தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்.
- தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
பிறிது மொழிதல் அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
பிறிது மொழிதல் அணி
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
புலவர் தாம் கூறக் கருதிய பொருளை நேரடியாகக் கூறாமல், அதளை ஓர் எடுத்துக்காட்டின்
வழிக் குறிப்பாக உணர்த்துவது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
இதனைச்
சுருக்கமாக 'உவமானத்தைக் கூறி உவமேயத்தை விளங்கவைப்பது' எனலாம்.
- உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது.
- பிறிது மொழிதல் அணியில் உவமை மட்டும் இடம் பெறும்.
பிறிது மொழிதல் அணி வேறுப்பெயர்கள்
பிறிது மொழிதலணியைத் தண்டியலங்காரம் ஒட்டணி எனக் குறிப்பிடுகிறது. நுவலா நுவற்சி, சுருங்கச் சொல்லல், தொகைமொழி, உவமப்போலி என்னும் பெயர்களாலும் இதனைக் குறிப்பிடுவர்.
"கருதிய பொருள் தொகுத்து அதுபுலப்படுத்தற்கு
ஒத்ததொன்று உரைப்பின் அஃது ஒட்டென மொழிப" - தண்டி நூ.52
பிறிது மொழிதல் அணி விளக்கம் எடுத்துக்காட்டு
மலையப்பன் சிறந்த உழைப்பாளி. ஆனால் தனது உடல்நலத்தில் அக்கறை காட்ட மாட்டான். அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவான்.
ஒருமுறை நோயுற்றிருந்த அவனைப் பார்க்கவந்த அவனது உறவினர் ஒருவர், "தம்பி சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இதை நன்றாகப் புரிந்துகொள்" என்றார்.
மலையப்பன், "எனக்கும் இப்போதுதான் புரிகிறது. இனி நான் என் உடல்நலத்தில் போதிய அக்கறை செலுத்துவேன்"என்றான்.
இப்பகுதியைப் படித்துப் பாருங்கள்.
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் நலமாக இருந்தால்தான் உழைக்க முடியும்"
என்று சொல்லவந்த உறவினர் உவமையை மட்டுமே கூறினார்.
அவர் சொல்லவந்த கருத்தை மலையப்பன் தானாகப் புரிந்துகொண்டான்.
இவ்வாறு உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
பிறிது மொழிதல் அணி எடுத்துக்காட்டு 1
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
இத்திருக்குறள், "நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது" என்று உவமையை மட்டும் கூறுகிறது.
இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்: தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்துகொள்கிறோம்.
எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.
எடுத்துக்காட்டு 2
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
'வண்டியில் ஓர் அளவுக்குமேல், மென்மையான மயில் இறகை ஏற்றினால் அவ்வண்டியின் அச்சு
முறிந்து போகும்' என்பதே இக்குறளின் நேரடியான கருத்து.
மென்மையான மயில்தோகையே ஆயினும், அதனை அளவுக்கு விஞ்சி வண்டியிலேற்றின் அச்சு ஒடிந்துவிடும் என்பது உவமை.
- வண்டியில் பாரம் ஏற்றுவதை விளக்குவதற்காக இக்குறள் எழுதப்படவில்லை. படைவலிமை மிக்க அரசனாக இருந்தாலும் தன் தகுதிக்கு மீறிய செயலில் ஈடுபட்டால் அழிந்து போவான் என்பதே உணர்த்த விரும்பிய கருத்து.
- பகைவர்கள் தனித்தனியே நோக்கும்போது மிக எளியோராயினும் ஒன்றுகூடின், தனிப்பட்ட பகை மன்னன் எவ்வளவு வலிமை உடையவனாயினும் அவனை எளிதில் வென்றுவிடுவர் என்பது, இதனால் பெறப்படும் மற்றொரு பொருள்.
எனவே, இவ்வாறு உவமையை மட்டும் கூறிப் பாடல் புனைவது பிறிதுமொழிதலணி.
நினைவுகூர்க:
உவமை அணி, உருவக அணி, பிறிது மொழிதல் அணி வேறுபாடு
உவமை அணி | உருவக அணி | பிறிது மொழிதல் அணி |
---|---|---|
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம். | உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். |
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல்
அணி எனப்படும். |
எடுத்துக்காட்டு - 'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி | எடுத்துக்காட்டு - 'தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம் | எடுத்துக்காட்டு - சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று கூறுவது பிறிது மொழிதல் அணி |
|
|
"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் நலமாக
இருந்தால்தான் உழைக்க முடியும்" என்று சொல்ல உவமையை மட்டுமே கூறிவது. |
தொடர்புடையவை
- இரட்டுறமொழிதல் அணி
- நவிற்சி அணி
- உருவக அணி
- உவமையணி
- பிறிது மொழிதல் அணி
- வஞ்சப் புகழ்ச்சியணி
- வேற்றுமை
- பின்வருநிலை அணிகள்
தெளிவான கருத்து விளக்கம்
பதிலளிநீக்குPlease share your valuable comments