தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்.
- தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
உருவக அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
அணி இலக்கணம்(link)
பாடத்தலைப்புகள்(toc)
உருவக அணி விளக்கம்
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம்.
உருவக அணி என்றால் என்ன?
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.
- இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.
கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான். உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே 'உருவகம்' எனக் கூறப்படும். உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
- 'தண்டி' என்பவர், உருவகத்தைப் பற்றி 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' என்று எழுதியிருக்கிறார்.
- 'முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன` என்று உருவகமாக எழுதுகிறார்கள்.
உருவக அணி எடுத்துக்காட்டு
'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி
- வெள்ளம் போன்ற இன்பம்
- கடல் போன்ற துன்பம்
- மதிபோன்ற முகம் - மதிமுகம்
'தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம்
- இன்ப வெள்ளம்
- துன்பக்கடல்
- முகம் ஆகிய மதி - முகமதி
எடுத்துக்காட்டு 1
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே (code-box)
என்று இப்பாடலில்,
- பூமி அகல்விளக்காகவும்,
- கடல் நெய்யாகவும்,
- கதிரவன் சுடராகவும்
உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே. இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.
எடுத்துக்காட்டு 2
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய். (code-box)
இப்பாடலில்,
- இன்சொல் - விளைநிலம்;
- ஈதல் - விதை,
- வன்சொல் - களை;
- வாய்மை - உரம் (எரு);
- அன்பு - நீர்;
- அறம் - கதிர்
என உருவகிக்கப் பெற்றுள்ளதனால், இப்பாடல் உருவக அணியாகும்.
இவ்வாறு உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத் தோன்றாத வகையில்,
உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணி
யாகும்.
ஏகதேச உருவக அணி விளக்கம்
கவிஞர், தாம் எடுத்துக்கொண்ட பல பொருள்களை உருவகப்படுத்திக் கூறும்போது ஒன்றனை
மட்டும் உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றனை உருவகப்படுத்தாமல்
விடுவது, ஏகதேச உருவக அணி எனப்படும்.
இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
- ஏகதேசம் - ஒரு பகுதி
ஏகதேச உருவக அணி எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு 1
அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.
- இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது.
- அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை.
இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
எடுத்துக்காட்டு 2
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் - திருக்குறள் (code-box)
வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.
எடுத்துக்காட்டு 3
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - திருக்குறள் (code-box)
இக்குறட்பாவில் பிறவியைக் கடலாக உருவகப்படுத்திவிட்டு, அதனைக் கடக்க உதவும் இறைவனடியைத் தெப்பமாக உருவகப்படுத்தாமையால், இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று.
முற்றுருவகம்
உவமானம் உவமேயம் இரண்டும் தனித்தனியாக நின்று பொருள் தருவது உவமை அணி என்றால், உவமானம் வேறு உவமேயம் வேறு என்னும் நிலை இல்லாமல் இரண்டும் ஒன்று எனக் காட்டுவது உருவகம் ஆகும்.
இதில் ஒரு பகுதியை உருவகப்படுத்துவதும் உண்டு. ஒரு பகுதி எனப்பொருள்படும் வடமொழிச் சொல்லான ஏகதேசம் என்னும் சொல்லால் அதனை ஏகதேச உருவக அணி என்பர்.
அவ்வாறு இல்லாமல் ஒரு பொருளின் அனைத்துப் பகுதிகளையும் உருவகப்படுத்திக் கூறுவது முற்றுருவகம் ஆகும்.
"நற்குணமு நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு" - நளவெண்பாச் செய்யுள் (code-box)
என்னும் நளவெண்பாச் செய்யுள் ஒரு நாட்டின் படை முதலிய உறுப்புகளைத் தமயந்தியின்
உறுப்புகளோடு முழுமையாக உருவகப்படுத்தியுள்ளமையால் இது முற்றுருவகம் ஆகிறது.
நினைவுகூர்க:
உவமை அணி, உருவக அணி வேறுபாடு
உவமை அணி | உருவக அணி |
---|---|
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம். |
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். |
'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி | 'தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம் |
|
|
தொடர்புடையவை
- இரட்டுறமொழிதல் அணி
- நவிற்சி அணி
- உருவக அணி
- உவமையணி
- பிறிது மொழிதல் அணி
- வஞ்சப் புகழ்ச்சியணி
- வேற்றுமை
- பின்வருநிலை அணிகள்
Please share your valuable comments