நாட்டுப்புறப் பாடல் தமிழ்

பாடல்கள் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை. பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி; கேட்டாலும் மகிழ்ச்சி. ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன. தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பாடத்தலைப்புகள்(toc)

நாட்டுப்புறப்பாட்டு

நாட்டுப்புறப் பாடல் என்றால் என்ன?

ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகி விடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், 'நாட்டுப்புறப் பாடல்' எனப்படுகிறது. 

  • எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு

இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை எல்லாம் "வாய்மொழி இலக்கியம்" எனக் கூறுவார்கள்.

நாட்டுப்புறப் பாடல் வகைகள்

நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.

  • தாலாட்டுப் பாடல்கள்
  • விளையாட்டுப் பாடல்கள்
  • தொழில் பாடல்கள் 
  • சடங்குப் பாடல்கள்
  • கொண்டாட்டப் பாடல்கள்
  • வழிபாட்டுப் பாடல்கள் 
  • ஒப்பாரிப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல்

பள்ளிக்கூடமே போகாத, எழுதப் படிக்கத் தெரியாத தாய்மார்களுக்கும் இந்தத் தாலாட்டுப் பாடல் தெரிகிறதே! அஃது எப்படி ? அது மட்டுமின்றி, இந்தப் பாட்டை யாரும் எழுதிப் புத்தகமாகப் போட்டதும் இல்லை. பிறகு எப்படி எல்லாத் தாய்மார்களுக்கும் இப்பாடல் மனப்பாடமாகத் தெரிகிறது?

குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாய் பாடும் பாட்டு இது.

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோஆராரோ ஆரிரரோகண்ணே கண்மணியே

ஆரடிச்சு நீ அழுதே! அடிச்சாரைச் சொல்லி அழு ஆராரோ ஆரிரரோ.. (code-box)

இந்தப் பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா? இதனைத் தாலாட்டுப் பாடல் என்கிறோம். 


பிறந்த குழந்தைக்குப் பாடுவது தாலாட்டுப் பாடல்.

 

கொழும்புல கூடாரம் - உங்க மாமா

கொத்தமல்லி வியாபாரம் (ஆராரோ ஆரிரரோ)

கொத்தமல்லி வித்தெடுத்து - உங்க மாமன்

கொலுசு பண்ணி வாராராம் (ஆராரோ ஆரிரரோ)

மதுரையிலே கூடாரம் - உங்க மாமா

மல்லியப்பூ வியாபாரம் (ஆராரோ ஆரிரரோ)

மல்லியப்பூ பூவெடுத்து - உங்க மாமா மாலை

பண்ணி வாராராம் (ஆராரோ ஆரிரரோ) (code-box)


இவ்வாறு தாலாட்டுகளில் தாய்மார்கள், தங்கள் அண்ணன் தம்பிகளின் பெருமைகளைப் பாடுவது வழக்கம்.

குழந்தையைக் கொஞ்சவேண்டும் என்று தோன்றினால் தாலாட்டுப் பாட்டுத் தானாக வந்துவிடும். 

விளையாட்டுப் பாடல்

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டுப் பாடல். 

சாஞ்சாடம்மா சாஞ்சாடு 

சாயக்கிளியே சாஞ்சாடு

குத்துவிளக்கே சாஞ்சாடு

கோவில் புறாவே சாஞ்சாடு

மானே மயிலே சாஞ்சாடு

மாடப்புறாவே சாஞ்சாடு....(code-box)


இது குழந்தையாக இருக்கும்போது சாய்ந்தாடச் சொல்லும் விளையாட்டுப் பாடல்.

“ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்..

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்”...(code-box)


 கொழுக்கட்டை கொழுக்கட்டை ஏன் வேகல? 

அடுப்பு எரியல நான் வேகல.

அடுப்பே அடுப்பே ஏன் எரியல ?

மழை பெய்தது நான் எரியல. 

மழையே மழையே ஏன் பெய்தே ? 

புல்லு வளர நான் பெய்தேன்.

புல்லே புல்லே ஏன் வளர்ந்தே? 

மாடு தின்ன நான் வளர்ந்தேன்.

மாடே மாடே ஏன் தின்றாய் ? 

மாட்டுக்காரன் அவிழ்த்துவிட்டான் நான் தின்றேன்.

மாட்டுக்காரா மாட்டுக்காரா ஏன் அவிழ்த்துவிட்டே? 

குழந்தை அழுதது நான் அவிழ்ந்து விட்டேன்.

குழந்தை குழந்தை ஏன் அழுதே ? 

எறும்பு கடிச்சது நான் அழுதேன்.

எறும்பே எறும்பே என் கடிச்சே? 

என் புற்றிலே கால்வெச்சா, நான் சும்மா இருப்பேனா? (code-box)

என்று குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெருங்குரலெடுத்துப் பாடும் விளையாட்டுப் பாடலும் நாட்டுப்புறப் பாடல்தான்.

தொழில் பாடல்

களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது தொழில் பாடல். 

வெள்ளிப்பிடி அருவா

ஏ! விடலைப் பிள்ளை கை அருவா

சொல்லி யடிச்சருவா -இப்போ

ஈழட்டுதடி நெல்கதிரெ.....(code-box)


என்று அறுவடை செய்யப் போகும் பெண்கள் பாடிக்கொண்டு செல்வார்கள். 

துணி வெளுக்கும் தொழில் செய்வோர்:


சோ... சோ....

அழுக்குத் துணியே

சோ... சோ....

அடிச்சுத் துவைச்சி..

சோ... சோ....

இறுக்கிப்பிழிஞ்சி

சோ... சோ....

காயப்போடு 

சோ... சோ......(code-box)


என்று வேலையின்போது களைப்புத் தெரியாமல் இருக்க இவ்வாறு பாடுகிறார்கள். ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் தனித்தனியே பாட்டு உண்டு.

சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்

திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்.

வழிபாட்டுப் பாடல்

சாமி கும்பிடுவோர் பாடுவது வழிபாட்டுப் பாடல். 

ஒப்பாரிப் பாடல்

இறந்தோருக்குப் பாடுவது ஒப்பாரிப் பாடல்.

தமிழர் வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் இப்படிப் பாடல்கள் உண்டு.

இறந்தவர்களைப் பார்த்ததும் அழுகை வந்துவிடும். அத்துடன், ஒரு துயரப் பாடலாக ஒப்பாரியும் வந்துவிடும். அப்படிப் பாடுகிறவர் ஏற்கெனவே தான் எங்கோ கேட்ட பாடல் வரிகளோடு தானும் சில வரியைச் சேர்த்துப் பாடிவிடுவார். 

கானாப் பாடல்

முன்னர், இப்பாடல்களைக் கிராமியப் பாடல்கள் என்று கூறி வந்தார்கள். ஆனால், வாய்வழியாகப் பரவும் பாடல் சிற்றூர்களில் மட்டும்தான் உண்டா ? நகரங்களிலும் தாய்மார்கள் பாடுவது இல்லையா ? 

சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள்பாடும் 'கானாப் பாடல்' கூட நாட்டுப்புறப் பாடல்தான். 

கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புறப்பாடல்தான்.

இந்தப் பாடல்களை யார் எழுதினார்கள் என்று யாராலும் கூறமுடியாது. ஏனெனில், இப்பாடல்களை யாரும் எழுதவில்லை. மக்கள் தாமாகவே பாடவேண்டும் என்று தோன்றும்போது இப்பாடல்கள் பாடப்படுகின்றன.

இப்படியே நாட்டுப்புறப்பாடல் வளர்ந்து கொண்டே போகும்.

ஒருவர் பாடியதுபோல, அப்படியே இன்னொருவர் பாடுவது இல்லை. இது நாட்டுப்புறப் பாடல்களின் தனிச்சிறப்பு. 

எடுத்துக்காட்டுகளாகச் சில நாட்டுப்புறப் பாடல் வரிகள்

நாட்டுப்புறப் பாடல்களில் விழிப்புணர்வுப் பாடல்களும் உள்ளன. 

ஊரான் ஊரான் தோட்டத்திலே


ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா 


காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி


காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன்


என்ற பாடல்,நமது நாட்டு விடுதலைப்  போராட்டக் காலத்தில் உருவான நாட்டுப்பாடல்.

நாட்டுப்புறத் தமிழ்

  • இவற்றைச் சொலவடைகள் என மக்கள் சொல்வார்கள்.

நாட்டுப்புறத் தமிழ் பழமொழிகள்

பின்வரும் பழமொழிகளைப் படியுங்கள். 

  • கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க.. ( ஆனம் - குழம்பு )
  • அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா? (நாழி - தானியங்களை அளக்கும் படி; அகவிலை - தானியவிலை)
  • திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு ? (திறவுகோல் - சாவி)

ஆனம், அகவிலை, திறவுகோல் முதலிய சொற்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிற்றூர்களில் இயல்பாகப் பேசப்பட்டவை. அவை இன்று மறைந்து வருகின்றன.

நீங்கள் படித்த நாட்டுப்புறப் பாடலில் திரும்பத்திரும்ப வரும் ஒரு சொல்லைக் கவனித்தீர்களா?

  • கொழும்பில கூடாரம் மதுரையில கூடாரம்

கூடாரம் இடுவது என்றால் தங்குவது என்று பொருள்.

நாட்டுப்புற இலக்கியம்

  • மு. அருணாசலம் - காற்றிலே மிதந்த கவிதை 
  • கருணானந்த சுவாமிகள் - பவளக்கொடி மாலை 
  • தாண்டவராய முதலியார் - கதாமஞ்சரி 
  • லாரி வெளியீடு - பழமொழிகள் 
  • அருணாசல முதலியார் - இரு சொல் அலங்காரம் 
  • அன்னகாமு - ஏட்டில் எழுதாக் கவிதைகள்
  • கி.வா.ஜ -  நாடோடி இலக்கியம், மலையருவி
  • நா.வானமாமலை - வீரபாண்டிய, காத்தவராய, முத்துப்பட்டன் கதைப்பாடல்கள் 
  • தமிழண்ணல் - தாலாட்டு 
  • ஆறு.அழகப்பன் - தாலாட்டு ஐநூறு
  • அழ.வள்ளியப்பா - பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள் 
  • டி.என்.சுப்பிரமணியம் - காட்டுமல்லிகை 
  • தூரன் - காற்றிலே வந்த கவிதை  
  • ச.வே.சுப்பிரமணியன் - தமிழில் விடுகதைகள் 
  • மணலிசோமன்,மெ.சுந்தரம் - நாட்டுப்புறப் பாடல்கள்

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாய் பாடும் பாட்டு  தாலாட்டுப் பாடல் எனப்படும்.

2. ஏட்டில் எழுதாத பாடல்தான் நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது.

3. வாய்மொழியாகப் பரவும் நாட்டுப்புறப் பாடல்களையும் கதைகளையும் நாட்டுப்புறப்பாட்டு என்று கூறுவர்.

4. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது தொழில் பாடல்

கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் ......... கூட நாட்டுப்புறப் பாடல்தான்.

அ) சடங்குப் பாடல் ஆ) கானாப் பாடல்

இ) தாலாட்டுப் பாடல்

2. சாமி கும்பிடுவோர் பாடும் பாடல்

அ) தொழில் பாடல் ஆ) ஒப்பாரிப் பாடல்

இ) வழிபாட்டுப் பாடல்

குறுவினாக்கள்

1. கொழும்புவில் கூடாரம் போட்டவர் என்ன வாணிகம் செய்தார் ?

கொழும்புவில் கூடாரம் போட்டவர் கொத்தமல்லி வாணிகம் செய்தார்.

2. திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல் எது ?

திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல் சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்

3. சிற்றூர்களில் பாடும் பாடல் மட்டும்தான் நாட்டுப்புறப் பாடலா ?

இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள்பாடும் 'கானாப் பாடல்' கூட நாட்டுப்புறப் பாடல்தான். 

சிறுவினாக்கள்

1.நாட்டுப்புறப் பாடலின் வகைகளை எழுதுக.

நாட்டுப்புறப் பாடலின் வகைகள்

  • தாலாட்டுப் பாடல்கள்
  • விளையாட்டுப் பாடல்கள்
  • தொழில் பாடல்கள் 
  • சடங்குப் பாடல்கள்
  • கொண்டாட்டப் பாடல்கள்
  • வழிபாட்டுப் பாடல்கள் 
  • ஒப்பாரிப் பாடல்கள்

2. தாலாட்டுப் பாடலுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

தாலாட்டுப் பாடலுக்கு ஓர் எடுத்துக்காட்டு

ஆராரோ ஆரிரரோஆராரோ ஆரிரரோகண்ணே கண்மணியே

ஆரடிச்சு நீ அழுதே! அடிச்சாரைச் சொல்லி அழு ஆராரோ ஆரிரரோ.. 


கரகாட்டம்

நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளுள் ஒன்று கரகாட்டம்.

அஃது ஆண்பெண் இருவருமே ஆடும் கலையாகும்.

ஊர்த்திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் அல்லது தேரோட்ட நிகழ்ச்சிகளில் இதனை நிகழ்த்துவர். 

பெரியோர்முதல் சிறியோர்வரை அனைவரும் விரும்பும் நிகழ்ச்சியாகக் கரகாட்டம் உள்ளது. தலையில் கரகம் வைத்து நாகசுர இசைக்கு ஏற்ப அடியெடுத்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கரகாட்டத்திற்கான களம் அகலமான நெடுந்தெருக்களே. காண்போரையும் உடன்சேர்ந்து ஆடத்தூண்டும் அளவிற்குக் கரகாட்டக் கலைஞர்கள் ஆடுவார்கள்.



தாலாட்டு பாடல் எடுத்துக்காட்டு 

கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ 

ஆராரோ ஆரிரரோ


நந்தவனம் கண் திறந்து

நற்றமிழ்ப் பூ எடுத்து 

பண்ணோடு பாட்டிசைத்துப் 

பார் போற்ற வந்தாயோ!


தந்தத்திலே தொட்டில் கட்டித் 

தங்கத்திலே பூ இழைத்துச் 

செல்லமாய் வந்து உதித்த 

சேரநாட்டு முத்தேனோ!


வாழை இலை பரப்பி 

வந்தாரைக் கை அமர்த்திச் 

சுவையான விருந்து வைக்கும் 

சோழநாட்டு முக்கனியோ!


குளிக்கக் குளம் வெட்டிக் 

குலம்வாழ அணை கட்டிப் 

பசியைப் போக்க வந்த 

பாண்டிநாட்டு முத்தமிழோ!


கண்ணே கண்மணியே

கண்ணுறங்கு கண்ணுறங்கு!(code-box)


சொல்லும் பொருளும்

நந்தவனம் - பூஞ்சோலை

பண்- இசை

பார் - உலகம்

இழைத்து - பதித்து

தொகைச்சொற்களின் விளக்கம்

முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்

முக்கனி - மா, பலா, வாழை 

முத்தமிழ் - இயல், இசை, நாடகம்

பாடலின் பொருள்

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ! 

தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ!

இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ! 

குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ!

கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

நூல் வெளி

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. 

தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. (alert-success)

குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு. 

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise கண்மணியே கண்ணுறங்கு மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாட்டி+சைத்து

ஆ) பாட்டி+இசைத்து

இ) பாட்டு+இசைத்து 

ஈ) பாட்டு+சைத்து

2. 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கண்+உறங்கு 

இ) கண்+ றங்கு

ஆ) கண்ணு+உறங்கு

ஈ) கண்ணு+றங்கு

3. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வாழையிலை

ஆ)வாழைஇலை 

ஈ)வாழிலை

இ) வாழைலை

4. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .

அ) கைமர்த்தி 

ஆ) கைஅமர்த்தி

இ) கையமர்த்தி

ஈ) கையைமர்த்தி

5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்

அ) மறைந்த

 இ) குறைந்த

ஆ) நிறைந்த

ஈ) தோன்றிய

குறுவினா

1.இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை? 

இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் சேர, சோழ, பாண்டிய நாடு.

2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது? 

நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது

இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்க வேண்டும்.


3. கண்மணியே கண்ணுறங்கு பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் எடுத்து சொற்களை எழுதுக.

நந்தவனம்- நற்றமிழ்ப்

தந்தத்திலே-தங்கத்திலே

குளிக்கக்-குலம்வாழ

சிறுவினா

தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?

தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ!

இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ! 

குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ!

சிந்தனை வினா

1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க. 

வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைக் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.

  • தாலாட்டுப் பாடல்கள்
  • விளையாட்டுப் பாடல்கள்
  • தொழில் பாடல்கள் 
  • சடங்குப் பாடல்கள்
  • கொண்டாட்டப் பாடல்கள்
  • வழிபாட்டுப் பாடல்கள் 
  • ஒப்பாரிப் பாடல்கள்

2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க.

குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள் 

  • கண்ணே
  • மணியே
  • முத்தே
  • அமிழ்த்தே
  • வைரமே
  • தங்கமே
  • செல்லமே
  • ராஜாவே
  • கொழுந்தே 

தொழில் பாடல்

கடலோடு விளையாடு

பாடல் மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அசதியைப் போக்குகிறது. உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள். வாட்டும். வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீனவர்கள். அம்மீனவர்களின் பாடலைக் கேட்போம் வாருங்கள்.

விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா

அருமைமேகம் நமதுகுடை - ஐலசா

அடிக்கும் அலை நம்தோழன் - ஐலசா

 வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா

 விண்ணின்இடி காணும்கூத்து - ஐலசா 

 பாயும்புயல் நம் ஊஞ்சல் – ஐலசா 

பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா 

காயும்கதிர்ச் சுடர்கூரை - ஐலசா 

கட்டுமரம் வாழும்வீடு - ஐலசா 

மின்னல்வரி அரிச்சுவடி - ஐலசா 

பிடிக்கும் மீன்கள் நம்பொருள்கள் - ஐலசா 

முழுநிலவே கண்ணாடி - ஐலசா 

மூச்சடக்கும்நீச்சல் யோகம் - ஐலசா

தொழும்தலைவன் பெருவானம் - ஐலசா

துணிவோடு தொழில்செய்வோம் - ஐலசா(code-box)


சொல்லும் பொருளும்

  • கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
  • மின்னல்வரி- மின்னல் கோடு
  • அரிச்சுவடி- அகரவரிசை எழுத்துகள்

பாடலின் பொருள்


மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள்: விரிந்த கடலே பள்ளிக்கூடம்: கடல் அலையே தோழன்; மேகமே குடை; வண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை: விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து: சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல்: பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை; கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு; மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்; வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம்; முழு நிலவுதான் கண்ணாடி; மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம்; வானமே அவர்கள் வணங்கும் தலைவன்; இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

நெய்தல் திணை

நிலம்:  கடலும் கடல் சார்ந்த இடமும்

மக்கள் : பரதவர், பரத்தியர்

தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

பூ: தாழம்பூ

நூல் வெளி

இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1.கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...

அ) கதிர்ச்+சுடர்

ஆ) கதிரின்+சுடர்

இ) கதிரவன்+சுடர்

ஈ) கதிர்+சுடர்

2.மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மூச்சு+அடக்கி

ஆ) மூச்+அடக்கி

இ) மூச்+சடக்கி

ஈ) மூச்சை+அடக்கி

3.பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பெருமைவனம் 

ஆ) பெருவானம்

இ) பெருமானம்

ஈ) பேர்வானம்

4. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ)அடிக்குமலை 

இ) அடிக்கிலை

ஆ) அடிக்கும் அலை 

ஈ) அடியலை

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

பொருத்தப்பட்டுள்ளது 

1.விடிவெள்ளி - விளக்கு

2.மணல் - பஞ்சுமெத்தை

3.புயல்- ஊஞ்சல்

4. பனிமூட்டம் - போர்வை

குறுவினா

1. அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்? 

கடல் அலையே தோழன்; மேகமே குடை; என மீனவர்கள் கருதுகின்றனர்? 

2. கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?

கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன

முழு நிலவுதான் கண்ணாடி; 

வானமே அவர்கள் வணங்கும் தலைவன்; 

3. மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?

மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன 

கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு; வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம்;

சிந்தனை வினா

1.நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகி விடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், 'நாட்டுப்புறப் பாடல்' எனப்படுகிறது. 

  • எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு

இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை எல்லாம் "வாய்மொழி இலக்கியம்" எனக் கூறுவார்கள்.

நினைவு கூர்க

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். 

இப்படி, உங்கள் ஊரில், உங்கள் தெருவில், உங்கள் வீட்டில் இப்படிப் பாடல்கள் தெரிந்த பாட்டிகள், தாத்தாக்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் சில பாடல்களை அறிந்து நினைவு கூர்க.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 9. நாட்டுப்புறப் பாட்டு  பகுதிக்காகப் பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. தால் என்பதற்கு ...... என்று பொருள்.

நாக்கு

2. சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்

கானாப் பாடல்

3. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

விடிவெள்ளி - விளக்கு

மணல் - பஞ்சுமெத்தை

புயல்- ஊஞ்சல்

பனிமூட்டம் - போர்வை

4. முத்தேன் பொருந்தாதது 

கொம்புத்தேன்

மலைத்தேன்

கொசுத்தேன்

பூச்சித்தேன் 

5. பண் என்பதன் பொருள்

இசை

6. சாமி கும்பிடுவோர் பாடும் பாடல்

அ) தொழில் பாடல் 

ஆ) ஒப்பாரிப் பாடல்

இ) வழிபாட்டுப் பாடல்

7. இறந்தோருக்குப் பாடுவது 

அ) தொழில் பாடல் 

ஆ) ஒப்பாரிப் பாடல்

இ) வழிபாட்டுப் பாடல்

8. குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாய் பாடும் பாட்டு 

தாலாட்டுப் பாடல் 

9. ஏட்டில் எழுதாத பாடல்

நாட்டுப்புறப் பாடல் 

10. வாய்மொழியாகப் பரவும் நாட்டுப்புறப் பாடல்களையும் கதைகளையும் .... என்று கூறுவர்.

நாட்டுப்புறப்பாட்டு

11. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது

தொழில் பாடல்

12. கூடாரம் இடுவது என்றால் 

தங்குவது 

13. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

மு. அருணாசலம் - காற்றிலே மிதந்த கவிதை 

கருணானந்த சுவாமிகள் - பவளக்கொடி மாலை 

தாண்டவராய முதலியார் - கதாமஞ்சரி 

தூரன் - காற்றிலே வந்த கவிதை  

14. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

அருணாசல முதலியார் - இரு சொல் அலங்காரம் 

அன்னகாமு - ஏட்டில் எழுதாக் கவிதைகள்

கி.வா.ஜ - மலையருவி

நா.வானமாமலை - முத்துப்பட்டன் கதைப்பாடல்கள் 

15. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

தமிழண்ணல் - தாலாட்டு 

ஆறு.அழகப்பன் - தாலாட்டு ஐநூறு

டி.என்.சுப்பிரமணியம் - காட்டுமல்லிகை 

ச.வே.சுப்பிரமணியன் - தமிழில் விடுகதைகள்

16. வீரபாண்டிய, காத்தவராய, முத்துப்பட்டன் கதைப்பாடல்கள் பாடியவர்

நா.வானமாமலை

17. நாட்டுப்புறத் தமிழ் ..... என மக்கள் சொல்வார்கள்

சொலவடைகள்

18. "கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க" இதில் ஆனம் - என்பதன் பொருள்

குழம்பு 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad