தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்.
- தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
நவிற்சி அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
அணி இலக்கணம்பாடத்தலைப்புகள்(toc)
நவிற்சி அணி
ஒரு பொருளைப் பற்றி அழகுடன் கூறுவது நவிற்சி அணி ஆகும்.
நவிற்சி அணி வகைகள்
- இயல்பு நவிற்சி அணி அல்லது தன்மை நவிற்சி அணி
- உயர்வு நவிற்சி அணி
இயல்பு நவிற்சி அணி அல்லது தன்மை நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
- இயல்பு நவிற்சி அணியின் வேறு மற்றொருப் பெயர் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
- இதனைத் தன்மை அணி என்றும் கூறுவர்.
இயல்பு நவிற்சி அணி எடுத்துக்காட்டு 1
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
- கவிமணி தேசிக விநாயகனார்(code-box)
இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். இதில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டு 2
தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆய மங்கையர் அங்கை வருந்துவார்
(code-box)
இப்பாடலில் தயிர் கடையும் ஆய மங்கையரின் தன்மை உள்ளவாறே அழகுபடச் சொல்லப்படுவதனைக் காணலாம். இதில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.
உயர்வு நவிற்சி அணி
பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
- உயரமான மலையை 'விண்ணைத் தொடும் மலை' என வருணித்தல்;
- உயரமான வைக்கோல் போரை 'வானை முட்டும் வைக்கோல்போர்' என உயர்த்திக் கூறுதல்.
உயர்வு நவிற்சி அணி எடுத்துக்காட்டு
குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா
(code-box)
என்று ஒரு தாய், பாதாள கங்கையைப் குளிக்க பாடி அழைத்து - இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் தாலாட்டுப் பாடுகிறாள். இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.
தன்மையணி விளக்கம்
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும்.
- இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
தன்மையணி எத்தனை வகைபடும்?
தன்மையணி வகைகள் - இது நான்கு வகைப்படும்.
இவ்வணி,
- பொருள் தன்மையணி,
- குணத் தன்மையணி,
- சாதித் தன்மையணி,
- தொழிற் தன்மையணி
என்பனவாகும்.
தன்மையணி எடுத்துக்காட்டு
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்-வையைக் கோன்
கண்டளவே தோற்றான்,அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்
- சிலம்பு (வழக்குரை காதை வெண்பா)
(code-box)
பாடலின் பொருள்
உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.
அணிப்பொருத்தம்
துயர் நிறைந்த கண்ணகியின் தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.
"எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்"
- தண்டியலங்காரம் : 27
(code-box)
நினைவுகூர்க:
இயல்பு நவிற்சி அணி, உயர்வு நவிற்சி அணி வேறுபாடு
இயல்பு நவிற்சி அணி | உயர்வு நவிற்சி அணி |
---|---|
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது | ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது |
(எ.கா.) தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு | (எ.கா) பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா |
TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்
- இயல்பு நவிற்சி அணியின் வேறு மற்றொருப் பெயர் என்ன?
- அணி என்னும் சொல்லுக்கு பொருள் என்ன ?
கீழ்க்காணும் தொடர்களில் அமைந்துள்ள அணிகளை எடுத்தெழுதுக.
1. தமிழ்மொழி இனிமையானது.
இயல்பு நவிற்சி அணி
2. வான்புகழ்கொண்ட தமிழ்நாடு.
உயர்வு நவிற்சி அணி
3. தென்னை மரம் உயரமானது.
இயல்பு நவிற்சி அணி
குறுவினாக்கள்
2. இயல்பு நவிற்சியணி என்றால் என்ன? விளக்கம் தருக.
3. உயர்வு நவிற்சியணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Please share your valuable comments