அளபெடை

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணத்தின் கூறுகளாக நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எண் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரித்து முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டு வகைப்படும்.

சார்பு எழுத்துக்கள்:

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

 ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.

அளபெடை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் (link) எழுத்திலக்கணம் (link) எண் (link) முதலெழுத்து (link) சார்பெழுத்து(link)

பாடத்தலைப்புகள்(toc)

அளபெடை

அளபெடை பிரித்து எழுதுக

  • அளபு = மாத்திரை, 
  • எடை = எடுத்தல் என்பது பொருள்.

அளபெடுத்தல் என்றால் என்ன?

  • நீண்டு ஒலித்தல்

எழுத்தினது மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்.

அளபெடை சான்று

  • பூவோஒ பூவு, பழமோஒ பழம், கீரையோஒ கீரை,.

பூ, பழம், கீரை இப்படிச் சொல்லிவிற்றால் வாங்குகிறவர்கள் காதுகளில் சரியாக விழாது. நீட்டிச் சொல்லும்போதுதான் அவர்கள் என்ன விற்கிறார்கள் என்பது தெளிவாகப் புரியும்.

இதேபோலத்தான் புலவர்களும் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவுசெய்ய அளபெடையைப் பயன் படுத்துகிறார்கள்.

அளபெடை என்றால் என்ன?

அளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையும்போது, ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதனை அளபெடை என்கிறோம்.

அளபெடை எழுத்துகளின் மாத்திரை - இரண்டிற்கு மேல்

  • எழுத்துகளின் மாத்திரை இரண்டிற்கு மேல் இல்லை என்பது இலக்கண நூலார் கருத்து;
  • எழுத்துகளின் மாத்திரை இரண்டிற்கு மேல் மாத்திரை பெற வேண்டுமெனில் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்;

அளபெடை எத்தனை வகைப்படும்?

அளபெடை வகைகள் இருவகைப்படும்.

  1. உயிரளபெடை,
  2. ஒற்றளபெடை.

உயிரளபெடை

உயிரளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது, அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள்(ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) ஏழும் அளபெடுக்கும். இஃது, உயிரளபெடை எனப்படும்.

அவ்வாறு அளபெடுக்கும்போது, அவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் அதன் பக்கத்தில் வரும்.(எ.கா.) பூவோஒ பூவு - வோ= (வ்+ஓ) - ஓஒ

  • (எ.கா.) அம்மாஅ, தம்பீஇ
உயிரளபெடை எழுத்துகளின் மாத்திரை இரண்டிற்கு மேல் வரும்.(alert-warning)

ஐகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும் இன எழுத்தாக வரும். (alert-error)

உயிரளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள் எண்ணிக்கை மொத்தம் - ஏழு

உயிரளபெடையில் உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும்.

உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

உயிரளபெடை வகைகள் மூன்று வகைப்படும்.

  1. செய்யுளிசை அளபெடை,
  2. இன்னிசை அளபெடை,
  3. சொல்லிசை அளபெடை.

உயிரளபெடை சான்று

செய்யுளிசை அளபெடை இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடை
செய்யுளில் இசையை நிறைக்க வரும் அளபெடை ஓசை குறையாவிட்டாலும் இனிய ஓசைக்காக அளபெடுத்தலை இன்னிசை அளபெடை என்பர். பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை, சொல்லிசை அளபெடையாகும்.
ஈரசைகொண்ட சீர்களாக மட்டும் வரும். மூவசைச் சீர்களாக மட்டும் வரும். பெரும்பாலும் என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும். இ என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும்.
(எ.கா.) உழாஅர், படாஅர். (எ.கா.) கெடுப்பதூஉம். எடுப்பதூஉம். (எ.கா.) நசைஇ, நிறீஇ.

செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை)

செய்யுளில் ஒசை குறையும் இடத்தில், அந்த ஓசையை நிறைவுசெய்ய சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும், தமக்கு இனமாகிய குறில் எழுத்துகளைப் பெற்று உரிய மாத்திரையிலிருந்து மிக்கு ஒலிக்கும். செய்யுளிசை அளபெடை எனக் கூறுவர்.

  • ஈரசைகொண்ட(படாஅமை, விடாஅது) சீர்களாக மட்டும் வரும்.

இதனையே,

செய்யுளிசை அளபெடை சான்று

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.(code-box)

இக்குறளைப் படித்துப் பாருங்கள். கெடா என்பது கெடா அ என இறுதியிலும், விடார் என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்து வந்துள்ளது. எனவே, இது செய்யுளிசை அளபெடை ஆகும்.

மொழி முதல் மொழியிடை மொழியிறுதி
ஓஒதல் வேண்டும் உறாஅர்க்கு உறுநோய் படாஅ பறை
ஓஒ - என முதலில்
றாஅ - என இடையில்
டாஅ - என இறுதியில்

செய்யுளிசை அளபெடை என்பதன் வேறுபெயர் இசைநிறை அளபெடை என்னும் வேறுபெயரும் உண்டு.

இன்னிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

  • மூவசைச் சீர்களாக(உடுப்பதூஉம், உண்பதூஉம்) மட்டும் வரும். பெரும்பாலும் உ என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும்.

இன்னிசை அளபெடை சான்று

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.(code-box)

கெடுப்பதும், எடுப்பதும் என ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக து என்னும் குறில் தூ என நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். 

"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்" - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

இக்குறளில் அமைந்துள்ள அளபெடை- இன்னிசை அளபெடை

உடுப்பதும், உண்பதும் என ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக து என்னும் குறில் தூ என நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

சொல்லிசை அளபெடை

செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு எச்சச்சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும். 

  • அசைஇ, கெழீஇ (அசைஇ - இளைப்பாறி)
  • பரூஉக்குறை, குரூஉக்கண்

சொல்லிசை அளபெடை சான்று 1

உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்.(code-box)

நசை என்பதன் பொருள் - விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை அடையாக மாறியது.

நசைஇ என்பதன் பொருள் விரும்பி

சொல்லிசை அளபெடை சான்று 2

குடிதழீஇக் கோல்ஒச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.(code-box)

இக்குறட்பாவில் தழீஇ என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது.

தழீ என்பதன் பொருள் - தழுவுதல் என்னும் தொழிற்பெயர்ச் சொல், தழீஇ (தழுவி) என வினையெச்சச் சொல்லாக அளபெடுத்ததனால் இது சொல்லிசை அளபெடை ஆயிற்று. 

uyir-alapedai-ottralapedai-tamil-illakkanam

உயிரளபெடை - 21

செய்யுளில் ஓசை குறையும்போது, அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள்(ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) ஏழும் அளபெடுக்கும். 

  • (எ.கா.) பூவோஒ பூவு - வோ= (வ்+ஓ) - ஓஒ  
  • தூஉய் - தூவி - ஊஉ

அவ்வாறு அளபெடுக்கும்போது, அவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் அதன் பக்கத்தில் வரும்.

  • முதல் இடை கடை - 18 (ஆறு நெடில்கள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ) முறையே முதல் இடை கடை - 6 X 3 = 18)
  • ஓௗகாரம் முதல் - 1 (ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது)
  • இன்னிசை அளபெடை - 1 
  • சொல்லிசை அளபெடை - 1

என உயிரளபெடை மொத்தம் 21 ஆகும். 

ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது. பிற ஆறு நெடில்கள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ) முதல் இடை கடையில் அளபெடுக்கும். 


ஒற்றளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் ஆகப் பதினோர் எழுத்துகளும், ஒரு குறிலை அடுத்தும் இருகுறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை என்பது பெயர்.

ஒற்றளபெடை சான்று

எங்ங்கி றைவனுள் னென்பாய்.
வெஃஃகுவார்க் கில்லை வீடு.(code-box)

இத்தொடர்களில் உள்ள ங் மற்றும் ஃ ஆகிய எழுத்துகள் இருமுறை வந்துள்ளன.

  • ஆய்தம் சொல்லின் இடையில் மட்டுமே அளபெடுக்கும். எ.கா எஃகு, இஃது.

அளபெடை அளபெடுக்கும் ஒற்று எழுத்துகள் எத்தனை

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள் எண்ணிக்கை மொத்தம் - பதினோர் எழுத்துகள்

ஒற்றளபெடையில் ங்,ஞ்,ண்,ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்யும், ஃ ஒன்றும் ஆகப் பதினோர் எழுத்துகளும் அளபெடுக்கும்.

ஒற்றளபெடையில் அளபெடுக்காத எழுத்துகள்- எட்டு மெய்யெழுத்துகள்

ஒற்றளபெடை வல்லினத்து க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும், இடையினத்தில் ர், ழ் என்னும் இரண்டும் ஆக இந்த எட்டு மெய்யெழுத்துகள் தவிரப் பிற மெய்யெழுத்துகள் அளபெடுக்கும்.

ஒற்றளபெடை - 42

நன்னூலார் ஒற்றளபெடை 42 என வரையறை செய்துள்ளார்.  

  • ஆய்தம்  - குறில்இணைக் கீழ் இடை, குறில் கீழ் இடை -2 (எஃகு,செய்வஃது)
  • குறில்இணைக் கீழ் இடை, குறில் இணைகீழ் கடை, குறில் கீழ் இடை, குறில் கீழ் கடை - என 4 வகை (4X10=40) (4 X ங்,ஞ்,ண்,ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய் ) - 40

என ஒற்றளபெடை மொத்தம் 42 ஆகும்.

சங்ங்கு, முத்த்தம், செல்ல்லம், கண்ண்ணு, எல்ல்லாம் - தனிக்குறிலை அடுத்து ஒற்றளபெடை வந்துள்ளது.

இலங்ங்கு, எழுந்ந்து, படித்த்து, பழக்க்கம். வணக்க்கம் - இணை குறில்களை அடுத்து ஒற்றளபெடை வந்துள்ளது.

 குறில் இணைக் கீழ் இடை இலங்ங்கு
குறில் இணைக் கீழ் கடை விடங்ங்
குறில் கீழ் இடை ங்ங்கிறைவன்
குறில் கீழ் கடை ங்ங்
  • இலங்ங்கு - குறில் இணைக் கீழ் இடை - குறில் எழுத்து 'ல' யை தொடர்ந்து இடையில் அளபெடை
  • விடங்ங் - குறில் இணைக் கீழ் கடை - குறில் எழுத்து 'ட' யை தொடர்ந்து கடைசியில் அளபெடை
  • ங்ங்கிறைவன் - குறில் கீழ் இடை அளபெடை 
  • ங்ங் - குறில் கீழ் கடை அளபெடை 
  • எஃஃகு - குறில் கீழ் இடை
  • செய்வஃஃது - குறில்இணைக் கீழ் இடை
நுஞ்ண நமன வயலள ஆய்தம்
அளபுஆம் குறில்இணை - குறிற்கீழ் இடைகடை
மிகலே அவற்றின் குறியாம் வேறே (நன்னூல் : 92)  (code-box)

எனும் நூற்பா வாயிலாக நன்னூலார் ஒற்றளபெடையினை விவரிக்கின்றார்.

நினைவுகூர்க

ஒற்றளபெடை உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துகளும் அளபெடுக்கும் உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும்
ங்,ஞ்,ண்,ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்யும்,
ஃ ஒன்றும் ஆகப் பதினோர் எழுத்துகளும் அளபெடுக்கும்.
உயிர்நெடில் எழுத்துகள் ஏழும்
ஒற்றளபெடை வல்லினத்து க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும், இடையினத்தில் ர்,ழ் என்னும் இரண்டும் ஆக இந்த எட்டு மெய்யெழுத்துகள் தவிரப் பிற மெய்யெழுத்துகள் அளபெடுக்கும். ஐகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும் இன எழுத்தாக வரும்
(எ.கா.) எங்ங்கி , வெஃஃகுவார்க். (எ.கா.) பூவோஒ பூவு - வோ= (வ்+ஓ) - ஓஒ

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

  • இசைநிறை அளபெடை என்னும் வேறுபெயருடைய அளபெடை எது?
  • உரனசைஇ என்பதன் அளபெடை எது?
  • நசைஇ என்பதன் பொருள் ?

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad