தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்.
- தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
வேற்றுமை அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
வேற்றுமை அணி
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
புலவர் ஒரு செய்யுளில் இரண்டு பொருள்களைக் கூறி முதலில் அவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமையையும், பின்னர் ஒரு காரணம் பற்றி அவ்விரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையையும் சுட்டிக்காட்டிப் பாடுவது வேற்றுமை அணி.
"கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே" - தண்டி -நூ. 46
வேற்றுமை அணி எடுத்துக்காட்டு
தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை.
அவற்றுள்,
- தேன் உடலுக்கு நன்மை செய்யும்:
- வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்.
இப்பகுதியைக் கவனியுங்கள்.
வெள்ளைச்சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு.
- இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை.
- ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்; இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை.
இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
எடுத்துக்காட்டு 1
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை
என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில்
ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே
இது வேற்றுமை அணி ஆகும்.
திருவள்ளுவர் நெருப்பு, நாக்கு என்னும் இருபொருள்களை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
ஒற்றுமை
- நெருப்பு வெம்மையால் சுடுகிறது;
- நாக்குக் கடுஞ்சொற்களால் சுடுகிறது என இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை முதலில் குறிப்பிட்டார்.
வேற்றுமை
பின்னர்த் தீயால் சுட்டது ஆறும் என்றும் நாவால் சுட்டது ஆறாது என்றும் அவற்றிற்கு இடையே உள்ள வேற்றுமையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாறு அமையப் பாடுவது வேற்றுமை அணி எனப்படும்.
அருமையான பதிவுகள் வாழ்த்துகள் சகோதரி
பதிலளிநீக்குPlease share your valuable comments