பகுபதம், பகாப்பதம், பகுபத உறுப்புகள்

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான பதம் மற்றும் பதவியல் பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

பதம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

பதவியல்

''எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் அது, பகாப் பதம், பகு பதம்என
இருபால் ஆகி இயலும் என்ப" - நன்னூல் 128

எழுத்துகள் தாமே ஒவ்வொன்றாகத் தனித்து நின்றும், பிற எழுத்துகளோடு சேர்ந்தும் ஒரு பொருளைக் குறிக்குமாயின் அது பதமாம். இப்பதம் பகாப்பதம், பகுபதம் என இரண்டு வகைகளை உடையதாகும் என்று சொல்லுவர் புலவர்.

  • ஆ, ஈ, கை, நீ, தீ, வா, போ, மா, தை, பூ, பை - இவை போன்ற எழுத்துகள் தனித்தனியே பொருளை உணர்த்துகின்றன.
  • அம்மா, மலர், படி, ஈகை போன்ற சொற்களில் பல எழுத்துக்கள் சேர்ந்து ஒரு பொருளை அல்லது கருத்தை உணர்த்துகின்றன.

இவ்வாறு எழுத்துகள் தனித்து நின்றோ பிற எழுத்துகளோடு சேர்ந்தோ பொருள் தந்தால் அது பதம் அல்லது சொல் எனப்படும்.

  • நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.

ஒரேழுத்து ஒரு மொழி எழுத்துக்கள்

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ உயிர் வருக்கத்தில் ஆறு
மா, மீ, மூ, மை,மோ, மே
மகர வருக்கத்தில் ஆறு
தா, தீ, தூ, தே, தை
தகர வருக்கத்தில் ஐந்து
பா, பூ, பே, பை, போ
பகர வருக்கத்தில் ஐந்து
நா,நீ, நே , நை, நோ நகர வருக்கத்தில் ஐந்து
கா,கூ, கை, கோ ககர வருக்கத்தில் நான்கு
வா, வீ, வை, வௌ வகர வருக்கத்தில் நான்கு
சா, சீ,சே, சோ சகர வருக்கத்தில் நான்கு
யா யகர வருக்கத்தில் ஒன்று
நொ, து தனிக் குறில் பதம் இரண்டு

ஆக ஓரெழுத்து மொழிகள் தமிழில் நாற்பத்திரண்டு. இச்சொற்களின் பொருள்களை கீழே கண்டறிக.

42 தமிழ் ஒரேழுத்து ஒரு மொழி

பதவியலில் குறிப்பிடப்படும் ஐந்து கூறுகள்

நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் இரண்டாவதாக அமைவது பதவியல் ஆகும். இதில் பதம், பகுதி, விகுதி, இடைநிலை, வடமொழியாக்கம் என்ற ஐந்து கூறுகளின் கீழ் மொத்தம் 23 நூற்பாக்கள் தரப்பட்டுள்ளன.

  1. பதம் - 6 நூற்பாக்கள்
  2. பகுதி - 6 நூற்பாக்கள்
  3. விகுதி - 1 நூற்பா
  4. இடைநிலை - 5 நூற்பாக்கள்
  5. வடமொழியாக்கம் - 5 நூற்பாக்கள்

சொல் என்பதன் வேறு பெயர்கள்

பதம், மொழி, கிளவி என்பன சொல் என்பதன் வேறு பெயர்கள்.

பதம்
மொழி தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
கிளவி இரட்டைக்கிளவி ( இரட்டைச்சொல் )

பதம் என்றால் என்ன?

ஓர் எழுத்தானது தனித்தேனும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தேனும் ஒரு பொருளை உணர்த்துமானால், அது சொல் எனப்படும்.

  • சொல் என்பதன் வேறு பெயர் பதம் ஆகும்.
  • பதம் என்பதன் பொருள் சொல்.

கணக்கில் பகு எண், பகா எண் என எண்களை வகைப்படுத்துதல் போலத் தமிழ்ச்சொற்களிலும் உண்டு.

