தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மலர்களைத் தொடுப்பதுபோலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது தொடை எனப்படும்.பாடலில் உள்ள அடிகள்தோறும் அல்லது சீர்கள்தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.
தொடை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.
யாப்பிலக்கணம் எழுத்துகள் அசை சீர் தளை அடி
தொடை என்றால் என்ன?
பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது தொடை ஆகும்.
- தொடை என்பதன் பொருள் - தொடுக்கப்படுவது;
- தொடை -மாலை.
- பாவின் ஓசையின்பத்திற்கும் சிறப்பிற்கும் இத்தொடை வேண்டுவதாகும்.
- "தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பது பழமொழி.
தொடை எத்தனை வகைப்படும்?
தொடை வகைகள் எண் வகைப்படும்.
அவை:
1.மோனைத்தொடை,
2. எதுகைத்தொடை,
3.முரண்தொடை,
4. இயைபுத்தொடை,
5. அளபெடைத்தொடை,
6. இரட்டைத்தொடை,
7. அந்தாதித் தொடை,
8. செந்தொடை.
1. மோனைத் தொடை:
ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது மோனைத் தொடை எனப்படும்.
மோனை : சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருதல் மோனை எனப்படும்.
"கோடி கோடி குறட்சிறு பூதங்கள்"
அடிமோனைத் தொடை : செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு. குறள், 467
இக்குறட்பாவில்
முதல் அடியின் முதற்சீரிலுள்ள முதல் எழுத்தும் (எ) இரண்டாம் அடியின்
முதற்சீரிலுள்ள முதல் எழுத்தும் (எ) ஒன்றி
வந்துள்ளதனால், இது மோனைத்தொடை எனப்படும்.
2. எதுகைத் தொடை:
ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க,
இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது எதுகைத் தொடை எனப்படும்..
எதுகை : சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் எதுகை எனப்படும்.
"அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்"
அடியெதுகைத்தொடை : அடிதோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில்) நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடியெதுகைத்தொடை எனப்படும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இக்குறட்பாவில் முதல் அடியிலும், இரண்டாம் அடியிலும் க என்னும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளது. எனவே, இஃது அடியெதுகைத்தொடை எனப்படும்
3. முரண் தொடை :
ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ சொல்லும் பொருளும் மாறுபட்டு வரத்
தொடுப்பது முரண் தொடை எனப்படும்.
முரண் தொடை : சீர்களில் சொல்லும் பொருளும் மாறுபட்டு வரத் தொடுப்பது முரண் தொடை எனப்படும்.
"ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்"
அடிமுரண்தொடை : அடிதோறும் முதற்சீர் முரண்படத் தொடுப்பது அடிமுரண்தொடை எனப்படும்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். க
இப்பாடலில் முதலடியில் இன்பம் என்றும், இரண்டாம் அடியில் துன்பம்
என்றும் முரண்பட்ட சொற்கள் வந்துள்ளன. எனவே, இஃது அடிமுரண்தொடை எனப்படும்.
4. இயைபுத் தொடை:
ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ இறுதி எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது இயைபுத் தொடை
இயைபுத் தொடை : சீர்களின் இறுதி எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது இயைபுத் தொடை
"தெய்வநெறிச் சிவம்பெருக்குந் திருவாமூர் திருவாமூர்"
அடிஇடையத்தொடை : அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது அடிஇடையத்தொடை எனப்படும்.
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டத் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம்விளை யாடும்
இப்பாடலில் அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றி வந்துள்ளதனால் அடிஇயைபுத் தொடை
ஆயிற்று.
5. அளபெடைத் தொடை :
ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ அளபெடை ஒன்றிவரத் தொடுப்பது அளபெடைத்
தொடை
அளபெடைத் தொடை : சீர்களில் அளபெடை ஒன்றிவரத் தொடுப்பது அளபெடைத் தொடை எனப்படும்.
"அறமேஎ
அறமேஎ
வெல்லும் அறிவீர் "
அடியளபெடைத் தொடை : அடிதோறும் முதல் சீர் அளபெடுத்து வருவது அடியளபெடைத் தொடை எனப்படும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
இப்பாடலில் கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என இரண்டடிகளிலும் அளபெடுத்து
வந்துள்ளமையால், அடியளபெடைத் தொடை எனப்படும்.
6. இரட்டைத் தொடை:
பாடலுள் ஓரடி முழுவதும் முதலில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வருவது இரட்டைத் தொடை.
ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்
7. அந்தாதித் தொடை :
அந்தம் - கடைசி
ஆதி - முதல்
பாடலுள் அடிதோறும் இறுதியில் வரும் எழுத்தோ, அசையோ, சீரோ, அடுத்த அடியில் முதலாவதாக வந்தால் அது அந்தாதித் தொடை எனப்படும்.
உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதி நலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
8. செந்தொடை:
எதுகை, மோனைத் தொடை வகைகள் இன்றி வரும் பாடல் செந்தொடை வகை எனப்படும்.
பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலினம் அகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே
அறிவோம்
1. பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
"உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"
அ) உருவகம், எதுகை ஆ) மோனை, எதுகை இ) முரண், இயைபு ஈ) உவமை, எதுகை
Please share your valuable comments