எழுத்து இலக்கணம்

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது மொழி. ஒருவர் தம் கருத்தை வெளிப்படுத்தவும், அதனைக் கேட்போர் புரிந்துகொள்ளவும் கருவியாக அமைவதும் மொழியே.அம்மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவும் துணைசெய்வது இலக்கணம் ஆகும்.இதனை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளே நன்குணர்த்தும்.

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

எழுத்து என்றால் என்ன ?

எழுத்துக்களின் பிறப்பு, வகை, தொகை, அவை சொற்களில் இடம் பெறும் முறை முதலானவற்றைக் விளக்கங்களையும் கூறுவது எழுத்து இலக்கணம். 

ஒலி வேறுபாடுகளே வெவ்வேறு எழுத்துகள் தோன்றக் காரணம். மொழிக்கு ஒலி, வரி ஆகிய இரு வடிவங்கள் உள்ளன.

  • ஒலி வடிவம் என்பது பேச்சு மொழியாகும்.
  • வரி வடிவம் அல்லது உருவம் என்பது எழுத்து மொழியாகும்.

எழுத்து இலக்கணம் பற்றி கூறும் தமிழ் நூல்கள்

தொல்காப்பிய எழுத்து , சொல் ஆகிய அதிகாரங்களை அடிப்படையாகக்கொண்டு, நன்னூல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.

எழுத்திலக்கணப் பிரிவுகள்

  • தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது.
  • நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது.
  • இவ்வாறு தொல்காப்பிய எழுத்திலக்கணத்தில் சொல்லப்படுபவற்றை எழுத்தியல், பிறப்பியல், புணரியல் எனும் மூன்று பிரிவுகளுள் அடக்கலாம் என்று சி. வை. சண்முகம் கூறுகின்றார்.
பிரிவு தொல்காப்பியம் நன்னூல்
எழுத்தியல் 1. நூல்மரபு,
2. மொழிமரபு
1. எழுத்தியல்
பிறப்பியல் 3. பிறப்பியல்
பதவியல் -- 2. பதவியல்
புணரியல் 4. புணரியல்,
5. தொகைமரபு,
6. உருபியல்,
7. உயிர்மயங்கியல்,
8. புள்ளிமயங்கியல்,
9. குற்றியலுகரப் புணரியல்
3. உயிரீற்றுப் புணரியல்,
4. மெய்யீற்றுப் புணரியல்,
5. உருபு புணரியல்

நன்னூல் எழுத்ததிகாரம் படி, எழுத்திலக்கணத்தின் வகைகள்

நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது.

நன்னூல்- இயல்கள்
1. எழுத்தியல்
2. பதவியல்
3. உயிரீற்றுப் புணரியல்,
4. மெய்யீற்றுப் புணரியல்,
5. உருபு புணரியல்

1. எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகள்

"எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத்திரை
முதல்ஈறு இடைநிலை போலி என்றா
பதம்புணர்வுப் பெனப்பன் விருபாற்று அதுவே" - நன்னூல் 57

  1. எண்
  2. பெயர்
    1. சுட்டெழுத்துகள்
    2. வினா எழுத்துகள்
    3. இடுகுறிப் பெயர்கள்
    4. காரணப் பெயர்கள்
    5. இன எழுத்துகள்
    6. மயங்கொலிகள்
  3. முறை
  4. பிறப்பு
    1. இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு
    2. நன்னூல்படி, எழுத்துப் பிறக்கும் இடமும் உறுப்பும்
  5. உருவம் அல்லது வரி வடிவம்
  6. மாத்திரை
  7. முதல்
  8. ஈறு அல்லது இறுதி
  9. இடைநிலை
  10. போலி
  11. பதம்
  12. புணர்ப்பு அல்லது புணர்ச்சி

எனப் பன்னிரண்டு பிரிவுகளை தமிழ் எழுத்து இலக்கணம் கொண்டுள்ளது.

2. பதவியலில் குறிப்பிடப்படும் ஐந்து கூறுகள்

நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் இரண்டாவதாக அமைவது பதவியல் ஆகும். இதில் பதம், பகுதி, விகுதி, இடைநிலை, வடமொழியாக்கம் என்ற ஐந்து கூறுகளின் கீழ் மொத்தம் 23 நூற்பாக்கள் தரப்பட்டுள்ளன.

  1. பதம் - 6 நூற்பாக்கள்
  2. பகுதி - 6 நூற்பாக்கள்
  3. விகுதி - 1 நூற்பா
  4. இடைநிலை - 5 நூற்பாக்கள்
  5. வடமொழியாக்கம் - 5 நூற்பாக்கள்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படி, எழுத்திலக்கணத்தின் வகைகள்

தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது.

தொல்காப்பியம்
வ.எண்
எழுத்ததிகாரம்
1 நூல் மரபு
2 மொழி மரபு
3 பிறப்பியல்
4 புணரியல்
5 தொகைமரபு
6 உருபியல்
7 உயிர்மயங்கியல்
8 புள்ளி மயங்கியல்
9 குற்றியலுகரப்புணரியல்

எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும். அவை

1. எழுத்தின் அகத்திலக்கணம்

எண் முதல் புணர்ப்பு வரை உள்ள பத்துப் பிரிவுகளும் எழுத்தின் அகத்திலக்கணம் எனப்படும்.

2. எழுத்தின் புறத்திலக்கணம்

பதம், புணர்ப்பு ஆகிய இரண்டும் எழுத்தின் புறத்திலக்கணம் எனப்படும்.


TNPSC - General Tamil - Study Material


கரம், கான், காரம், கேனம்

தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

  • குறில் எழுத்துகளைக் குறிக்க 'கரம்' (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
  • நெடில் எழுத்துக்களைக் குறிக்க 'கான்' (எ.கா.) ஐகான், ஔகான்
  • குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க 'காரம்' (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம்
  • ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா) அஃகேனம்
TNPSC - General Tamil - Study Material

நினைவுகூர்க

மொழியில் அணுவே ஒலியாகவும், ஒலியே எழுத்தாகவும் ஆவதால் அணு, ஒலி இரண்டும் முதற் காரணங்கள் ஆகும்.தமிழின் சிறப்பையும் காலந்தோறும் பெற்றுவரும் வளர்ச்சியையும் அறிந்து பயன்படுத்திக் கொள்ளத் இலக்கண அறிவு பெரிதும் துணை செய்யும். எனவே தமிழ்இலக்கணத்தை ஆழ்ந்து கற்க வேண்டியது தமிழ் படிக்கும் மாணவரின் முதற்கடமை என்பதை நினைவுகூர்க.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் ஈற்றில் ஏகாரம் அமைத்து எழுதுக

அ. நண்பர்கள் - நண்பர்களே 

ஆ. பெரியோர் - பெரியோரே 

இ. சன்றோர் - சான்றோரே 

தொடர்புடையவை

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad