நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் - 8-ஆம் வகுப்பு தமிழ் | TNPSC பொதுத்தமிழ் குறிப்புகள் Nattupura Kaivinai Kalaigal 8th Tamil
8th Standard Tamil Unit 5 Nattupura Kaivinai Kalaigal பாடப்பகுதியானது, தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளையும் நமது பண்பாட்டையும் மிக அழகாக விளக்குகிறது. TNPSC குரூப் 4 தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் மிக முக்கியமான ஒன்றாகும். மண்பாண்டக் கலை, மூங்கில் கலை, பனையோலை கலை, மற்றும் பிரம்புக் கலை போன்ற பல்வேறு கைவினைத் தொழில்கள் குறித்த விரிவான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் வசதிக்காக நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் வினா விடை மற்றும் புத்தகத்தின் பின்புறம் உள்ள வினாக்களுக்கான விடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இவை அனைத்தும் TNPSC Group 4 General Tamil Study Materials-ன் ஒரு பகுதியாக, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும் வகையில் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன.
- திருவை (பானை செய்யும் சக்கரம்),
- சுடுமண் சிற்பக்கலை (டெரகோட்டா),
- மற்றும் பிரம்பின் தாவரவியல் பெயர்
போன்ற முக்கியக் குறிப்புகளை இதில் நீங்கள் காணலாம்.
கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியளித்து நற்பண்புகளை வளர்ப்பது கலைகளின் இயல்பாகும். மேலும் அவை தொன்மையான பண்பாட்டுக்கூறுகளையும் எடுத்துக்காட்டுகின்றன. அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம். அக்கலையைப் பற்றி அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் - 8ம் வகுப்பு தமிழ் இயல் ஐந்து - Tamil Nadu Folk Arts and Crafts
கைவினைப் பொருள்கள் கண்காட்சி
(கல்லூரி மாணவி மலர்விழி, அவளுடைய தம்பி அமுதன், நண்பர்கள் சையது, சாலமன் ஆகியோர் கைவினைப் பொருள்கள் கண்காட்சி அரங்குக்குள் நுழைகின்றனர்.)
அமுதன் : அடேயப்பா! எத்தனை அரங்குகள். எவ்வளவு அழகான பொருள்கள்...
சையது : எல்லாவற்றையும் ஓடி ஓடிப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
மலர்விழி : அவசரம் வேண்டாம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இதோ இந்த மண்பாண்ட அரங்கை முதலில் பார்ப்போம்.
மண்பாண்ட அரங்கு
பொறுப்பாளர் : உலகின் பழமையான கலைகளுள் ஒன்றாகிய மண்பாண்டக்கலை அரங்கு உங்களை வரவேற்கிறது.
சாலமன் : என்ன? உலகின் பழமையான கலைகளுள் ஒன்றா?
பொறுப்பாளர் : ஆமாம். மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக் கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானைஓடுகள் கிடைத்துள்ளன என்பதைப் படித்திருப்பீர்களே. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன. இவை எல்லாம் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும்.
சையது : ஐயா, மண்பாண்டம் என்றால் பானை, சட்டி ஆகியவைதானே?
பொறுப்பாளர் : இங்கே பாருங்கள். குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி என்று எத்தனை பொருள்கள் இருக்கின்றன பார்த்தீர்களா? இவைகளெல்லாம் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவை. குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இத்தகைய களிமண் கிடைக்கும்.
மலர்விழி : நல்ல களிமண் கிடைத்தால் உடனே பாண்டங்கள் செய்யத் தொடங்கிவிடலாம் அல்லவா?
பொறுப்பாளர் : அப்படி உடனே செய்துவிட முடியாது. பள்ளம் தோண்டி அதில் களிமண்ணை நிரப்பவேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்பு அதனுடன் குறிப்பிட்ட அளவில் மெல்லிய மணல், சாம்பல் ஆகியவற்றைக் கலந்து பக்குவப்படுத்த வேண்டும். இதுதான் பானை செய்யும் சக்கரம். இதனை நாங்கள் திருவை என்போம். திருவையை வேகமாகச் சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்துக் கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்களை உருவாக்குவோம். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்துக் காயவைப்போம்.
(அங்கிருக்கும் உதவியாளர் சக்கரத்தைப் பயன்படுத்தி மண்பானை செய்து காட்டுகிறார்.)
பொறுப்பாளர் : பானை செய்தலைப் பானை வனைதல் என்று சொல்வது மரபு. வனையப்பட்ட பானைகள் ஓரளவு காய்ந்ததும் தட்டுப்பலகையைக் கொண்டு தட்டிப் பானையின் அடிப்பகுதியில் இருக்கும் ஓட்டையை மூடிப் பானையை முழுமையாக்குவோம். பிறகு உருட்டுக்கல் கொண்டு தேய்த்துப் பானைகளை மெருகேற்றுவோம்.
அமுதன் : எங்கள் ஊரில் பாட்டி மண்பாண்டங்களில்தான் சமையல் செய்வார்.
பொறுப்பாளர் : மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு நல்ல சுவையுடன் இருக்கும். மேலும் உடல்நலத்திற்கும் நல்லது. மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். இப்போது மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால் இன்னும் திருவிழாக்களிலும், சமயச் சடங்குகளிலும் மண்பானைகளே பயன்பட்டு வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்ச்சிநிலைதான் சுடுமண் சிற்பக்கலை.
மலர்விழி : டெரகோட்டா என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அதுதானே?
பொறுப்பாளர் : ஆம். அதுவேதான். இந்த அரங்கின் அடுத்த பகுதிக்கு வாருங்கள். அவற்றைப் பார்க்கலாம்.
பொருத்துக: தொல்லியல் கண்டுபிடிப்புகள்
| இடம் (Site) | கண்டுபிடிப்பு (Findings) |
|---|---|
| ஆதிச்சநல்லூர் | முதுமக்கள் தாழிகள் |
| செம்பியன் கண்டியூர் | மண்கலங்கள் |
| கீழடி | சுடுமண் பொருள்கள் |
| சிந்துசமவெளி | பானை ஓடுகள் |
சுடுமண் சிற்பங்கள்
(அடுத்த பகுதிக்குச் செல்கின்றனர். அங்கு அழகான சுடுமண் சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.)
சாலமன் : அடடா! எவ்வளவு சிற்பங்கள்!
அமுதன் : இங்கு மனித உருவங்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்களும் உள்ளனவே!
பொறுப்பாளர் : ஆமாம். மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும். தமிழர்கள் பழங்காலத்தில் இருந்தே சுடுமண் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கியுள்ளனர். சுடுமண் சிற்பங்களுக்கு வண்ணங்கள் பூசுவதும் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். பெரிய மாளிகைகளிலும் கலையரங்குகளிலும் இவைபோன்ற சுடுமண் சிற்பங்களை அழகுக்காக வைத்திருப்பார்கள். முன்பெல்லாம் சிற்றூர்களில் உள்ள கோயில்களில் மட்டுமே இவற்றைக் காண முடியும். இப்போது கலைப்பொருளாக அழகுக்காகப் பல இடங்களிலும் பயன்படுத்துகின்றனர்.
அமுதன் : எங்கள் ஊர்க் கோயிலில் இவைபோன்ற ஏராளமான குதிரைச் சிற்பங்கள் உள்ளன. எதற்காக அத்தனை சிற்பங்கள் உள்ளன?
பொறுப்பாளர் : மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் குதிரைச் சிற்பம் செய்து வைப்பதாக வேண்டிக்கொள்வது உண்டு. அப்படி வேண்டிக்கொண்டவர்கள் வைத்தவையாக இருக்கும்.
மலர்விழி : மண்ணால் உருவாகும் அழகிய கலைகளைப் பற்றிச் சிறப்பாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி ஐயா. நாங்கள் பிற கைவினைக்கலை அரங்குகளையும் பார்த்துவிட்டு வருகிறோம்.
மூங்கில்கலை அரங்கு
(அவர்கள் அடுத்துள்ள மூங்கில்கலை அரங்கிற்குச் செல்கின்றனர். அவ்வரங்கின் பொறுப்பாளர் அவர்களை வரவேற்கிறார்.)
மலர்விழி : மூங்கிலால் கூடைகளும் ஏணிகளும் மட்டும்தான் செய்வார்கள் என நினைத்திருந்தேன். என் எண்ணம் தவறு என்று இங்கு வந்தபிறகுதான் புரிகிறது.
பொறுப்பாளர் : உண்மைதான். மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன. இதோ பாருங்கள். மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் என எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன. சுருக்கமாகச் சொன்னால் பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப்பொருள் முதல் இறந்தவரை எடுத்துச்செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.
மலர்விழி : முன்பெல்லாம் திருமணத்தின்போது துணிகள், பழங்கள், பலகாரங்கள் முதலியவற்றை வைத்துக் கொடுப்பதற்குச் சீர்க்கூடைகளைப் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பொறுப்பாளர் : ஆமாம். அதுமட்டுமல்லாமல் கடவுள் வழிபாட்டின்போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை முறத்தில் வைத்துப் படைக்கும் வழக்கமும் சில பகுதிகளில் இருந்தது. அவையெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டன.
கல்மூங்கில், மலை மூங்கில், கூட்டுமூங்கில் என மூன்றுவகை மூங்கில்கள் உண்டு. அவற்றுள் கூட்டு மூங்கில்களே கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்றவை.
கோரைப்பாய் அரங்கு
(அவர்கள் அடுத்துள்ள கோரைப்பாய் அரங்குக்குச் செல்கின்றனர்)
சையது : பாய் என்பது படுக்கப் பயன்படுவது. அதில் வேறு என்ன சிறப்பு இருக்கிறது?
பொறுப்பாளர் : பாய்களில் பலவகை உண்டு. குழந்தைகளைப் படுக்கவைப்பது தடுக்குப்பாய், உட்கார்ந்து உண்ண உதவுவது பந்திப்பாய், உட்காரவும், படுக்கவும் உதவுவது திண்ணைப்பாய், திருமணத்துக்குப் பயன்படுத்துவது பட்டுப்பாய், இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்துவது தொழுகைப்பாய். இப்படிப் பலவகைப் பாய்கள் உண்டு. இங்கேயுள்ள பாய்களைப் பாருங்கள். முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பயன்பட்டது கூடப் பாய்தான். இதனைப் புறநானூறு 'கூம்பொடு மீப்பாய் களையாது' என்னும் அடியால் குறிப்பிடுகிறது.
மலர்விழி : திருமணத்திற்குப் பயன்படுத்தும் பட்டுப்பாய்களில் மணமக்கள் பெயர்கள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
பொறுப்பாளர் : பெயர்கள் மட்டுமன்றிக் குத்துவிளக்கு, மயில், பூக்கள் போன்றவையும் வழிபாட்டுச் சின்னங்களும்கூடப் பாய்களில் இடம்பெறுவதுண்டு. பாய் பின்னுவதும் சிறந்த கலையே!
பொருத்துக: பாய் வகைகள் மற்றும் பயன்கள்
| பயன்பாடு (Usage) | பாய் வகை (Type of Mat) |
|---|---|
| குழந்தைகளைப் படுக்கவைப்பது | தடுக்குப்பாய் |
| உட்கார்ந்து உண்ண உதவுவது | பந்திப்பாய் |
| திருமணத்துக்குப் பயன்படுத்துவது | பட்டுப்பாய் |
| இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுவது | தொழுகைப்பாய் |
பனையோலை அரங்கு
(அடுத்துப் பனையோலை அரங்கிற்குச் செல்கின்றனர்)
பொறுப்பாளர் : தம்பிகளே, பனையோலை என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?
அமுதன் : ஓலைச்சுவடிதான் நினைவுக்கு வருகிறது.
தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.
பொறுப்பாளர் : ஆம். பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் நமக்காகப் பாதுகாத்து வைத்திருந்தவை பனையோலைகள் அல்லவா? அதுமட்டுமல்லாமல் பனையோலைகளினால் பல வகையான பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பாருங்கள். குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் எல்லாம் இருக்கின்றன. பனைமட்டையின் நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன.
மலர்விழி : பனைமரம் தோற்றத்தில் மட்டுமல்லாமல் பயன்தருவதிலும்கூட மிகவும் உயர்வான மரம்தான் போலிருக்கிறது.
பிரம்புக்கலை அரங்கு
(அடுத்துப் பிரம்புக்கலை அரங்கிற்குச் செல்கின்றனர்.)
பொறுப்பாளர் : பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளன. வந்து பாருங்கள். இங்குக் குழந்தைகளுக்கான தொட்டில், பெரியவர்களுக்கான கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத்தட்டு, வெற்றிலைப்பெட்டி என வகைவகையான பொருள்கள் பிரம்பிலேயே உள்ளன.
மலர்விழி : பிரம்பு ஒரு தாவரம்தானே, அதனை எப்படி உலோகம்போல வளைத்துப் பொருள்களைச் செய்ய முடிகிறது?
பொறுப்பாளர் : அதுதான் பிரம்பின் சிறப்பு. முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவோம். சூடான பிரம்பை நட்டுவைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைப்போம். அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும். பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு சுட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவோம். பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனவே, அதில் அமர்வதும் படுப்பதும் உடல்நலத்துக்கு நல்லது. மேலும் பிரம்புப் பொருள்கள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.
பிரம்பு என்பது கொடிவகையைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் கலாமஸ் ரொடாங் (Calamus Rotang botanical name) என்பதாகும். இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும். தமிழகத்தில் இப்போது இஃது அருகிவிட்டது. நமது தேவைக்காக அசாம், அந்தமான், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.
மலர்விழி : இந்தக் கண்காட்சிக்கு வந்ததன்மூலம் நாட்டுப்புறக் கைவினைக் கலைகளைப்பற்றிப் பல புதிய செய்திகளை அறிந்துகொண்டோம். மிகவும் நன்றி ஐயா.
பொறுப்பாளர் : இவை மட்டுமல்ல. மண் பொம்மைகள் செய்தல், மரப்பொம்மைகள் செய்தல், காதிதப்பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக்கொம்பினால் கலைப்பொருள்கள் செய்தல், சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்கள் உருவாக்குதல் என இன்னும் பலவகையான கைவினைக்கலைகள் உள்ளன. இவற்றைப்பற்றி அறிந்துகொண்டால் மட்டும் போதாது. இவைபோன்ற கைவினைப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உருவாக்கும் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் சுற்றுச்சூழலையும் மாசடையாமல் பாதுகாக்கலாம்.
மலர்விழி : அப்படியே செய்கிறோம் ஐயா.
(நால்வரும் விடைபெற்றுத் திரும்புகின்றனர்.)
கற்பவை கற்றபின்
1. உங்கள் பகுதியில் கிடைக்கும் களிமண், பனையோலை போன்ற பொருள்களைப் பயன்படுத்திக் கைவினைப்பொருள்களைச் செய்து காட்சிப்படுத்துக.
களிமண் கைவினைப்பொருள்கள்
சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்: மண் சட்டிகள், பானைகள், கோப்பைகள், கிண்ணங்கள், தண்ணீர் ஜாடி.
அலங்காரப் பொருட்கள்: டெரகோட்டா நகைகள், கைவினைப் பொருட்கள், சுவர் அலங்காரங்கள்.
கட்டுமானப் பொருட்கள்: செங்கற்கள், ஓடுகள்.
விளையாட்டுப் பொருட்கள்: சிறிய சொப்பு சாமான் செட்கள் (குழந்தைகளுக்கு).
குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி
பனையோலை கைவினைப்பொருள்கள்
2. பனையோலையால் செய்யப்படும் பல்வேறு கைவினைப்பொருள்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய்
மதிப்பீடு - நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் - இயல் ஐந்து 8ம் வகுப்பு- வினா விடை 8th standard Tamil Unit 5 Book Back Questions and Answers
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ......
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
2. பானை ......... ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
3. 'மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிர்க்கட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. முழுவதும்
களிமண்ணில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
2. மட்டுமல்லாமல்
மனித உருவங்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்களும் உள்ளன.
3. அழகுக்காக
பெரிய மாளிகைகளிலும் கலையரங்குகளிலும் சுடுமண் சிற்பங்களை அழகுக்காக வைத்திருப்பார்கள்.
4. முன்பெல்லாம்
முன்பெல்லாம் சிற்றூர்களில் உள்ள கோயில்களில் மட்டுமே சுடுமண் சிற்பங்களைக் காண முடியும்.
குறுவினா
1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
அன்றாடப் பயன்பாட்டுக்காக மண்பாண்டம், பிரம்பு, பனையோலை, கோரை, மூங்கில், சுடுமண் போன்ற பொருள்களைக் கொண்டு தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலைகள் எனலாம்.
2. மண்பாண்டம், சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக(Difference between Pottery and Terracotta in Tamil).
| அம்சம் (Feature) | மண்பாண்டம் (Pottery) | சுடுமண் சிற்பம் (Terracotta) |
|---|---|---|
| அறிமுகம் | உலகின் மிகப்பழமையான கலைகளில் ஒன்று. களிமண் கொண்டு செய்யப்படுகிறது. | தமிழர்கள் பழங்காலம் முதலே இக்கலையில் சிறந்து விளங்கினர். |
| தயாரிப்பு முறை | களிமண் கொண்டு பாண்டங்களாக வனையப்படுகின்றன. | களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் (Kiln) சுட்டு எடுக்கப்படுபவை. |
| பொருள்கள் | குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி. | மனித உருவங்கள், விலங்குகள், பறவைகள், பொம்மைகள் மற்றும் அலங்கார வடிவங்கள். |
3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள்
குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய்.
சிறுவினா
1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறை
முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவர். சூடான பிரம்பை நட்டுவைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைப்பர். அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும். பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு சுட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவர். பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனவே, அதில் அமர்வதும் படுப்பதும் உடல்நலத்துக்கு நல்லது. மேலும் பிரம்புப் பொருள்கள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.
2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள்
மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் என எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப்பொருள் முதல் இறந்தவரை எடுத்துச்செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.
நெடுவினா
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகள்
அன்றாடப் பயன்பாட்டுக்காக மண்பாண்டம், பிரம்பு, பனையோலை, கோரை, மூங்கில், சுடுமண் போன்ற பொருள்களைக் கொண்டு தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலைகள் எனலாம்.
1. மண்பாண்டம்
மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக் கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானைஓடுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன. இவை எல்லாம் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும்.
மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு நல்ல சுவையுடன் இருக்கும். மேலும் உடல்நலத்திற்கும் நல்லது. மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். இப்போது மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால் இன்னும் திருவிழாக்களிலும், சமயச் சடங்குகளிலும் மண்பானைகளே பயன்பட்டு வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்ச்சிநிலைதான் சுடுமண் சிற்பக்கலை.
மண்பாண்டப் கைவினைப்பொருள்கள்
சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்: மண் சட்டிகள், பானைகள், கோப்பைகள், கிண்ணங்கள், தண்ணீர் ஜாடி.
அலங்காரப் பொருட்கள்: டெரகோட்டா நகைகள், கைவினைப் பொருட்கள், சுவர் அலங்காரங்கள்.
கட்டுமானப் பொருட்கள்: செங்கற்கள், ஓடுகள்.
விளையாட்டுப் பொருட்கள்: சிறிய சொப்பு சாமான் செட்கள் (குழந்தைகளுக்கு).
குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி
2. பிரம்பு
முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவர். சூடான பிரம்பை நட்டுவைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைப்பர். அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும். பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு சுட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவர். பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனவே, அதில் அமர்வதும் படுப்பதும் உடல்நலத்துக்கு நல்லது. மேலும் பிரம்புப் பொருள்கள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.
3. பனையோலை
பனைமரம் தோற்றத்தில் மட்டுமல்லாமல் பயன்தருவதிலும்கூட மிகவும் உயர்வான மரம்தான்.
குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய்
4. கோரைப்பாய்
பாய்களில் பலவகை உண்டு. குழந்தைகளைப் படுக்கவைப்பது தடுக்குப்பாய், உட்கார்ந்து உண்ண உதவுவது பந்திப்பாய், உட்காரவும், படுக்கவும் உதவுவது திண்ணைப்பாய், திருமணத்துக்குப் பயன்படுத்துவது பட்டுப்பாய், இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்துவது தொழுகைப்பாய். இப்படிப் பலவகைப் பாய்கள் உண்டு. இங்கேயுள்ள பாய்களைப் பாருங்கள். முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பயன்பட்டது கூடப் பாய்தான்.
5. மூங்கில்
மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன.
மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள்
மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் என எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப்பொருள் முதல் இறந்தவரை எடுத்துச்செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.
6. சுடுமண்
தமிழர்கள் பழங்காலத்தில் இருந்தே சுடுமண் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.
மனித உருவங்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்களும் உருவாக்கப்படுகின்றன.
மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.
சிந்தனை வினா
கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.
கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு
- மண்பாண்டங்களில் சமைத்தால் உடல்நலத்திற்கும் நல்லது.
- பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனவே, அதில் அமர்வதும் படுப்பதும் உடல்நலத்துக்கு நல்லது.
- மேலும் பிரம்புப் பொருள்கள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.
- இவைபோன்ற கைவினைப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உருவாக்கும் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் சுற்றுச்சூழலையும் மாசடையாமல் பாதுகாக்கலாம்.
TNPSC important questions and answers
1. "திருவை" என்பது எதனைக் குறிக்கும்?
விடையைக் காட்டு (Show Answer)
2. தமிழ்நாட்டில் "முதுமக்கள் தாழிகள்" எங்கு கிடைத்துள்ளன?
விடையைக் காட்டு (Show Answer)
3. மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை எது?
விடையைக் காட்டு (Show Answer)
4. "கூம்பொடு மீப்பாய் களையாது" - இந்தப் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
விடையைக் காட்டு (Show Answer)
5. மூங்கில்களில் கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்ற வகை எது?
விடையைக் காட்டு (Show Answer)
6. பிரம்பின் தாவரவியல் பெயர் என்ன?
விடையைக் காட்டு (Show Answer)
7. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை எவை?
விடையைக் காட்டு (Show Answer)
8. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
விடையைக் காட்டு (Show Answer)
9. கீழடியில் அகழாய்வு செய்யப்பட்டபோது எவ்வகைப் பொருள்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன?
விடையைக் காட்டு (Show Answer)
10. இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்தும் பாய் எது?
விடையைக் காட்டு (Show Answer)
Sources & References
- தமிழர் இசைக்கருவிகள் - இயல் ஐந்து 8ம் வகுப்பு
- பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை - நல்லந்துவனார் - இயல் ஐந்து 8ம் வகுப்பு
- பல்துறைக் கல்வி - இயல் நான்கு 8ம் வகுப்பு தமிழ் - திரு.வி.க
- தலைக்குள் ஓர் உலகம் - 8ம் வகுப்பு இயல் மூன்று - சுஜாதா
- 42 ஓரெழுத்து ஒருமொழி: TNPSC & TET தேர்வுகளுக்கான முழுமையான விளக்கங்கள் (2026 Updated)
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material : இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

Hi Please, Do not Spam in Comments