எட்டு மயங்கொலி எழுத்துகள் - (ண, ன, ந) (ல, ழ, ள) (ர, ற)

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது. நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எழுத்துகளின் பெயர்களில் ஒன்றான மயங்கொலி எழுத்துகள் பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

மயங்கொலி எழுத்துகள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் பெயர்

பாடத்தலைப்புகள்(toc)

தமிழ் மயங்கொலி எழுத்துகள் என்றால் என்ன?

மணம்; மனம்;

மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு.

இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.

  • உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
  • ஆனால் இடையே பொருள் வேறுபாடு உண்டு.

மயங்கொலி எழுத்துகள் எத்தனை?

(ண, ன, ந),(ல, ழ, ள),(ர, ற) ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துகள் வரும்முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.

எழுத்துகளின் ஒலிப்புமுறை, அவற்றுக்கான வரிவடிவ வேறுபாடு. அவை சொல்லில் வரும் இடங்களையும் (முதல், இடை, கடை) தெள்ளத் தெளிவாய் மனத்து பதித்துக்கொள்வதைக் கடமையாகக்கொள்ள வேண்டும்.

ந, ண, ன, ற, ர,  ல, ள, ழ இவற்றின் வேறுபாடு அறிந்து வாய்விட்டு ஒலித்துப் பழகுவது சாலச் சிறந்தது. இவ்வெழுத்துகளுக்கான சில அடிப்படை இலக்கணத்தையும் கசடறக் கற்றல் இன்றியமையாத கற்றல் பணியாகும்.

மேலுள்ள, 

  • எட்டு எழுத்துகளில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். 
  • றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. 
  • மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.

மயங்கொலி எழுத்துகள் எடுத்துக்காட்டு 

ண, ன, ந - வேறுபாடு சொற்கள்

ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

ந -நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

(ட்,ண்) (த்,ந்) (ற்,ன்) ஆகியவை இன எழுத்துகள்.

சொற்களில் ண, ன இடம்பெறும் வகை 

ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும்

  • (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு

ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்

  • (எ.கா.) மன்றம், நன்றி, கன்று


 இந்த இன எழுத்துகளைக் கொண்டு,

  • டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
  • தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்,
  • றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம்

என்றும் அழைக்கப்படுகின்றன.

ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.

(எ.கா.)

வாணம் - வெடி ; வானம் - ஆகாயம்

பணி - வேலை ; பனி - குளிர்ச்சி

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் மயங்கொலி எழுத்துகள்

நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
வாணம் - வெடி வானம் - ஆகாயம்
பணி - வேலை பனி - குளிர்ச்சி
அண்ணம் - மேல்வாய் அன்னம் - பறவை
ஆணை -கட்டளை ஆனை - யானை
ஊண் - சோறு ஊன் - மாமிசம்
கணி - எண்ணுவாயாக கனி - பழம் 
கண்ணி - அரும்பு, பூமாலை  கன்னி - குமரி
தண்மை - குளிர்ச்சி தன்மை - இயல்பு
திண்மை- வலிமை தின்மை - தீமை
மணம் - வாசனை மனம் - உள்ளம்
வண்மை - கொடை, ஈகை வன்மை - உறுதி

அன்னாள்- அப்பெண்  அந்நாள் - அந்த நாள்

முன்னாள் - முந்திய நாள் முந்தாநாள் - மூன்று நாள்

என்னாள் - என்னுடைய நாள் எந்நாள் - எந்த நாள்

முன்நூல் - முதல் நூல் முந்நூல் - மூன்று நூல்

தேனீர் - தேன் கலந்த நீர் தேநீர் - குடிக்கும் நீர்

ல, ள, ழ - வேறுபாடு சொற்கள்

ல-நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது 'வ' போல இருப்பதால் 'வகர லகரம்' என்கிறோம்.

ள-நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது 'ன' போல இருப்பதால் 'னகர ளகரம்' என்று கூறுவர்.

ழ-நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). இது 'ம' போல இருப்பதால் 'மகர ழகரம்' என்று கூறுவது இலக்கண மரபு.

"ழ" தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் மயங்கொலி எழுத்துகள்

நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதி தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்)
விலை - பொருளின் மதிப்பு விளை - உண்டாக்குதல் விழை - விரும்பு
இலை - செடியின் இலை இளை - மெலிந்து போதல் இழை - நூல் இழை
ஒலி - சப்தம் ஒளி - வெளிச்சம் ஒழி - நீக்கு
கலி- துன்பம் களி - மகிழ்ச்சி கழி - தடி
வலி - துன்பம், வேதனை வளி - காற்று வழி - பாதை
தலை- உறுப்பு தளை - கட்டு தழை - இலை

ர, ற - வேறுபாடு சொற்கள்

ர-நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.

ற- நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் மயங்கொலி எழுத்துகள்

நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டுவருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம். நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இஃது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
ஏரி - குளம் ஏறி - மேலே ஏறி
கூரை - வீட்டின் கூரை கூறை - புடவை
அரம் - கருவி அறம் - தர்மம்
அரி - நறுக்கு அறி - தெரிந்து கொள்
அரை- பாதி அறை - வீட்டின் பகுதி
ஆர- நிரம்ப ஆற - சூடு தணிய 
இரத்தல் - யாசித்தல் இறத்தல்-சாதல்
இரை- உணவு இறை - இறைவன்
உரல்- இடிக்கும் உரல் உறல்- பொருந்துதல்
உரை - பேச்சு உறை- மூடி
எரி - தீ எறி - வீசு
கரி - அடுப்புக் கரி, யானை  கறி - காய்கறி
கரை- ஏரிக்கரை கறை - அழுக்கு
குரைத்தல் - நாய் குரைத்தல்  குறைத்தல் - சுருக்குதல்
செரித்தல் - சீரணமாதல் செறித்தல் - திணித்தல்
தரி - அணிந்து கொள் தறி-வெட்டு
திரை- அலை திறை - கப்பம்
நிரை - வரிசை நிறை - நிறைத்து வைத்தல் 
பரந்த- பரவிய பறந்த - பறவை பறந்த 
பரி - குதிரை பறி -பறித்துக்கொள்ளுதல்
மரம் - தரு  மறம்- வீரம்
மரி-இற மறி - மான்குட்டி
மரு - மணம் மறு - தடு
வருத்தல் - துன்புறுத்தல்  வறுத்தல் - காய்கறிகளை வருத்தல்
விரல் - கைவிரல் விறல் - வெற்றி
குரை - நாய் குரைதல் குறை - பிறரைக் குறை கூறுதல் 
கரை - பனி கரைதல் கறை - துணி கறை
இரை - உணவு இறை - இறைவன்
உரை - பேசுதல் உறை - உறைதல்
அரை - பாதி அறை - வீட்டின் அறை

மயங்கொலி எடுத்துக்காட்டுகள் - மயங்கொலி தொடர்கள்

  • சிரம் என்பது தலை. (தலை / தளை)
  • வண்டி இழுப்பது காளை.(காலை / காளை)
  • பறவை வானில் பறந்தது. (பரவை / பறவை)
  • கதவை மெல்லத் திறந்தான். (திறந்தான் / திரந்தான்)
  • பூ மணம் வீசும். (மனம்/மணம்)
  • புலியின் கண் சிவந்து காணப்படும். (கன் /கண்)
  • குழந்தைகள் பந்து விளையாடினர். (பந்து /பன்து)
  • வீட்டு வாசலில் கோலம் போட்டனர். (கோலம் / கோளம்)
  • போரில் பயன்படுத்தியது வாள்.
  • பூனைக்கு உள்ளது வால்.

மயங்கொலி சொற்கள்

முதல், இடை, கடை என மூன்று இடங்களில் மயங்கொலி சொற்கள் வருகின்றன.

  1. முதல் - நண்டு, நாடகம்
  2. இடை- பந்து, கண்டு, கன்று, கற்று, பார்த்து, கால்கள், கொள்வது, புகழ்வது
  3. கடை - கண், அவன், பார், கால், கொள், புகழ்

எழுத்துகளை எளிதாக அடையாளம் காண உதவும் பெயர்கள்

  • ண - 'டண்ணகரம்'
  • ந - 'தந்நகரம்'
  • ன - 'றன்னகரம்
  • ர - இடையின 'ரகரம்'
  • ற - வல்லின 'றகரம்'
  • ல - மேல்நோக்கு 'லகரம்'
  • ள - பொது 'ளகரம்'
  • ழ - சிறப்பு 'ழகரம்'

மயங்கொலிப் பிழை என்றால் என்ன?

எல்லாரும் பேசும்போது, 'கிணறில் போட்டேன்', 'சுவரில் வரைந்தேன்', 'வயிறு பசிக்கிறது ' என்று முறையாகப் பேசுகிறார்கள். 

ஆனால் எழுதும்போது, 'கிணரில் போட்டேன்', 'சுவற்றில் வரைந்தேன்', 'வயிர் பசிக்கிறது' என்று தவறாக எழுதுகிறார்கள். இதனை மயங்கொலிப் பிழை என்கிறோம்.  

தமிழில் ர, ற; ல, ழ, ள; ண, ந, ன ஆகிய எழுத்துகளை எழுதும்போது, பெரும்பாலோர் பிழையாக எழுதுகின்றனர். இவற்றை முறையாக நாம் ஒலிக்கப் பழகாததால், இந்தப் பிழை ஏற்படுகிறது. ல, ழ, ள இம்மூன்றனையும் வேறுபாடு இல்லாமல், ஒரே மாதிரி ஒலிக்கிறோம். அதனால், எழுதும்போது பிழை ஏற்படுகிறது. இதனை மயங்கொலிப் பிழை என்கிறோம். 

பாடலில் அடிக்கோடிட்ட சொற்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை நீக்கி எழுதுக.


ஊருக்கு வெலியே ஒற்றைக்கல் மண்டபத்தில் - மக்கள் உயிரைக் குடிக்கத்தான் ஓராயிரம் பேயுண்டாம் ஆற்றங் கரைதனிலே அழகான மண்டபத்தில் - மனித உயிரைக் கொள்ளத்தான் ஓராயிரம் பூதமுண்டாம் ஆலமரத்தினிலே ஆந்தை அலறும் பொந்தினிலே- பில்லைகளைப் பிடிக்கத்தான் குட்டிச்சாத்தான் பல உண்டாம் காட்டில் வாழும் யானைக்கும் நாட்டில் வாழும் பூணைக்கும் ஓராயிரம் பேய்பூதம் இவற்றிற்கெல்லாம் ஏதுண்டு ?கெட்டாவிக்காரனும் குள்ளநரிக்காரனும் - குப்பைக் குப்பையாய்க் கொட்டி வைத்த பொய்யெல்லாம் நம்முடைய வீரத்தை அரும்பினிலே அழிக்கத்தானே - நல்லோரின் அறிலையெல்லாம் குழிநோன்டி புதைக்கத்தானே!


வெலியே - வெளியே 
கொள்ளத்தான் - கொல்லதான் 
பில்லைகளைப் - பிள்ளைகளைப்
பூணைக்கும் - பூனைக்கும்
குழிநோன்டி - குழிநோண்டி

மயங்கொலிப் பிழைகள்

அ. இரு சக்கர வண்டிகள் பலுது பார்க்கப்படும்.

இரு சக்கர வண்டிகள் பழுது பார்க்கப்படும்.

ஆ. நால்தோறும் பகல் காட்சி உன்டு.

நாள்தோறும் பகல் காட்சி உண்டு.

இ. வறந்தரு விநாயகர் கோயில். 

வரந்தரு விநாயகர் கோயில். 

கோடிட்ட சொற்கள் பிழையானவை. அவற்றைத் திருத்தி எழுதுங்கள்.

அ) கிணரில் போட்டேன்

கிணறில் போட்டேன்

ஆ) சுவற்றில் வரைந்தேன்

சுவரில் வரைந்தேன்

இ) வயிர் பசிக்கிறது

வயிறு பசிக்கிறது

உரிய சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடரை நிரப்புங்கள்.

1. மல்லிகை மணம் வீசியது. (மனம், மணம்)

2. பூமியை வலம் வருவேன். (வலம், வளம்)

3. புலி பதுங்கிப் பாயும். (புலி, புளி)

4. முகத்தில் புன்முறுவல் வேண்டும். (புன், புண்) 

5. நாய் வால் நிமிராது. (வால், வாள்)

உரிய விடையைத் தெரிவுசெய்தல்

அ. உயர்ந்து நிற்பது மலை 

(மலை, மழை)

ஆ. வானத்தில் இருந்து பெய்வது மழை

(மலை, மழை)

இ. உழவர்கள் ஆடித்திங்களில் பொன்னேர் பூட்டுவர். (பொண்ணேர், பொன்னேர்)

ஈ. மழை நீரை வானப்புனல் என்பர். (வானப்புனல், வாணப்புணல்

உ. பாரதிதாசன் இயற்றிய நூல் பாண்டியன் பரிசு

- (பான்டியன் பரிசு, பாண்டியன் பரிசு)

கொடுக்கப்பட்டுள்ள மயங்கொலி எழுத்துகளைக்கொண்டு சொற்களை நிறைவு செய்க.

லி, ல், ழ, ழி, ள, ள் 

  1. லை
  2. எழிலாள் 
  3. முழயொலி
  4. தொழியாளி
  5. புல்லாங்குழல்
  6. அல்லிக்கும் 

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை) 

3. முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள் .(அலைத்தாள் / அழைத்தாள்).

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - மயங்கொலி எழுத்துகள் மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. சிரம் என்பது தலை. (தலை / தளை)
  2. வண்டி இழுப்பது காளை.(காலை / காளை)
  3. பறவை வானில் பறந்தது. (பரவை / பறவை)
  4. கதவை மெல்லத் திறந்தான். (திறந்தான் / திரந்தான்)
  5. பூ மணம் வீசும். (மனம்/மணம்)
  6. புலியின் கண் சிவந்து காணப்படும். (கன் /கண்)
  7. குழந்தைகள் பந்து விளையாடினர். (பந்து /பன்து)
  8. வீட்டு வாசலில் கோலம் போட்டனர். (கோலம் / கோளம்)
  9. போரில் பயன்படுத்தியது வாள்.
  10. பூனைக்கு உள்ளது வால்.

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.   

என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

2) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.

தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

3) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

உரிய மயங்கொலி எழுத்துகளை அறிதல்

1. இ-க்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சி-கு. (று, ற)

விடை: இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிறகு

2. எ-ம்புக்குத் தெரியாத க-ம்பு இல்லை. (று, ௫)

விடை: எரும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை. 

3. அ-ண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உ-வு மேல். (ற, ர )

விடை: அரண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல். (ற, ர )

குறுவினாக்கள்

I. மயங்கொலி எழுத்துகள் யாவை?

மயங்கொலி எழுத்துகள் 

  • (ண, ன, ந),
  • (ல, ழ, ள),
  • (ர, ற)

2. ண,ன, ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

ந -நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad