நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் படைப்புகள் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறது. பாரதிதாசன் பாடல்கள் சில இங்கே விளக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
பாரதிதாசன் பற்றிய குறிப்பு
பெயர் - பாரதிதாசன்
இயற்பெயர் - சுப்புரத்தினம்
பெற்றோர் - கனகசபை - இலக்குமி
ஊர் - புதுச்சேரி
கல்வி - தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
இயற்றியவை - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் முதலியன.
காலம் - 29.04.1891 முதல் 21. 04. 1964வரை
இதழ் - குயில்
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன் சிறப்புப்பெயர்கள்
- பாவேந்தர்
- இயற்கைக் கவிஞர்
- புரட்சிக் கவிஞர் - அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர்.
- பகுத்தறிவுக் கவிஞர்
பாரதிதாசன் சிறப்புகள்
பாரதிதாசன் படைப்புகள்
பிசிராந்தையார் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பாரதிதாசன் நூல்கள்
- இருண்ட வீடு
- தமிழயக்கம்
- மணிமேகலை வெண்பா
- இசையமுது
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- தமிழச்சியின் கத்தி
- குறிஞ்சித் திட்டு
- சேர தாண்டவம்
- எதிர்பாராத முத்தம்
- பெண்கல்வி
- எங்கள் தமிழ்
- சஞ்சீவி பர்வதத்தின் காதல்
- முதியோர் காதல்
- பிசிராந்தையார்
- படித்த பெண்கள்
- கிளையினுள் பாம்பு
- பாரதிதாசன் கவிதைகள்
கவிதை நூல்கள்
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.
பாரதிதாசன் கவிதைகள் சில
- பாண்டியன் பரிசு,
- குடும்ப விளக்கு,
- அழகின் சிரிப்பு.
இசையமுது
மழையே மழையே வா வா - நல்ல
வானப் புனலே வா வா - இவ்
வையத் தமுதே வா வா
தகரப் பந்தல் தணதண வென்ன
தாழும் கூரை சளசள வென்ன
நகரப் பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் கும்கண கணகண வென்ன (மழையே மழையே..)
எரிகுளங்கள் வழியும்படி, நாடு
எங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி (மழையே மழையே...)
தழையா வெப்பம் தழைக்கவும் மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவார் எல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் (மழையே மழையே.)
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (code-box)
சொல்பொருள்
வானப்புனல் - மழைநீர்;
வையத்து அமுது - உலகின் அமுதம்;
வையம் - உலகம்;
தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்;
பொடி - மகரந்தப் பொடி;
தழை - செடி;
தழையா வெப்பம்- பெருகும் வெப்பம்; குறையாத வெப்பம் எனவும் பொருள் கொள்ளலாம்;
தழைக்கவும் - குறையவும்.
நூல் வெளி
இங்கு இடம்பெற்றுள்ள பாடல் இசையமுது என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
தமிழின் இனிமை
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்(code-box)
சொல்பொருள்
கனி - பழம்
நனி - மிகுதி
கழை - கரும்பு
நல்கிய - வழங்கிய
பாடல் பொருள்
கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலரிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின் சுவையும் இனிமையானவை. ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும் விட உயர்ந்தது. தமிழோ என் உயிர் போன்றது என்கிறார் பாரதிதாசன்.
நூல் வெளி
இன்பத் தமிழ்
கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- பாரதிதாசன்(code-box)
சொல்லும் பொருளும்
- நிருமித்த - உருவாக்கிய
- சமூகம் - மக்கள் குழு
- விளைவு - வளர்ச்சி
- அசதி - சோர்வு
பாடலின் பொருள்
தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.
தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.
தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.
தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.
நூல் வெளி
இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise இன்பத் தமிழ் மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு அசதி ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிலையென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
6.'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
1. விளைவுக்கு - நீர்
2. அறிவுக்கு - தோள்
3. இளமைக்கு - பால்
4. புலவர்க்கு - வேல்
ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) பேர்- நேர்
பால் - வேல்
அறிவுக்கு - இளமைக்கு
விளைவுக்கு - புலவர்க்கு
வான் - தேன்
குறுவினா
1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள்
அமுது, நிலவு, மணம்
2. பாரதிதாசன் இயற்பெயர் என்ன?
பாரதிதாசன் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்
சிறுவினா
1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
இன்பத் தமிழ் - பாடலில் எனக்குப் பிடித்த அடிகள் இரண்டு
- தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
- தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!
2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
நீர் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. மக்கள் ஆகிய சமூகம் அதன் வளர்ச்சிக்கு நீர் தேவை.
நிரப்புக
பாரதிதாசன் பிறந்தநாள் 29.04.1891
எங்கள் தமிழ்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்குஇன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்கதியில் உயர்ந்திடயாம் பெற்ற பேறு!தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லைநனியுண்டு நனியுண்டு காதல் -தமிழ்நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில் (இனிமைத்)தமிழ் எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலேதமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் -இன்பத்தமிழ்குன்று மேல்தமிழ் நாடெங்கும் இருளாம்தமிழுண்டு தமிழ்மக்களுண்டு -இன்பத்தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டுதமிழ்என்று தோள்தட்டி ஆடு-நல்லதமிழ்வெல்க வெல்க என்றே தினம்பாடு!(இனிமைத்)-பாரதிதாசன்(code-box)
சொற்பொருள்:
கதி- துணை;
பேறு - செல்வம்;
நனி - மிகுதி (மிக்க );
தரம் - தகுதி;
புவி - உலகம்.
பொருள்:
இனிமை, இன்பம், அமுது, கனிச்சாறெனத் திகட்டும் சுவைமிக்கது எம்தமிழ். இத்தமிழ்ச்சொல்லினும் சுவைமிக்க சொல் வேறெங்கும் இல்லை. அச்சுவை மிக்க மொழியின்மீது தமிழ் மக்களுக்குக் காதல் மிக உண்டு.
ஆதலால், தமிழ் எங்கள் உயிரென்பதனாலே எவரையும் வெல்லுந்திறமுண்டு இப்புவிமேலே. எம் தமிழ் எங்கள் விழியாதலால் அதன் ஒளி குன்றினால் நாடே இருளில் மூழ்கிவிடும். எனவே, தமிழிருக்கும்வரையே தமிழ் மக்களும் இருப்பர். ஆதலால், நாளும் அதற்குத் தொண்டுசெய்வோம். நம் வாழ்வு தமிழென்று தோள்தட்டி ஆடுவோம்; அது தரணியில் நாளும் வெற்றிபெறப் பாடுபடுவோம்.
நூற்குறிப்பு :
இப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அ. தமிழ் எங்கள் உயிர்
ஆ. இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
பொருள் தருக.
அ. கதி = துணை
ஆ. பேறு = செல்வம்
இ. நனி = மிகுதி
குறுவினா
சிறுவினா
தமிழின் சிறப்பைப் பாரதிதாசன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
பாரதிதாசன் பற்றிய 10 அடிகள்
- "புரட்சிக்கவிஞர்" எனவும், 'பாவேந்தர்' எனவும் புகழப்படுபவர் பாரதிதாசன்.
- இவர்தம் இயற்பெயர் சுப்புரத்தினம்.
- பெற்றோர் - கனகசபை - இலக்குமி
- ஊர் - புதுச்சேரி
- பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் தன்இயற்பெயரான சுப்புரத்தினத்தை மாற்றி பாரதிதாசன் என அமைத்துக்கொண்டார்;
- பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன இவர்தம் கவிதை நூல்கள்.
- இதழ் - குயில்
- பிசிராந்தயார் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
- புரட்சிக்கவிஞர் என்று அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர்.
- இவர் வாழ்ந்த காலம் 29.04.1891 முதல் 21.04.1964 வரை.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 2. பாரதிதாசன் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year questions
1. பாரதிதாசன் இயற்பெயர்
சுப்புரத்தினம்
2."புரட்சிக்கவிஞர்" எனவும், 'பாவேந்தர்' எனவும் புகழப்படுபவர்
பாரதிதாசன்
3. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன பாரதிதாசன்தம் ...... நூல்கள்
கவிதை
4. ...... என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாரதிதாசன்.
பிசிராந்தயார்
5. புரட்சிக்கவிஞர் என்று ........ அவர்களால் போற்றப்பட்டவர் பாரதிதாசன்
அண்ணா
6. பாரதிதாசன் பிறந்த ஆண்டு
1891
7. பாரதிதாசன் நடத்திய இதழ்
குயில்
8. பாரதிதாசன் மறைந்த ஆண்டு
1964
9. பாரதிதாசன் குறித்த தவறான கூற்று
இவர்தம் இயற்பெயர் சுப்புரத்தினம்.
பெற்றோர் - கனகசபை - இலக்குமி
ஊர் - புதுச்சேரி
பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன இவர்தம் உரைநடை நூல்கள்.(சரி- கவிதை நூல்கள்)
10. பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது
கதி- துணை
பேறு - செல்வம்
நனி - மிகுதி
தரம் - தகுதி
11. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியவர்
பாரதிதாசன்
12. பாரதிதாசன் ....... ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம்
13. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்
பாரதிதாசன்
14. "தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! " என்று பாடியவர்
பாரதிதாசன்
15. பாரதிதாசன் இயற்றிய நூல்களில் பொருந்தாதது
இருண்ட வீடு
தமிழயக்கம்
இசையமுது
முல்லைத் திட்டு (சரி - குறிஞ்சித் திட்டு)
Please share your valuable comments