பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். அதை நாமும் படித்துச் சுவைப்போம்.
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
மேலும் நினைவுக்கூர்க
- பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு மற்றும் அனைத்துப் படைப்புகளும் | TNPSC General Tamil
- இசையமுது என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல் விளக்கம்
- பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் உள்ள பாடல் விளக்கம்
- பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை
- 6th Standard Tamil: இன்பத்தமிழ் - பாரதிதாசன் (Inba Tamil) | பாடப் பாடல் விளக்கம்
இன்பத்தமிழ்க் கல்வி
என்னை எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க என்றார்
சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
தோகை மயில்வரும் அன்னம் வரும்
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சி தரும்
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக என்னும்
கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து
கூவின என்னை - இவற்றிடையே
இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்!
சொல்லும் பொருளும்
- எத்தனிக்கும் - முயலும்
- வெற்பு - மலை
- கழனி - வயல்
- நிகர் - சமம்
- பரிதி - கதிரவன்
- அன்னதோர் - அப்படிஒரு
- கார்முகில் - மழைமேகம்
- துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்
பாடலின் பொருள்
கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் 'எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக" என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் "அன்பினைக் கவிதையாக எழுதுக என்றனர்.
சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், "மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள்' என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.
ஆனால், துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி, என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.
பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு
கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
நூல் வெளி
பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது...
- அ) மயில்
- ஆ) குயில்
- இ) கிளி
- ஈ) அன்னம்
2. பின்வருவனவற்றுள் 'மலை'யைக் குறிக்கும் சொல்
- அ) வெற்பு
- ஆ) காடு
- இ) கழனி
- ஈ) புவி
3. 'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அ) ஏடெடு + தேன்
- ஆ) ஏட்டு + எடுத்தேன்
- இ) ஏடு + எடுத்தேன்
- ஈ) ஏ + டெடுத்தேன்
4. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அ) துயின்று + இருந்தார்
- ஆ) துயில் + இருந்தார்
- இ) துயின்றி + இருந்தார்
- ஈ) துயின் + இருந்தார்
5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- அ) என்றுஉரைக்கும்
- ஆ) என்றிரைக்கும்
- இ) என்றரைக்கும்
- ஈ) என்றுரைக்கும்
பொருத்துக. (பொருத்தப்பட்டுள்ளது)
பொருத்துக - சொற்களும் பொருளும்
| சொல் | பொருள் |
|---|---|
| 1. கழனி | வயல் |
| 2. நிகர் | சமம் |
| 3. பரிதி | கதிரவன் |
| 4. முகில் | மேகம் |
குறுவினா
1. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
விடை: வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன.
2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?
விடை: அறியாமையால் வாழ்வில் நடந்த துன்பங்கள் நீங்கிடும்; நெஞ்சில் தூய்மை உண்டாகிடும்; வீரம் வரும்.
சிறுவினா
1. 'இன்பத்தமிழ்க் கல்வி' - பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
விடை:
'இன்பத்தமிழ்க் கல்வி' கவிதை எழுத பாரதிதாசன் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார்.
துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள் என்றார். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி, என் உயிரில் வந்து கலந்து விட்டதே. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும் என்றார். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும் என்றார்.
சிந்தனை வினா
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
விடை:
- அறியாமை நீங்கும்.
- அறம் பெருகும்.
- ஏற்ற தாழ்வு நீங்கும்.
- உண்மை வெல்லும்.
- சமுதாயம் பெரும் வளர்ச்சி அடையும்.
- நன்மை தீமை உணர முடியும்.
- ஒற்றுமை ஓங்கும்.
- சிந்தனை பெருகும்.
- எல்லோர் வாழ்வும் இன்பம் பெறும்.
Sources & References
- தமிழ் விக்கி - பாரதிதாசன்
- தமிழ் இணையக் கல்விக்கழகம் - பாரதிதாசன்
- 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி வாழ்த்து - பாரதியார்
- இசையமுது - பாவேந்தர் பாரதிதாசன்
- மயிலை சீனி வேங்கடசாமி வாழ்க்கை வரலாறு - தமிழ் ஆய்வாளர், நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் | 2026
- 42 ஓரெழுத்து ஒருமொழி: TNPSC & TET தேர்வுகளுக்கான முழுமையான விளக்கங்கள் (2026 Updated)
- இசையமுது என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல் விளக்கம்
- பாரதிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் உள்ள பாடல் விளக்கம்
- பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு (TNPSC Group 4 VAO, 2, 2A, TET): இந்தப் பாடப்பகுதியின் முழுமையான இலக்கணக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாவிடைகளை PDF வடிவில் இலவசமாகப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
🎯 இன்பத்தமிழ்க் கல்வி & பாவேந்தர் பாரதிதாசன் - மாதிரித் தேர்வு
1. 'இன்பத்தமிழ்க் கல்வி' பாடலின் ஆசிரியர் யார்?
2. 'கழனி' என்னும் சொல்லின் பொருள் யாது?
3. 'பரிதி' என்னும் சொல்லின் பொருள் யாது?
4. 'வெற்பு' என்னும் சொல்லின் பொருள் யாது?
5. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காகச் சாகித்திய அகாடமி விருது பெற்றார்?

Hi Please, Do not Spam in Comments