பின்வருநிலை அணிகள் - சொல் பின்வருநிலையணி, பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம். 

  • தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

பின்வருநிலை அணிகள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

பின்வருநிலை அணிகள் விளக்கம்

பின்வருநிலை அணி என்றால் என்ன?

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே பின்வருநிலை அணியாகும். 

  • செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும்.

பின்வருநிலை அணி எத்தனை வகைபடும்?

பின்வருநிலை அணியின் வகைகள் - இது மூன்று வகைப்படும். 

  1. சொல் பின்வருநிலையணி 
  2. பொருள் பின்வருநிலையணி 
  3. சொற்பொருள் பின்வருநிலையணி

பின்வருநிலை அணிகள் - பின்வருநிலை அணி வகைகள்

சொல் பின்வருநிலையணி விளக்கம்

ஒரு செய்யுளில் வந்த சொல்லே பல முறை திரும்பத் திரும்ப வந்து வெவ்வேறு பொருள் தருமாயின் சொல் பின்வருநிலை அணி எனப்படும்.

சொல் பின்வருநிலையணி என்றால் என்ன?

முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை அணியாகும். 

  • செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது

சொல் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 

இக்குறளில் 'துப்பு' என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது. 

  • துப்பார்க்கு - உண்பவர்க்கு; 
  • துப்பு - நல்ல, நன்மை; 
  • துப்பு - உணவு 

என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம். 

எடுத்துக்காட்டு 2

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்" - குறள் 751

என்னும் திருக்குறளில் பொருள் என்னும் சொல் நான்கு முறை வந்துள்ளது. 

  • முதல் இரண்டு இடங்களில் தகுதி அல்லது மதிப்பு என்னும் கருத்திலும், 
  • பின் இரண்டு இடங்களில் செல்வம் என்னும் கருத்திலும் 

அச்சொல் இடம் பெற்றுள்ளது. சொல் மட்டும் பலமுறை வந்து அச்சொல்லிற்கான பொருள் வெவ்வேறாக இருப்பதால் இச்செய்யுளின் அணி சொல்பின் வருநிலையணி ஆயிற்று.  

பொருள் பின்வருநிலையணி விளக்கம்

ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ஒரு செய்யுளில் இடம் பெறுவது பொருள் பின்வருநிலைஅணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?

செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலையணி ஆகும்.  

  • செய்யுளில் ஒரே பொருள்தரும் பல சொற்கள் வருவது

பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை. 

இச்செய்யுளில் 

  • அவிழ்ந்தன, 
  • அலர்ந்தன, 
  • நெகிழ்ந்தன, 
  • விண்டன, 
  • விரிந்தன, 
  • கொண்டன 

ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன. 

எடுத்துக்காட்டு 2

"ஆறுபாய் அரவம், மள்ள ராலைபாய் அமலை, ஆலைச்
சாறுபாய் ஓசை, வேலைச் சங்குவாய் பொங்கும் ஓதை
ஏறுபாய் தமரம், நீரிலெருமைபாய் துழனி, இன்ன
மாறுமா றாகித் தம்மின் மயங்குமா மருத வேலி" - கம்பராமாயணம்

என்னும் கம்பராமாயணப் பாடலில், 

ஒலி என்னும் பொருள்படும் சொற்களான, 

  • அரவம், 
  • அமலை, 
  • ஓசை, 
  • ஓதை, 
  • தமரம், 
  • துழனி 

ஆகியன இடம் பெற்றுள்ளன. இதனால் இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள அணி 'பொருள் பின்வருநிலை அணி' ஆகும்.  

எடுத்துக்காட்டு 3

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன. 

சொற்பொருள் பின்வருநிலையணி விளக்கம்

அணி செய்யுளில் இடம் பெறும் ஒரு சொல் அதே பொருளில் பலமுறை பயின்று வருதல் சொற்பொருள் நிலை அணி எனப்படும். 

சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?

முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.  

  • செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது

சொற்பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 

இக்குறட்பாவில் 'விளக்கு' என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும். 

எடுத்துக்காட்டு 2

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 

இப்பாடலில், தீய என்னும் சொல் தீமை என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது. 

எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி.

எடுத்துக்காட்டு 3

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல்" - குறள் 12 

என்னும் திருக்குறளில் நாடி என்னும் சொல் அறிந்து என்னும் பொருளில் மூன்றுமுறை வந்துள்ளது. இதனால் இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி சொற்பொருள் பின்வருநிலை ஆகும்.

நினைவுகூர்க

இம்மூன்று பின்வருநிலை அணிகளைத் தண்டியலங்காரம் ஒரே நூற்பாவில் குறிப்பிடுகிறது.

சொல் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை அணியாகும்.  
செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலையணி ஆகும். 
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad