இரட்டுறமொழிதல் அணி (சிலேடை)

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம். 

  • தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

இரட்டுறமொழிதல் அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

இரட்டுறமொழிதல் அணி (சிலேடை அணி)

ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர். 

  • இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல். 
  • இருபொருள்படப் பாடுவது.

(எ.கா.) ஆறு

  • ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும். 
  • எண் ஆறனையும் (6) குறிக்கும். 
  • செல்லும் வழியையும் குறிக்கும்.

இரட்டுறமொழிதல் அணி என்றால் என்ன?

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும். 

  • ஒரு செய்யுளில் இடம்பெறும் சொற்கள் அல்லது தொடர்கள் இருவேறு பொருளைக் குறிப்பிடும்படியாகப் பாடுவது.  
  • செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    இரட்டுறமொழிதல் அணி (சிலேடை அணி) எடுத்துக்காட்டு 1

    காலில் காயத்திற்குக் கட்டுப்போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 

    • "எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?" என்று நடத்துநர் கேட்டார். 
    • அதேநேரம் அருகிலிருந்தவர், "உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?" என்று கேட்டார். 

    அவன், "செங்கல்பட்டு" என்று கூறினான். 

    அவன் கூறியது இருவரின் வினாக்களுக்கும் பொருத்தமான விடையாக அமைந்தது. 

    • அவன் செல்ல வேண்டிய ஊர் செங்கல்பட்டு என்று நடத்துநர் புரிந்துகொண்டார். 
    • அவன் காலில் செங்கல் பட்டதால் காயம் ஏற்பட்டது என மற்றவர் புரிந்துகொண்டார். 

    இவ்வாறு ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும். 

    • இதனைச் சிலேடை என்றும் கூறுவர். 

    சில சிலேடைப் பேச்சுகள்

    • காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!" என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.   
    • இசை விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது "அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்."   
    • தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார்!    

    சிலேடை அணி எடுத்துக்காட்டு

    விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.

    முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

    மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம்

    அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

    இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

    - தனிப்பாடல் திரட்டு(code-box)

    சொல்லும் பொருளும் 

    துய்ப்பது - கற்பது, தருதல் 

    மேவலால் - பொருந்துதல், பெறுதல்

    பாடலின் பொருள்

    தமிழ்: 

    • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; 
    • முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; 
    • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது: 
    • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது. 

    கடல்: 

    • கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; 
    • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; 
    • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; 
    • தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது. 
    பாடலின் பொருள்
     தமிழுக்கு
    கடலுக்கு
    முத்தமிழ் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
    முச்சங்கம் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம் மூன்று வகையான சங்குகள் தருதல்
    மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) ஐம்பெரும் காப்பியங்கள் மிகுதியான வணிகக் கப்பல்கள்
    சங்கத்தவர் காக்க சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்

    நூல் வெளி

    புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி- கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார். சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

    நினைவுகூர்க

    மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

    அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

    ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

    இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

     ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

     

    இரட்டுறமொழிதல் அணி (சிலேடை அணி) எத்தனை வகைபடும்?

    "ஒருவகைச் சொற்றொடர்பலபொருட் பெற்றி

    தெரிதர வருவது சிலேடை யாகும்"

     - தண்டி.நூ.76(code-box)

    "அதுவே செம்மொழி பிரிமொழி எனஇரு திறப்படும்" 

    - தண்டி நூ. 77(code-box)


    இரட்டுறமொழிதல் அணி வகைகள் - இருவகைப்படும்

    இது, 

    • செம்மொழிச் சிலேடை, 
    • பிரிமொழிச் சிலேடை 

    என இருவகைப்படும். 

    TNPSC - General tamil

    செம்மொழிச்சிலேடை 

    ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது செம்மொழிச் சிலேடை எனப்படும்.

    பாடலில் இடம் பெறும் சொற்கள் ஒவ்வொன்றும் இரண்டு பொருள் தருவனவாக அமைத்துப் பாடுவதும் உண்டு. இவ்வாறு பாடுவது செம்மொழிச் சிலேடை. 

    செம்மொழிச்சிலேடை எடுத்துக்காட்டு  1

    ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்

    மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை

    பற்றின் பரபரெனும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்

    உற்றிடுபாம் பெள்ளெனவே ஓது 

    (code-box)

    இப்பாடலில் பாம்பு, எள் ஆகிய இரண்டிற்கும் சிலேடை கூறப்பட்டுள்ளது. 

    ஆடிக் சூடத்தடையும் ஆடும்போ தேயிரையும் எனும் முதலடி, 

    • பாம்பு - படமெடுத்து ஆடியபின் குடத்துள் சென்றடையும், படமெடுத்தாடும்போது, இரைச்சலிடும் எனப் பாம்பிற்கும், 
    • எள்  - செக்காடியபின் எடுத்த எண்ணெயைக் குடத்தில் ஊற்றுவர்; செக்காடும்போது இரைச்சல் உண்டாகும் என எள்ளிற்கும் சிலேடையாக வந்துள்ளது.

    இப்பாடலில் சொற்கள் பிரிவில்லாமல் இருபொருள்கள் தந்தன. எனவே, செம்மொழிச்சிலேடை ஆயிற்று.

    எடுத்துக்காட்டு 2

    ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்

    நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே

    தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்

    தேங்காயும் நாயும்நேர் செப்பு 

    (code-box)

    இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. 

    • தேங்காய் - தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்: தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும். 
       
    • நாய்  - நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்; சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்: இரையை விருப்பத்துடன் நாடிச் செல்லும்; குரைப்பதற்கு வெட்கப்படாது. 

    எனவே தேங்காயும் நாயும் ஒப்பாகும். இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.

    பிரிமொழிச்சிலேடை 

    ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அதுவே பிரிந்து நின்று வேறொரு பொருளையும் தருமாறு அமைத்துப் பாடுவது. பிரிமொழிச்சிலேடை ஆகும். 

    ஒரு பாடலில் இடம்பெறும் சொல்லைப் பிரிக்காமல் படித்தாலோ அல்லது வெவ்வேறு வகையாகப் பிரித்தாலோ ஒருபொருள் தருவதாகவும், வேறுவகையில் பிரித்தால் வேறுபொருள் தருவதாகவும் அமைத்துப் பாடுவதும் உண்டு. இவ்வாறு பாடுவது பிரிமொழிச் சிலேடை எனப்படும். 

    பிரிமொழிச்சிலேடை எடுத்துக்காட்டு 

    செய்யுள் கிடைமறிக்கும் சேர்பலகை யிட்டுமுட்டும்

    ஐயமற மேற்றா ளடர்க்குமோ - துய்யநிலை

    தேடும் புகழ்சேர் திருமலைரா யஸ்வரையில்

    ஆடும் கதவுநிக ராம். (code-box)

    பொருள்: 

    செய் - வயல், வீடு; 

    பலகை - பல கைகள், பலகை; 

    தாள் - முயற்சி, தாழ்ப்பாள்;

    அய்ய - தங்க, அழகான. 

    இப்பாடலில், ஆடும், கதவும் ஒன்றற்கொன்று சமம்; 

    எங்ஙனமெனில், 

    ஆடு:  

    செய்யுள் கிடைமறிக்கும் - வயலில் கிடையாக மறிக்கப்படும்.

    சேர் பல கை யிட்டுமுட்டும் - பொருந்திய பல கைகளைக் கொம்பினால் முட்டும்.

    ஐயமற மேல் தாள் அடர்க்கும் - ஐயமின்றி முயற்சியோடு போராடும்.

    துய்ய நிலை தேடும் - தங்குதற்குத் தூய்மையான இடம் தேடும். 

    கதவு: 

    செய் உட்கிடை மறிக்கும் - வீட்டின் உள்ளிடத்தைத் தடுத்து மூடி இருக்கும்.

    சேர் பலகை இட்டுமுட்டும் - பலகைகளைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும்.

    ஐயமற மேற்றாள் அடர்க்கும் - திண்ணமாகமூடப்படுவதோடன்றித் தாழ்ப்பாளிட்டும் இருக்கும்.

    துய்ய நிலை தேடும் - அழகான வேலைப்பாடு(நிலை) உடையதாய் இருக்கும்.

    எனவே, இது பிரிமொழிச் சிலேடை. 

    எடுத்துக்காட்டு 2

    மன்னீரி லேபிறக்கும் மற்றலையி லேமேயும்

    பின்னீச்சிற் குததும் பெருமையால் -சொன்னேன்கேள்

    தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்

    மீனும்பே னும்சரியா மே (code-box)

    இப்பாடல் மீனுக்கும் பேனுக்கும் பாடியது. 

    'தேனைச் சொரியும் பூஞ்சோலையுடைய திருமலைராயன் மலையில்,

     மீன்

    மீனானது, 

    (மன் + நீரிலே) நிலைபெற்ற நீர்நிலைகளிலே பிறக்கும்; 

    (மற்று + அலையிலே) நீர் அலையின் மீது அங்கும் இங்கும் செல்லும்; 

    (பின் + நீச்சில்) நீந்தும் இடத்துப் பின்னாக வந்து கொத்தும் பெருமையை உடையது. 

    பேன்

    பேனானது, 

    (மன் + ஈரிலே) தலையிலே நிலைத்த பேன் முட்டையிலே இருந்து பிறக்கும்; 

    (மல் தலையிலே) வலிய தலைமயிரிலே திரிந்து செல்லும் ;

    (பின் + ஈச்சில்) பிறகு மக்களால் எடுத்து ஈச்சு என்னும் ஒலியெழக் குத்தப்படும் இயல்புடையது;

    இவ்வாறு மீனும் பேனும் சமம் என்று நான் சொன்னதைக் கேட்பாயாக. இப்பாடலில் மன்னீர், மற்றலை, பின்னீச்சு என்னும் சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டமையால் பொருள்வேறுபட்டமை காண்க. 

    அதனால் இப்பாடலைப் பிரிமொழிச் சிலேடை என்பர். 

    நினைவுகூர்க:

    இரட்டுறமொழிதல் அணி (சிலேடை)
    செம்மொழிச்சிலேடை
    பிரிமொழிச்சிலேடை

    ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது செம்மொழிச் சிலேடை எனப்படும்.

    ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அதுவே பிரிந்து நின்று வேறொரு பொருளையும் தருமாறு அமைத்துப் பாடுவது. பிரிமொழிச்சிலேடை ஆகும். 

    தொடர்புடையவை


    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad