ஆசிரியப்பாவின் விதிகள் மற்றும் வகைகள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும். ஓசை நயத்தை வேறுபடுத்தி அறிவதற்காக வெண்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா,கலிப்பா என நால்வகைப் பாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. ஆசிரியப்பா பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆசிரியப்பா பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளைப் நினைவுகூர்க.

யாப்பிலக்கணம் எழுத்துகள் அசை சீர் தளை அடி தொடை

பாடத்தலைப்புகள்(toc)

ஆசிரியப்பா என்றால் என்ன?

ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.

ஆசிரியப்பாவின் வேறு பெயர்கள் - அகவற்பா.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

  • நான்கு சீர் (அளவடி) களைப் பெற்று வரும்.
  • ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்கள்: ஈரசைச் சீர்களான ஆசிரிய உரிச்சீர்களையும், மூவசைச் சீர்களில் காய்ச்சீர்களையும் பெற்றுவரும்.
  • இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்) பயின்று வரும். பிற சீரும் வரும். ஆனால், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள் வாரா.
  • ஆசிரியத் தளைகள் பயின்று வரும். நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை, ஆகிய தளைகளே மிகுதியாக வரும். அரிதாக வேற்றுத் தளைகளும் மயங்கி வரும்.
  • மூன்றடிச் சிற்றெல்லையும், பாடும் புலவனின் மனக்கருத்திற்கேற்பப் பல அடிகளைப் பெற்றும் வரும்.
  • ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை அகவலோசை.
  • ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
  • இப்பாவின் இறுதிச் சீர் ஏ,ஓ,என், ஆய், ஐ என்னும் அசைகளுள் ஒன்றினை ஈற்றில் பெற்று முடிய வேண்டும்.

ஆசிரியப்பா எடுத்துக்காட்டு

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.


மாச்சீர், விளச்சீர்

அசை வாய்பாடு
நேர் நேர் தேமா மாச்சீர்- 2 (தேமா, புளிமா என மாவில் முடிவதனால் மாச்சீர்.)
நிரை நேர் புளிமா
நிரை நிரை கருவிளம் விளச்சீர் -2 (கருவிளம், கூவிளம் என விளத்தில் முடிவதனால் விளச்சீர்)
நேர் நிரை கூவிளம்

வஞ்சியுரிச்சீர்

கனிச்சீர்- வஞ்சியுரிச்சீர்
அசை வாய்பாடு
நேர் நேர் நிரை தேமாங்கனி
நிரை நேர் நிரை புளிமாங்கனி
நிரை நிரை நிரை கருவிளங்கனி
நேர் நிரை நிரை கூவிளங்கனி

ஆசிரியத் தளைகள்

நேரொன்றாசிரியத்தளை

மாமுன் நேர் வருவது நேரொன்றாசிரியத்தளை.

பா / ரி பா / ரி

நேர்நேர் நேர்நேர்

தேமா தேமா

மாமுன் நேர் நின்றசீரின் ஈற்றசை(மா)-வரும்சீரின் முதலசை(நேர்)

நிரையொன்றாசிரியத்தளை

விளம்முன் நிரை வருவது நிரையொன்றாசிரியத்தளை.

பலர் / புகழ் கபி / லர்

நிரை நிரை நிரை நேர்

கருவிளம் புளிமா

விளம்முன் நிரை நின்றசீரின் ஈற்றசை(விளம்)-வரும்சீரின் முதலசை(நிரை)

அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற, சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை.


ஆசிரியப்பாவின் எத்தனை வகைப்படும்?

11 ம் வகுப்பு 10 ம் வகுப்பு பா யாப்பு இலக்கணம்

ஆசிரியப்பா பாடல்கள்

"கடையயற் பாதமூச் சீர்வரின் நேரிசை காமருசீர்
இடைபல குன்றின் இணைக்குற ளெல்லா அடியுமொத்து
நடைபெறு மாயின் நிலைமண் டிலநடு வாதியந்தத்
தடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே" - (யாப்பருங்கலக் காரிகை : 34)


ஆசிரியப்பாவின் வகைகள்

  1. நேரிசை ஆசிரியப்பா,
  2. இணைக்குறள் ஆசிரியப்பா,
  3. நிலைமண்டில ஆசிரியப்பா,
  4. அடிமறி மண்டில ஆசிரியப்பா

என நான்கு வகைப்படும்.

நேரிசை ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, ஈற்றயல் அடி (இறுதி அடிக்கு முன் அடி) முச்சீராயும் பிற அடிகள் நாற்சீராயும் வருவது நேரிசை ஆசிரியப்பா.

  • ஆசிரியப்பாவில் இவ்வகையே சிறந்தது என்பர்.

"பாரி பாரி என்று பலஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனு மல்லன்
மாரியும் உண்டீண் டுலகு புரப்பதுவே"

இப்பாடலில் ஈற்றயலடி மூச்சீராயும் பிற அடிகள் நாற்சீராயும் வந்துள்ளன.

"அவரோ வாரார் தான்வந் தன்றே
புதுப்பூ வதிரல் தாஅய்க்
கதுப்பற லணியுங் காமர் பொழுதே"

என்னும் ஐங்குறு நூற்றுப் பாடல் ஆசிரியப்பாவின் குறைந்த அடி அளவான மூன்றடியால் வந்துள்ளமை காண்க.

இணைக்குறள் ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தோடு முதலடியும் கடைசியடியும் நாற்சீர் (அளவடி) அடிகளாகவும், இடையில் உள்ள அடிகள் இருசீர் (குறளடி) அடிகளாயும் முச்சீர் (சிந்தடி) அடிகளாயும் வருவது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும்.

"நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே"

என்னும் பாடலில் முதல், இறுதி அடிகளில் அளவடிகள், இரண்டு மூன்றாம் அடிகளில் குறளடிகள், நான்கு ஐந்தாம் அடிகளில் சிந்தடிகள் வந்துள்ளமை காண்க.

அடிகள்

குறளடி சிந்தடி அளவடி (அ) நேரடி நெடியடி கழிநெடிலடி
இருசீர் முச்சீர் நாற்சீர்
ஐஞ்சீர் ஆறும் அதற்கு மேலும் சீர்கள்

நிலைமண்டில ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் நாற்சீர் (அளவடி) அடிகளாய் வருவது, நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படும்.

"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே"

இப்பாடலில் எல்லா அடிகளும் நாற்சீர்கள் கொண்ட அளவடிகளாக வந்துள்ளன.

"ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல் போகின்றாற் பொழிலே யாமெய்
கூழைக் கெருமணங் கொணர்கஞ் சேறு
மாண்டும் வருகுவன் பெரும்பே தையே''

என்னும் குறுந்தொகைப் பாட்டின் அடிகள் அனைத்தும் நாற்சீராய் உள்ளமை காண்க.

அடிமறி மண்டில ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது, பொருள் முற்றுப் பெற்ற அளவடிகளால் அமைவது அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகும்.

"தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே
ஆய்மொழி யுரைத்தல் அறிஞர்தங் கடனே"

இப்பாடலில் உள்ள அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பாடலின் ஓசையும் பொருளும் மாறாமல் வருகின்றது.

"தீர்த்த மென்பது சிவகங் கையே
ஏத்த ருந்தல மெழிற்புலி யூரே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே"

என்னும் சிதம்பரச் செய்யுட் கோவையில் காணப்படும் இப்பாடலின் ஒவ்வோர் அடியும் பொருள் முற்றுப் பெற்றதாக அமைந்துள்ளமை காண்க. இவ்வாறு அமைந்துள்ளமையால் அடிகளை இடம் மாற்றினும் பாடலின் பொருள் மாறுபடாது என்பதை உணர்க.

நினைவுகூர்க

அகவற்பா என்னும் ஆசிரியப்பாவின் விதிமுறைகள் மற்றும் வகைகள், ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை,ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு பற்றி அறிந்துக் கொண்டோம்.மேலும் அறிய தொடர்புடையவை பகுதியைப் பார்க்கவும்.

நேரிசை ஆசிரியப்பா இணைக்குறள் ஆசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பா அடிமறி மண்டில ஆசிரியப்பா
ஈற்றயலடி மூச்சீராயும் பிற அடிகள் நாற்சீராயும் வருவது
முதலடியும் கடைசியடியும் நாற்சீர் அடிகளாகவும், இடையில் உள்ள அடிகள் இருசீர் அடிகளாயும் முச்சீர் அடிகளாயும் வருவது எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது பொருள் முற்றுப் பெற்ற நாற்சீர் அடிகளாய் வருவது

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

  1. ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர் எது?
  2. அகவற்பா எனப்படும் பா எது?
  3. ஆசிரியப்பாவின் ஓசை எது?
  4. ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை?
  5. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் ------------ முடிவது சிறப்பு.

தொடர்புடையவை

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad