட்பிழை ஏன் ஏற்படுகிறது?
மயங்கொலிச் சொற்கள் (Mayangoli Letters): சிலர் ந, ண, ன, ற, ர, ல, ள, ழ ஆகிய மயங்கொலி எழுத்துகள் பற்றித் தெளிவில்லாமல் இருக்கின்றனர்.
குறியீட்டுப் பிழைகள்: உயிர்மெய் எழுத்துகளில் வரும் மேல்விலங்கு, கீழ்விலங்கு, கொம்புகள், துணைக்கால் போன்றவற்றைப் பயன்படுத்தும் முறையிலும் கவனம் தேவை. சொல்லில் எழுத்துப் பிழை இல்லாதிருக்கலாம். ஆனால், பொருட்பிழை ஏற்பட வாய்ப்புண்டு.
- முடிந்தால் தரலாம் / முடித்தால் தரலாம்;
- கறி தின்றான் /கரி தின்றான்
இங்கே எழுத்துப்பிழையில்லை. ஆனால் பொருள் வேறுபாடு உண்டு: இடமறிந்து எழுத வேண்டும்.
முடிந்தால் - முடித்தால்: பொருள் வேறுபாடு
இந்த இரு சொற்களும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து வந்தாலும், இவை உணர்த்தும் பொருள் மற்றும் சூழல் வேறானவை.
| சொல் | பொருள் | தொடர் (எடுத்துக்காட்டு) |
|---|---|---|
| முடிந்தால் | இயன்றால் / சாத்தியமானால் | உன்னால் முடிந்தால் என்னுடன் நாளை நூலகத்திற்கு வா. |
| முடித்தால் | செய்து முடித்துவிட்டால் | வேலையை இன்று மாலைக்குள் முடித்தால், நாம் விளையாடச் செல்லலாம். |
குறிப்பு: 'முடிந்தால்' என்பது ஒரு செயலின் சாத்தியக்கூறை (Possibility) குறிக்கிறது; 'முடித்தால்' என்பது ஒரு செயலின் நிறைவை (Completion) குறிக்கிறது.
📌பொருட்பிழையைத் தவிர்க்கும் வழிமுறைகள்:
இடமறிந்து எழுதுதல்: ஒரு சொல்லைப் பயன்படுத்தும் முன், அது எந்த இடத்தில் வருகிறது (Context) என்பதைப் பார்க்க வேண்டும்.
எ.கா: "மணம்" (வாசனை) vs "மனம்" (உள்ளம்). "பூவின் மணம் வீசியது" என்பது சரி, "பூவின் மனம் வீசியது" என்பது பிழை.
சொற்றொடர் அமைப்பு: "சேறு கொடுத்தான்" என்பதற்கும் "சோறு கொடுத்தான்" என்பதற்கும் மிகப்பெரிய பொருள் வித்தியாசம் உள்ளது. பிழைபட எழுதினால் அது தவறான அல்லது நகைப்புக்கிடமான பொருளைத் தரும்.
| சொல் (A) | பொருள் | சொல் (B) | பொருள் |
|---|---|---|---|
| மணம் | வாசனை (Fragrance) | மனம் | உள்ளம் (Mind/Heart) |
| விலை | மதிப்பு (Price) | விழை | விருப்பம் (Desire) |
| தலை | உறுப்பு (Head) | தளை | கட்டு / பிணைப்பு (Bond/Tie) |
| அலை | கடல் அலை (Wave) | அளை | துளை / குகை (Cave/Hole) |
| கலை | நுட்பம் (Art) | களை | தேவையற்ற செடி (Weed) |
| வலை | இழைப்பின்னல் (Net) | வளை | வளைத்தல் (To bend) |
| பகல் | பகற்பொழுது (Day) | பகல் | பிரிவு (Separation) |
| அரை | பாதி (Half) | அறை | வீட்டு அறை (Room) |
| கல் | பாறை (Stone) | கள் | மது (Liquor) |
சொற்பொருட்பிழை (Lexical Errors)
ஒரே ஓசை உடைய சொற்களுக்குப் பொருள் மாறித் தரப்படும்போது பிழை நேர்கிறது.
நம்மில் பலர் பிழைபடப் பேசுவதால்தான் எழுதும்போது பிழைகள் பெருகுகின்றன.
- எடுத்துக்காட்டு: (மணம் - மனம்). இந்தச் சொற்களின் உண்மையான பொருளை உணராமல், தவறுதலாக ஒரு இடத்திற்குப் பதில் இன்னொன்றைப் பயன்படுத்தும்போது வாக்கியத்தின் பொருளே மாறிவிடும். இதுவே சொற்பொருட்பிழை.
| சொல் (A) | பொருள் | சொல் (B) | பொருள் |
|---|---|---|---|
| அறம் | தர்மம் | அரம் | கருவிக்குக் கூர்மை ஏற்றும் கருவி |
| குறை | குறைபாடு | குரை | ஒலித்தல் / குரைத்தல் |
| வளம் | செல்வம் / செழிப்பு | வலம் | வலப்பக்கம் |
| களம் | இடம் / மைதானம் | கலம் | பாத்திரம் / கப்பல் |
| கிளி | பறவை | கிலி | பயம் |
| என்றாள் | அவள் கூறினாள் | என்றால் | நிபந்தனை (If) |
| போனாள் | அவள் சென்றாள் | போனால் | நிபந்தனை (If goes) |
| ஆணை | கட்டளை | ஆனை | யானை |
| மழை | பெயல் (Rain) | மலை | குன்று (Mountain) |
முதலிய சொற்களின் பொருள் வேறுபாட்டினைக் கற்றுணர்தல் மாணவர்களின் இன்றியமையாத பணியாகும்.
❌சொற்பொருட்பிழை ஏன் ஏற்படுகிறது?
நம்மில் பலர் பிழைபடப் பேசுவதால்தான் எழுதும்போது பிழைகள் பெருகுகின்றன.
- தமிழைத் 'தமில்' என்று ஒலிப்பதைவிடக் கொடிய செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது.
- மழையை 'மலை' என்று உச்சரிப்பது பிழைதானே?
- இன்னும் சிலர் வாழைப்பழத்தை 'வாலப்பலம்' என்றும் 'வாளப்பலம்' என்றும் தமிழை வாழவிடாமல் செய்வர்.
| தவறான உச்சரிப்பு (Incorrect Pronunciation) | சரியான உச்சரிப்பு (Correct Pronunciation) |
|---|---|
| தமில் | தமிழ் |
| மலை (மழைக்கு பதிலாக) | மழை |
| வாலப்பலம் / வாளப்பலம் | வாழைப்பழம் |
எதைப் பற்றியும் கவலைப்படாமல் 'நாற்பத்திமூன்று 'என்றோ 'முப்பத்திநான்கு' என்றோ 'பத்தி பத்தி'யாய் எழுதித் தள்ளுவர்.
📌சொற்பொருட்பிழையைத் தவிர்க்கும் வழிமுறைகள்:
சொல் உருவாகும் முறையை அறிந்தும், பொருள் வேறுபாட்டினை உணர்ந்தும் எழுதுகிறபோது பிழைகளைத் தவிர்க்கமுடியும்.
பொருட்பிழைக்கும் சொற்பொருட்பிழைக்கும் உள்ள வேறுபாடு:
சொற்பொருட்பிழை: ஒரு சொல்லுக்குப் பதில் இன்னொரு சொல்லைப் பயன்படுத்துவது (எ.கா: மனம்/மணம்). இது சொல் சார்ந்தது.
பொருட்பிழை (வாக்கியப் பிழை): சொற்கள் சரியாக இருந்தாலும், வாக்கியத்தின் கருத்து முழுமையாகத் தவறாக இருப்பது. இது வாக்கியம் சார்ந்தது.
சொற்றொடர்ப்பிழை (Syntactic Errors)
இரண்டு முதலாக சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும். வாக்கியத்தில் சொற்களை மாற்றி அமைப்பதாலோ அல்லது தவறான சொற்களைப் பயன்படுத்துவதாலோ ஏற்படும் குழப்பங்களே "சொற்றொடர்ப்பிழை" எனப்படுகின்றன.
- தவறு: "அவர்கள் கான்வர்சேசன் செய்தனர்."
- சரி: "அவர்கள் உரையாடல் செய்தனர்."
- தவறு: "காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது."
- சரி: "காலையில் பூத்த மல்லிகை மணம் (வாசனை) வீசியது."
📌சொற்றொடர்ப்பிழை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
- சொற்களின் வரிசை மாற்றம் (Word Order): தமிழில் எழுவாய் (Subject), செயப்படுபொருள் (Object), பயனிலை (Verb) என்ற வரிசையில் வாக்கியம் அமைவது சிறப்பு. இந்த வரிசை மாறினால் பொருள் குழம்பும்.
- பொருந்தாத சொற்களை இணைத்தல் (Mismatching Words): அந்தச் சூழலுக்குத் தொடர்பில்லாத சொற்களைக் கோர்ப்பது.
- வேற்றுமை உருபுகள் மயக்கம் (Case Marker Errors): ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகளைத் தவறான இடத்தில் பயன்படுத்துவது.
- பிறமொழிச் சொற்கள் கலப்பு (Language Mixing): தமிழின் மரபுக்குப் புறம்பான பிறமொழிச் சொற்களை வாக்கிய அமைப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைப்பது, வாக்கியத்தின் ஓட்டத்தைக் கெடுக்கும்.
- திணை, பால், எண், இட வழுக்கள் (Grammatical Mismatch):
- திணை: உயர்திணைக்குப் பதில் அஃறிணை அல்லது அஃறிணைக்குப் பதில் உயர்திணையைப் பயன்படுத்துவது. (எ.கா: அரசன் வந்தது - தவறு).
- எண்: பலவற்றை ஒருமை விகுதியிலும், ஒன்றைப் பன்மை விகுதியிலும் சொல்வது. (எ.கா: குயில்கள் கூவியது - தவறு).
| தவறான சொல் (Incorrect Word) | சரியான சொல் (Correct Word) | விளக்கம் / பொருள் வேறுபாடு (Context) |
|---|---|---|
| சேறு | சோறு | விருந்தினருக்குச் சோறு கொடுப்பதற்குப் பதிலாகச் சேறு கொடுப்பதாகப் பொருள்படும். |
| செத்துத் தகராறு | சொத்துத் தகராறு | சொத்துக்காகச் சண்டை போடுவதை, இறந்து போய் சண்டை போடுவதாக மாற்றிவிடும். |
| ஐயசந்திரன் | ஜயசந்திரன் | வடமொழி 'ஜ' மற்றும் தமிழ் 'ஐ' எழுத்துகளின் வேறுபாடு தெரியாமல் எழுதுவது. |
| ஜயா / ஐப்பான் | ஐயா / ஜப்பான் | ஐ, ஜ எழுத்துகளைத் தவறான இடங்களில் மாற்றிப் பயன்படுத்துவது. |
| மீன் பொரித்தான் | மீன்கொடி பொறித்தான் | கொடியில் சின்னத்தைப் 'பொறிப்பதற்கு'ப் பதிலாக, மீனைச் சமையல் செய்வது போல் 'பொரிப்பது' எனப் பொருள்படும். |
| பேய் பார்த்து | போய்ப் பார்த்து | ஒரு இடத்திற்குச் 'சென்று' வந்ததை, 'பிசாசு' பார்த்ததாக அச்சம் மூட்டும். |
| காலையரசன் | கலையரசன் | கலையில் சிறந்த அரசனை, விடியற்காலை நேரத்து அரசன் எனப் பொருள் மாற்றிவிடும். |
| காலையில் சிறந்தவன் | கலையில் சிறந்தவன் | நுண்கலைகளில் சிறந்தவனை, காலைப் பொழுதில் சிறந்தவன் என்று பொருள் கொள்ள வைக்கும். |
| மலைக்காற்று | மாலைக்காற்று | மாலை நேரத்தில் வீசும் குளிர்ந்த காற்றிற்குப் பதிலாக, குன்றிலிருந்து வீசும் காற்று எனப் பொருள்படும். |
| கேடீஸ்வரன் | கோடீஸ்வரன் | பணக்காரரைக் குறிக்கும் சொல்லை, மோசடி செய்பவர் ('கேடி') என்று பொருள் மாற்றிவிடும். |
| வடை பெற்றார் | விடை பெற்றார் | ஒரு இடத்திலிருந்து கிளம்புவதை அல்லது பதிலைப் பெறுவதை, உண்ணும் 'வடை' பெற்றதாக மாற்றும். |
| நல்ல மணம் / நல்ல மனம் | சூழலுக்கு ஏற்ப | 'மணம்' என்பது வாசனையையும், 'மனம்' என்பது மனித உள்ளத்தையும் குறிக்கும். |
| புலிக்கறி | புளிக்கறி | புளிப்புச் சுவையுடைய குழம்பைக் குறிக்காமல், காட்டு விலங்கான 'புலி'யின் கறியைச் சாப்பிட்டதாகப் பொருள்பட்டுச் சட்டம் பாயும். |
📌சொற்றொடர்ப்பிழையைத் தவிர்க்கும் வழிமுறைகள்:
சூழல் அறிவு (Context Awareness): ஒரு தொடரை எழுதும் முன், அந்தச் சொற்கள் என்ன பொருளைத் தருகின்றன என்று சிந்திக்க வேண்டும்.எழுத்து வேறுபாடு (Character Distinction): 'ஜ' மற்றும் 'ஐ', 'சேறு' மற்றும் 'சோறு' போன்ற ஒத்த ஓசை கொண்ட சொற்களின் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.வாக்கிய அமைப்பு: எழுவாய் (Subject), பயனிலை (Predicate) சரியாக அமைய வேண்டும். உதாரணமாக, "சிங்கம் வந்தான்" (பிழை) - "சிங்கம் வந்தது" (சரி).
