தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
சொற்றொடர்(Phrase) அல்லது தொடர் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்
பாடத்தலைப்புகள்(toc)
சொற்றொடர்(Phrase) அல்லது தொடர் என்றால் என்ன?
இரண்டு முதலாக சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.
தொடர் எடுத்துக்காட்டு
- நீர் பருகினான்
- வெண்சங்கு ஊதினான்
- கார்குழலி பாடம் படித்தாள்.
இறுதித்தொடரில் உள்ள மூன்று சொற்களும் (கார்குழலி, பாடம், படித்தாள்) தொடர்ந்து வந்து பொருளைத் தருகின்றன.
தொடர்கள் எத்தனை வகைபடும்?
தொடர்கள் வகைகள் இருவகைப்படும்.
தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன?
சொற்கள் தொடராகும்போது, இரு சொற்களுக்கிடையே உருபுகள் மறைந்து வரும் தொடர்களைத் 'தொகைநிலைத் தொடர்கள்' என்பர்.
பெயர்ச்சொல்லோடு, வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
தொகைநிலைத் தொடர்கள் எடுத்துக்காட்டு
- கயல்விழி
இச்சொல்லில் கயல், விழி என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற( 'கயல் போன்ற விழி') என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை எனக்கூறுவர்.
- கரும்பு தின்றான்
மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்?
தொகை நிலைத்தொடர் வகைகள் அறுவகைப்படும்.
- வேற்றுமைத்தொகை,
- வினைத்தொகை,
- பண்புத்தொகை,
- உவமைத்தொகை,
- உம்மைத்தொகை,
- அன்மொழித்தொகை
என்பன.
வேற்றுமைத்தொகை என்றால் என்ன ?
வேற்றுமை என்றால் என்ன ?
- கண்ணன் இராமன் பார்த்தான்.
- கரும்பு தின்றான்.
- மதுரைச் சென்றார்.
இத்தொடரில் யார் யாரைப் பார்த்தான்? பார்த்தது யார் என்று புரியவில்லை,
- கண்ணனை இராமன் பார்த்தான்.
- கரும்பைத் தின்றான்.
- மதுரைக்குச் சென்றார்.
இப்போது புரிகிறதா? : நன்றாகப் புரிகிறது.
கண்ணனை இராமன் பார்த்தான் என்னும் இத்தொடரில் ஐ என்னும் உருபு யார், யாரைப் பார்த்தான் எனப் பெயரை வேறுபடுத்திக் காட்டுவதனால், வேற்றுமை என்கிறோம்.
- பெயரின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுக்கு வேற்றுமை உருபு என்பது பெயர்.
- ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன வேற்றுமை உருபு.
வேற்றுமை வகைகள்
- முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை),
- இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை),
- மூன்றாம் வேற்றுமை,
- நான்காம் வேற்றுமை,
- ஐந்தாம் வேற்றுமை,
- ஆறாம் வேற்றுமை,
- ஏழாம் வேற்றுமை,
- எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
என எண் வகைப்படும்.
வேற்றுமைத்தொகை
- ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன வேற்றுமை உருபு.
இருசொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதனை வேற்றுமைத்தொகை என்கிறோம்.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. இரண்டாம் வேற்றுமை உருபுமுதல் ஏழாம் வேற்றுமை உருபுவரை உள்ளனவற்றுள் ஏதேனும் ஒன்று வேற்றுமை உருபாய் வரும்.
- மதுரை சென்றார்
இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் "கு" என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ.ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
வேற்றுமைத்தொகை எடுத்துக்காட்டு
வேற்றுமைத்தொகை | வேற்றுமை உருபுகள் | எடுத்துக்காட்டு | பொருள் |
---|---|---|---|
முதல் (எழுவாய்) | இல்லை | - | - |
இரண்டாம் | ஐ | பால் பருகினான் (பால் + ஐ + பருகினான்) | இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது |
மூன்றாம் | ஆல், ஆன், ஒடு, ஓடு | தலை வணங்கினான் (தலை + ஆல் + வணங்கினான்) | இங்கு ஆல் என்னும் உருபு மறைந்துள்ளது |
நான்காம் | கு | வேலன் மகன் (வேலன் + கு + மகன்) | இங்கு கு என்னும் உருபு மறைந்துள்ளது |
ஐந்தாம் | இல், இன் | ஊர் நீங்கினான் (ஊர் + இன் + நீங்கினான்) | இங்கு இன் என்னும் உருபு மறைந்துள்ளது |
ஆறாம் | அது, ஆது, அ | செங்குட்டுவன் சட்டை (செங்குட்டுவன் + அது + சட்டை) | இங்கு அது என்னும் உருபு மறைந்துள்ளது |
ஏழாம் | கண் | குகைப்புலி (குகை + கண் + புலி) | இங்கு கண் என்னும் உருபு மறைந்துள்ளது |
எட்டாம் (விளி) | இல்லை | - | - |
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- தேர்ப்பாகன்
இத்தொடர் "தேரை ஓட்டும் பாகன்" என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் "ஐ" என்னும் வேற்றுமை உருபும், ''ஓட்டும்” என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
- தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு)
நான்காம் வேற்றுமை(கு) உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
வினைத்தொகை என்றால் என்ன?
காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது (பெயரெச்சம்) வினைத்தொகை எனப்படும்.
- வீசுதென்றல்,
- கொல்களிறு
- பொழிதருமணி, பணைதருபருமணி, வருபுனல், நிதிதருகவிகை
வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன.
காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை - நன்னூல், 364
காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.
காலங்காட்டும் இடைநிலை
காலங்காட்டும் இடைநிலை இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன. வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
இறந்தகாலம் | நிகழ்காலம் |
எதிர்காலம் |
---|---|---|
பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பது | அந்நேரத்தில் நடந்துகொண்டு இருப்பவற்றைக் குறிப்பது | பின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது |
செய்தான் | செய்கின்றான் | செய்வான் |
செய் + த் + ஆன் ----> செய்தான் | செய் + கின்று + ஆன் ----> செய்கின்றான் | செய் + வ் + ஆன் ----> செய்வான் |
இடைநிலைகள் - "த்" (த், ட், ற், த்த்), "ந்த்" (ந்த், ன்ற், ண்ட்), "இன்" (ய், ன்) | இடைநிலைகள்- "கின்று", "கிறு" | இடைநிலைகள் - "வ்", "ப்ப்", "ப்" |
வினைத்தொகை எடுத்துக்காட்டு
- உண்கலம்,
- ஆடுகொடி,
- பாய்புலி,
- அலைகடல்,
- எழுகதிர்
இதனை,
- உண்ட கலம், உண்கின்ற கலம், உண்ணும் கலம்
- ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி
- பாய்ந்த புலி, பாய்கின்ற புலி,பாயும் புலி
- அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும் கடல்
- எழுந்த கதிர், எழுகின்ற கதிர், எழும் கதிர்
என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் கொள்ளலாம்.
பண்புத்தொகை என்றால் என்ன?
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும், அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் 'ஆகிய, ஆன' என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
பண்புத்தொகை எடுத்துக்காட்டு
- செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்,
- வட்டத்தொட்டி - வட்டமான தொட்டி,
- இன்மொழி - இனிமையான மொழி
- இன்சொல் - இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.
பண்புப் பெயர்கள், பெயர்ச்சொற்களோடு சேர்ந்து வரும்போது இரண்டிற்கும் இடையில் ‘ஆகிய, ஆன' என்னும் பண்பு உருபுகளும், 'மை' விகுதியும் தொக்கி (மறைந்து) வந்துள்ளன. எனவே, இவை பண்புத்தொகை பயின்று வந்த தொடர்கள்.
வெண்ணிலவு, சதுரக்கல், இன்சுவை இச்சொற்றொடர்களைப் படித்துப் பாருங்கள்.
வெண்மை, சதுரம், இனிமை ஆகிய பண்புப் பெயர்கள் நிலவு, கல், சுவை ஆகிய பெயர்ச்சொற்களோடு சேர்ந்து வரும்போது இரண்டிற்கும் இடையில் ‘ஆகிய, ஆன' என்னும் பண்பு உருபுகளும் 'மை' விகுதியும் தொக்கி (மறைந்து) வந்துள்ளன.
- வெண்மை + நிலவு = வெண்ணிலவு ('மை' விகுதி மறைந்து)
- சதுரம் + கல் = சதுரக்கல்
- இனிமை + சுவை = இன்சுவை ('மை' விகுதி மறைந்து)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை எடுத்துக்காட்டு
எடுத்துக் காட்டாக, மல்லிகைப்பூ என்னும் சொல்லைப் பார்ப்போம்.
- மல்லிகை என்பது சிறப்புப்பெயர்.
- பூ என்பது பொதுப்பெயர்.
இரண்டுக்கும் இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இஃது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
- மார்கழித் திங்கள்,
- சாரைப்பாம்பு
திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்கு முன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து 'மார்கழி ஆகிய திங்கள்' என்றும், 'சாரை ஆகிய பாம்பு' என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.
உம்மைத்தொகை என்றால் என்ன?
இரண்டு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தந்தால், உம்மைத் தொகை எனப்படும்.
- எண்ணல்,
- எடுத்தல்,
- முகத்தல்,
- நீட்டல்
என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
உம்மைத்தொகை எடுத்துக்காட்டு
- கபிலபரணர்,
- உற்றார் உறவினர்.
இத்தொடர்கள் கபிலரும் பரணரும், உற்றாரும் உறவினரும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தருவதனால், உம்மைத் தொகை எனப்பட்டது.
- அண்ணன் தம்பி,
- தாய்சேய்
இத்தொடர்கள் அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
உவமைத்தொகை என்றால் என்ன?
இரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வருவதை உவமைத்தொகை எனக்கூறுவர்.
- உவமைக்கும், பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
உவமைத்தொகை எடுத்துக்காட்டு
- கயல்விழி (கயல் போன்ற விழி)
இச்சொல்லில் கயல், விழி என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற ('கயல் போன்ற விழி') என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை எனக்கூறுவர்.
- மலர்க்கை (மலர் போன்ற கை)
இதில்,
- மலர் - உவமை
- கை - உவமேயம் (பொருள்)
இடையே 'போன்ற' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
அன்மொழித்தொகை என்றால் என்ன?
வேற்றுமை, வினை, பண்பு, உம்மை, உவமை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
அன்மொழித்தொகை எடுத்துக்காட்டு
- சிவப்புச் சட்டை பேசினார்
- முறுக்கு மீசை வந்தார்
இவற்றில்,
- சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார்,
- முறுக்கு மீசையை உடையவர் வந்தார்
எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.
- கயல்விழி வந்தாள்
இத்தொடரில் முதலில் உள்ள ‘கயல்விழி' என்பது,
'கயல் போன்ற விழி' என்னும் பொருளைத் தரும் உவமைத்தொகை ஆகும்.
வந்தாள்' என்னும் வினைச்சொல்லைத் தழுவி நின்றதனால், 'கயல் போன்ற விழியை உடைய பெண் வந்தாள்' எனப் பொருள் தருகிறது.
இதில் 'உடைய', 'பெண்' என்னும் சொற்கள் தொடரில் இல்லாதவை. இவ்வாறு உவமைத்தொகையை அடுத்து அல்லாதமொழி தொக்கி வருவதனால் இத்தொடரை உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்கிறோம்.
இதனைப்போன்று வேற்றுமை, வினை, பண்பு, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.
- அன்புச்செல்வன் - வேற்றுமைத்தொகை
- தொடுதிரை - வினைத்தொகை
அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.
- மோர்ப்பானை - வேற்றுமைத்தொகை (மோரை உடைய பானை - ஐ)
- மோர் கொடுக்கவும் - மூன்றாம் வேற்றுமைத்தொகை (மோரை கொடுக்கவும்)
வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
-
வெண்டைக்காய் - வெண்டை ஆகிய காய் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
-
மோர்க்குழம்பு - மூன்றாம் வேற்றுமைத்தொகை - இங்கு ஆல் என்னும் உருபு
மறைந்துள்ளது
தங்கமீன்கள், தண்ணீர்த்தொட்டியில் விளையாடுகின்றன.
- தங்கமீன்கள் - தங்க போன்ற மீன்கள் - உவமைத்தொகை
- தண்ணீர்த்தொட்டி - வேற்றுமைத்தொகை
சொல்லுக்கான தொகையின் வகை எது?
'பெரிய மீசை' சிரித்தார்
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக;
தண்ணீர் குடி - தண்ணீரைக் குடி
தயிர்க்குடம் - தயிரை உடைய குடம்
இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து
எழுதுக.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
மல்லிகைப்பூ - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
பூங்கொடி - உவமைத்தொகை
ஆடுமாடு - உம்மைத்தொகை
சுவர்க்கடிகாரம் - வேற்றுமைத்தொகை
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
இன்சொல் - பண்புத்தொகை
எழுகதிர் - வினைத்தொகை
கீரிபாம்பு - உம்மைத்தொகை
மலை வாழ்வார் - வேற்றுமைத்தொகை
முத்துப்பல் - உவமைத்தொகை
தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன ?
ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
- காற்று வீசியது
- குயில் கூவியது
முதல் தொடரில் "காற்று" என்னும் எழுவாயும் "வீசியது" என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.
அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.
"முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுருபு இடையுரி அடுக்கிவை
தொகாநிலை" நன்னூல்,374
தொகாநிலைத் தொடர்கள் எடுத்துக்காட்டு
- இளமுருகன் படிக்கிறான்
இத்தொடரைப் படித்துப் பாருங்கள்.
'இளமுருகன்' என்னும் எழுவாயும், 'படிக்கிறான்' என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளைத் தருகின்றன.
இவ்வாறு ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்?
தொகாநிலைத் தொடர்கள் வகைகள் ஒன்பது வகைப்படும்.
- எழுவாய்த்தொடர்
- விளித்தொடர்
- வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
- இடைச்சொற்றொடர்
- வினைமுற்றுத்தொடர்
- உரிச்சொற்றொடர்
- பெயரெச்சத்தொடர்
- அடுக்குத்தொடர்
- வினையெச்சத்தொடர்
எழுவாய்த்தொடர்
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
- இனியன் கவிஞர் – பெயர்
- காவிரி பாய்ந்தது — வினை
- பேருந்து வருமா? - வினா
மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.
- கபிலன் வந்தான்
இச்சொற்றொடரில் 'கபிலன்' என்னும் எழுவாயைத் தொடர்ந்து 'வந்தான்' என்னும் பயனிலை வந்துள்ளதனால், இஃது எழுவாய்த்தொடர்.
விளித்தொடர்
விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
- நண்பா எழுது!
"நண்பா" என்னும் விளிப்பெயர் எழுது என்னும் வினை பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.
- கதிரவா வா!
இது விளித்தொடர்.
வினைமுற்றுத்தொடர்
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
- பாடினாள் கண்ணகி
"பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
- கண்டேன் சீதையை
வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத்தொடர்.
பெயரெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
- கேட்ட பாடல்
"கேட்ட" என்னும் எச்சவினை ‘பாடல்' என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
- விழுந்த மரம்
'விழுந்த' என்னும் எச்சவினை 'மரம்' என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதனால், இது பெயரெச்சத்தொடர்.
வினையெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.
- பாடி மகிழ்ந்தனர்
'பாடி' என்னும் எச்சவினை 'மகிழ்ந்தனர்' என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
- வந்துபோனான்
'வந்து' என்னும் எச்சவினை 'போனான்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதனால், இது வினையெச்சத்தொடர்.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
- கட்டுரையைப் படித்தாள்.
- வீட்டைக் கட்டினான்
இத்தொடர்களில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
- அன்பால் கட்டினார்
இத்தொடரில் (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- அறிஞருக்குப் பொன்னாடை
இத்தொடரில் 'கு' நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
இடைச்சொற்றொடர்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
- மற்றொன்று
மற்றொன்று - மற்று + ஒன்று. 'மற்று' என்னும் இடைச்சொல்லை அடுத்து 'ஒன்று' என்னும் சொல் தொடர்ந்து வந்ததனால் இஃது இடைச்சொற்றொடர்.
உரிச்சொற்றொடர்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
- மாமுனிவர்
இத்தொடரில் 'மா' என்பது உரிச்சொல். இதனைத் தொடர்ந்து, 'முனிவர்` என்னும் சொல் வந்துள்ளதனால், இஃது உரிச்சொற்றொடர்.
- சாலச் சிறந்தது
‘சால` என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று 'மிகச் சிறந்தது' என்ற பொருளைத் தருகிறது.
அடுக்குத்தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
- வருக! வருக! வருக!
ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
- வாழ்க வாழ்க வாழ்க
ஒரே சொல் இங்குப் பலமுறை அடுக்கி வந்துள்ளதனால், இஃது அடுக்குத்தொடர்.
சொற்றொடர்ப் பொருத்தம்
சொற்கள் சேர்ந்தமைவது சொற்றொடராகும். ஒரு சொற்றொடரிலுள்ள எழுவாய், அதன் பயனிலையோடு திணை, பால், எண், இடங்களில் பொருத்தமாக அமைதல் வேண்டும். இவையே வழுவற்ற சொற்றொடர்களாம்.
திணைப்பொருத்தம் :
கோலமயில் ஒயிலாக ஆடியது.
( கோலமயில் - அஃறிணை எழுவாய்; ஆடியது - அஃறிணைப் பயனிலை )
பால் பொருத்தம் :
வண்டுகள் தேன் குடித்தன.
(வண்டுகள் - பலவின்பால் எழுவாய்; குடித்தன - பலவின்பால் பயனிலை
எண் பொருத்தம் :
விண்கலங்கள் விண்ணில் பறந்தன.
( விண்கலங்கள் - எழுவாய்ப் பன்மை; பறந்தன - பன்மைப் பயனிலை )
இடப்பொருத்தம் :
அவன் பாடம் படித்தான்.
( அவன் படர்க்கை எழுவாய்; படித்தான் - படர்க்கைப் பயனிலை )
சிறப்புப் பொருத்தம் :
பாவேந்தர், பாரதியைப் புகழ்ந்து பாடினார். பாவேந்தர் என்னும் பெயர் பாரதிதாசனையே குறிக்கும் என்பதனால், அது சிறப்புப் பெயராயிற்று. சிறப்புப் பொருத்தம் உயர்வுமட்டுமல்லாது இழிவு கருதியும் வரும்.
(எ.கா) முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.
(எ.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின
I. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.
கபிலன் வேலை செய்தான். களைப்பாக இருக்கிறான்.
2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.
கூட்டுநிலைப் பெயரெச்சர்கள்
ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
- கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி
Please share your valuable comments