மொழியைப்
பிழையின்றிப் பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவும் துணைசெய்வது இலக்கணம்
ஆகும்.இதனை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளே
நன்குணர்த்தும்.
தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம், செய்யுள்களின் வகைகள் அவற்றை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
யாப்பிலக்கணம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம்பாடத்தலைப்புகள்(toc)
யாப்பு என்றால் என்ன?
- நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் யாக்கப்பட்ட (கட்டப்பட்ட) உடலை யாக்கை என்பர்.
- அதுபோல் யாப்பு இலக்கணம் வகைகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்புக்களால் கட்டப்படுவதால் பாடல் யாப்பு எனப்படும்.
-
ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய வாழ்க்கை நிகழ்ச்சியை அல்லது கருத்தை அதற்குரிய
அமைப்பு முறைப்படிக்
கட்டுதல் அல்லது புனைதல் என்னும் பொருளில் யாப்பு என்னும் சொல் பாடலோடு
தொடர்புடையது ஆகியது.
இதனைப் பா, பாட்டு, செய்யுள், தூக்கு, கவிதை எனவும் கூறுவர். இதனைப் பற்றிய இலக்கணம் யாப்பிலக்கணம் எனப்படும்.
யாப்பு என்பதன் பொருள் என்ன
- யாப்பு என்றால் கட்டுதல் என்பது பொருள்.எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்புக்களால் கட்டப்படுவதால் பாடல் யாப்பு எனப்படும். யாப்பு - யாக்கப்படுவது - கட்டப்படுவது.
செய்யுள் என்பதன் பொருள்
- யாப்பு என்பது செய்யுள்;
- செய்யுள் என்பதன் வேறு பெயர்கள் யாப்பு, பா, பாட்டு, தூக்கு, கவிதை.
யாப்பு இலக்கணம் பற்றி கூறும் தமிழ் நூல்கள்
- தொல்காப்பியம் என்னும் பழமையான இலக்கண நூலில் யாப்பிலக்கணம் கூறப்பெறுகிறது.
- பிற்காலத்தில் யாப்பருங்கலம் என்னும் நூல் யாப்பிலக்கணத்தில் புகழ் பெற்றதாகும். இந்நூலை எழுதியவர் அமிர்தசாகர். இவர் பின்னர் இந்நூலைச் சுருக்கி யாப்பருங்கலக் காரிகை என்னும் நூலை எழுதினார். இவர் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு என்பர். இவ்விரு நூலுக்கும் சமண முனிவர் குணசாகரர் சிறப்பான உரை எழுதியுள்ளார்.
யாப்பிலக்கணம் எத்தனை வகைப்படும்?
யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும்.
இதில்,
- உறுப்பியல்
- செய்யுளியல்
என இருவகைகள் உள்ளன.
1. உறுப்பியல்
உறுப்பியலில் செய்யுள் உறுப்புகளின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.உறுப்பியலில் யாப்பின் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.
செய்யுள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
யாப்பு இலக்கணம் உறுப்புகள் ஆறு கொண்டது யாப்பு அல்லது செய்யுள் .
செய்யுள் உறுப்புகள் வகைகள்
எழுத்து
செய்யுளில் குறில், நெடில், மெய், ஆய்தம் என்னும் எழுத்துகள் முதன்மையாகக் கருதப்படுவது எழுத்து.
அசை
ஓரெழுத்து தனித்தோ, இணைந்தோ ஒலிப்பது
அசை.
சீர்
அசைகள் பல சேர்ந்து அமைவது
சீர்.
தளை
சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது
தளை.
அடி
இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது
அடி.
தொடை
மலர்களைத் தொடுப்பதுபோலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத்
தொடுப்பது
தொடை
எனப்படும்.
தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்புகள் -34
2. செய்யுளியல்
செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.செய்யுளியலில் யாப்பின் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகை செய்யுள்(பா) உள்ளன.
பாக்கள் என்றால் என்ன?
அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும்.
பாவின் வகைகள் எத்தனை
செய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது.
ஓசை நயத்தை வேறுபடுத்தி அறிவதற்காக நால்வகைப் பாக்கள் / நான்கு வகை தமிழ் செய்யுள்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1. வெண்பா
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.
- செப்பலோசை வெண்பாவிற்குரியது.
2. வஞ்சிப்பா
சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. அதாவது தாழ்ந்தே வருவது.- தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.
3. ஆசிரியப்பா
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.
- ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆகும்.
அகவற்பா என்றால் என்ன?
இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.
4. கலிப்பா
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு
உரியது. கன்று துள்ளினாற் போலச் சீர்தோறுந் துள்ளி வரும் ஓசை. அதாவது தாழ்ந்து
உயர்ந்து வருவது துள்ளல் ஓசை.
- கலிப்பாவிற்கு உரியது துள்ளல் ஓசை ஆகும்.
ஓசை
பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம்.
ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.
- செப்பல்,
- அகவல்,
- துள்ளல்,
- தூங்கல் என்று ஓசை நான்கு வகைப்படும்.
1. செப்பல் ஓசை
- செப்பலோசை வெண்பாவிற்குரியது.
- இருவர் உரையாடுவது போன்ற ஓசை
அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.
2. அகவல் ஓசை
- அகவல் ஓசை ஆசிரியப்பாவின் ஓசை ஆகும்.
- ஒருவர் பேசுதல் போன்ற, சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை.
3. துள்ளல் ஓசை
- துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது.
- கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
4. தூங்கல் ஓசை
- தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.
- சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. அதாவது தாழ்ந்தே வருவது.
யாப்போசை தரும் பாவோசை | |
---|---|
செப்பலோசை | இருவர் உரையாடுவது போன்ற ஓசை |
அகவலோசை | ஒருவர் பேசுதல் போன்ற, சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை |
துள்ளலோசை | கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது |
தூங்கலோசை | சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. அதாவது தாழ்ந்தே வருவது |
நினைவுகூர்க
- உறுப்பியலில் யாப்பின் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.
- செய்யுளியலில் யாப்பின் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்
- யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் பெயர் என்ன ?
- யாப்பு என்பது பொருள் என்ன ?
- செய்யுள் என்பதன் வேறு பெயர்கள் என்ன ?
தொடர்புடையவை
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம் வகைகள் எழுதுக?
- பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
-
யாப்பின் உறுப்புகள் யாவை?
- அணியிலக்கணம் பற்றி கூறும் தமிழ் நூல்கள் யாவை ?
Please share your valuable comments