| பிழை வகை | காரணம் | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| எழுத்துப் பிழை | எழுத்து வடிவம் / உச்சரிப்பு | வாலைப்பழம் (தவறு) → வாழைப்பழம் (சரி) |
| சொற்பொருட்பிழை | சொல்லின் பொருள் | மணம் / மனம் வேறுபாடு |
| சொற்றொடர்ப்பிழை | வாக்கிய அமைப்பு | கான்வர்சேசன் (தவறு) → உரையாடல் (சரி) |
| பொருட்பிழை | கருத்து முரண்பாடு | குதிரை ஓடினார் (தவறு) → ஓடியது (சரி) |
பிழையும் திருத்தமும்
பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம், திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் வேண்டும்.
கீழே காணப்படுபவை பிழையான சொற்றொடர்கள்.
- சிங்கம் வந்தான்
- இராமன் அழுதாள்
- பறவைகள் பாடியது
- அவன் வந்தேன்
ஏனெனில், இச்சொற்றொடர்களில் உள்ள வினைச்சொற்கள் பிழையானவை. எப்படி இருந்தால் முறையாக இருக்கும்?
- சிங்கம் வந்தது
- இராமன் அழுதான்
- பறவைகள் பாடின
- அவன் வந்தான்
மயங்கொலிப் பிழைகள் - பயிற்சி
| பயிற்சி வாக்கியங்கள் (Exercise Sentences) | பிழையான சொல் (Incorrect Word) | திருத்தப்பட்ட சரியான சொல் (Corrected Word) |
|---|---|---|
| அ. இரு சக்கர வண்டிகள் பலுது / பழுது பார்க்கப்படும். | பலுது | பழுது |
| ஆ. நால்தோறும் / நாள்தோறும் பகல் காட்சி உன்டு / உண்டு. | நால்தோறும், உன்டு | நாள்தோறும், உண்டு |
| இ. வறந்தரு / வரந்தரு விநாயகர் கோயில். | வறந்தரு | வரந்தரு |
பாடலில் அடிக்கோடிட்ட சொற்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை நீக்கி எழுதுக.
ஊருக்கு வெலியே ஒற்றைக்கல் மண்டபத்தில் - மக்கள்
உயிரைக் குடிக்கத்தான் ஓராயிரம் பேயுண்டாம்
ஆற்றங் கரைதனிலே அழகான மண்டபத்தில் - மனித
உயிரைக் கொள்ளத்தான் ஓராயிரம் பூதமுண்டாம்
ஆலமரத்தினிலே ஆந்தை அலறும் பொந்தினிலே- பில்லைகளைப்
பிடிக்கத்தான் குட்டிச்சாத்தான் பல உண்டாம்
காட்டில் வாழும் யானைக்கும் நாட்டில் வாழும் பூணைக்கும்
ஓராயிரம் பேய்பூதம் இவற்றிற்கெல்லாம் ஏதுண்டு ?
கெட்டாவிக்காரனும் குள்ளநரிக்காரனும் - குப்பைக்
குப்பையாய்க் கொட்டி வைத்த பொய்யெல்லாம்
நம்முடைய வீரத்தை அரும்பினிலே அழிக்கத்தானே - நல்லோரின்
அறிலையெல்லாம் குழிநோன்டி புதைக்கத்தானே!
| பிழையான சொல் (Incorrect Word) | சரியான சொல் (Correct Word) |
|---|---|
| வெலியே | வெளியே |
| கொள்ளத்தான் | கொல்லத்தான் |
| பில்லைகளைப் | பிள்ளைகளைப் |
| பூணைக்கும் | பூனைக்கும் |
| குழிநோன்டி | குழிநோண்டி |
மதிப்பீடு - 12 ஆம் வகுப்பு இயல் ஒன்று தமிழாய் எழுதுவோம் வினா விடை 12th standard Tamil book back exercise
மயங்கொலி எழுத்துகள் (ண, ந, ன / ல, ழ, ள / ர, ற) அமைந்த சொற்களைப் பொருளுடன் திரட்டி, வகுப்பறையில் காட்சிப்படுத்துக.
இலக்கணத் தேர்ச்சிகொள்
1. பிழையான தொடரைக் கண்டறிக.
- அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
- ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
- இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
- ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
2. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
- அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
- ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
- இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
- ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
3. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க.
முடிந்தால் - முடித்தால்: பொருள் வேறுபாடு
இந்த இரு சொற்களும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து வந்தாலும், இவை உணர்த்தும் பொருள் மற்றும் சூழல் வேறானவை.
| சொல் | பொருள் | தொடர் (எடுத்துக்காட்டு) |
|---|---|---|
| முடிந்தால் | இயன்றால் / சாத்தியமானால் | உன்னால் முடிந்தால் என்னுடன் நாளை நூலகத்திற்கு வா. |
| முடித்தால் | செய்து முடித்துவிட்டால் | வேலையை இன்று மாலைக்குள் முடித்தால், நாம் விளையாடச் செல்லலாம். |
குறிப்பு: 'முடிந்தால்' என்பது ஒரு செயலின் சாத்தியக்கூறை (Possibility) குறிக்கிறது; 'முடித்தால்' என்பது ஒரு செயலின் நிறைவை (Completion) குறிக்கிறது.
4. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
தமிழில் பிழையின்றி எழுத மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்
தமிழ் மொழியைத் தூய்மையாகவும், பிழையின்றியும் எழுதப் பின்வரும் பயிற்சிகள் பெரிதும் உதவும்:
- முறைப்படி வாசித்தல்: நல்ல தமிழ் நூல்கள், நாளிதழ்கள் மற்றும் இலக்கியங்களைச் சத்தமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது சொற்களின் சரியான வடிவத்தை நினைவில் கொள்ள உதவும்.
- மயங்கொலி வேறுபாடு அறிதல்: (ண, ந, ன), (ல, ள, ழ), (ர, ற) ஆகிய மயங்கொலி எழுத்துகளின் உச்சரிப்பு வேறுபாடுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எழுதிப் பழக வேண்டும்.
- இலக்கண அடிப்படை: புணர்ச்சி விதிகள், வேற்றுமை உருபுகள் மற்றும் சந்திப் பிழைகள் ஏற்படாதவாறு வாக்கியங்களை அமைக்கும் அடிப்படைக் இலக்கணங்களை அடிக்கடி மீள்பார்வை செய்ய வேண்டும்.
- எழுத்துப் பயிற்சி: படித்த சொற்களைக் கண்ணால் பார்ப்பதோடு மட்டும் நிறுத்தாமல், எழுதிப் பார்க்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இது எழுத்துப்பிழைகளைக் கணிசமாகக் குறைக்கும்.
- அர்த்தம் உணர்ந்து எழுதுதல்: சொற்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றின் பொருளை (Meaning) உணர்ந்து எழுதும்போது பிழைகள் தானாகவே குறையும். (எ.கா: மணம் vs மனம்).
- தவறுகளைத் திருத்துதல்: தாங்கள் எழுதிய கட்டுரைகளையோ அல்லது குறிப்புகளையோ மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கும் 'சுய திருத்தம்' (Self-Correction) மிக அவசியமானது.
- பேச்சுக்கும் எழுத்துக்குமான வேறுபாடு: பேச்சுத் தமிழில் பயன்படுத்தும் சில சொற்களை எழுத்துத் தமிழில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தங்க விதி (Golden Rule):
"சொற்களைச் சரியாக உச்சரித்தால், எழுத்துகள் பிழையின்றி வரும்." உச்சரிப்புப் பிழையே பெரும்பாலும் எழுத்துப் பிழைக்கு வித்திடுகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
வெளி இணைப்புகள் (Reference Links / External Links)
உள் இணைப்புகள் (Internal Links)
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு (TNPSC Group 4 VAO, 2, 2A, TET): இந்தப் பாடப்பகுதியின் முழுமையான இலக்கணக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாவிடைகளை PDF வடிவில் இலவசமாகப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET பொதுத்தமிழ் மாதிரி வினாவிடைகள் (Model Questions)
1. 'அப்பிசி மாசம் அடமள இம்பாங்க' - இத்தொடரின் பிழை நீங்கிய வடிவம் எது?
விடையைக் காட்டு (Show Answer)
2. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
விடையைக் காட்டு (Show Answer)
3. பிழையற்ற சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
விடையைக் காட்டு (Show Answer)
4. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
விடையைக் காட்டு (Show Answer)
5. கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
விடையைக் காட்டு (Show Answer)
6. பொருந்தாததை எடுத்து எழுதுக.
விடையைக் காட்டு (Show Answer)
7. பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக.

Hi Please, Do not Spam in Comments