கலிப்பாவின் விதிகள் மற்றும் வகைகள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும். ஓசை நயத்தை வேறுபடுத்தி அறிவதற்காக வெண்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா,கலிப்பா என நால்வகைப் பாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. கலிப்பா,கலிப்பாவின் உறுப்புக்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கலிப்பா பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளைப் நினைவுகூர்க.

யாப்பிலக்கணம் எழுத்துகள் அசை சீர் தளை அடி தொடை

பாடத்தலைப்புகள்(toc)

கலிப்பா என்றால் என்ன?

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது. கன்று துள்ளினாற் போலச் சீர்தோறுந் துள்ளி வரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது துள்ளல் ஓசை.

கலிப்பாவின் பொது இலக்கணம்

  • கலிப்பாவிற்கு உரியது துள்ளல் ஓசை ஆகும்.
  • ஈரசைச் சீர்களில் கருவிளம், கூவிளம் சீர்கள் இடம் பெறும்.
  • மூவசைச் சீர்களில் காய்ச் சீரே கலிப்பாவிற்கு உரியது. கனிச்சீரும் அருகி வருவதுண்டு.
  • கனிச் சீர் வரின் நேர் அசையை இடையில் உடைய தேமாங்கனி, புளிமாங்கனி என மாங்கனிச் சீர்களாவே இருக்க வேண்டும்.
  • நிரையசையை இடையில் உடைய விளங்கனிச் சீர்களும் தேமா, புளிமா என்னும் மாச்சீர்களும் வரலாகா.
  • இப்பாவிற்கு உரியது காய்முன் நிரை என அமையும் கலித்தளை ஆகும். பிற தளைகளும் அரிதாக இடம்பெறும்.
  • அடி - அளவடியே பெற்று வரும்.

கலிப்பா எடுத்துக்காட்டு

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்க ளதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே


கலிப்பாவின் உறுப்புக்கள் வகைகள் இனங்கள்

கலிப்பாவின் உறுப்புக்கள் எத்தனை

இதன் வகைக்களுக்கேற்ப பல்வேறு உறுப்புகள் பெற்றுவரும்.

1.தரவு,

2. தாழிசை

3. அராகம்

4. அம்போதரங்கம்

5. தனிச்சொல்

6. சுரிதகம்

என்பன கலிப்பாவின் உறுப்புக்கள்.

இவை கலிப்பாவின் வகைகளுக்கு ஏற்ப ஒன்றோ பலவோ இடம்பெறும். கலிப்பா, இந்த ஆறு உறுப்புகளில் சிலவற்றையோ, பலவற்றையோ அதன் வகைக்கு ஏற்பப் பெற்றுவரும்.

1. தரவு:

கலிப்பாவின் முதல் உறுப்பு இது. பாடல் கருத்தைத் தொடங்கி வைக்கும் பகுதியாக விளங்குகிறது.

  • குறைந்த அளவாக மூன்று அடிகளும், மிகுந்த அளவாகப் பன்னிரண்டு அடிகளும் பெற்றுவரும்.
  • எருத்தம், பிடரி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

"பூமாது நிலன்மணிப்பூண் பொதியவீழ்பொன் னிதழ்புனிதத்
தேமாலை நறுங்களபஞ் செறிமார்பத் திடைமுயங்க
அளப்பரிதாம் பகிரண்டத் தப்புற மகத்தடக்கி
உலப்பிலிளங் கதிருதயத் தொளிகிளர்பே ருருவாயும்
நன்னரங்கத் தணுக்கடொறு நயந்தணுவா கியுமெழில்கூர்
தென்னரங்கத் தரவணைமேற் செந்திருகண் வளர்ந்துள்ளாய்"

இது ஆறடியால் வந்த தரவு.

2. தாழிசை:

இது கலிப்பாவின் இரண்டாவது உறுப்பு.தரவின் அடியளவை விட இது குறைந்து வரும். இது ஒருபொருள் மேல் மூன்றேனும் ஆறேனும் அடுக்கி வரும்.

  • இடைநிலைப் பாட்டு என்ற பெயரும் இதற்கு உண்டு.
  • குறைந்த அளவு இரண்டு அடியாகவும் மிகுந்த அளவு பன்னிரண்டு அடியாகவும் இருக்கும்.

1. ஒருசுடராஞ் சொருபமுடனுபருமைந் தொருசுடரோ
டிருசுடராய்க் குணமொருமுன் றெனலாகி முறைமுறையே
படைப்பதையு மழிப்பதையும் புறம்போக்கிப் பழிபிறங்கா
திடைப்படுகாவலைநினதென் றெடுத்தெதவ னருளுதியே.
2. நின்றனவா யியங்கினவாய் நீடியபல் லுருவளித்தோன்
பொன்றியநா ளெழுந்தபெரும் புனற்படிந்த வுயிர்களைநீ
எம்மானே திருவுதரத் திருத்தியகா லவற்கவற்றால்
கைம்மாறங் கொவனோமுன் கைக்கொண்ட தருளிதியே.
3. புறம்பயின்ற வினைவழிசார் போக்குவா வினும்பிரியா
தறம்பயின்ற தணுவுளதே லதற்கவற்றை யெடுத்தணையாய்
உண்ணீர்மை யற்றனமாய்ந்த துறுநரகர் புரிவதுரீஇயக்
கண்ணீர்கொண் டகன்றகலாக் காவலெவ னருளுதியே.

இவை மூன்றும் தாழிசைகள். இவை தரவைவிடக் குறைந்த அடிகளால் அமைந்துள்ளமை காண்க.

3. அராகம் :

இது கலிப்பாவின் மூன்றாவது உறுப்பாகும். அளவடி, நெடிலடி, கழிநெடிலடி இவற்றில் ஒன்றாக இதன் அடி அமையும். சிந்தடியோ, குறளடியோ வராது.

  • இது நான்கடிக்குக் குறையாமலும் எட்டடிக்கு மிகாமலும் வரும்.
  • இதற்கு வண்ணகம், முடுக்கியல், அடுக்கியல் என்னும் பெயர்களும் உண்டு.

1. தரணியிலெவரொடு முரணிய பெருவிற
லிரணிய வானெனு மாரறு விகலினை
2. ஒருபது சிரமுட னிருபது கரமுள
நிருதனதுயிர்மிசை பொருகணை சிதறினை
3. மறைய ரிறையல ருறைவயின் வடுவுரை
பறைபலனுயிர்புகு மறைகழ லிணையினை
4. முதலையி னிடருறு மதமலை மடுவினுள்
உதவுக வெனுமுரை யதனொடு முதவினை

இவை அளவடிகள் இரண்டு கொண்ட நான்கு அராகங்கள்.

4. அம்போதரங்கம் :

இது அராகத்தை அடுத்து வரும் உறுப்பாகும். அலை கரையைச் சேரும் போது தன் அளவு சுருங்கி வருவது போல் இவ்வுறுப்பும் முதலில் அளவடிகளாலும், பின் சிந்தடிகளாலும், பின் குறளடிகளாலும் படிப்படியாகக் குறைந்து வருவதால் அம்போதரங்கம் எனப் பெயர் பெறுவதாயிற்று.

  • தரங்கம் என்னும் சொல் அலை எனப் பொருள்படும்.
  • இது அசையடி, பிரிந்திசைக்குறள், சொற்சீரடி எனவும் கூறப்பெறும்.
4.1. பேரெண்

இரண்டடி இரண்டு கொண்ட அம்போதரங்கம் பேரெண் எனப்படும்.

1. வஞ்சனையோர் வடிவெடுத்து மாதுலனா முறைபயின்ற
கஞ்சனைக் கொன்று ரகேசன் கடும்பொறையைத் தவிர்த்தனையே
2. குருகுலத்தார் நூற்றுவரைக் கூற்றுவனாட் டினிலிருத்
தித்தருமன்முத லவர்க்கவனி தனியாளக் கொடுத்தனையே

இவை நாற்சீரடி அம்போதரங்கம் இரண்டு.

4.2. இடையெண்

அதனை அடுத்து இடம்பெறும் சிந்தடிகள் எட்டு அல்லது நான்கு இடையெண் எனப்படும்.

1. கழிபெருங்கற் பினளாடை கழியாம னயந்தனையே
2. வழிபடுந்தூ தனுமாகி மடக்கோலைச் சுமந்தனையே 3. ததிபாண்டன் றனக்கழியாத் தமனியநா டளித்தனையே
4. விதிகாண்டற் கெண்ணில்பல வேடமவை கொண்டனேைய

இவை நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் நான்கு.

1. தாடகை யுடலுயிர் போக்கினை
2. தாபதன் மனத்திடர் நீக்கினை
3. நீடக லிகைப்பழி தீர்த்தனை
4. நேசமுள் ளவனொடு சேர்ந்தனை
5. வில்லினை மிதிலையில் வளைத்தனை
6. மெல்லிய விளமுலை திளைத்தனை
7. வல்லர வடல்கெட நடித்தனை
8. மருதினை முதலொடு முடித்தனை

இவை முச்சீரடி அம்போதரங்கம் எட்டு.

4.3. சிற்றெண்

இறுதியில் இடம்பெறும் குறளடி பதினாறு அல்லது எட்டுச் சிற்றெண் எனப்படும். சிற்றெண்ணில் ஓரசையே சீராக வருவதும் உண்டு.

1.உறித்தயிர் கட்டுண்டனையே
2. உரலிடை கட்டுண்டனையே
3. மறித்துநிரை காத்தனையே
4. வழங்கினையைங் கரத்தனையே
5. குடநடமுன் பாடினையே
6. குழலினிற்பண் பாடினையே
7. படர்சகடம் பொடித்தனையே
8. பகட்டுமருட் பொடித்தனையே
9. நாவலன்பின் நடந்தனையே
10.நடித்தனைமன் னடந்தனையே
11. கோவலரில் விருந்தனையே
12. கௌவிடையே ழிறுத்தனையே
13. புள்ளின்வா யிடந்தனையே
14. புரந்தனையாரிடந்தனையே
15. தெள்ளமுதங் கடைந்தனையே
16. தேவருளங் கடைந்தனையே


இவை குறளடி அம்போதரங்கம் பதினாறு.

5. தனிச்சொல் :

ஐந்தாவதாக அமையும் இவ்வுறுப்பில் ஓரசை, அல்லது ஒரு சீர் தனித்து வரும்.

  • விட்டிசை, கூன் தனிநிலை, அடைநிலை என்பன இதன் வேறு பெயர்கள்.

எனவாங்கு

இது தனிச்சொல்.

6.சுரிதகம்:

கலிப்பாவை முடித்து வைக்கும் இறுதி உறுப்பு இதுவாகும். இவ்வுறுப்பு ஆசிரியப்பாவினாலோ, வெண்பாவினாலோ அமையும், ஒரு பாடலில், தரவு உறுப்பின் அடியளவிற்குச் சமமாகவோ அதன் பாதி அளவிலோ இவ்வுறுப்பு அமையும்.

  • இதற்கு அடக்கியல், வாரம், வைப்பு, போக்கியல் என்னும் பெயர்களும் உண்டு.

இனையதன் மையவா மெண்ணருங் குணத்தின்
நினைவருங் காவ னிகழ்த்தினை யதனான்
நின்னது கருணையு நீயுங்
மன்னிய திருவுடன் வாழிவா ழியவே.

இது நாலடி ஆசிரியச் சுரிதகம்.

கலிப்பாவின் வகைகள்:

1. ஒத்தாழிசைக் கலிப்பா
2. வெண்கலிப்பா
3. கொச்சகக் கலிப்பா

எனக் கலிப்பா மூன்று பிரிவுகளை உடையது.

1. ஒத்தாழிசைக் கலிப்பா :

1.1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
1.2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
1.3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

என மூன்று வகைப்படும்.

1.1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா :

ஒரு தரவு, மூன்று தாழிசை, தனிச்சொல், சுரிதகம் பெற்றுவருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும்.

1.2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா :

ஒரு தரவு, மூன்று தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புகளைப் பெற்று வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும்.

  • நேரிசை ஒத்தாழிசைக்குரிய உறுப்புகளைப் பெற்றுத் தாழிசைக்கும் தனிச்சொல்லிற்கும் இடையில் அம்போதரங்கம் என்னும் உறுப்பு அமையப் பெறுவதால் இக்கலிப்பா இப்பெயர் பெற்றது.
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா இலக்கணம்

"தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்
நிரலொன்றி னேரிசை யொத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல்
மரபொன்று நேரடி மூச்சீர் குறணடு வேமடுப்பின்
அரவொன்று மல்கு லம்போ தரங்கவொத் தாழிசையே" - (யாப்பருங்கலக் காரிகை 33)

1.3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா :

ஒரு தரவு, மூன்று தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என அமைந்து கலிப்பாவின் ஆறு உறுப்புகளையும் பெற்று வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும்.

  • இக்கலிப்பாவில் தாழிசைக்கும் அம்போதரங்கத்திற்கும் இடையில் அராகம் என்னும் கலிப்பாலின் மூன்றாம் உறுப்பு இடம் பெறும்.

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா ஆகியவற்றிற்கு இலக்கணம்

"அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல்
வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்
டிசைத்தன தாசியும் வெண்பா இயைந்துமின் பான்மொழியாய்
விசையறு சிந்தடி யாவிறு மாய்விடின் வெண்கலியே"
கொச்சகக் கலிப்பாவிற்கு இலக்கணம்" - (யாப்பருங்கலக் காரிகை 40)

2.வெண்கலிப்பா

கலிப்பாவின் உறுப்புக்களாகிய தரவு ஒன்றை மட்டுமே பெற்று வெண்பா போல் நாள் மலர் காசு பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிவது வெண்கலிப்பா ஆகும். கலித்தளை மிகுதியாகவும் வெண்டளை முதலிய பிற தளைகள் குறைவாகவும் பெற்று வரும்.

  • வெண்கலிப்பாவிற்கு உட்பிரிவு ஏதும் இல்லை.

"சேல்செய்த மதர்வேற்கட் சிலைசெய்த சுடிகைநுதல்
மால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யும்
தருணவிளம் பிறைக்கண்ணித் தாழ்சடையெம் பெருமானின்
கருணைபொழி திருநோக்கிற் கனியாத கன்னெஞ்சம்
வாமஞ்சால் மணிக்கொங்கைக் கொசிந்தொல்கு மருங்குலவர்
காமஞ்சால் கடைநோக்கிற் கரைந்துருகா நிற்குமால்
அவ்வண்ண மாறிநிற்ப தகமென்ற லகமகம்விட்
டெவ்வண்ண மாறிநிற்ப தின்று''

இது எட்டடியால் வந்து காசு என்னும் வாய்பாட்டால் முடிந்த வெண்கலிப்பா.

3. கொச்சகக் கலிப்பா

கொச்சகம்

பெண்கள் சேலையின் பல பகுதியைப் பல அடுக்காக அல்லது மடிப்பாகக் கொய்து இடையில் செருகி உடுத்துக் கொள்ளும் அமைப்பைக் கொச்சகம் என்பர். அதுபோல் அடுக்கி வரும் பாட்டுக் கொச்சகம் எனப்பட்டது.

கொச்சகக் கலிப்பா என்றால் என்ன?

கலிப்பாவின் உறுப்புக்களில் சில பெற்றும், உறுப்புகள் முறை மாறியும், மிகுந்தும் குறைந்தும் வரும் கலிச் செய்யுள்கள் கொச்சகக் கலிப்பா ஆகும். இவ்வகைக் கலிப்பாக்களில் துள்ளல் ஓசைக்குரிய காய் முன் நிரை என்பதற்கு மாறான வாய்பாட்டுத் தளைகளும் வரப்பெறும்.

  • ஒத்தாழிசை, வெண்கலிப்பாவிற்கு மாறான கலிப்பாக்களை எல்லாம் கொச்சகக் கலிப்பா எனலாம்.

கொச்சகக் கலிப்பாவிற்கு இலக்கணம்

"தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்
மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைத்தோள்
அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்
குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர்க் கொச்சகமே"- (யாப்பருங்கலக் காரிகை 42)


கொச்சகக் கலிப்பா வகைகள்

ஐந்து வகைப்படும். அவை:

1. தரவுக் கொச்சகம்,
2. தரவிணைக் கொச்சகம்.
3. சிஃறாழிசைக் கொச்சகம்
4. பஃறாழிசைக் கொச்சகம்
5. மயங்கிசைக் கொச்சகம்

1. தரவுக் கொச்சகக் கலிப்பா

கலிப்பாவின் முதல் உடறுப்பான தரவு மாத்திரம் பெற்று, அல்லது தரவோடு தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று வருவது தரவுக் கொச்சகக் கலிப்பா ஆகும்.

2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா

  • இணை என்றால் இரண்டு என்று பொருள்.

தரவிணை என்றால் இரண்டு தரவுகள் என்று பொருள். இரண்டு தரவுகள் பெற்று இடையே தனிச்சொல் பெற்றும் பெறாமலும் வருவதும், சுரிதகம் பெற்றும் பெறாமலும் வருவதும் தரவிணைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.

3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

இது, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவைப் போல் தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம் என்னும் உறுப்புகளைப் பெற்று வரும். ஆனால் தரவு, தனிச்சொல், தாழிசை, தனிச்சொல், தாழிசை, தனிச்சொல், தாழிசை, தனிச்சொல், சரிதகம் என்னும் அமைப்பில் தரவை அடுத்தும் தாழிசைகளுக்கு இடையிலும் தனிச்சொல் பெற்றுவரும் கலிப்பா சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும்.

4. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

தரவினை அடுத்து தனிச்சொல் பெற்றும் பெறாமலும் மூன்றிற்கு மிகுதியான தாழிசைகள், தனிச்சொல் சுரிதகம் பெற்றும் வருவது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பர ஆகும்.

5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா உறுப்புகள் இடமும் முறையும் மாறியும் மயங்கியும் மிகுந்தும் குறைந்தும் வருவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும்.

கலிப்பாவின் இனங்கள்:

கலிப்பாவின் இனங்கள் மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,

  1. கலித்துறை
  2. கலித்தாழிசை
  3. கலிவிருத்தம்

கலிப்பாவின் இனங்கள் இலக்கணம்:

  • அடிவரையறை இன்றி இரண்டடியும் பலவடியும் வந்து ஈற்றடி நீண்டு ஏனைய அடிகள் தம்முள் ஒத்து வருவதும் ஒவ்வாது வருவதும் கலித்தாழிசை.
  • நெடிலடி நான்காய் வருவது கலித்துறை.
  • அளவடி நான்காய் வருவது கலிவிருத்தம்.

அடிவரை இன்றி அளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பின்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும் ; கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது ; நேரடி ஈரிரண்டாய்
விடினது வாகும் விருத்தம் திருத்தகு மெல்லியலே
(யாப்பருங்கலக் காரிகை, 33)

1. கலித்தாழிசை

கலித்தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று.

  • இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும்.
  • ஈற்றடி மட்டும் சற்று நீண்டு அமையும்; ஏனைய அடிகள் தம்முள் அளவு ஒத்து வரும்; ஒவ்வாதும் வரும்.
  • ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும், சில இடங்களில் இது தனித்தும் வரும்.

மூன்றடுக்கி வரும் கலித்தாழிசை எடுத்துக்காட்டு

இரண்டடித் தாழிசை முதலடியை (நாற்சீரடி) விட ஈற்றடி (ஐஞ்சீரடி) நீண்டு ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்திருப்பது காண்க. மூன்று தாழிசைகளிலும் சொற்களும் தொடர்களும் பொருளும் திரும்பத் திரும்ப அடுக்கி வந்துள்ளன.


கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
பொய்தல் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

  • காத்தும் = காக்கின்றோம்;
  • குளவி அடுக்கம் = மல்லிகை பூத்த மலைச்சாரல்;
  • வாரல் = வாராதே

அடுக்காது தனியே வரும் கலித்தாழிசைக்கு எடுத்துக்காட்டு

நான்கடிகளாய் அமைந்த இக்கலித்தாழிசையில் ஈற்றடி நீண்டு (ஐஞ்சீரடி), ஏனைய அடிகள் அளவொத்து (நாற்சீரடி)வந்திருப்பது காண்க.


வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்
கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

2. கலித்துறை

கலித்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. நெடிலடி (ஐஞ்சீர்அடி). நான்காய் அமைவது கலித்துறை ஆகும்.

  • இது பல்வேறு ஓசைகள் உடையது.
  • நெடிலடிகள் நான்கு கொண்டிருக்கும்.
  • அவை நான்கும் எதுகை கொண்டிருக்கும்.


ஆழ்வார் பாடல்கள், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற படைப்புகளில் இப்பாவினம் மிகுந்து காணப்படுகிறது.

கட்டளைக் கலித்துறை இதன் வகைகளில் ஒன்று.இதில் கலி மண்டிலத் துறை,கலி நிலைத் துறை என இரண்டு வகைகள் உண்டு.

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?

இது நான்கடியாய், ஒவ்வொர் அடியும் 5 சீர்கள் பெற்று,அவை நான்கும் எதுகை (ஆ ,வே ,தோமை ,ஏழைமை ) அமைந்துள்ளது. ஆகவே இது கலித்துறையாகும்.

கட்டளைக் கலித்துறை

கலித்துறையுள் கட்டளைக் கலித்துறை என்ற இன வகையும் உண்டு.

  • கட்டளை= எழுத்தின் அளவு

கட்டளைக் கலித்துறை இலக்கணம்:

(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3) ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4) அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று நீங்க 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று நீங்க 17 எழுத்தும் வரும்.
(5) ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.

அகிலேந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி யசைந்தொருகை
துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த
முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந் நீர்த்துறைவாய்
நகிலேந்து பூங்கொடி போல்செல்லு மால்நெஞ்சம் நம்முயிரே

இது நெடிலடி நான்காய் அமைந்துள்ளது ; இந்தச் செய்யுளில் அடிதோறும் ஈற்றுச்சீர் விளங்காயாக அமைந்து, ஏனைய சீர்களுக்கிடையே வெண்டளை வந்துள்ளது ; நிரையசையில் தொடங்குவதால் அடிதோறும் ஒற்று நீங்கி 17 எழுத்துகள் உள்ளன. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ‘ஏ’ காரத்தில் முடிகின்றது. ஆகவே இது கட்டளைக் கலித்துறையாகும்.

3. கலிவிருத்தம்

கலிவிருத்தம் தமிழ் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகைகளுள் ஒன்று.

  • இது அளவடிகள் (நான்கு சீர்) நான்கு கொண்டு அமையும்;
  • அவற்றில் எதுகை அமைந்திருக்கும்.
  • நான்கு அடிகளிலும் சந்த ஒழுங்கு இடம் பெற்றிருக்கும்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

இது அடிதோறும் 4 சீர் பெற்று, 4 அடியாய் அமைந்துள்ளது. ஆகவே இது கலிவிருத்தம் ஆகும்.

நினைவுகூர்க

கலிப்பாவின் பொது இலக்கணம்,கலிப்பாவின் வகைகள், கலிப்பாவின் உறுப்புகள் எத்தனை, கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசை பற்றி அறிந்துக் கொண்டோம்.மேலும் அறிய தொடர்புடையவைபகுதியைப் பார்க்கவும்.

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

  1. கலிப்பாவின் ஓசை எது?

தொடர்புடையவை

  1. வெண்பா,
  2. வஞ்சிப்பா,
  3. ஆசிரியப்பா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad