வினைச்சொல் - Verb in tamil language

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.

வினைச்சொல் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

தமிழில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பிரிப்பர்:

வினைச்சொல்(Verb) என்றால் என்ன?

வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள்.வினைச்சொல் என்பது செயலையும் காலத்தையும் காட்டும்; வேற்றுமை உருபு ஏற்காது.

வினைச்சொல் எடுத்துக்காட்டு

  • இராமன் வந்தான்
  • கண்ணன் நடந்தான்
இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள். அவையே எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள். இவையே பயனிலைகளாகவும் (முடிக்கும் சொற்களாகவும்) உள்ளன. இவ்வாறு, எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.

வினைச்சொல் எத்தனை வகைப்படும்?

வினைச்சொல் வகைகள்

  1. வினைமுற்று
    • தெரிநிலை வினைமுற்று
    • குறிப்பு வினைமுற்று
  2. எச்சம்
    • பெயரெச்சம்
      • தெரிநிலைப் பெயரெச்சம்
      • குறிப்புப் பெயரெச்சம்
    • வினையெச்சம்
      • தெரிநிலை வினையெச்சம்
      • குறிப்பு வினையெச்சம்
    • முற்றெச்சம்
  3. சிறப்பு வினை
    • தன்வினை
    • பிறவினை
    • உடன்பாட்டுவினை
    • எதிர்மறை வினை
    • செய்வினை
    • செயப்பாட்டுவினை
  4. பொது வினை
  5. முற்றுவினை
    • தெரிநிலை முற்றுவினை
    • குறிப்பு முற்றுவினை

வினைமுற்று என்றால் என்ன?

செயல் முடிந்ததைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும். இது மூன்று காலங்களில் ஒன்றை உணர்த்தும்.

  • திணை, பால், எண், இடம்ஆகியவற்றைக் காட்டும்.
  • வினைமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்;

வினைமுற்று சொற்கள், வினைமுற்று தொடர்கள்

  • வந்தான், வருகின்றான், வருவான்
  • அருளரசு வந்தான்
  • வளவன் நடந்தான்

இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன. இவ்வாறு, தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர்.

வினைமுற்று எடுத்துக்காட்டு

'வந்தான், நடந்தான்' என்னும் வினைமுற்றுகள்

வினைமுற்று எத்தனை வகைப்படும்?

வினைமுற்று வகைகள்

  1. தெரிநிலை வினைமுற்று
  2. குறிப்பு வினைமுற்று
என இரு வகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று.

  • தெரிநிலை வினைமுற்றில் பகுதி செயலையும், விகுதி செய்பவனையும், இடைநிலை காலத்தையும் காட்டும்.

அவையாவன:

  1. வினையைச் செய்பவன்
  2. வினை செய்வதற்கு உரிய கருவி
  3. வினை செய்வதற்குரிய இடம்
  4. வினைக்குரிய செயல்
  5. வினை நிகழும் காலம்
  6. வினையால் செய்யப்படும் பொருள்

"செய்பவள் கருவி நிலஞ்செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவதுவினையே" - (ந.நூற்பா.320)


இந்நூற்பாவில் 'ஆறும்' என்னும் சொல்லில் உள்ள 'உம்' என்பது 'முற்றும்மை' ஆகும். இதனைச் 'சிறப்பும்மை' என்றும் கூறுவர்.

தெரிநிலை வினைமுற்று எடுத்துக்காட்டு

  • வரைந்தான்

'வரைந்தான்' என்னும் சொல்லை நோக்கிய மாத்திரத்தில் வரைதல் என்ற நிகழ்வு இறந்த காலத்தில் (காலம்) நடைபெற்றுள்ளது என அறிய முடிகிறது.

வரைந்தான் என்னும் வினை முற்று

வரைதல் செயல்
வரைந்தான் காலம் இறந்தகாலம்
அவன் வரைந்தான் செய்பவன் அவன்
அவன் தூரிகையால் வரைந்தான் கருவி தூரிகை
அவன் தூரிகையால் சுவரில் வரைந்தான் இடம் சுவர்
அவள் தூரிகையால் சுவரில் படம் வரைந்தான் செயப்படுபொருள் படம்

என எழுத இடமளிக்கிறது.

மேற்கூறிய ஆறும் சிறப்புக்குரியன என்பது அவர்கள் தரும் விளக்கம். இம்முறையில் பொருள் கொள்வதால் சிறப்பற்ற சிலவும் இவ்வினையால் அறியப்படும் என்பது தெரிகிறது. அவை 'இன்னதற்கு', 'இது பயன்' என்னும் வாய்பாட்டில் அமையும்.

அதாவது மேற்கூறிய எடுத்துக்காட்டில்,

  • யாரோ ஒருவர் கேட்டதற்காக வரைந்தான்;
  • பணம் பெற வேண்டும் என்னும் பயன் நோக்கி வரைந்தான்

முதலியனவற்றையும் பெற வாய்ப்புண்டு.

குறிப்பு வினை முற்று என்றால் என்ன?

குறிப்பு வினைமுற்று பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக்கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

  • தெரிநிலை வினை காட்டும் மேற்கூறிய ஆறினுள் வினை செய்பவனை மட்டும் உணர்த்தும்.
  • குறிப்பு வினை முற்று பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும்.
  • முக்காலத்தையும் குறிப்பாகக் காட்டும்.இவற்றில் காலம் காட்டும் இடைநிலைகள் இல்லை.

பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. - நன்னூல், 321


பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும் என்பதால் பெயர்ச் சொற்களின் வகைகளான 1. பொருள் 2. இடம் 3. காலம் 4. சினை 5. குணம் 6. தொழில் என்னும் ஆறு பெயர்களின் அடியாகவும் குறிப்பு வினை முற்றுப் பிறக்கும் எனப் பொருள்படும்.

குறிப்பு வினைமுற்று எடுத்துக்காட்டு

குழையன், பொன்னன் பொன் - பொருள் குழையை உடையனவாக இருக்கிறான்
நாடன், ஊரன், தென்னாட்டார் நாடு - இடம் நாட்டில் வாழ்பவன்
தையினள், சித்திரையள், ஆதிரையான் சித்திரை - காலம் தையில் பிறந்தவளாக இருக்கிறாள்
கண்ணன், மூக்கன் கண் - சினை கண்களை உடையவன்
கரியன், நல்லன் கருமை- பண்பு நல்ல இயல்புகளை உடையவன்
நடிகன், நடையன், எழுத்தன் நடிப்பு- தொழில் நடித்தலைச் செய்பவன்

மேற்கூறிய குறிப்பு வினைமுற்றுகள் அறுவகைப் பெயர்ச்சொற்களின் அடியாகத் தோன்றின. இவற்றில் காலம் காட்டும் இடைநிலைகள் இல்லை. 'இருக்கிறான், இருக்கிறாள்' என்னும் இவற்றையே ஏனைய இருகாலங்களிலும் இருந்தான், இருந்தாள், இருப்பான், இருப்பாள் எனவும் கூறலாம். இப்படிக் கூறுவதால் குறிப்பு வினையானது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என அறியலாம்.

வினையாலணையும் பெயர் என்றால் என்ன?

ஒரு வினைமுற்று, வினையைக் குறிக்காமல் வினைசெய்தவரைக் குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும். இது வினைக்குரிய காலம் காட்டும்; பெயர்க்குரிய வேற்றுமை உருபுகளையும் பெற்று வரும். 

தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடு

வினையாலணையும் பெயர் எடுத்துக்காட்டு

முருகன் பரிசு பெற்றான் இத்தொடரிலுள்ள பெற்றான் என்பது, முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்துள்ளது.
பரிசு பெற்றானைப் பாராட்டினர்

இத்தொடரில் உள்ள 'பெற்றானை' என்பது முருகனைக் குறிக்கும் பெயராக வந்துள்ளது

இவ்விரு தொடரிலும், பெற்றான் என்னும் வினைச்சொல் வந்துள்ளது.

பெற்றானை இறந்தகாலம்
பெறுகின்றானை நிகழ்காலம்
பெறுவானை
எதிர்காலம்

பெற்றான் + ஐ என, இரண்டாம் வேற்றுமை உருபான ஐ ஏற்று வந்துள்ளமை காண்க.

ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.

  • அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.

வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன?

ஆணை இடுவது போல இல்லாமல் வேண்டுகோள் விடுக்கும் பாங்கில் அமைந்திருக்கும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும். 

  • க, இய, இயர் ஆகிய விகுதிகளைப் பெற்று இருதிணை (உயர்திணை, அஃறிணை), ஐம்பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்), மூவிடங்களுக்கும் (தன்மை, முன்னிலை, படர்க்கை)  பொதுவாக வரும். 
  • இவ்வினைமுற்று எதிர்காலத்தை உணர்த்தும். 
  • வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும். 

வியங்கோள் வினைமுற்று எடுத்துக்காட்டு

க, இய, இயர் என்பன வியங்கோள் விகுதிகளாக வரும். 

  • வாழ்க, 
  • கெடுக, 
  • அருளுக, 
  • உண்க,
  • ஒழிக, 
  • வாழியர்

அல், தல், உம் என்பனவும் வியங்கோள் விகுதிகளாக வரும். 

  • எடுத்துக்காட்டு -  மாசிலன் ஆதல் நினைக்கப்படும்

எதிர்மறை வியங்கோள் வினைமுற்று 

வியங்கோள் வினைமுற்று எதிர்மறை பொருளை தந்தால் எதிர்மறை வியங்கோள் வினைமுற்று எனப்படும். 

  • எடுத்துக்காட்டு -  உண்ணற்க, செல்லற்க. 

ஏவல் வினைமுற்று என்றால் என்ன?

கட்டளைப் பொருளை உணர்த்தி, இடத்தில் மட்டும் வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று. 

  • பாடம் படி. 
  • கடைக்குப் போ. 

இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். 

  • ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும். 
ஒருமை ஏவல் வினைமுற்று  பன்மை ஏவல் வினைமுற்று
இ, ஆய் ஆகிய விகுதிகளைப் பெற்று வருவது மின், கள், இர், ஈர், உம் ஆகிய விகுதிகளைப் பெற்று வருவது
எழுது  எழுதுமின் ; எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.

ஏவல் வினைமுற்று எடுத்துக்காட்டு

இ, ஆய் ஆகிய விகுதிகளைப் பெற்று வருவது ஏவல் ஒருமை வினைமுற்று

  • பாடுவாய், கேட்டி 

மின், கள், இர், ஈர், உம் ஆகிய விகுதிகளைப் பெற்று வருவது ஏவல் பன்மை வினைமுற்று

  •  கூறுமின், உண்பீர், பாடுங்கள்.

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
முன்னிலையில் வரும் இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.  ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்.  வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும். 

விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி பெற்றே வரும்.


1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது. 

2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன. 

வினைமுற்று அறிய எளிய வழி

  •  'என்', 'ஏன்' என்று முடிந்தால் -  தன்மை ஒருமை வினைமுற்று - வந்தேன்
  •  'அம்', 'ஆம்', 'தும்' என்று முடிந்தால் - தன்மைப் பன்மை வினைமுற்று - வருவோம்
  •  'ஐ', 'ஆய்', 'இ' என்று முடிந்தால் - முன்னிலை ஒருமை வினைமுற்று - நடந்தாய்
  •  'இர்', 'ஈர்'  என்று முடிந்தால் - முன்னிலைப் பன்மை வினைமுற்று - நீவிர், வந்தீர்
  •  'மின்', 'தி' என்று முடிந்தால் - ஏவல் வினைமுற்று - கூறுமின்
  • 'க' என்று முடிந்தால் - வியங்கோள் வினைமுற்று - வாழ்க

எச்சம் என்றால் என்ன?

பால் உணர்த்தும் விகுதி பெறாமலும், முற்றுப் பெறாமலும் இருக்குமானால் எச்சம் என்பர்.

எச்சம் விளக்கம்

  • சிரித்து - எச்சம் - பால் விகுதிபெறாமல் உள்ளது. கருத்து முடிவதற்கு மற்றொரு சொல் தேவைப்படுகிறது.
  • சிரித்தான் - வினைமுற்று - பால் விகுதி பெற்றுக் கருத்து முடிந்துள்ளது

சிரித்தான் என்ற வினைமுற்று சில இடங்களில் ‘ஆன்' என்னும் விகுதி குறைந்து சிரித்த எனவும், சிரித்து எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்; ஆதலால், எச்சம் எனப்படும்; அல்லது வினைமுற்றின் (ஆன்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.

எச்சம் பொருள்

  • முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்
  • வினைமுற்றின் (ஆன்,ஆள்,..) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம்

எச்சம் எடுத்துக்காட்டு

  • பெயரெச்சம் - சிரித்த கயல்விழி.

சிரித்த என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும். அஃதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.

எச்சம், வினைமுற்று வேறுபாடு

வினைமுற்று எச்சம்
சிரித்தான் சிரித்து
ஆண்பால் விகுதி பெற்றுக் கருத்து முடிந்துள்ளது பால் விகுதிபெறாமல் உள்ளது.
கருத்து முடிந்துள்ளது கருத்து முடிவதற்கு மற்றொரு சொல் தேவைப்படுகிறது.

எச்சம் எத்தனை வகைப்படும்?

எச்சச் சொற்களின் கருத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் மற்றொரு சொல் பெயராகவும் இருக்கலாம்; வினையாகவும் இருக்கலாம்.

எச்சம் வகைகள்

  1. பெயரெச்சம்
  2. வினையெச்சம்
என இரு வகைப்படும்.

பெயரெச்சம் , வினையெச்சம் வேறுபாடு

பெயரெச்சம்
வினையெச்சம்
சிரித்த பெண் சிரித்து மகிழ்ந்தான்
சிரித்த - எச்சம் சிரித்து - எச்சம்
பெண் - பெயர் மகிழ்ந்தான் - வினை

பெயரெச்சம் என்றால் என்ன?

எச்சம், பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்;இவ்வாறு ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல்லே பெயரெச்சம்.இது முக்காலத்திலும் வரும்.

பெயரெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடிய மாணவன்
  • நல்ல மாணவன்

இவ்வெடுத்துக்காட்டுகளில் ஓடிய, நல்ல என்பன எச்சங்கள். மாணவன் என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்தமையால் பெயரெச்சங்கள் எனப்பட்டன.

  • இப்பெயரெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் பெயரெச்சம் ஓடிய மாணவன்
நிகழ்காலப் பெயரெச்சம் ஓடுகிற மாணவன்
எதிர்காலப் பெயரெச்சம் ஓடும் மாணவன்

பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா.

பெயரெச்சம் வகைகள்

  1. தெரிநிலைப் பெயரெச்சம்
  2. குறிப்புப் வினையெச்சம்

என இரு வகைப்படும்.


தெரிநிலைப் பெயரெச்சம்

முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டிச் செய்பவன் முதலான ஆறும் எஞ்சி நிற்கும். இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

தெரிநிலை பெயரெச்சம் வாய்பாடு

செய்த, செய்கிற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரெச்ச வாய்பாடுகள். செய்த என்பது இறந்த காலத்திற்கும், செய்கிற என்பது நிகழ்காலத்திற்கும், செய்யும் என்பது எதிர்காலத்திற்கும் உரிய வாய்பாடுகளாகும்.

தெரிநிலைப் பெயரெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடிய மாணவன்
  • எழுதிய புத்தகம்

இத்தொடரில் ஓடிய என்னும் எச்சம் மாணவன் என்னும் பெயரைக்கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும். இவற்றுள் 'ஓடிய' என்பது ஓடுதல் செயலையும், இறந்த காலத்தையும் காட்டுகின்றது. எனவே ஓடிய காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதால் இது தெரிநிலைப் பெயரெச்சம் என அழைக்கப்படுகின்றது.

  • உண்ட இளங்கோவன்
உண்ணுதல்
செயல்
இறந்த காலம் காலம்
இளங்கோவன் செய்பவன்
கலம் கருவி
வீடு இடம்
சோறு செயப்படுபொருள்

உண்ட இளங்கோவன், உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறே பொருத்திக் காணலாம்.

உடன்பாடு தெரிநிலைப் பெயரெச்சம் உண்ட இளங்கோவன்
எதிர்மறை தெரிநிலைப் பெயரெச்சம் உண்ணாத இளங்கோவன்

குறிப்புப் பெயரெச்சம்

காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.தனக்கு அடையாளமாக 'அ'கர விகுதி பெற்று முடியும். இது பெயர்ச்சொல்லின் அடியாகப் பிறக்கும் என்பதறிக.

குறிப்புப் பெயரெச்சம் எடுத்துக்காட்டு

  • நல்ல மாணவன்
  • பெரிய வீடு
  • அழகிய தோட்டம்

நல்ல மாணவன் இத்தொடரில் நல்ல என்னும் எச்சம், காலத்தையோ செயலையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிந்துள்ளது. இவற்றுள் 'நல்ல' என்பது நன்மை என்னும் பண்புப் பெயரின் அடியாகப் பிறந்தமையையும் காலத்தையும் குறிப்பாகக் காட்டுகின்றது. எனவே காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பாகக் காட்டுவதால் இது குறிப்புப் பெயரெச்சம் என அழைக்கப்படுகின்றது. இது காலத்தைக் ( இன்று நல்ல மாணவன் , நேற்று நல்ல மாணவன் , நாளை நல்ல மாணவன் என நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் ) குறிப்பால் உணர்த்தும்.

உடன்பாடு குறிப்புப் பெயரெச்சம் நல்ல மாணவன்
எதிர்மறை குறிப்புப் பெயரெச்சம் தீய மாணவன்

எதிர்மறைப் பெயரெச்சம்

பெயரெச்சம் எதிர்மறை பொருளை உணர்த்தினால் அது எதிர்மறை பெயரெச்சம் எனப்படும். 

  •  பாடாத தேனீக்கள். 

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

எதிர்மறை பெயரெச்சத்தின் ஈற்றெழுத்து குறைந்து வந்தால் அது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் எனப்படும். 

  • பாடாத் தேனீக்கள்.

வினையெச்சம் என்றால் என்ன?

முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். வினையெச்சம் முக்காலத்தையும் உணர்த்தும்.

வினையெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடி வந்தான்
  • மெல்லப் போகிறான்

இவ்வெடுத்துக்காட்டுகளில் ஓடி, மெல்ல என்பன எச்சங்கள். அவை, வந்தான், போகிறான் என்னும் வினைகளைக் கொண்டு முடிந்தமையால் வினையெச்சங்கள் எனப்பட்டன.அஃதாவது, ஓர் எச்சவினை, வினையைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.

வினையெச்சம் விளக்கம்

  • இவ்வினையெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் வினையெச்சம்
ஓடி வந்தான்
நிகழ்காலப் வினையெச்சம்
ஓடி வருகிறான்
எதிர்காலப் வினையெச்சம்
ஓடி வருவான்
  • பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா.
  • வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா. மேலே காட்டியதுபோல அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும்.

வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

பெயரெச்சத்தைப் போலவே வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.

வினையெச்சம் வகைகள்

  1. தெரிநிலை வினையெச்சம்
  2. குறிப்பு வினையெச்சம்

என இரு வகைப்படும்.


தெரிநிலை வினையெச்சம்

காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

தெரிநிலை வினையெச்சம் வாய்பாடு

தெரிநிலை வினையெச்ச வாய்பாடுகளாகச் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்பனவற்றைக் கூறுவர்.

  • இவற்றுள் முதல் ஐந்தும் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென ஆகியன இறந்த காலத்திற்குரியவை என்றும்,
  • நிகழ்காலத்திற்குரியது செய என்றும்,
  • எதிர்காலத்திற்குரியவை ஏனைய செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு ஆகிய ஆறும் என்றும் கூறுவர்.

இன்று செய்து, செய, செயின் என்னும் வினையெச்ச வடிவங்களே வழக்கில் காணப்படுகின்றன. மொழி காலந்தோறும் வளர்ந்து வருவது. அதனால் மொழியில் புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. வினையெச்ச விகுதிகள் புதியனவாகப் பல பயன்படுத்தப்படுகின்றன.

பாரி எழுந்து வந்தான் செய்து
நான் படிக்கப் போகிறேன் செய்
நீ வரின் மகிழ்வேன் செயின்

தெரிநிலை வினையெச்சம் எடுத்துக்காட்டு

  • படித்துத் தேறினான்
  • படிக்கச் செல்கின்றான்

இத்தொடர்களில் படித்து, படிக்க என்னும் சொற்கள் எச்ச வினையாய் நின்று காலத்தைக் காட்டித் தேறினான், செல்கின்றான் ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம்

வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும். குறிப்பு வினையெச்ச விகுதியாக 'அ' இடம் பெறுகிறது.

குறிப்பு வினையெச்சம் எடுத்துக்காட்டு

  • மெல்லப் பேசினான்
  • மெல்ல வந்தான்
  • கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்.
இவ்விரு தொடர்களிலும் உள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை(மென்மை,இன்மை) உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

எதிர்மறை வினையெச்சம் 

வினையெச்சம் எதிர்மறை பொருளை தந்தால் அது எதிர்மறை வினையெச்சம் எனப்படும். 

  • வணங்காது நின்றான் 

ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் 

எதிர்மறை வினையெச்சம் ஈற்றெழுத்து குறைந்து வந்தால் அது ஈறுகெட்ட வினையெச்சம் எனப்படும். 

  • வணங்கா நின்றான்.

முற்றெச்சம் என்றால் என்ன?

  • மைதிலி வந்தனள் பாடினள்.
  • முருகன் படித்தனன் தேறினன்.

இத்தொடர்களில், வந்தனள், படித்தனன் என்னும் வினைமுற்றுகள் வந்து, படித்து என்னும் வினையெச்சப் பொருள்களில் நின்று, வேறு வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவதே முற்றெச்சம் எனப்படும்.

சிறப்பு வினைகள்

வினைகளைத், 

  • தன்வினை -  பிறவினை, 
  • உடன்பாட்டுவினை - எதிர்மறைவினை, 
  • செய்வினை  -  செயப்பாட்டுவினை 

என இணைகளாக வகைப்படுத்துவா்.

சிறப்பு வினைகள் எடுத்துக்காட்டு

நடந்தான் தன்வினை
நடத்தினான் பிறவினை
கற்றான் உடன்பாட்டுவினை
கல்லான் எதிர்மறை வினை
அடித்தான் செய்வினை
அடிக்கப்பட்டான் செயப்பாட்டுவினை

மேலேகாட்டிய வினைகள் எல்லாம் அவ்வவற்றிற்கான சிறப்பு வினைகள் ஆகும்.

தன்வினை -  பிறவினை 

தன்வினை

கருத்தா தானே செய்யும் வினையைக் குறிக்கும் வாக்கியம் தன்வினை எனப்படும். 

தன்வினை எடுத்துக்காட்டு

  • கண்ணன் திருந்தினான் 
  • கமலா திருக்குறள் கற்றாள் 
  • கோதை நன்கு படித்தாள்
  • செல்வன் பாடம் கற்றான்

பிறவினை 

கருத்தா பிறரைக் கொண்டும் செய்யும் வினை பிறவினை எனப்படும். 

பிறவினை எடுத்துக்காட்டு

  • கண்ணன் திருத்தினான் (கண்ணன் மற்றொருவரை திருத்தினான்)
  • கமலா திருக்குறள் கற்பித்தாள் (கமலா மற்றொருவருக்கு  திருக்குறள் கற்பித்தாள்)
  • கோதை நன்கு படிப்பித்தாள்
  • செல்வன் பாடம் கற்பித்தான்

தன்வினை பிறவினை வேறுபாடு கண்டறிதல் 

தன்வினைப் பகுதியுடன் வி, பி, கு, சு, டு, து, பு, நு என்னும் விகுதிகளில் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.வினைப் பகுதியில் 'பி' அல்லது 'வி' என்று எழுத்து சேர்ந்திருந்தால் அது 'பிறவினை' ஆகும்.

தன்வினை பிறவினை
உண்டாள் உண்பித்தாள்
செய்தான் செய்வித்தான்

ஈற்று வல்லின மெய் இரட்டித்தும் பிறவினையாக மாறும். 

தன்வினை பிறவினை
பெருகு பெருக்கு
வாடு வாட்டு

வினைப்பகுதியிலுள்ள மெல்லின மெய் பிறவினையில் வல்லின மெய்யாக மாறியும் வரும். 

தன்வினை பிறவினை
திருந்து  திருத்து 
அடங்கு அடக்கு 

'செய்', 'பண்ணு' என்னும் துணைவினைகள் சேர பிறவினையாகின்ற முறை.

தன்வினை பிறவினை
உண் உண்ணச்செய் 
உறங்கு  உறங்கப்பண்ணு 

வினைமுற்றுகளில் இடைநிலை மாற்றம் பெற்றுப் பிறவினை மாறுவதுண்டு.

தன்வினை பிறவினை
சேர்கிறேன்  சேர்க்கிறேன் 
சேர்ந்தேன்  சேர்ப்பேன் 

உடன்பாட்டுவினை - எதிர்மறைவினை 

உடன்பாட்டுவினை

உடன்பாட்டு வாக்கியங்கள் நிகழ்ச்சிகளை உணர்த்தும். 

உடன்பாட்டுவினை எடுத்துக்காட்டு

  • அவள் சென்றாள் 
  • ஆடுகள் மேய்ந்தன

எதிர்மறைவினை 

எதிர்மறை வாக்கியங்கள் நிகழாமையை உணர்த்தும். உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்றும் போது வினைச்சொல்லை மட்டுமே மாற்ற வேண்டும். வினைச்சொற்களை ஆ, இல், அல் ஆகிய எதிர்மறைகளைக் கொடுத்து மாற்ற வேண்டும்.  

  • தன்மை, முன்னிலை, படர்க்கை, ஒருமை, பன்மை ஆகியவைகளை மாற்றக் கூடாது.

எதிர்மறைவினை எடுத்துக்காட்டு

  • அவள் சென்றிலள்
  • ஆடுகள் மேய்ந்தில

செய்வினை  -  செயப்பாட்டுவினை

செய்வினை 

செயலைச் செய்பவரை முதலில் வாக்கியத்தில் அமைப்பது செய்வினை வாக்கியமாகும். எழுவாயே செயலைச் செய்வதாக கூறுவது செய்வினை வாக்கியம் ஆகும்.

  • எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்திருந்தால் அது செய்வினைத் தொடராகும். 
  • செயப்படு பொருளோடு இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) வெளிப்பட்டு வரும். 

செய்வினை  எடுத்துக்காட்டு

  • கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
  • கண்ணன் பழங்களைப் பறித்தான்
  • தச்சன் நாற்காலியைச் செய்தான்
  • நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்

செயப்பாட்டுவினை  

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்திருந்தால் அது செயப்பாட்டுவினைத் தொடராகும்.

  • எழுவாயோடு 'ஆல்' என்ற மூன்றாம் வேற்றுமை உருபையும்,
  • பயனிலையோடு 'படு' அல்லது 'பட்டது' என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும். 

செயப்பாட்டுவினை  எடுத்துக்காட்டு

  • இராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது
  • பழங்கள் கண்ணனால் பறிக்கப்பட்டது
  • நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
  • நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது

பொது வினைகள்

இவ்வினை, தன்வினை பிறவினை இரண்டிற்கும் பொதுவானது. அதனால் இது பொதுவினையாகும்.

பொது வினைகள் எடுத்துக்காட்டு

  • வெளுத்தான்

வெளுத்தல் என்னும் தொழிலில் வெளுப்பித்தல் என்னும் பிறவினை வடிவம் மொழியில் காணப்படாததால் இது தன்வினை, பிறவினை இரண்டிற்கும் பொதுவான வினையாகவே கருதப்படுகிறது.

  • சாவான்

இவ்வினை, செத்துப் போவான், சாகமாட்டான் என இருவகைப் பொருளையும் தருவதால் உடன்பாடு, எதிர்மறை இரண்டிற்கும் பொது வினையாகும்.

  • புலிகொல்யானை

இதில் கொல் என்னும் வினைப் பகுதி மட்டும் இடம் பெற்றுள்ளதால் 'புலியைக் கொல்லும் யானை' என்றும் 'புலியால் கொல்லப்படும் யானை' என்றும் பொருள் தருகிறது. இதனால் இவ்வினை செய்வினை, செயப்பாட்டுவினை இரண்டிற்கும் பொது வினையாகும்.

முற்றுவினை விளக்கம்

பலவகை வினைகளுக்கும் பொது இலக்கணமாகிய செய்பவன் முதலிய ஆறையும் தோன்றச் செய்து பெயர்ச் சொல்லின் ஆறுவகைகளையும் பயனிலையாகக் கொண்டு முடிவதும், வேறு எதனையும் தனக்குப் பயனிலையாய் ஏற்காததும் முற்றுவினை எனப்படும்.

"பொதுவியல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரலது ஏற்பில முற்றே" - ந.நூ.323


முற்றுவினை வகைகள்

  1. தெரிநிலை முற்றுவினை
  2. குறிப்பு முற்றுவினை

என இரு வகைப்படும்.


தெரிநிலை முற்றுவினை

பொருட்பெயர் செய்தான் அவன்
இடப்பெயர் குளிர்ந்தது நிலம்
காலப்பெயர் வந்தது கார்
சினைப் பெயர் குவிந்தது கை
குணப்பெயர் அழிந்தது தீமை
தொழிற்பெயர் அற்றது பிறப்பு

குறிப்பு முற்றுவினை

பொருட்பெயர் நல்லவன் அவன்
இடப்பெயர் நல்லது நிலம்
காலப்பெயர் நல்லது கார்
சினைப் பெயர் நல்லது கை
குணப்பெயர் நல்லது பசுமை
தொழிற்பெயர் நல்லது பிறப்பு

கூட்டுநிலைப் பெயரெச்சர்கள்

ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சர்கள் உருவாகின்றன. 

  • கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி 

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad