உவமை அணி , எடுத்துக்காட்டு உவமை அணி, இல்பொருள் உவமையணி

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம். 

  • தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

உவமை அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம் (link)

பாடத்தலைப்புகள்(toc)

உவமை அணி விளக்கம்

அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன. 

அணிகளில் முதலாவதாகவும் பிற அணிகளுக்குத் தாயாகவும் விளங்குவது உவமை அணியாகும். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், உவமையியல் என்னும் இயல் அமைத்து இவ்வணியை விளக்கிக் கூறியிருப்பதால் இதன் சிறப்பை அறியலாம்.

ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூற விரும்பும் புலவர் சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறி அதனை விளக்குகிறார். 

  • அணியிலக்கணத்தில், இவ்வாறு சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும். 
  • அதனைச் சிறப்பிக்கப் பயன்பட்ட எடுத்துக்காட்டு, உவமானம் எனப்படும். 

ஒரு பாடலில் எடுத்துக்காட்டான உவமானம், பொருளான உவமேயம் இவற்றோடு போல என்னும் பொருள் தரும் உவம உருபு, உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் இடையே காணப்படும் பொதுத் தன்மை ஆகிய நான்கும் இடம்பெற வேண்டும். 

அப்பொழுதுதான் அப்பாடல் உவமை அணியில் அமைந்ததாகும். 

உவமை அணி கூறுகள் 

ஆக உவமை அணியில், 

  • உவமானம், 
  • உவமேயம், 
  • உவம உருபு, 
  • பொதுத்தன்மை 

என நான்கு கூறுகள் இடம்பெற வேண்டும். 

பொதுத் தன்மை இல்லாமல் மற்ற மூன்று கூறுகளைப் பெற்றிருந்தாலும் அது உவமை அணியாகாது. 

'பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந்
தொப்புமை தோன்றச் செப்புவ துவமை' - தண்டியலங்காரம் 31 (code-box)

பொதுத் தன்மை மூன்று வகையில் அமையலாம் என அணி இலக்கண நூலார் கண்டறிந்துள்ளனர். 

அவை: 

  • பண்பு 
  • தொழில் 
  • பயன் 

என்பனவாகும். 

உவமை அணி எத்தனை வகைப்படும் ?

பொதுத் தன்மை அடிப்படையில் உவமை அணி மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது 

 அவை,

  • பண்பு உவமை அணி, 
  • தொழில் உவமை அணி, 
  • பயன் உவமை அணி 

என்பனவாகும். 

உவமை அணியின் வகைதான் மூன்றே தவிர இம்மூன்றும் ஒரே பாடலிலும் இடம் பெறலாம். தனித்தனிப் பாடல்களிலும் இடம்பெறலாம்.

மூன்றும் ஒரே பாடல்

"பால்போலும் இன்சொல் பவளம் போல்
செந்துவர்வாய் சேல்போல் பிறழும் திருநெடுங்கண் - மேலாம்
புயல்போல் கொடைக்கைப் புனல்நாடன்
கொல்லி அயல்போலும் வாழ்வதவர்"  (code-box)

என்னும் பாடலில் உவமை அணியின் மூன்று பிரிவுகளையும் காணலாம்.

பண்பு உவமை

'பவளம் போல் செந்துவர் வாய்' என்பதில், 

  • பவளம் - உவமானம்; 
  • வாய் - உவமேயம்; 
  • போல் - உவம உருபு; 

சிவந்த வண்ணம் - பொதுத் தன்மை. வண்ணம் பண்பாதலின் இது பண்பு உவமை.

தொழில் உவமை

'சேல்போல் பிறழும் திருநெடுங்கண்' என்பதில், 

  • சேல் - உவமானம்; 
  • கண் - உவமேயம்; 
  • போல் - உவம உருபு;

பிறழுதல் - பொதுத் தன்மை. பிறழுதல் தொழில் ஆதலின் இது தொழில் உவமை.

பயன் உவமை

'புயல் போல் கொடைக்கைப் புனல் நாடன்' என்பதில், 

  • புயல் என்னும் மேகம் - உவமானம்; 
  • கைப் புனல் நாடன் - உவமேயம்; 
  • போல் - உவம் உருபு: 

கொடை - பொதுத்தன்மை. மழை, அதன் பயன் நோக்கி இங்கு உவமிக்கப்படுவதால் இது பயன் உவமை.

உவமை அணி என்றால் என்ன?

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். 

  • போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும். 

உவமை அணி உதாரணம்

உவமைத்தொடர்

இத்தொடர்களைப் படியுங்கள். 
  • மயில் போல ஆடினாள். 
  • மீன் போன்ற கண். 
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல

இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். 

  • இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். 
  • உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். 
  • இத்தொடர்களில் வந்துள்ள 'போல', 'போன்ற' என்பவை உவம உருபுகளாகும். 

இத்தொடரைப் படியுங்கள். 

  • மலர்ப்பாதம் - மலர் போன்ற பாதம் 

இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது. 

  • பாதம் - பொருள் (உவமேயம்)
  • மலர் - உவமை 
  • போன்ற - உவம உருபு  

உவமை அணி எடுத்துக்காட்டு - திருகுறள் சான்று

எடுத்துக்காட்டு 1

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை -  குறள் (பொறையுடைமை)  (code-box)

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல, நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள். 

  • இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை
  • நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). 
  • 'போல' என்பது உவம உருபு.

எடுத்துக்காட்டு 2

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு -   குறள் (code-box)

ஊர் நடுவே உள்ள குளம் நிரம்பினாற்போன்றதே உலக உயிர்களை யெல்லாம் விரும்பி உதவிசெய்யும் பேரறிவு உடையானிடம் சேர்ந்த செல்வம். 

இப்பாடலில், 

  • ஊருணி நீர்நிறைதல் என்பது உவமை. 
  • உலகவாம் பேரறிவாளன் திரு என்பது உவமேயம். 
  • அற்று என்பது உவம் உருபு. 

இவ்வாறு உவமை, உவமேயம் இவ்விரண்டனையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது உவமையணி ஆகும். 

எடுத்துக்காட்டு 3

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (code-box)

இதில் உவமையணி அமைந்துள்ளது.  

TNPSC- General Tamil -Study Material


எடுத்துக்காட்டு உவமை அணி விளக்கம்

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

உவமானம் ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைய இடையில் உவம உருபு மறைந்து நின்று, பொதுத் தன்மை தோன்ற விளங்குவது. 

(உவமானம் - உவமை; உவமேயம் - பொருள்)

எடுத்துக்காட்டு உவமை அணி எடுத்துக்காட்டு - திருகுறள் சான்று

எடுத்துக்காட்டு 1

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு - குறள் (கல்வி)  (code-box)

மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். 

  • இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை
  • மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்
  • இடையில் 'அதுபோல்' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. 

இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு 2

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் - குறள் (code-box)

ஒருவனது உடல் தூய்மை நீரில் குளிப்பதனால் புலப்படும். உண்மையைப் பேசுவதனால், உள்ளத்தின் தூய்மை புலப்படும். 

இப்பாடலில், 

  • உடம்பின் தூய்மை நீரால் அமையும் என்பது உவமை. 
  • உள்ளத்தின் தூய்மை உண்மை பேசுவதனால் உண்டாகும் என்பது உவமேயம்.
  •  இவ்விரண்டனையும் இணைக்கும் உவம உருபு இல்லை. 

இப்பாடலில் உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டு இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப் பட்டுள்ளது. எனவே, இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி.  

எடுத்துக்காட்டு 3

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'  - குறள் 1 (code-box)

என்னும் திருக்குறளின் பொருள், 'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகப் பெற்றுள்ளமை போல உலகம் ஆதிபகவனை முதலாக உடையது' என்பதாகும். 

  • 'எழுத்தெல்லாம் அகர முதல' என்னும் தொடர் - உவமானம். 
  • 'உலகு ஆதி பகவன் முதற்றே' என்னும் தொடர் - உவமேயம். 
  • முதலாக விளங்குதல் என்பது பொதுத்தன்மை. 

உவம உருபு போல என்பது வெளிப்படத் தோன்றாமல் அப்பொருள் தோன்ற இடம் அளித்துள்ளமை காண்க. அதனால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணியின் பாற்படும்.   

இல்பொருள் உவமையணி விளக்கம்

உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர். 

  • உலகில் எங்கும் காணமுடியாத அல்லது இல்லாத உவமானமாகக் கொள்ளுதல்.

இல்பொருள் உவமையணி எடுத்துக்காட்டு

  • மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
  •  காளை, கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது. 

இத்தொடர்களில் 'பொன்மழை பொழிந்தது போல்', 'கொம்பு முளைத்த குதிரை போல' என்னும் உவமைகள் வந்துள்ளன. 

  • உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை. 
  • கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. 

இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர். 

எடுத்துக்காட்டு 1

'கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு
இருசுடர் இருபுறத் தேந்தி ஏந்தலர்த்
திருவொடும் பொலியவோர் செம்பொற் குன்றின்மேல்
வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான்' - கம்பராமாயணம் (code-box)

என்னும் கம்பராமாயணப் பாடலின் பொருள், 

'கார்மேகம் ஒன்று தாமரைக் காடு பூத்து, இருபுறமும் சந்திரன் சூரியரை ஏந்திக் குன்றின் மேலேறி வருவதைப் போலக் கருட வாகனத்தின் மேல் இராமன் வந்து தோன்றினான்' என்பது ஆகும். 

இதில் கார்மேகம் ஒன்று தாமரைக் காடு பூத்து இருபுறமும் சந்திரன், சூரியரை ஏந்திக் குன்றின் மேல் வருவது என்பது எங்கும் காண இயலாத காட்சி ஆகும். எனவே இது இல்பொருள் உவமை ஆயிற்று. இதனைத் தண்டியலங்காரம் இல்பொருள் உவமை அணி எனக் கூறும். 

உவமை, உவமேயம், உவம உருபு வேறுபாடு

பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக. 

தொடர்கள் உவமை உவமேயம் உவம உருபு
மலரன்ன பாதம் மலர் பாதம் அன்ன
தேன் போன்ற தமிழ் தேன்  தமிழ் போன்ற 
புலி போலப் பாய்ந்தான் புலி  பாய்தல் போல
மயிலொப்ப ஆடினாள் மாதவி மயில் ஆடிதல்  ஒப்ப

நினைவுகூர்க:

உவமை அணி, உருவக அணி வேறுபாடு

உவமை அணி உருவக அணி

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம். 

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.  
'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி  'தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம் 
  • வெள்ளம் போன்ற இன்பம்
  • கடல் போன்ற துன்பம்
  • மதிபோன்ற முகம் - மதிமுகம் 
  • இன்ப வெள்ளம்
  • துன்பக்கடல்
  • முகம் ஆகிய மதி - முகமதி 

தொடர்புடையவை

    கருத்துரையிடுக

    1 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Please share your valuable comments

    Top Post Ad