தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை சீர் ஆகும். இதுவே பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமையும்.
சீர் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.
சீர் என்றால் என்ன?
அசைகள் தனித்தும் இணைந்தும் கூடி, அடிக்கு உறுப்பாக அமைவது சீர் எனப்படும்.
சீர் எத்தனை வகைப்படும்?
அஃது,
- ஓரசைச்சீர்,
- ஈரசைச்சீர்,
- மூவசைச்சீர்,
- நாலசைச்சீர் என நால்வகைப்படும்.
1. ஓரசைச்சீர் :
வெண்பாவின் இறுதியாய் நேரசை, நிரையசையுள் ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமையும். அவற்றை ஓரசைச்சீர் என்பர்.
ஓரசைச்சீர் எத்தனை வகைப்படும்?
1. நேர் அசை
2. நிரை அசை
நால்வகை வாய்பாடு
நாள் ( நேர் ),
மலர் (நிரை ),
காசு (நேர்பு ),
பிறப்பு (நிரைபு )
என நால்வகை வாய்பாடுகளுள் ஒன்றனைப் பெறும்.
அசை | நால்வகை வாய்பாடு |
---|---|
நேர் | நாள் - தனிநெடில்,ஒற்று - நெடில் ஒற்றுடன் வரல் |
நிரை | மலர் - இருகுறில்,ஒற்று - குறில் இணைந்து ஒற்றுடன் வரல் |
நேர்பு | காசு - கா+ச்+உ -நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது |
நிரைபு | பிறப்பு- பிறப்/பு - பிறப்+ப்+உ - நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடியும் |
(எ.கா.)
1. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.;
என் - நேர் (நாள்)
2. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
படும் - நிரை (மலர்)
3. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.
நாடு - நேர்பு (காசு)
4. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
உலகு - நிரைபு (பிறப்பு)
- நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது உண்டு. அதனை நேர்பு என்னும் அசையாகக் கொள்வர்.
-
நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடியும் அசைகள்
நிரைபு என்று கூறப்படும்.
2. ஈரசைச் சீர் : நான்கு
ஈரசை சேர்ந்து ஒரு சீர் ஆவது ஈரசைச்சீர்.நேரில் முடிவது இரண்டும், நிரையில் முடிவது இரண்டுமாக ஈரசைச்சீர் நான்கு ஆகும்.
ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியப்பாவுக்கு உரியவை.
ஈரசைச்சீர் எத்தனை வகைப்படும்?
1. தேமா 2.புளிமா 3.கருவிளம் 4.கூவிளம்
- தேமா, புளிமா இரண்டையும் மாச்சீர் என்றும்
- கூவிளம், கருவிளம் இரண்டையும் விளச்சீர்
என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர் வேறு பெயர் : ஈரசைச் சீர்களுக்கு, 'இயற்சீர்', 'ஆசிரிய உரிச்சீர்' என்னும் வேறு பெயர்களும் உண்டு.
அசை | வாய்பாடு | |
---|---|---|
நேர் நேர் | தேமா | மாச்சீர்- 2 (தேமா, புளிமா என மாவில் முடிவதனால் மாச்சீர்.) |
நிரை நேர் | புளிமா | |
நிரை நிரை | கருவிளம் | விளச்சீர் -2 (கருவிளம், கூவிளம் என விளத்தில் முடிவதனால் விளச்சீர்) |
நேர் நிரை | கூவிளம் |
மாச்சீர்- 2
(தேமா, புளிமா என மாவில் முடிவதனால் மாச்சீர்.)
விளச்சீர் -2
(கருவிளம், கூவிளம் என விளத்தில் முடிவதனால் விளச்சீர்)
3. மூவசைச்சீர் :எட்டு
எட்டு மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது மூவசைச்சீர். நேரசையில் முடிவது நான்கும் நிரை அசையில் முடிவது நான்குமாக மூவசைச் சீர் எட்டு ஆகும்.காய்ச்சீர் நான்கும் கனிச்சீர் நான்கும் ஆக மொத்தம் மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.
மூவசைச்சீர் எத்தனை வகைப்படும்?
(காய்ச்சீர், கனிச்சீர் என இரண்டு வகையாகும்)
வெண்பா உரிச்சீர்
காய்ச்சீர்கள் - இவை வெண்பாவுக்கு உரியதனால், வெண்பா உரிச்சீர் எனவும் கூறுவர்.
வஞ்சியுரிச்சீர்
கனிச்சீர்கள் - இவை வஞ்சிப்பாவுக்கு உரியதனால், வஞ்சியுரிச்சீர் எனவும்
கூறுவர்.
காய்ச்சீர்- வெண்பா உரிச்சீர் | கனிச்சீர்- வஞ்சியுரிச்சீர் |
---|---|
தேமாங்காய் | தேமாங்கனி |
புளிமாங்காய் | புளிமாங்கனி |
கருவிளங்காய் | கருவிளங்கனி |
கூவிளங்காய் |
கூவிளங்கனி |
காய்ச்சீர்- வெண்பா உரிச்சீர் | கனிச்சீர்- வஞ்சியுரிச்சீர் | ||
---|---|---|---|
அசை | வாய்பாடு | அசை | வாய்பாடு |
நேர் நேர் நேர் | தேமாங்காய் | நேர் நேர் நிரை | தேமாங்கனி |
நிரை நேர் நேர் | புளிமாங்காய் | நிரை நேர் நிரை | புளிமாங்கனி |
நிரை நிரை நேர் | கருவிளங்காய் | நிரை நிரை நிரை | கருவிளங்கனி |
நேர் நிரை நேர் | கூவிளங்காய் | நேர் நிரை நிரை | கூவிளங்கனி |
4. நாலசைச்சீர் : பதினாறு
பதினாறு மூவசைச்சீர் எட்டுடன் நேரசை, நிரையசைகளைத் தனித்தனியாகச் சேர்த்தால் நாலசைச்சீர் பதினாறு கிடைக்கும். இதனைப் பொதுச்சீர் எனக் கூறுவர்.
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் ஈரசைச் சீர்கள் நான்குடன், தண்டு, தண்ணிழல், நறுநிழல், நறும்பூ என்னும் நான்கும் சேர நாலசைச் சீர்கள் பதினாறாகும்.
அலகிடுதல் வாய்பாடு கூறுதல் - சீர் அசை வாய்ப்பாடு
நாம் எளிய முறையில் திருக்குறளை இங்கு அலகிடலாம்.
- வெண்பாவில் இயற்சீரும், வெண்சீரும் மட்டுமே வரும்: பிற சீர்கள் வாரா,
- தளைகளில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும்: பிற தளைகள் வாரா.
- ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஓரசைச் சீர்களில் முடியும்.
"பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து"
அசை | சீர் | வாய்பாடு |
---|---|---|
பிறர்/நா/ணத்/ | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
தக்/கது/ | நேர் நிரை | கூவிளம் |
தான்/நா/ணா/ | நேர் நேர் நேர் | தேமாங்காய் |
னா/யின்/ | நேர் நேர் | தேமா |
அறம்/நா/ணத்/ | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
தக்/க | நேர் நேர் | தேமா |
துடைத்/து | நிரைபு | பிறப்பு |
நினைவுகூர்க:
ஓரசைச்சீர் |
ஈரசைச்சீர் |
மூவசைச்சீர் |
|
---|---|---|---|
நாள் ( நேர் ), மலர் (நிரை ), காசு (நேர்பு ), பிறப்பு (நிரைபு ) |
நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா நிரை நிரை கருவிளம் நேர் நிரைகூவிளம் |
நேர் நேர் நேர் தேமாங்காய் நிரை நேர் நேர் புளிமாங்காய் நிரை நிரை நேர் கருவிளங்காய் நேர் நிரை நேர் கூவிளங்காய் |
நேர் நேர் நிரை தேமாங்கனி நிரை நேர் நிரை புளிமாங்கனி நிரை நிரை நிரை கருவிளங்கனி நேர் நிரை நிரை கூவிளங்கனி |
Please share your valuable comments