புறப்பொருள் இலக்கணம்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பொருள் இலக்கணத்தை நம் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே! 

புறப்பொருளிலிருந்து போர் பற்றிய செய்திகளையும், எப்படியெல்லாம் திணைகளை வகுத்திருக்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது. புறப்பொருள் வெண்பாமாலை அடிப்படையிலேயே புறநானூற்றுக்குத் திணை, துறை வகுக்கப்பட்டுள்ளன.

புறப்பொருள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் பொருள் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

புறப்பொருள்

புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

  • அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.
  • புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை.

புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பு

புறப்பொருளைப்பற்றி வெண்பா யாப்பில் கூறும் நூல் புறப்பொருள் வெண்பா மாலை. இது புறப்பொருளுக்குரிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை இயற்றியவர் ஐயனாரிதனார்.

தொல்காப்பியம், புறத்திணைகளின் எண்ணிக்கையை 7 எனக் குறிப்பிட, புறப்பொருள் வெண்பாமாலை 12 எனக் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையிலேயே புறநானூற்றுக்குத் திணை, துறை வகுக்கப்பட்டுள்ளன.

புறப்பொருள் எத்தனை வகைப்படும்?

புறத்திணை வகைகள் - வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.

புறப்பொருளிலக்கணம் - புறத்திணை

 

1. வெட்சித் திணை 2. கரந்தைத் திணை 3. வஞ்சித் திணை 4. காஞ்சித் திணை 5. நொச்சித் திணை 6. உழிஞைத் திணை 7. தும்பைத் திணை 8. வாகைத் திணை 9. பாடாண் திணை 10. பொதுவியல் 11. கைக்கிளை 12. பெருந்திணை

புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் மூலமும் உரையும்

வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் உட்கா(து)
எதிரூன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி,
அதுவளைத்த லாகும் உழிஞை, -அதிரப்
பொருவது தும்பையாம், போர்க்களத்து மிக்கார்
செருவென் றதுவாகை யாம்.

திணைகள் புறப்பொருள் வெண்பாமாலை பொருள் விளக்கம் புறத்திணை பூக்கள்
வெட்சி நிரைகவர்தல் பகைவரது ஆநிரை கவர்தல் புறப்பொருளிலக்கணம் வெட்சி
கரந்தை மீட்டல்

பகைவர் கவர்ந்த ஆநிரை மீட்டல்

புறப்பொருளிலக்கணம் கரந்தை
வஞ்சி வட்கார்மேற் செல்வது பகை நாட்டின் மீது போர் தொடுத்தல் புறப்பொருளிலக்கணம் வஞ்சி
காஞ்சி உட்கா(து)எதிரூன்றல் பகைவரை எதிர்த்துப் போரிடுதல்
புறப்பொருளிலக்கணம் காஞ்சி
நொச்சி எயில்காத்தல் பகைவரிடமிருந்து மதிலைக் காத்தல் புறப்பொருளிலக்கணம் நொச்சி
உழிஞை அதுவளைத்த லாகும் பகைவர் மதிலைச் சுற்றி வளைத்தல் புறப்பொருளிலக்கணம் உழிஞை
தும்பை அதிரப்பொருவது பகை மன்னர் இருவரும் போரிடுதல் புறப்பொருளிலக்கணம் தும்பை
வாகை போர்க்களத்து மிக்கார்செருவென் றது போரில் வெற்றி பெற்ற மன்னரைப் புகழ்தல் புறப்பொருளிலக்கணம் வாகை
பாடாண்திணை ஒருவனுடைய கல்வி, புகழ், வீரம், செல்வம் முதலியவற்றைப் போற்றுதல்
பொதுவியல் வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுதல்
கைக்கிளை ஒருதலைக் காமம்.இஃது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இருவகைப்படும்.
பெருந்திணை பொருந்தாக் காமம்.இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

புறத்திணைகள் பற்றிய விளக்கம்

1. வெட்சித் திணை

மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர். ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது. ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர்.

பகைநாட்டின்மீது போர் தொடங்குமுன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச்செய்வது

எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித் திணை எனப்பட்டது.

அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவந்த நிறமுடைய இட்லிப்பூ, வெட்சிப்பூ என்று அழைக்கப்படுகிறது.

2. கரந்தைத் திணை

கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மக்கள் மீட்பது. அப்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர். அதனால் கரந்தைத் திணை என்று பெயர் பெற்றது.

கொத்தாகப் பூக்கக் கூடிய சிறிய முட்டை வடிவில் கரந்தை ஒரு சிறிய செடி. நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது. இதனைக் 'கொட்டைக் கரந்தை' என்றும் கூறுவர்.

3. வஞ்சித்திணை.

மண் (நாடு) சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை.

பளபளப்பான, பூவின் இதழ்களில் மெல்லிய வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சி.

4. காஞ்சித் திணை.

தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை.

கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள காஞ்சி என்பது ஒருவகைக் குறுமரம்.

5. நொச்சித்திணை.

மண்ணைக் காக்கக் கோட்டைகள் கட்டப்பட்டன. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே, முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப் போரிடுவது நொச்சித்திணை.

மருத நிலத்துக்குரிய நொச்சி, கொத்துக் கொத்தான நீலநிறப்பூக்கள் கொண்டது. இதில் மணிநொச்சி, கருநொச்சி, மலைநொச்சி,வெண்ணொச்சி எனப் பலவகைகள் உள்ளன.

6. உழிஞைத் திணை

தம்பி மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.

வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே உழிஞைக் கொடி இதன் கூட்டிலைகளும் மலர்களும் சிறியவை; மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இதனை முடக்கத்தான் (முடக்கொற்றான்) எனக் கூறுகின்றனர்.

7. தும்பைத் திணை.

பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை.

போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள்.

எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை.

8. வாகைத்திணை

போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை.

வாகை என்றாலே வெற்றிதானே!

மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் வாகை பூ.

9. பாடாண்திணை

பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண்திணை (பாடு+ஆண்+திணை).

போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடுகிறது இத்திணை.

நந்திவர்மனின் வீரச்செயலைப் புகழ்ந்து கூறும் பாடாண் திணை பாடல்

10. பொதுவியல் திணை


வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். ஆண், பெண் இருவரில் யாராவது ஒருவரிடம் மட்டும் தோன்றும் அன்பு.

இஃது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இருவகைப்படும்.

12. பெருந்திணை.

பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.ஒத்த வயதுடைய தலைவனும், தலைவியும் அல்லாத இடத்து உண்டாகும் அன்பு.

இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

நினைவுகூர்க

** எப்படியெல்லாம் திணைகளை வகுத்திருக்கிறார்கள்.
** எப்படி முறையாகப் போர் புரிந்திருக்கிறார்கள்.
** தமிழனின் மாண்பே மாண்பு.

இப்பகுதியானது TNPSC Study Notes- குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ்  என்ற தொகுப்பிற்காக பழைய 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தமிழ் வினா விடை - 10th standard tamil book back exercise 

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.


அ) புறத்திணைகள் .............வகைப்படும்.

1. ஐந்து

2. ஏழு

3. பன்னிரண்டு


ஆ) நிரைகவர்தல் என்பது

1. கரந்தை

2. வெட்சி

3. உழிஞை


இ) மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது

 1. வஞ்சித்திணை

2. காஞ்சித்திணை

3. வாகைத்திணை


ஈ) பாடாண்திணை என்பது கூறுவது.

1. ஆண்மகனின் ஒழுகலாறுகள்

3. பெண்மகளின் ஒழுகலாறுகள்

2. போரின் தன்மைகள்.


உ) ஒருதலைக் காமம் என்பது

1. அன்பின் ஐந்திணை

 2. கைக்கிளை 

3.பெருந்திணை. 


ஊ) தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது ஆகும்.

1. நொச்சி

2. தும்பை

3. காஞ்சி


குறுவினாக்கள்


1. புறத்திணை என்பது யாது? 

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது.


2. புறத்திணைகள் நான்கனை எழுதுக.

1. வெட்சித் திணை 

2. கரந்தைத் திணை 

3. வஞ்சித் திணை 

4. காஞ்சித் திணை 


3. மதில்போர் பற்றிய புறத்திணைகள் யாவை?

மதில்போர் பற்றிய புறத்திணைகள் - இரண்டு 

  1. நொச்சி - பகைவரிடமிருந்து மதிலைக் காத்தல்
  2. உழிஞை - பகைவர் மதிலைச் சுற்றி வளைத்தல்

4. வாகைத்திணை என்பது யாது ?

போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை.

வாகை என்றாலே வெற்றிதானே!


5. பொருந்தாக் காமம் பற்றிய திணை யாது ?

பொருந்தாக் காமம் பற்றிய திணை - பெருந்திணை.

பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.ஒத்த வயதுடைய தலைவனும், தலைவியும் அல்லாத இடத்து உண்டாகும் அன்பு.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad