தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்
பாடத்தலைப்புகள்(toc)
இரட்டைக்கிளவி என்றால் என்ன?
பிரிக்க முடியாத இருசொற்கள் சேர்ந்து வருவது இரட்டைக் கிளவி ( இரட்டைச்சொல் ) எனப்படும்.
ஒலியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாகவே சேர்ந்து வரும். அவ்வாறு வரும்பொழுது, அஃது ஒலிக்குறிப்பை வெளிப்படுத்தும். இதனைப் பிரித்தால் பொருள் தராது.
தகரப் பந்தல் தணதண வென்னதாழும் கூரை சளசள வென்னநகரப் பெண்கள் செப்புக் குடங்கள்நன்றெங் கும்கண கணகண வென்ன...........(மழையே மழையே..)(code-box)
பாரதிதாசன் பாடலில் மழை பலவிதமான ஒலிகளை எழுப்புகிறது.
- தணதண
- கணகண
- சலசல
இலக்கணத்தில் இதனை இரட்டைக்கிளவி என்பர்.
- இரட்டை என்றால் இரண்டு; கிளவி என்றால் சொல்.
இரட்டைக்கிளவி சொற்கள்
- சலசல,
- கலகல,
- கடகட,
- பளபள
- தடதட,
- சடசட,
- மளமள
- விறுவிறு,
- படபட
இரட்டைக்கிளவி எடுத்துக்காட்டு
- தங்கை விறுவிறுவென நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் கலகலவெனச் சிரித்தபடியே மளமளவெயக் கொய்யத் தொடங்கினாள்.
இத்தொடரிலுள்ள விறுவிறு, கலகல, மளமள ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிலும் அசைச்சொற்கள் இரண்டிரண்டாக இணைந்து வந்துள்ளன.
- அவற்றைப் பிரித்துப் பார்த்தால் பொருள் தரவில்லை.
இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.
உரிய இரட்டைக்கிளவிச் சொற்களை நிரப்புக.
அ. பட்டாசு எப்படி வெடித்தது ?
பட்டாசு படபட வெடித்தது.
ஆ. குழந்தை எப்படி ஓடியது?
குழந்தை குடுகுடு ஓடியது.
இ. சுருக்கமாகப் பேசு; வளவள என்று பேசாதே!
ஈ. வைரக்கல் பளபள என்று மின்னியது.
உரிய இரட்டைக்கிளவிச் சொற்களைப் பொருத்திப் பாடலை நிறைவு செய்க.
அடுக்குத்தொடர் என்றால் என்ன?
இரண்டு அல்லது மூன்று, நான்கு முறை சொற்கள் அடுக்கி வருவது அடுக்குத் தொடர் எனப்படும். இதனைப் பிரித்தாலும் பொருள் தரும்.
அடுக்குத்தொடர் சொற்கள்
- வருக வருக வருக.
- பாம்பு பாம்பு பாம்பு
- இல்லை இல்லை
- எங்கே எங்கே
- பிடி பிடி பிடி பிடி
- இவை இவை
அடுக்குத்தொடர் எடுத்துக்காட்டு
- சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அமுதன் திடீரென, பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே? என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவனருகே ஓடிவந்தனர். "இல்லை இல்லை, சும்மாதான் சொன்னேன்'' என்று சொல்லிச் சிரித்தபடியே ஓடினான் அமுதன். ''அவனைப் பிடி பிடி பிடி பிடி" என்று கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.
இப்பகுதியில் சில சொற்கள் இரண்டு, மூன்று, நான்கு முறை இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர்.
- அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது. அவற்றைப் பிரித்துப் பார்த்தால் பொருள் தரும்.
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி வேறுபாடு - ஒப்பீடு
அடுக்குத்தொடர் | இரட்டைக்கிளவி |
---|---|
சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு. | பிரித்தால் அது பொருள் தருவதில்லை. |
ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும். | ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும். |
சொற்கள் தனித்தனியே நிற்கும். | சொற்கள் இணைந்தே நிற்கும். |
விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். | வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும். |
ஒரு பொருட் பன்மொழி:
ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருட்சிறப்பைத் தருவது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
- ஒரு, தனி
- உயர்ந்தோங்கும் மலை (உயர்ந்த, ஓங்கி )
இரண்டு அல்லது மூன்று, நான்கு முறை சொற்கள் அடுக்கி வருவது அடுக்குத் தொடர் எனப்படும். இதனைப் பிரித்தாலும் பொருள் தரும். எ.டு வருக வருக வருக.
நேர் இணைச்சொற்கள் - எதிர் இணைச்சொற்கள்
நேர் இணைச்சொற்கள்
நாம் செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது, சுவைபடக் கூறுவதற்காக, ஒரே பொருள்தரும் இருசொற்களைப் பயன்படுத்துவது உண்டு. அவை நேர் இணைச்சொற்கள் எனப்படும்.
(எ.கா.)
1. காவேரி கண்ணுங்கருத்துமாகப் படிப்பாள்.
2. வளவனின் தந்தை பேரும்புகழும் மிக்கவர்.
இத்தொடர்களில் உள்ள கண்ணுங்கருத்தும், பேரும்புகழும் ஆகியன நேர் இணைச்சொற்கள்.
எதிர் இணைச்சொற்கள்
எதிரான கருத்தைக் கூறும்பொழுது எதிர்ப்பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்துதல் எதிர் இணைச்சொற்கள்.
(எ.கா)
1.கோபாலன் உயர்வுதாழ்வின்றி அனைவரிடமும் பழகும் பண்பாளர்.
2. மலர்க்கொடியின் தந்தை அல்லும்பகலும் அயராது உழைத்தவர்.
இத்தொடர்களில் உயர்வுதாழ்வின்றி, அல்லும்பகலும் என்பன எதிர் இணைச்சொற்கள்.
கீழ்க்காணும் நேர் இணைச்சொற்களையும், எதிர் இணைச்சொற்களையும் தொடர்களில் அமைக்க
1. ஈடுஇணையற்ற - திருவள்ளுவர் ஈடுஇணையற்ற புகழ் பெற்றவர்.
2. அல்லும்பகலும் - இனியா அல்லும்பகலும் இடைவிடாது படித்தாள்.
3.குற்றங்குறை - ஓவியா பாடலில் குற்றங்குறை எதுவும் இல்லை.
4. ஓங்கியுயர்ந்த - இமயமலை போல ஓங்கியுயர்ந்த மலை வேறு எதுவுமில்லை.
5. தங்குதடையின்றி - மேகலா தமிழில் தங்குதடையின்றி பேசுவாள்.
6. கீரியும் பாம்பும் - ரவியும் ரியாவும் எப்போதும் கீரியும் பாம்பும் போல சண்டை போடுவர்கள்.
உரிய இணைச்சொற்களை எடுத்துக் கோடிட்ட இடங்களில் நிரப்புக.
(இரவுபகல், ஏற்றத்தாழ்வு, கற்றோரும் மற்றோரும், அடித்துப்பிடித்து, பத்திப்பத்தியாக)
1. அண்ணல் அம்பேத்கர் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு களையப் பாடுபட்டார்.
2. கட்டுரை எழுதும்போது பத்திப்பத்தியாக எழுதுதல் வேண்டும்
3. உலகம், சூரியனைச் சுற்றுவதனால் இரவுபகல் தோன்றுகிறது.
4. பேருந்தில் இடம்பிடிக்க அடித்துப்பிடித்து ஏறினேன்.
5. நேருவின் அறிவாற்றலைக் கற்றோரும் மற்றோரும் போற்றிப் புகழ்ந்தனர்.
Please share your valuable comments