தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
வேற்றுமை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம் பெயர்ச்சொல்
பாடத்தலைப்புகள்(toc)
வேற்றுமை என்றால் என்ன?
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்த பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற சொற்கள் இணைந்து அச்சொல்லின் பொருளைப் பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன. இவற்றை வேற்றுமை என்பர்.
வேற்றுமை விளக்கம்
- இராமன் கண்டான்
- இராமனைக் கண்டான்
முதல் தொடரில், இராமன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது.
இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் இராமனை வேறொருவர் இராமனைப் பார்த்தார் எனவும் பொருள் வேறுபடுகிறது.
இராமன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள ஐ என்னும் உருபு தான் காரணம். இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.
- கண்ணன் பரிசு பெற்றான்.
- தலைமையாசிரியர், கண்ணனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்.
முதல் தொடரில் கண்ணன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது.
இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் கண்ணனை மற்றவர் பாராட்டியதனைக் குறிக்கிறது. இத்தொடரில், கண்ணன் என்னும் பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுகிறது.
இவ்வேறுபாட்டுக்குக் காரணம், கண்ணன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள 'ஐ' என்னும் உருபு. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது, வேற்றுமை எனப்படும்.
பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர்.
பாவை அண்ணன் பார்த்து,
"அண்ணன் எனக்கு ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டாள்.
"இந்த அண்ணன் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன்.
"என் அண்ணன் உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணன் என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
மேலே உள்ள பகுதியைப் படித்துப் பாருங்கள். இதில் கூறப்பட்டுள்ள செய்தியைப் புரிந்துகொள்ள இயலாதவாறு ஒரு குழப்பம் உள்ளது அல்லவா? இதே பகுதியைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.
பாவை அண்ணனைப் பார்த்து,
''அண்ணா எனக்கு ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டாள்.
"இந்த அண்ணனால் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்" என்றான் அண்ணன்.
"என் அண்ணனது உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு" என்றாள் பாவை.
இப்போது எளிதாகப் பொருள் புரிகிறது அல்லவா?
இரண்டாம் பகுதியில் அண்ணன் என்னும் பெயர்ச்சொல் அண்ணனை, அண்ணா, அண்ணனால், அண்ணனுக்கு, அண்ணனது என்றெல்லாம் மாற்றப்பட்டிருப்பதால் பொருள் தெளிவாக விளங்குகிறது.
அண்ணன் என்னும் பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளைப் பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.
இதற்காகப் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.
வேற்றுமை உருபுகள் என்றால் என்ன?
பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர்.
- வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர்.
- வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
வேற்றுமை உருபுகள் யாவை?
- பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபுகள் வேற்றுமை உருபுகள்.
- ஐ, ஆல், ஆன்,ஒடு, ஓடு, உடன், கு, இல், இன் , அது , கண், உள், மேல், கீழ் என்பன வேற்றுமை உருபுகள் ஆகும்.
சொல்லுருபுகள் என்றால் என்ன?
சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
சொல்லுருபுகள் எடுத்துக்காட்டு
- ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார் - இதில் ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.
- ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார் - இதில் கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.
வேற்றுமை எத்தனை வகைப்படும்?
இவ்வேற்றுமை எட்டு வகைப்படும்.
வேற்றுமை வகைகள்
- முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை),
- இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை),
- மூன்றாம் வேற்றுமை,
- நான்காம் வேற்றுமை,
- ஐந்தாம் வேற்றுமை,
- ஆறாம் வேற்றுமை,
- ஏழாம் வேற்றுமை,
- எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
என எண் வகைப்படும்.
முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை):
இயல்பான பெயர் (எழுவாய்) பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும். இது வினையையும், பெயரையும், வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும்.
- முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.
பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
முதல் வேற்றுமை எடுத்துக்காட்டு
- கண்ணன் வந்தான், பாவை வந்தாள் - வினைப் பயனிலை
- அவன் கண்ணன் - பெயர்ப் பயனிலை
- அவன் யார்? - வினாப் பயனிலை
இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள் வேற்றுமை) :
பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை ஆகும்.
- இரண்டாம் வேற்றுமை உருபு ஐ என்பதாகும்.
இரண்டாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- வளவன் செய்யுளைப் படித்தான்.
இத்தொடரில் உள்ள செய்யுள் என்னும் பெயர்ச்சொல் ஐ என்னும் உருபையேற்றுச் செயப்படு பொருளாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
- கபிலரைப் பரணர் புகழ்ந்தார்.
- கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.
இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள். இரண்டாம் வேற்றுமை உருபு ( ஐ ) எந்தப் பெயருடன் இணைகிறதோ அப்பெயர் செயப்படுபொருளாக மாறிவிடுகிறது. இவ்வாறு ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
இரண்டாம் வேற்றுமை ஆனது,
- ஆக்கல் - கரிகாலன் கல்லணையைக் கட்டினான்,
- அழித்தல் - பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்,
- அடைதல் - கோவலன் மதுரையை அடைந்தான்,
- நீத்தல் - காமராசர் பதவியைத் துறந்தார்,
- ஒத்தல் - தமிழ் நமக்கு உயிரைப் போன்றது,
- உடைமை - வள்ளுவர் பெரும் புகழை உடையவர்
ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்.
மூன்றாம் வேற்றுமை:
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியன.
- நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது - ஆல்
- தூங்குகையான் ஓங்குநடை - ஆன்
- தாயொடு மகள் வந்தாள் - ஒடு
- தந்தையோடு தாய் வந்தாள் - ஓடு
- தந்தையுடன் தம்பியும் வந்தான் - உடன்
- மூன்றாம் வேற்றுமை உருபுகள் - ஆல், ஆன்,ஒடு, ஓடு ஆகியன.
- கருவிப்பொருளில் கொண்டு என்னும் சொல்லும், உடனிகழ்ச்சிப் பொருளில் உடன் என்னும் சொல்லும் சொல்லுருபுகளாக வரும்.
மூன்றாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
ஆல், ஆன்
ஆல், ஆன் என்பவை,
- கருவிப்பொருள்,
- கருத்தாப் பொருள்
ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.
கருவிப் பொருள்
முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
முதற்கருவி | துணைக்கருவி |
---|---|
கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி | ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி |
மரத்தால் சிலை செய்தான் | உளியால் சிலை செய்தான் |
கருத்தாப்பொருள்
ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இருவகைப்படும்.
ஏவுதல் கருத்தா | இயற்றுதல் கருத்தா |
---|---|
பிறரைச் செய்யவைப்பது ஏவுதல் கருத்தா | தானே செய்வது இயற்றுதல் கருத்தா |
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது | சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது. |
ஆன்
ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
- புறந்தூய்மை நீரான் அமையும்.
ஓடு, ஓடு
ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
உடனிகழ்ச்சி என்றால் என்ன ?
ஓர் எழுவாயின் செயலுடன் பிறிதொன்றனது செயலும் உடனிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.
- தாயொடு குழந்தை சென்றது.
- அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது | ஆல் |
தூங்குகையான் ஓங்குநடை | ஆன் |
தாயொடு மகள் வந்தாள் | ஒடு |
தந்தையோடு தாய் வந்தாள் | ஓடு |
தந்தையுடன் தம்பியும் வந்தான் | உடன் |
மூன்றாம் வேற்றுமை சொல்லுருபு - கொண்டு, வைத்து, உடன், கூட
கருவிப்பொருளில் கொண்டு என்னும் சொல்லும், உடனிகழ்ச்சிப் பொருளில் உடன் என்னும் சொல்லும் சொல்லுருபுகளாக வரும்.
- நூல்கொண்டு தைத்தான்.
- நூல்வைத்து தைத்தான்.
- ஆறுமுகனுடன் வள்ளி சென்றாள்.
நான்காம் வேற்றுமை :
- நான்காம் வேற்றுமை உருபு கு.
இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல்,பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
நான்காம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- தலைவர் நந்தினிக்குப் பரிசு வழங்கினார்.
நந்தினி என்னும் சொல் கு என்னும் உருபை ஏற்றுப் பொருள் வேறுபடுத்திக் காட்டுகிறது.
முல்லைக்குத் தேர் கொடுத்தான் | கொடை |
புகை மனிதனுக்குப் பகை | பகை |
கபிலருக்கு நண்பர் பரணர் | நட்பு |
கவிதைக்கு அழகு கற்பனை | தகுதி |
தயிருக்குப் பால் வாங்கினான் | அதுவாதல் |
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் | பொருட்டு |
செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ | முறை |
தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல் | எல்லை |
நான்காம் வேற்றுமை சொல்லுருபு - பொருட்டு, நிமித்தம், ஆக
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு. கு உடன் ஆக என்பதும் சேர்ந்து வரும்.
- கூலிக்காக வேலை செய்தான்.
‘கு’வுக்குப் பதிலாகப் பொருட்டு, நிமித்தம் என்பன சொல்லுருபுகளாக வரும்.
- கூலியின்பொருட்டு வேலை செய்தான்.
- வேலையின்நிமித்தம் அயலூர் சென்றான்.
ஐந்தாம் வேற்றுமை :
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் - இல், இன் என்பன.
- இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது போன்ற பொருள்களில் வரும்.
ஐந்தாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- கொடையில் சிறந்தவர் பாரி - இல்
- இந்தியாவின் தெற்கு எல்லை குமரி - இன்
தலையில் இழிந்த மயிர் | நீங்கல் |
பாம்பின் நிறம் ஒரு குட்டி | ஒப்பு |
தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல் | எல்லை |
சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம் | ஏது |
ஐந்தாம் வேற்றுமை சொல்லுருபு - இருந்து, நின்று, விட, காட்டிலும்
இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் ஆகும்.
- வேலன் ஊரிலிருந்து வந்தான் - இருந்து
- அரசன் தேரினின்று இறங்கினான் - நின்று
- கயல்விழி என்னைவிடப் பெரியவள் - விட
- தமிழைக்காட்டிலும் சுவையான மொழி உண்டா ? - காட்டிலும்
ஆறாம் வேற்றுமை:
ஆறாம் வேற்றுமை உருபு - அது, ஆது, அ ஆகியவை ஆகும்.
- ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.
இவ்வேற்றுமை, உரிமைப் பொருளில் வரும். உரிமைப் பொருளைக் கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.
ஆறாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- இராமனது வீடு.
- எனாது வீடு.
- தை, மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரண்டு
இத்தொடரில் இராமன், என் ஆகிய பெயர்ச்சொற்களுடன் அது என்னும் வேற்றுமை உருபு சேர்ந்து பொருளை வேறுபடுத்துகிறது.
ஆறாம் வேற்றுமை சொல்லுருபு - உடைய
ஆறாம் வேற்றுமைக்கு உடைய என்பது சொல்லுருபாக வரும்.
- என்னுடைய வீடு.
- நண்பனுடைய சட்டை.
ஏழாம் வேற்றுமை:
ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண் ஆகும்.
- கால், இல், இடம், உள், மேல், கீழ் போன்ற உருபுகளும் உண்டு.
இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.
இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும், ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.
நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும், இடப் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.
- மாலையில் மலர்கள் - இல் ஏழாம் வேற்றுமை உருபு இடப்பொருளில் வந்தது.
- மாலையிலிருந்து மலரைப் பிரித்தான் - இல் ஐந்தாம் வேற்றுமை உருபு நீங்கல் பொருளில் வந்தது.
ஏழாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- வீட்டின்கண் குழந்தை விளையாடுகிறது - கண்
- பெட்டிக்குள் பணம் இருக்கிறது - உள்
- கூரையின்மேல் சேவல் உள்ளது - மேல்
- கட்டிலின் கீழ் நாய் படுத்துள்ளது - கீழ்
- மணியில் ஒலி - இல்
இத்தொடரில் வீடு, பெட்டி, கூரை, கட்டில் ஆகிய சொற்களுடன் கண், உள், மேல், கீழ் ஆகிய உருபுகள் சேர்ந்து இடப்பொருளை உணர்த்துகின்றன.
எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை):
படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். இதனை விளி வேற்றுமை என்று அழைப்பர். இது விளிப்பொருளில் வரும்.
- எட்டாம் வேற்றுமை, இதற்கு உருபு இல்லை.
இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது. பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.
எட்டாம் வேற்றுமை எடுத்துக்காட்டு
- கந்தா வா!
இத்தொடரில் கந்தன் என்னும் சொல்லின் இறுதி (ன்) எழுத்தானது கெட்டு, அதன் அயல் எழுத்து (த-தா) என நீண்டு அழைத்தற் பொருளைத் தருகிறது. இவ்வாறு பெயர்ச்சொல் சில மாற்றங்களுடன் அழைத்தற் பொருளில் வருவதை விளி வேற்றுமை என்பர்.
- அண்ணன் என்பதை அண்ணா என்றும்,
- புலவர் என்பதைப் புலவரே என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு.
நினைவுகூர்க
வேற்றுமை உருபுகள் அட்டவணை
வேற்றுமை உருபுகளும் அவற்றின் பொருள்களும் | |||
---|---|---|---|
வேற்றுமை | வேற்றுமை உருபுகள் | சொல்லுருபு | பொருள் |
முதல் (எழுவாய்) | இல்லை | ஆனவன், ஆவான், ஆகின்றவன் | பயனிலை ஏற்றல் |
இரண்டாம் | ஐ | இல்லை | செயப்படுபொருள் |
மூன்றாம் | ஆல், ஆன், ஒடு, ஓடு | கொண்டு, வைத்து, உடன், கூட | கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி |
நான்காம் | கு | ஆக, பொருட்டு, நிமித்தம் | கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை |
ஐந்தாம் | இல், இன் | இலிருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும் | நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது |
ஆறாம் | அது, ஆது, அ | உடைய | கிழமை |
ஏழாம் | கண் | - | இடம், காலம் |
எட்டாம் (விளி) | இல்லை | இல்லை | விளி (அழைத்தல்) |
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் இலக்கணம் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - வேற்றுமை மாதிரி வினாக்கள்
கோடிட்ட இடத்தில் பொருத்தமான உருபேற்ற சொல்லைத் தேர்ந்தெழுதுக.
1. அமுதா .......... எழுதினாள்.
அ. பாடத்தை
ஆ. பாடத்துக்கு
இ. பாடத்தின்
2. முருகன் ....... உயர்ந்தான்.
அ. உழைப்பை
ஆ. உழைப்பால்
இ. உழைப்புக்கு
3. பண்டைய மன்னர்கள் தமிழ் ...... பாடுபட்டனர்.
அ. வளர்ச்சிக்கு
ஆ. வளர்ச்சியை
இ. வளர்ச்சியின்கண்
4. பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபுகள்
அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லுடன் பொருத்தமான வேற்றுமை உருபை இணைத்துக் கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கலைச்செல்வன் கிளையை முரித்தான். (கிளை)
2. பாடம் இராமனால் படிக்கப்பட்டது. (இராமன்)
3. பாடல் எழுதிய புலவருக்கு பரிசு கிடைத்தது. (புலவர்)
4. இது கபிலனுடைய சட்டை (கபிலன்)
5. இலக்குமி மேடையில் பாடுகிறாள். (மேடை)
உரிய இணையைத் தேர்ந்தெடுக்க. (தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது)
அ. முதல் வேற்றுமை - எழுவாய் வேற்றுமை
ஆ. இரண்டாம் வேற்றுமை - செயப்படுபொருள் வேற்றுமை
இ. விளி வேற்றுமை - அண்ணா!
குறுவினாக்கள்
2. வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
3. மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?
4. உருபின்றி வரும் வேற்றுமைகள் யாவை? விளக்குக.
உருபின்றி வரும் வேற்றுமைகள்
- முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)
- எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை):
முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை):
இயல்பான பெயர் (எழுவாய்) பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும். இது வினையையும், பெயரையும், வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும்.
- முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.
பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை):
படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். இதனை விளி வேற்றுமை என்று அழைப்பர். இது விளிப்பொருளில் வரும்.
- எட்டாம் வேற்றுமை, இதற்கு உருபு இல்லை.
இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது. பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.
மிக்க நன்றி
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குPlease share your valuable comments