8th Standard Tamil Unit 5 Tamilar Isai Karuvigal பாடப்பகுதியானது, தமிழர்களின் மரபுவழி இசைக்கருவிகள் மற்றும் அவற்றின் சிறப்புகளைப் பற்றி விரிவாக விளக்குகிறது. TNPSC குரூப் 4 VAO, குரூப் 2 2A தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் பொதுத்தமிழ் பகுதியில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
இக்கட்டுரையில் தமிழர் இசைக்கருவிகள் வினா விடை, இசைக்கருவிகளின் வகைகள் (தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி) மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களை வழங்கியுள்ளோம். இவை அனைத்தும் TNPSC Group 4 VAO, Group 2 2A General Tamil Study Materials-ன் ஒரு பகுதியாக, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது அகராதி. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளப் பயன்படுவது கலைக்களஞ்சியம் ஆகும். இது பல்துறை அறிவை உள்ளடக்கியதாக அல்லது ஒரு குறிப்பிட்ட துறை அறிவை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். கலைக்களஞ்சியத்தில் தகவல்கள் பெரும்பாலும் அகரவரிசையில் தொகுக்கப் பட்டிருக்கும். இசைத்துறை பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
தமிழர் இசைக்கருவிகள் - இயல் ஐந்து 8ம் வகுப்பு TNPSC - Tamilar Isai Karuvigal
இசை என்றால் என்ன?
மக்களின் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி, குரல் வழியாக அல்லது செயற்கைக் கருவி ஒன்றின் வழியாக வெளிப்பட்டது. இது நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலையாகப் பிறந்தது. இக்கலையே இசை எனப்பட்டது.
இசையின் வகைகள் யாவை?
குரல்வழி இசை, கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர்.
இசைக்கருவிகள்
இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும்.
காலத் தேவைகள், சமயச்சடங்குகள், திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகளின் பொருட்டு பலவிதமான இசைக்கருவிகள் தோன்றி வளர்ச்சிபெற்றன.
இசைக்கருவிகள் குரல்இசைக்கு மட்டும் பயன்படுபவை, நாடகத்திற்கு மட்டும் பயன்படுபவை, இரண்டிற்கும் பயன்படுபவை எனப் பலவாகத் தோன்றிக் கிளைத்தன.
பாணர் என்பவர் யார்?
இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்.
இசைக்கருவிகளின் வகைகள் (Types of Instruments)யாவை?
| வகை (Category) | விளக்கம் | உதாரணம் (Examples) |
|---|---|---|
| தோல்கருவி | விலங்குகளின் தோலால் மூடப்பட்டவை | மத்தளம், முழவு, முரசு, உடுக்கை, குடமுழா, திமிலை, பறை |
| நரம்புக்கருவி | நரம்பு அல்லது தந்திகளை உடையவை | யாழ், வீணை |
| காற்றுக்கருவி | காற்றைப் பயன்படுத்தி இசைப்பவை | குழல், சங்கு, கொம்பு |
| கஞ்சக்கருவி | ஒன்றோடு ஒன்று மோதி இசைப்பவை | ஜாலரா, சேகண்டி |
இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி. காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.
1. தோல்கருவிகள் - Percussion instruments
தோல்கருவிகள் என்றால் என்ன?
விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
(எ.கா.) மத்தளம், முழவு, முரசு, உடுக்கை, குடமுழா, திமிலை, பறை
மத்தளம்
வகை - தோல்கருவி
மத்து என்பது ஓசையின் பெயர்.
இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும்.
மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் வாய்ப்பகுதி வளையங்களில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது. ஆகவே இதனை முதற்கருவி என்பர்.
தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என்பர்.
முரசு
வகை - தோல்கருவி
தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது முரசு ஆகும்.
படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் "சிலப்பதிகாரம்" குறிப்பிடுகிறது.
மாக்கண் முரசம் என்று "மதுரைக் காஞ்சி" குறிப்பிடுகிறது.
முழவு
வகை : தோல்கருவி
ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர்.
மண்ணமை முழவு எனப் பொருநராற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.
காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
உடுக்கை
வகை : தோல்கருவி
உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு கைப்பறை ஆகும்.
இதன் உடல் பித்தளையால் ஆனது.
வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் பொருத்தப்பட்டிருக்கும்.
இரு வாய்களையும் இணைக்கும் கயிறுகள் இடையில் கோக்கப்பட்டிருக்கும். இவற்றின் மீது ஒரு நாடா சுற்றப்பட்டுத் தொங்கும். வலது வாயின் மீதுதான் அடிப்பர். அவ்வப்போது இடையின் மீதுள்ள நாடாவை அமுக்குவர்.
- பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர்.
- சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர். தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம்.
இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.
குடமுழா
வகை : தோல்கருவி
ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது குடமுழா.
ஒரு பெரிய குடத்தின் வடிவில் ஐந்து வட்டவடிவ வாய்களுடன் அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு வாயும் தோலால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும். இதன் காரணமாக இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர்.
இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும்.
சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
திமிலை
பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும்.
மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும்.
இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.
பறை
விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி பறையாகும்.
பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்கக் கோட்பறையை முழக்கினர்.
பகைவர்களின் ஆதிரையைக் கவரச் செல்லும்போது ஆகோட்பறையை முழக்குவர்.
இக்காலத்தில் இது தப்பு என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.
இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
2. நரம்புக்கருவிகள் - String instruments
நரம்புக்கருவிகள் என்றால் என்ன?
நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
(எ.கா.) யாழ், வீணை
யாழ்
வகை - நரம்புக்கருவி
வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப் போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக் கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினார். இதன் அடிப்படையில் உருவான கருவியே யாழ் ஆகும்.
பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை.
யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது.
- இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது பேரியாழ்.
- பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது மகரயாழ்
- பதினான்கு நரம்புகளைக் கொண்டது சகோடயாழ்.
யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது என்பர்.
வீணை
வகை - நரம்புக்கருவி
யாழ் போன்ற அமைப்பையுடைய நரம்புக்கருவி வீணையாகும். இஃது ஏழு நரம்புகளைக் கொண்டது. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர்.
இவ்வாறு நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம், தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன.
- பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
3. காற்றுக்கருவிகள் - Wind instruments
காற்றுக்கருவிகள் என்றால் என்ன?
காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
(எ.கா.) குழல், சங்கு, கொம்பு
குழல்
வகை - காற்றுக்கருவி
காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும். இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள்.
இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர்.
குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்.
இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும்.
மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
- கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
கொம்பு
வகை : காற்றுக்கருவி
மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று.
இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர்.
கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர்.
ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின் போது இசைக்கப்படுகின்றன.
சங்கு
வகை : காற்றுக்கருவி
இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது.
வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர்.
சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர்.
இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.
4. கஞ்சக்கருவிகள்
கஞ்சக்கருவிகள் என்றால் என்ன?
ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
(எ.கா.) சாலரா, சேகண்டி
சாலரா
இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும்.
அதன் உட்புறம் குவிந்து இருக்கும். இதனை ஒன்றோடு ஒன்று பொருத்தியும் விளிம்பின் மீது தட்டியும் தாளத்தின் தேவைக்கு ஏற்ப இசைப்பர்.
இதனைப் பாண்டில் எனவும் அழைப்பர்.
இது கோயில் கூட்டு வழிபாட்டின் போதும் இன்னிசை அரங்குகளிலும் இசைக்கப்படும் இன்றியமையாத இசைக்கருவி ஆகும்.
இதனை இக்காலத்தில் ' ஜால்ரா' என்பர்.
சேகண்டி
வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது சேகண்டி, இதனைக் குச்சியாலோ அல்லது இரும்புத் துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர்.
இது தேவைக்கு ஏற்பப் பல அளவுகளில் உருவாக்கப்படும்.
இதனைச் சேமங்கலம் என்றும் அழைப்பர்.
இதனைக் கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்.
கற்பவை கற்றபின்
1. இசைக்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
2. இக்கால இசைக்கருவிகள் குறித்துக் கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
கிடார், கீபோர்டு, ட்ரம்ஸ், சாக்ஸபோன், வயலின் போன்றவை இக்கால இசைக்கருவிகள்.
கிடார்
வகை: நரம்பு கருவி
நரம்பு மற்றும் மின்சார இணைப்பால் இயங்கும் நவீனக் கருவி.
கிடார் என்பது ஆறு அல்லது பன்னிரண்டு நரம்புகள் கொண்ட, கைகளால் மீட்டி வாசிக்கப்படும் ஒரு பிரபலமான நரம்பு இசைக்கருவி.
இது முக்கியமாக அக்யூஸ்டிக், எலக்ட்ரிக் மற்றும் கிளாசிக்கல் என பல வகைகளில் கிடைக்கிறது.
இது மரம், கார்பன் ஃபைபர் போன்ற பொருட்களால் செய்யப்பட்டு, ப்ளூஸ், ராக் மற்றும் நாட்டுப்புற இசைக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
வயலின்
வகை: தந்திக் கருவி
விழையாழ் அல்லது வயலின் (பிடில்) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது.
இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும்.
இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன.
கீபோர்டு
வகை: நவீன மின்னணு இசைக்கருவி
கீபோர்டு என்பது மேற்கத்திய இசை அளவுகோலின் 12 ஸ்வரங்களை இயக்கப் பயன்படும், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட விசைகளைக் கொண்ட ஒரு மின்னணு இசைக்கருவியாகும்.
இது பியானோ, ஆர்கன் போன்ற பல கருவிகளின் ஒலிகளை எழுப்பவும், ரிக்கார்டிங் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
யமஹா, கேசியோ, ரோலண்ட் போன்றவை பிரபலமான பிராண்டுகள்.
ட்ரம்ஸ்
வகை: தோற்கருவி அல்லது தாள வாத்தியங்களில் நவீன வடிவம்.
இது தோற்கருவிகளின் வகைப்பாட்டில் அடங்கும். முரசுகளில் குறைந்தது ஒருபுறமாவது ஒலியெழுப்பும் தோற்பரப்பு, முரசுத்தலை இருக்கும். இதில் ஓர் கூட்டின் மீது இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இதன்மீது வாசிப்பவர் தமது கைகளைக் கொண்டோ முரசுக் கம்பு கொண்டோ அடித்து ஒலி எழுப்புவார். பொதுவாக ஒத்ததிர்வு கலன் முரசின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். இது முரசுத்தலையை விட சற்றே குறைந்த கட்டையில் சுருதி கூட்டப்பட்டிருக்கும்.
சாக்ஸபோன்
வகை: துளைக்கருவி அல்லது ஊதுகருவி அல்லது காற்று கருவி
சாக்சபோன் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் மேற்கத்திய காற்றிசைக் கருவி .
பித்தளை அல்லது ஜெர்மன் வெள்ளியால் செய்யப்படும் சாக்சபோன், ஆங்கில எழுத்தான 'U' வடிவத்தில் அமையப் பெற்றிருக்கும்.
வாய் வைத்து ஊதும் முனையில் மூங்கில் பட்டை பொருத்தப்பட்டிருக்கும். விரல்துளைகளில் 'அசையும் பொத்தான்கள்' அமைந்திருக்கும். வாயால் ஊதிக்கொண்டு, இந்தப் பொத்தான்களை மூடித் திறந்து இசைப்பர். அப்போது வெளியாகும் ஒலி, உலோக நாதமாக இருக்கும்.
மதிப்பீடு - தமிழர் இசைக்கருவிகள் - இயல் ஐந்து 8ம் வகுப்பு - வினா விடை 8th standard tamil book back Tamilar Isai Karuvigal 8th Tamil Question and Answer
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
TNPSC important questions and answers
1. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் யார்?
விடையைக் காட்டு (Show Answer)
2. 'நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்' - எனக் குறிப்பிடும் நூல்?
விடையைக் காட்டு (Show Answer)
3. 'மத்து + தளம் = மத்தளம்' என்று ஆகியது எனக் கூறியவர்?
விடையைக் காட்டு (Show Answer)
4. முதற்கருவி என்று இசைக்கருவியுள் அழைக்கப்படும் கருவி எது?
விடையைக் காட்டு (Show Answer)
5. 'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்' - இடம்பெற்ற நூல்?
விடையைக் காட்டு (Show Answer)
6. தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது எது?
விடையைக் காட்டு (Show Answer)
7. தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகக் குறிப்பிடுவது?
விடையைக் காட்டு (Show Answer)
8. 'மாக்கண் முரசம்' என்று முரசு பற்றி குறிப்பிடுவது எது?
விடையைக் காட்டு (Show Answer)
9. 'மண்ணமை முழவு' என முழவு பற்றி இடம்பெற்றுள்ள நூல்?
விடையைக் காட்டு (Show Answer)
10. பெரிய உடுக்கையை எவ்வாறு அழைப்பர்?
விடையைக் காட்டு (Show Answer)
11. சிறு உடுக்கையை எவ்வாறு அழைப்பர்?
விடையைக் காட்டு (Show Answer)
12. 'தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்' - எனக் குறிப்பிடும் நூல்?
விடையைக் காட்டு (Show Answer)
13. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது எது?
விடையைக் காட்டு (Show Answer)
14. 'பஞ்சமகா சப்தம்' என்றும் அழைக்கப்படும் கருவி எது?
விடையைக் காட்டு (Show Answer)
15. பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி எது?
விடையைக் காட்டு (Show Answer)
16. மணற்கடிகார வடிவத்தில் அமைந்திருக்கும் கருவி எது?
விடையைக் காட்டு (Show Answer)
17. திமிலையை ________ என்னும் பெயரால் அழைப்பர்.
விடையைக் காட்டு (Show Answer)
18. பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க எதனை முழக்கினர்?
விடையைக் காட்டு (Show Answer)
19. பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது எதனை முழக்குவர்?
விடையைக் காட்டு (Show Answer)
20. இக்காலத்தில் 'தப்பு' என்னும் பெயரில் வழங்கப்படுவது எது?
விடையைக் காட்டு (Show Answer)
21. இருபத்தொரு நரம்புகளைக் கொண்ட யாழ் எது?
விடையைக் காட்டு (Show Answer)
22. பத்தொன்பது நரம்புகளைக் கொண்ட மீன் வடிவ யாழ் எது?
விடையைக் காட்டு (Show Answer)
23. பதினான்கு நரம்புகளைக் கொண்ட யாழ் எது?
விடையைக் காட்டு (Show Answer)
24. யாழின் வடிவமே மெல்ல மெல்ல மாற்றமடைந்து ________ ஆக உருமாறியது.
விடையைக் காட்டு (Show Answer)
25. வீணையில் எத்தனை நரம்புகள் உள்ளன?
விடையைக் காட்டு (Show Answer)
26. மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை?
விடையைக் காட்டு (Show Answer)
27. கொன்றைக்குழல், முல்லைக்குழல் பற்றிக் கூறும் நூல் எது?
விடையைக் காட்டு (Show Answer)
28. 'குழல்இனிது யாழ்இனிது...' எனக் குறிப்பிடும் நூல் எது?
விடையைக் காட்டு (Show Answer)
29. இலக்கியங்களில் 'பணிலம்' என்று அழைக்கப்படுவது எது?
விடையைக் காட்டு (Show Answer)
30. சாலராவை ________ எனவும், சேகண்டியை ________ எனவும் அழைப்பர்.
விடையைக் காட்டு (Show Answer)
31. துத்தரி என்பது எவ்வகை இசைக்கருவி?
விடையைக் காட்டு (Show Answer)
Sources & References
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் - 8ம் வகுப்பு தமிழ் (TNPSC Group 4 Notes & Book Back Q&A)
- பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை - நல்லந்துவனார் - இயல் ஐந்து 8ம் வகுப்பு
- பல்துறைக் கல்வி - இயல் நான்கு 8ம் வகுப்பு தமிழ் - திரு.வி.க
- தலைக்குள் ஓர் உலகம் - 8ம் வகுப்பு இயல் மூன்று - சுஜாதா
- 42 ஓரெழுத்து ஒருமொழி: TNPSC & TET தேர்வுகளுக்கான முழுமையான விளக்கங்கள் (2026 Updated)
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

Hi Please, Do not Spam in Comments