கணக்கைப்போலவே தமிழிலும் சொற்களைப் பகுபதம், பகாப்பதம் என இருவகையாகப் பிரிக்கலாம்.

தொடர்மொழி

"பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்
எழுத்துஈறு ஆகத் தொடரும் என்ப" - நன்னூல் 130

பகாப்பதம் பகுபதம்
    இரண்டு எழுத்து முதல் ஏழு எழுத்துகள் வரை இரண்டு எழுத்துகள் முதல் ஒன்பது எழுத்துகள் வரை
    அணி, அறம், அகலம், கார்த்திகை, தருப்பணம், உத்தரட்டாதி தேனீ, தேயிலை, குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்தராடத்தான், உத்திரட்டாதியான்

    பதம் எத்தனை வகைபடும்?

    பதத்தின் இரு வகைகள்

    • பகுபதம்
    • பகாப்பதம்

    என இரு வகைப்படும்.

    சொல்லைப் பதம் பிரித்து பார்க்கும் அறிவியல் கண்ணோட்டத்தை நன்னூல் இலக்கணம் புதுமையாகப் புகுத்தியுள்ளது.

    • இது சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளை, பகுத்தால் பயனில்லாதல் போகும் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களைப் பகாப்பதம் என்று குறிப்பிடுகிறது.
    • பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்றெல்லாம் பிரிக்கக்கூடியதாக அமைந்துள்ள சொற்களை, பகுபதம் என்றும் நன்னூல் குறிப்பிடுகிறது.
    • பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.

    பகுபதம் என்றால் என்ன?

    "பொருள், இடம் காலம் சினை, குணம் தொழிலின்
    வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே" - நன்னூல் 132

    பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவை காரணமாக வரும் பெயர்ச் சொற்களும், தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலத்தைக் காட்டும் வினைச்சொற்களும் பகுபதங்களாகும்.

    பகுதி, விகுதி, இடைநிலை என சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.

    • பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.
    • பகுபதம் - பிரிக்க இயலும் பதம்

    பகுபதம் எடுத்துக்காட்டு

    • வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனவும்,
    • படித்தான் என்னும் சொல்லை படி + த் + த் + ஆன் எனப் பிரிக்கலாம்.

    பகுபதம் எத்தனை வகைகள்?

    அவை யாவை - பகுபதம் வகைகள்:

    1. பெயர்ப்பகுபதம்,
    2. வினைப்பகுபதம் என இரு வகைப்படும்.


    TNPSC -General Tamil

    பெயர்ப்பகுபதம்

    பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறன் அடியாகத் தோன்றுவது பெயர்ப்பகுபதம்.

    பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்?

    1. பொருள்,
    2. இடம்,
    3. காலம்,
    4. சினை,
    5. பண்பு,
    6. தொழில்
    என ஆறு வகைப்படுத்துவர்.

    பெயர்ப்பகுபதம் வகைகள் எடுத்துக்காட்டு
    பெயர்ச்சொல்
    பொருள் பகுபதம் பொன்னன் (பொன் + ன் + அன்) பொன் - பொருள்
    இடம் பகுபதம் நாடன் (நாடு +அன்) நாடு - இடம்
    காலம் பகுபதம் சித்திரையான் (சித்திரை + ய் +ஆன்) சித்திரை - காலம்
    சினை பகுபதம் கண்ணன் (கண்+ ண் + அன்) கண் - சினை
    பண்பு பகுபதம் இனியன் (இனிமை + அன்) இனிமை- பண்பு
    தொழில் பகுபதம் உழவன் (உழவு + அன்) உழவு- தொழில்

    வினைப்பகுபதம்

    பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும் வினைமுற்று, வினைப்பகுபதம் எனப்படும்.

    • பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
    • செய்தான் - செய்+த்+ஆன் ;
    • செய்தான் என்னும் வினைமுற்றில் செய் என்னும் பகுதி தொழிலையும், த் என்னும் இடைநிலை இறந்தகாலத்தையும், ஆன் என்னும் விகுதி ஆண்பாலையும் குறிக்கின்றன.

    பகுபத உறுப்புகள் விளக்கம்

    பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.

    பகுபத உறுப்புகள் ஆறு வகைகள்

    அவை,

    1. பகுதி,
    2. விகுதி,
    3. இடைநிலை,
    4. சந்தி,
    5. சாரியை,
    6. விகாரம்.


    பகுதி

    பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது.

    இது கட்டளையாகவே அமையும்.

    விகுதிபகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
    இடைநிலைபகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
    சந்திபெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
    சாரியை

    பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.

    விகாரம்

    பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

    பகுதி

    • பகுதியை முதனிலை என்றும் அழைப்பர்.

    பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது.பகுதி பெரும்பாலும் கட்டளையாகவே அதாவது ஏவல் வினையாக (வா,செல்) அமையும். பகுதி என்பது தனிச்சொல்.இதனை மேலும் பகுத்தால் பயனில்லாமல் போகும்.

    • வந்தனன் — வா(வ) +த்(ந்) + த் + அன் + அன்
    • வா - பகுதி
    படித்தான் படி என்பது பகுதி
    ஓடினான் ஓடு என்பது பகுதி
    வந்தான் வா என்பது பகுதி

    விகுதி

    பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.

    பால், எண், திணை, இடம், காலம் காட்டும் உறுப்பு விகுதி ஆகும்.

    • வந்தனன் — வா(வ) +த்(ந்) + த் + அன் + அன்
    • அன்- விகுதி

    மலைந்து - மலை +த்(ந்) + த் + உ

    பொழிந்த - பொழி +த்(ந்) + த் +அ
    ஆண்பால் -'' கர விகுதிகள் ஆண்பாலை உணர்த்தும்.
    • எ.கா: அவன், இவன், வந்தான்,வீரன், அண்ணன், மருதன்.
    பெண்பால் -'ள' கர விகுதிகள் பெண்பாலை உணர்த்தும்.
    • எ.கா: அவள், இவள், வந்தாள்,மகள், அரசி,தலைவி.
    பலர்பால் -'அர், ஆர்' விகுதிகள் பலர்பாலை உணர்த்தும்.
    • எ.கா:அவர், இவர், உண்டார்,மக்கள், பெண்கள், ஆடவர்.
    ஒன்றன் பால் - 'து, று, டு' விகுதிகள் ஒன்றன் பாலை உணர்த்தும்.
    • எ.கா: யானை,புறா, மலை,வந்தது, தாவிற்று, குறுந்தாட்டு (குறுகிய காலை உடையது).
    பலவின்பால் - 'அ, , ' என்பன பலவின் பாலை உணர்த்தும்.
    • எ.கா: பசுக்கள், மலைகள்,ஓடின, மேய்ந்தன, உண்ணா, திண்ணா, உண்குவ, தின்குவ.
    நடந்தான் ஆன் ஆண்பால் விகுதி
    நடந்தாள் ஆள் பெண்பால் விகுதி
    நடந்தனர் அர்
    பலர்பால் விகுதி
    நடந்தது து ஒன்றன்பால் விகுதி
    நடந்தன பலவின்பால் விகுதி

    தமிழில் விகுதியைக் கொண்டு நாம் பால், எண், திணை, இடம், காலம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.

    தமிழில், வருகின்றேன், வருகின்றாய், வருகின்றான்,வருகின்றது, வருகின்றன என்ற வினைச் சொற்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்களையும் ஒருமை, பன்மை எண்ணையும் காணமுடியும். இந்தச் சொற்களுக்கு முன்னால் நான், நீ, அவன், அது, அவை என்ற சொற்களை இட வேண்டியது இல்லை.

    வினைசொல் பால் எண் திணை இடம் காலம்
    வருகின்றான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
    வருகின்றாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
    வருகின்றது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை நிகழ்காலம்
    வந்தான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
    வந்தாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
    வந்தது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்
    வருகின்றார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
    வந்தார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
    வருவார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை எதிர்காலம்
    வந்தேன் ஆண் ஒருமை உயர்திணை தன்மை இறந்தகாலம்
    வருவோம் பலர்பால் பன்மை உயர்திணை தன்மை எதிர்காலம்
    வந்தன பலவின்பால் பன்மை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்

    இடைநிலை

    பகுபதத்தின் அல்லது பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.

    • வந்தனன் — வா(வ) +த்(ந்) + த் + அன் + அன்
    • த் - இறந்தகால இடைநிலை

    நிகழ்கால இடைநிலைகள்

    கிறு,கின்று, ஆநின்று என்பன நிகழ்கால இடைநிலைகள்.

    உண்கிறான் கிறு உண் + கிறு + ஆன்
    உண்கின்றான் கின்று உண் + கின்று + ஆன்
    உண்ணாநின்றான் ஆநின்று உண் + ஆநின்று + ஆன்

    இறந்தகால இடைநிலைகள்

    த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகள்.

    பார்த்தான் த்
    பார் + த் + த் + ஆன்
    உண்டான் ட் உண் + ட் + ஆன்
    வென்றான் ற் வெல் (ன்) +ற்+ ஆன்
    பாடினான் இன் பாடு +இன்+ஆன்

    எதிர்கால இடைநிலைகள்

    ப், வ் என்பன எதிர்கால இடைநிலைகள்.

    உண்பான் ப் உண் + ப் + ஆன்
    வருவான் வ் வா (வரு)+வ்+ஆன்

    எதிர்மறை இடைநிலைகள்

    இல், அல், ஆ முதலியன எதிர்மறை இடைநிலைகள்.

    உண்டிலன் இல் உண் + ட் + இல் + அன்
    காணலன் அல் காண் + அல் + அன்
    பாரான்
    பார் + + ஆன்

    • தொல்காப்பியம், இடைநிலை காலம் காட்டுவதனால் காலம் காட்டும் இடைநிலை என்று குறிப்பிடுகிறது.
    • நன்னூல் இதனைப் பகுபத உறுப்புக்களில் ஒன்றாகக் காட்டுகிறது.

    காலங்காட்டும் இடைநிலைகள்

    தமிழில் காலம் காட்டுவதற்காகச் சொற்களில் பல்வேறு இடைநிலைகள் பயன்படுகின்றன.

    இறந்தகாலம் நிகழ்காலம்

    எதிர்காலம்

    பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பது அந்நேரத்தில் நடந்துகொண்டு இருப்பவற்றைக் குறிப்பது பின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது
    செய்தான் செய்கின்றான் செய்வான்
    செய் + த் + ஆன் ----> செய்தான் செய் + கின்று + ஆன் ----> செய்கின்றான் செய் + வ் + ஆன் ----> செய்வான்
    இடைநிலைகள் - "த்" (த், ட், ற், த்த்), "ந்த்" (ந்த், ன்ற், ண்ட்), "இன்" (ய், ன்) இடைநிலைகள்- "கின்று", "கிறு" இடைநிலைகள் - "வ்", "ப்ப்", "ப்"

    சந்தி

    பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.

    • வந்தனன் — வா(வ) +த்(ந்) + த் + அன் + அன்
    • சந்தி - த் - இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்

    சாரியை

    • அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம் முதலியன சாரியைகள்.

    பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.இது பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும்.

    • வந்தனன் — வா(வ) +த்(ந்) + த் + அன் + அன்
    • சாரியை - அன்

    விகாரம்

    பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

    • வந்தனன் — வா() +த்(ந்) + த் + அன் + அன்
    • விகாரம் - வ, ந்
    • பகுதி வா - எனக் குறுகி இருப்பது விகாரம்
    • சந்தி த் - ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்

    பகுபத உறுப்புகள் உதாரணம் விளக்கம்

    (எ.கா.) வந்தனன் — வா(வ) +த்(ந்) + த் + அன் + அன்

    • படித்தான் பகுபத உறுப்பிலக்கணம் - படி +த்+த்+ஆன்
    • சென்றான் பகுபத உறுப்பிலக்கணம் - செல்(ன்) +ற்+ஆன்
    பகுதி வா இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
    சந்தி த் இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
    இடைநிலை த் இறந்தகால இடைநிலை
    சாரியை அன் சாரியை
    விகுதி அன் ஆண்பால் வினைமுற்று விகுதி.
    விகாரம்
    வ, ந்
    பகுதி வா - வ எனக் குறுகி இருப்பது விகாரம்
    சந்தி த் -; ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்


    TNPSC -General tamil

    பகாப்பதம் என்றால் என்ன?

    "பகுப்பால் பயன்அற்று இடுகுறி ஆகி
    முன்னே ஒன்றாய் முடிந்து, இயல் கின்ற
    பெயர், வினை இடை, உரி நான்கும் பகாப் பதம்" - நன்னூல் 131

    பகுதி விகுதி எனப் பிரிப்பதற்கு இயலாததாய், இன்ன காரணம் எனக் குறிப்பிட்டுக் கூறமுடியாமல், மிகப்பழங் காலத்திலிருந்தே வழங்கிவரும் பெயர், வினை, இடை, உரிச்சொற்கள் நான்கும் பகாப் பதங்களாம்.

    பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
    • இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.

    பகாப்பதம் எடுத்துக்காட்டு

    மரம், கழனி, உண், எழுது ஆகிய சொற்களைக் மேலும் சிறிய உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா?

      பகாப்பதம் எத்தனை வகைப்படும்?

      1. பெயர்,
      2. வினை,
      3. இடை,
      4. உரி

      ஆகிய நான்கு வகைச் சொற்களிலும்பகாப்பதங்கள் உண்டு.


      நான்கு வகைகள்: பகாப்பதம் சொற்கள் உதாரணம்

      • இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகாப்பதங்களாகவே இருக்கும்.
      பெயர்ப் பகாப்பதம் நிலம், நீர், நெருப்பு, காற்று.
      வினைப் பகாப்பதம் நட,வா,படி,வாழ்.
      இடைப் பகாப்பதம் மன், கொல், தில், போல்,மற்று
      உரிப் பகாப்பதம் உறு, தவ,நனி,கழி.

      கீழுள்ள சொற்களுள் பெயர்ப்பகாப்பத, வினைப்பகாப்பதச் சொற்களைக் கண்டறிந்து வகைப்படுத்துக.

      (மணி, கொடு, நிலம், பேசு, மலர், கண், நில், ஓடு, தலை, தடு, மரம், பாடு)

      பெயர்ப்பகாப்பதம்

      • மணி
      • நிலம்
      • மலர்
      • கண்
      • தலை
      • மரம்

      வினைப்பகாப்பதம்

      • கொடு
      • பேசு
      • நில்
      • ஓடு 
      • தடு
      • பாடு

      நினைவுகூர்க

      பகுதி

      பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது.

      இது கட்டளையாகவே அமையும்.

      விகுதி பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
      இடைநிலை பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
      சந்தி பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
      சாரியை

      பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.

      விகாரம்

      பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

      சிறுவினாக்கள்

      1. பகாப்பதம் என்றால் என்ன?

      2. பகுபதம் என்றால் என்ன?

      3. ஓரெழுத்து ஒருமொழிக்குச் சான்றுகள் ஐந்து தருக.

      4. பகுபதத்தின் உறுப்புகள் யாவை?

      தொடர்புடையவை - எழுத்திலக்கணம்

        கருத்துரையிடுக

        0 கருத்துகள்
        * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

        Top Post Ad