வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் - சந்திப்பிழையை நீக்குதல்

  • கதையை படித்தேன்
  • எழுதி கொண்டேன்

மேலே உள்ள தொடர்களைப் படித்துப் பாருங்கள். இவற்றை இயல்பாகப் படிக்க இயலாதவாறு சொற்களுக்கு இடையே ஓர் ஓசை இடைவெளி இருப்பதை உணர முடிகிறதல்லவா? அவற்றைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள். 

  • கதையை + படித்தேன் = கதையைப் படித்தேன்
  • எழுதி + கொண்டேன் = எழுதிக் கொண்டேன்

இப்போது இயல்பாகப் படிக்க முடிகிறது அல்லவா?  மேலும் நாம் பேசும்போது இவ்வாறுதான் பேசுகிறோம்.  

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது. 

  1. பிழை திருத்தம்

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

பாடத்தலைப்புகள்(toc)

இலக்கண விதிகள் சில 

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும். 

TNPSC- Previous Year Questions

விடைகள்: BOLD செய்யப்பட்டுள்ளது. 

 1. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
  • விடை தெரியவில்லை

2. கீழ்க்காணும் வல்லினம் மிகும் இடம் குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • அந்த, இந்த, எந்த என்னும் 'சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
  • ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும் 
  • உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்.
  • சால, தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்

சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை என்றால் என்ன?

சந்திப்பிழை என்பது ஒரு சொல்லின் விகுதியோடு மற்றொரு சொல் சேரும் போது ஏற்படும் மாற்றங்களில் இடங்களில் ஏற்படும் பிழை ஆகும்.

சந்திப் பிழைத்திருத்தம்

  • வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர். 
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் மிகாமல் எழுதுவதும் சரியானது. இதனைச் சந்திப் பிழைத்திருத்தம் எனக் குறிப்பிடுவர்.
  • அந்தப்பக்கம் (வல்லினம் மிகும் இடங்கள்)
  • மிதந்து சென்றது (வல்லினம் மிகா இடங்கள்)

வல்லினம் மிகல் என்றால் என்ன?

ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய் எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும். இதனை வல்லினம் மிகல் என்று கூறுவர். 

  • வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். 
  • இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். 

வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுவதன் நோக்கம் 

படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமன்று. செய்திகளில் கருத்துப் பிழையோ, பொருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கும் வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.

  • மண்வெட்டி கொண்டு வா. 
  • மண்வெட்டிக் கொண்டு வா. 

இவற்றில் முதல் தொடர், மண்வெட்டியை எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. 

இரண்டாம் தொடர், மண்ணை வெட்டி எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. 

இவ்வாறு பொருள் தெளிவை ஏற்படுத்தவும் வல்லினம் மிகுதல் உதவுகிறது.

வல்லினம் மிகும் இடங்கள் எடுத்துக்காட்டு

எந்த எந்த இடங்களில் வல்லினம் மிகும் என்பதை விதிகளின் மூலமும் எடுத்துக்காட்டுகள் மூலமும் அறியலாம். 

தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும் வல்லினம் மிகுந்து வருதல் தோன்றல் விகாரப் புணர்ச்சியின்பாற்படும். 

சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும் பேச்சின் இயல்பைப் பேணவும் இனிய ஓசைக்காகவும் இவ்வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.

கீழ்கண்டவாறு வல்லினம் மிகும் இடங்களை இனங்கண்டு பயன்படுத்தத் தொடங்கினாலே, தவறுகளைத் தவிர்த்துவிடலாம். மரபையும் பட்டறிவையும் தாண்டி, சொற்களை ஒலித்துப் பார்ப்பதும் வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு எளிய வழி எனலாம். 

வல்லினம் மிகும் சொற்கள்

  • எனக்குத் தெரியும்
  • இப்பையன்
  • இந்தக்காலம்
  • எந்தச்சட்டை?

அ, இ, எ, அந்த, இந்த, எந்த 

அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும். அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். 

அ, இ என்னும் சுட்டெழுத்து

  • அ + சட்டை = அச்சட்டை
  • இ + பையன் = இப்பையன்

அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்

அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும். 

  • அந்தப்பக்கம்
  • இந்தக்கவிதை, இந்தக்காலம் 

எ என்னும் வினாவெழுத்து

  • எத்திசை?

எந்த என்னும் வினாச் சொல்

எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும். 

  • எந்தத்திசை? 
  • எந்தச்சட்டை? 
  • எந்தப் பணம்?

ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

  • தலையைக் காட்டு
  • பாடத்தைப் படி
  • கதவைத் திற 
  • தகவல்களைத் திரட்டு

கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு

நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும். 

  • எனக்குத் தெரியும்
  • அவனுக்குப் பிடிக்கும்
  • முதியவருக்குக் கொடு 
  • மெட்டுக்குப் பாட்டு 
  • ஊருக்குச் செல்

அகர, இகர, உகர ஈற்று வினையெச்சங்கள்

அகர, இகர, உகர ஈற்று வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.

அகரத்தில் முடியும் வினையெச்சம்

  • ஆடச் சொன்னார் 

இகரத்தில் முடியும் வினையெச்சம்

இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும். 

  • எழுதிப் பார்த்தாள்
  • ஓடிக் களைத்தான்
  • ஓடிப் போனார்

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும். 

  • பெற்றுக் கொண்டேன்
  • படித்துப் பார்த்தார்

ஆய், போய் என்னும் வினையெச்சம்

ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். 

  • படிப்பதாய் + சொன்னாள் = படிப்பதாய்ச் சொன்னாள் 
  • போய் + சேர்ந்தான் = போய்ச் சேர்ந்தான்
  • நன்றாய் + பாடினான் = நன்றாய்ப் பாடினான்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும். 

  • செல்லாக் காசு
  • எழுதாப் பாடல்
  • கூவாக் குயில் 
  • ஓடாக் குதிரை

உவமைத்தொகை

உவமைத்தொகையில் வல்லினம் மிகும். 

  • மலர்ப்பாதம்
  • தாய்த்தமிழ்
  • தாமரைப்பாதம்

உருவகம்

உருவகத்தில் வல்லினம் மிகும். சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.

  • வாழ்க்கைப்படகு 
  • உலகப்பந்து
  • தமிழ்த்தாய்
  • வாய்ப்பவளம்

எண்ணுப்பெயர்கள்

எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.

  • எட்டுப்புத்தகம்
  • பத்துக்காக
  • எட்டுத் தொகை 
  • பத்துப் பாட்டு

அப்படி, இப்படி, எப்படி

அப்படி, இப்படி எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

  • அப்படிச்செய்
  • இப்படிக்காட்டு
  • எப்படித்தெரியும்? 

திசைப்பெயர்கள்

திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும். 

  • கிழக்குக் கடல், கிழக்குப் பகுதி
  • மேற்குச் சுவர்
  • வடக்குத் தெரு, வடக்குப் பக்கம்
  • தெற்குப் பக்கம்

மகர மெய்

மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும். 

  • மரம் + சட்டம் = மரச்சட்டம்
  • வட்டம் + பாறை = வட்டப்பாறை

என, ஆக

என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்.

  • எனக் கேட்டார் 
  • வருவதாகக் கூறு

அதற்கு, இதற்கு, எதற்கு

அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

  • அதற்குச் சொன்னேன் 
  • இதற்குக் கொடு 
  • எதற்குக் கேட்கிறாய்? 

இனி, தனி

இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும். 

  • இனிக் காண்போம் 
  • தனிச் சிறப்பு 

மிக

மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.

  • மிகப் பெரியவர் 

ஓரெழுத்து ஒரு மொழி

ஓரெழுத்து ஒரு மொழி சிலவற்றின் பின் வல்லினம் மிகும்.

  • தீப் பிடித்தது 
  • பூப் பந்தல் 

வன்தொடர்க் குற்றியலுகரங்கள்

வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். 

  • கேட்டுக் கொண்டான் 
  • விற்றுச் சென்றான் 

ஆறாம் வேற்றுமைத் தொகை

ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

  • புலித்தோல்

இரு பெயரொட்டுப் பண்புத் தொகை

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

  • மல்லிகைப்பூ 
  • சித்திரைத்திங்கள்

சால, தவ, தட, குழ

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். 

  • சாலப்பேசினார் 
  • தவச்சிறிது

தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகார எழுத்து

தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும்.

  • நிலாச் சோறு 
  • கனாக் கண்டேன் 

TNPSC - General Tamil

 

    வல்லினம் மிகா இடங்கள் எடுத்துக்காட்டு

    எல்லா இடங்களிலும் வல்லின மெய் எழுத்து மிகும் என்று கூற முடியாது.

    வல்லினம் மிகா சொற்கள்

    • மிதந்து சென்றது
    • செய்து பார்த்தான்
    • படித்த கவிதை
    • பெரிய தாவரம்

    ஆகிய சொற்களில் வல்லினம் மிகவில்லை என்பதைக் கவனியுங்கள். இவ்வாறு வல்லின மெய் மிகக்கூடாத இடங்களை வல்லினம் மிகா இடங்கள் எனக் குறிப்பிடுவர்.  

    • தோப்புக்கள் - தோப்புகள் 
    • கத்தி கொண்டு வந்தான் - கத்திக்கொண்டு வந்தான் 

    மேற்கண்ட சொற்களில் வல்லினம் மிகும்போது ஒரு பொருளும்,  மிகாதபோது வேறொரு பொருளும் வருவதை அறியலாம். 

    நாம் பேசும்போதும், எழுதும்போதும் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும். 

    தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களாகக் கீழ்க்காண்பவற்றைக் கூறலாம்.

    எழுவாய்ச் சொற்கள்

    எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

    • தம்பி படித்தான். 
    • யானை பிளிறியது. 
    • குதிரை தாண்டியது. 
    • கிளி பேசும்.

    அது, இது, எது

    அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. 

    அது, இது என்னும் சுட்டுப் பெயர்

    அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

    • அது சென்றது
    • இது பெரியது
    • அது செய் 
    • இது காண் 

    எது, எவை என்னும் வினாப் பெயர்

    இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

    • எது கிடைத்தது? 
    • எது கண்டாய்?  
    • எவை தவறுகள்?

    பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்

    பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது. 

    • எழுதிய பாடல்
    • வந்த சிரிப்பு 
    • பார்த்த பையன்
    •  எழுதாத பாடல்

    இரண்டாம் வேற்றுமைத்தொகை

    இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை) வல்லினம் மிகாது. 

    • இலை பறித்தேன்
    • காய் தின்றேன்
    • நாடு கண்டான். 
    • கூடு கட்டு

    உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்

    உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது. 

    • தின்று தீர்த்தான்
    • செய்து பார்த்தாள்

    வினைத்தொகை

    வினைத்தொகையில் வல்லினம் மிகாது. 

    • எழுதுபொருள்
    • சுடுசோறு 
    • குடிதண்ணீர்
    • வளர்பிறை
    • திருவளர்செல்வன்

    அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்கள்

    அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது. 

    • எழுதும்படி சொன்னேன். 
    • பாடும்படி கேட்டுக்கொண்டார். 

    உம்மைத்தொகை

    உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. 

    • தாய்தந்தை
    • வெற்றிலைபாக்கு
    • இரவுபகல்

    மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரி

    மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. 

    • அண்ணனோடு போ
    • எனது சட்டை

    விளித் தொடர்

    விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. 

    • தந்தையே பாருங்கள்
    • மகளே தா  

    படி என்று முடியும் வினையெச்சம்

    படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.  

    • வரும்படி சொன்னார்.
    • பெறும்படி கூறினார்.

    வியங்கோள் வினைமுற்றுத் தொடர்

    வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.

    • வாழ்க தமிழ் 
    • வருக தலைவா! 

    எண்ணுப் பெயர்கள்

    எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.

    • ஒரு புத்தகம், 
    • மூன்று கோடி 

    அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்கள்

    அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    • அன்று சொன்னார்
    • என்று தருவார்
    • அவராவது தருவதாவது 
    • யாரடா சொல்
    • ஏனடி செல்கிறாய்? 
    • கம்பரைப் போன்ற கவிஞர் யார்?

    அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய

    அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    • அவ்வளவு பெரியது
    • அத்தனை சிறியது
    • அவ்வாறு பேசினான்
    • அத்தகைய பாடங்கள்
    • அப்போதைய பேச்சு
    • அப்படிப்பட்ட காட்சி
    • நேற்றைய சண்டை 

    மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்

    மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது.

    • என்னோடு சேர். 
    • மரத்திலிருந்து பறி. 
    • குரங்கினது குட்டி. 

    இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகை

    இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது.

    • தமிழ் படி - (ஐ) - தமிழைப் படி
    • கை தட்டு - (ஆல்) - கையால் தட்டு
    • வீடு சென்றாள் - (கு) - வீட்டுக்குச் சென்றாள்
    • கரை பாய்ந்தான் -  (இருந்து) - கரையிலிருந்து பாய்ந்தான்

    நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடர்

    நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது. 

    • தலைவி கூற்று. 
    • தொண்டர் படை 

    சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர

    சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

    • உறு பொருள் 
    • நனி தின்றான்
    • கடி காவல் 

    அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி

    அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. 

    • பார் பார் 
    • சலசல 

    கள் என்னும் அஃறிணைப் பன்மை

    கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்)

    • கருத்துகள் 
    • பொருள்கள் 
    • வாழ்த்துகள் 

    ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்கள்

    ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.

    • பைகள், 
    • கைகள் 

    நினைவுகூர்க

    சந்திப்பிழை நீக்கி எழுதுக

    1. வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.

    விடை - வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.

    2. அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசன புதுமையை புகுத்தினார்.

    விடை - அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார்.

    ஒற்றுப்பிழை நீக்கி எழுதுக

    அ. கடமையை செய்; பலனை கேள்.

    கடமையைச் செய்; பலனைக் கேள்.

    ஆ. மர பொருள்கள் வாடகைக்கு கிடைக்கும்.

    மரப் பொருள்கள் வாடகைக்குக் கிடைக்கும்.

    இ. திரைபடம் காண வருக.

    திரைப்படம் காண வருக.

    தொடரில் பொருத்தமான ஒற்று எழுத்துகளை இடுக. [ க், ச், த், ப்]

    அ. புகை உடல்நலத்திற்குக் கேடு. 

    ஆ. மரம் வளர்ப்போம்; மழையைப் பெறுவோம். 

    இ. நெகிழிப்பையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

    ஈ. இறைவனைத் தொழுவோம்; இன்பமுடன் வாழ்வோம். 

    உ. இயற்கை உரமே வேளாண்மைக்குச் சிறந்த உரம்.

    வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் 

    வல்லினம் மிகும் இடங்கள் 20 எடுத்துக்காட்டு வல்லினம் மிகா இடங்கள் 20 எடுத்துக்காட்டு
    அ, இ, அந்த, இந்த, எ, எந்த அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய
    அதற்கு, இதற்கு, எதற்கு கள் என்னும் அஃறிணைப் பன்மை
    என, ஆக
    இனி, தனி
    படி என்று முடியும் வினையெச்சம்
    மிக  அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்கள்
    சால, தவ, தட, குழ சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின்
    ஓரெழுத்து ஒரு மொழி ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்கள்
    ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்
    உருவகம் அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி
    தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகார எழுத்து நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடர்
    இரண்டாம், நான்காம் வேற்றுமை விரி மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரி
    ஆறாம் வேற்றுமைத் தொகை இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகை

    மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்

    இரண்டாம் வேற்றுமை தொகை
    ஆய், போய்

    இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
    உம்மைத்தொகை
    உவமைத்தொகை வினைத் தொகை
    திசைப் பெயர்கள்
    வன்தொடர்க் குற்றியலுகரங்கள் விளித் தொடர்

    வியங்கோள் வினைமுற்றுத் தொடர்

    எழுவாய்த் தொடர்
    எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து
    எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன்

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad