தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
சொல் தரும் வேறு பொருள்: மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.
மூவகை மொழி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்
பாடத்தலைப்புகள்(toc)
பெயரியல்
"ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்
மூவகை
இடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே" -
நன்னூல் 259
தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மொழி மூன்று பிரிவினதாய், உயர்திணை, அஃறிணை என்னும் ஐம்பால் பொருளையும், தன்னையும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்திலும், வழக்கிலும் செய்யுளிலும், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளக்குவது சொல்லாகும்.
மூவகை மொழி
ஒருமொழி ஒருபொருள னவாம் தொடர்மொழி
பலபொரு எனபொது இருமையும் ஏற்பன - நன்னூல்,
260
பகாப்பதமாயினும் பகுபதமாயினும் ஒரு சொல் ஒரு பொருளை மட்டும் குறித்து வருவது தனிமொழி எனப்படும்.
அவ்விருவகைப் பதங்களும் அல்வழி வேற்றுமைப் பொருளில் இரண்டு முதலாகத் தொடர்ந்து வந்து இரண்டு முதலிய பல பொருள்களைத் தந்தால் தொடர்மொழி எனப்படும்.
ஒரு சொல் பகாப்பதமாகத் தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், அதே சொல் பகுபதமாகித் தொடர்மொழி நிலையில் பல பொருளையும் கொடுக்குமாயின் பொதுமொழி எனப்படும்.
மூவகை மொழி எத்தனை வகைப்படும்?
மொழி வகைகள்:
- தனி மொழி,
- தொடர்மொழி,
- பொதுமொழி என மொழி மூன்று வகையாக அமையும்.
தனிமொழி
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.பகாப்பதமாயினும் பகுபதமாயினும் ஒரு சொல் ஒரு பொருளை மட்டும் குறித்து வருவது தனிமொழி எனப்படும்.
- கிளி, மயில், புலி, பாடினான் - தனிமொழி எடுத்துக்காட்டு
தனிமொழி சான்று
தொடர்மொழி
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும். பகாப்பதமாயினும் பகுபதமாயினும் இவ்விருவகைப் பதங்களும் அல்வழி வேற்றுமைப் பொருளில் இரண்டு முதலாகத் தொடர்ந்து வந்து இரண்டு முதலிய பல பொருள்களைத் தந்தால் தொடர்மொழி எனப்படும்.
- பாரி வள்ளல், குடும்ப வாழ்க்கை, செந்தமிழ் - தொடர்மொழி எடுத்துக்காட்டு
தொடர்மொழி சான்று
- கண்ணன் வந்தான்.
- மலர் வீட்டுக்குச் சென்றாள்.
பொதுமொழி
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
ஒரு சொல் பகாப்பதமாகத் தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், அதே சொல் பகுபதமாகித் தொடர்மொழி நிலையில் பல பொருளையும் கொடுக்குமாயின் பொதுமொழி எனப்படும்.
- பலகை, தாமரை, எட்டு - பொதுமொழி எடுத்துக்காட்டு
பொதுமொழி சான்று
எட்டு என்பது எம்மொழி ஆகும்?
- எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்.
- எள் + து பிரிந்து நின்று எள்ளை உண் என பொருள் தரும்.
'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
வேங்கை
- 'வேங்கை வளர்கிறது' - தொடர்மொழி - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.
- வேம் + கை பிரிந்து நின்று வேகின்ற கை என பொருள் தரும்.
இவையே, இருபொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.
இதேபோல், பலகை, வைகை, தாமரை, வேங்கை முதலியன தனிமொழியாகவும் பொதுமொழியாகவும் வருவதை அறிக.
பலகை
- பலகை- பகாப்பதமாயின் மரப்பொருளைக் குறித்துத் தனிமொழி ஆகும்.
- 'பல + கை' எனப் பகுபதமாயின் இரண்டு சொற்கள் தொடர்ந்து நின்று 'பல கைகள்! எனப் பொருள் தருவதால் தொடர்மொழி ஆகும்.
இவ்வாறு பலகை என்னும் ஒரே சொல் தனிமொழி, தொடர்மொழி இரண்டிற்கும் பொதுவாய் நிற்றலால் பொதுமொழி ஆகும்.
வைகை
- வைகை என்னும் ஆற்றைக் குறிக்கும்.
- வை + கை பிரிந்து நின்று 'கையை வை' என பொருள் தரும்.
தாமரை
- தாமரை என்னும் பூவைக் குறிக்கும்.
- தா + மரை பிரிந்து நின்று 'தாவுகின்ற மான்' என பொருள் தரும்.
இருபொருள் தரும் சொற்கள்
தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
- தேன் - தேன் போன்ற சுவை.
- நூல் - நூல் பல படி.
- பை - பை அழகாக உள்ளது.
- மலர் - மலர் கொண்டு வா.
- வா - மலர் கொண்டு வா.
தமிழில் அடைமொழி என்றால் என்ன?
பல வகைப்பட்டதாக இருக்கும் ஒரு பொருளைப் பொதுவாகச் சுட்டும் பொழுது அதன் வகை குறித்து ஐயம் ஏற்படலாம். எனவே, அவற்றை இனம் பிரித்துக் காட்டுவதற்குத் தனிச் சொல்லைப் பயன்படுத்துவர். அத்தனிச்சொல் அடைமொழி எனப்படும்.
இனமுள்ள அடைமொழி உதாரணம்
சான்றாக,
- பாடநூல் எனச் சொல்லும் பொழுது, அதன் வகை குறித்து ஐயம் தோன்றும்.
அதைப் போக்க தமிழ்ப் பாடநூல், ஆங்கிலப் பாடநூல், கணக்குப் பாடநூல் என அடைகொடுத்துக் கூறவேண்டும். இவ்வாறு பொருள்களை இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள் இனமுள்ள அடைமொழி எனப்படும்.
இனமில்லா அடைமொழிகள்
வெண்ணிலவு, கருங்காக்கை, செங்கதிரோன் இவற்றுக்கெல்லாம் இனமாகக் கூறவேண்டுமெனில் கருநிலவு, வெண்காக்கை, கருங்கதிரோன் எனக் கூறவேண்டும். அவ்வாறு ஒன்று இல்லாததால் இவை போன்றவற்றை இனமில்லா அடைமொழிகள் எனக் கூறுவர்.
இனமுள்ள அடைமொழிகளை எடுத்தெழுதுக.
அ . வெண்முகில் -(வெண்முகில், வெண்காக்கை)
ஆ. செந்தமிழ் - (கருநிலவு, செந்தமிழ்)
இ.செங்கல் - (செங்கல், கருங்கதிரோன்)
நினைவுகூர்க
தனிமொழி | தொடர்மொழி | பொதுமொழி |
---|---|---|
பகாப்பதமாயினும் பகுபதமாயினும் ஒரு சொல் ஒரு பொருளை மட்டும் குறித்து வருவது தனிமொழி எனப்படும். | பகாப்பதமாயினும் பகுபதமாயினும் இவ்விருவகைப் பதங்களும் அல்வழி வேற்றுமைப் பொருளில் இரண்டு முதலாகத் தொடர்ந்து வந்து இரண்டு முதலிய பல பொருள்களைத் தந்தால் தொடர்மொழி எனப்படும். | ஒரு சொல் பகாப்பதமாகத் தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், அதே சொல் பகுபதமாகித் தொடர்மொழி நிலையில் பல பொருளையும் கொடுக்குமாயின் பொதுமொழி எனப்படும். |
கிளி, மயில், புலி, பாடினான் | பாரி வள்ளல், குடும்ப வாழ்க்கை, செந்தமிழ் | பலகை, தாமரை, எட்டு |
தொடர்புடையவை
- ஆறுவகைப் பெயர்ச்சொற்கள் வகைப்படுத்துக
- தமிழில் நால்வகைச் சொற்கள்
- இலக்கியவகைச் சொற்கள்
- பகுபதம், பகாப்பதம், பகுபத உறுப்புகள்
- ஆறுவகைப் பெயர்ச்சொற்கள்
- தொழிற்பெயர்
Nandri Manimegala. Ungalathu pathivu perum uthaviyagavum payan ulathagavum irukirathu. Melum ithu pondra pathivugalai pakirnthida vazhthukal.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குPlease share your valuable comments