8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி வாழ்த்து - பாரதியார்

ManiMegala 0

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்.

பாடத்தலைப்புகள்(toc)

பாரதியார் பற்றிய குறிப்புகள் TNPSC 

பாரதியார் வரலாறு தமிழ்: bharathiyar history in tamil

இதழ்

இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். 

நூல்கள்

கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். 

சிறப்புப் பெயர்கள் 

சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

8ம் வகுப்பு தமிழ்,தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்,tnpsc group 2 2a,tnpsc group 4 VAO,


8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி வாழ்த்து poem notes

மொழி, கருத்தை அறிவிக்கும் கருவி மட்டும் அன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது: உணர்வுடன் கலந்தது. தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர். அத்தகைய பாடல் ஒன்றை அறிவோம்.


வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! 
வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் 
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று 
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து 
வளர்மொழி வாழியவே!


சொல்லும் பொருளும்

நிரந்தரம் - காலம் முழுமையும்

வைப்பு - நிலப்பகுதி

சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்

வண்மொழி - வளமிக்கமொழி

தொல்லை - பழமை,துன்பம்

இசை - புகழ்

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!

ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க!

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! 

எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! 

எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக! 

பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க!

தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! 

வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

நூல் வெளி

இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்ந்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

செந்தமிழ் அந்தாதி

செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.
உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம் 
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ: 
வீரம்நீ; காதல்நீ; ஈசன் அடிக்குநல் 
ஆரம்நீ; யாவும் நீ யே!

- து. அரங்கன்



மதிப்பீடு - 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி வாழ்த்து - பாரதியார் - வினா விடை 8th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்

அ) வைப்பு

ஆ) கடல்

இ) பரவை

ஈ) ஆழி


2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) என் + றென்றும்

ஆ) என்று + என்றும்

இ) என்றும் + என்றும்

ஈ) என் + என்றும்


3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வான + மனந்தது

ஆ) வான் + அனந்தது

இ) வானம் + அளந்தது

ஈ) வான் + மளந்தது


4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) அறிந்தது அனைத்தும்

ஆ) அறிந்தனைத்தும்

இ) அறிந்ததனைத்தும்

(ஈ) அறிந்துனைத்தும்


5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வானம்அறிந்து

ஆ) வான்அறிந்த

இ) வானமறிந்த

ஈ) வான்மறிந்த


சொல்லும் பொருளும்

நிரந்தரம் - காலம் முழுமையும்

வைப்பு - நிலப்பகுதி

சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்

வண்மொழி - வளமிக்கமொழி

தொல்லை - பழமை, துன்பம்

இசை - புகழ்


தமிழ்மொழி வாழ்த்து - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

மோனைச் சொற்கள் - முதல் எழுத்து ஒரே மாதிரி இருத்தல்

வாழ்க - வாழிய

எங்கள் - என்றென்றும் 

அனைத்தும் - அளந்திடு

வண்மொழி - வளர்மொழி

குறுவினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்துப் புகழ் கொண்டு வாழ்கிறது.

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

தமிழ், வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது.


சிறுவினா

தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகள் 

  • தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழும் மொழி.
  • ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி தமிழ்மொழி.
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி எங்கள் மொழி.
  • எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழும்.
  • எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீக்கி, அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படையும்.
  • பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிரும்.
  • தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! 
  • வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் மொழி எங்கள் தமிழ்மொழி .

சிந்தனை வினா

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம்

வண்மொழி என்றால் வளமான மொழி என்று பொருள்.

எல்லா வளங்களும் உள்ள மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழி.

சொல்வளம், பொருள் வளம் மிக்க மொழி தமிழ்மொழி.

மற்ற மொழி துணையின்றி தனித்து இயங்கும் மொழி தமிழ்மொழி.

ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும், எல்லா பொருட்களையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி தமிழ்மொழி.

வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் மொழி தமிழ்மொழி.

வான் மட்டுமின்றி, ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி எங்கள் மொழி.

எக்காலத்தும் நிலைபெற்று வாழும் மொழி தமிழ்மொழி.

இத்தகைய புகழ்பெற்ற தமிழ்மொழியை வண்மொழி என்று பாரதியார் அழைக்கிறார்.

தமிழ்மொழியை வாழ்த்திப் பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்க.


கட்டுரை எழுதுக.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.