தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்.
- தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
வஞ்சப்புகழ்ச்சி அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
வஞ்சப்புகழ்ச்சி அணிவிளக்கம்
வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன?
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும்.
- புலவர் தாம் பாட நினைத்த ஒன்றைப் பாராட்டுவது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் பாராட்டுவதும் வஞ்சப் புகழ்ச்சி அணி.
வஞ்சப்புகழ்ச்சியணி எடுத்துக்காட்டு
கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லால் அடித்ததற்கோ வெட்கினீர் -
சொல்வீரால்
மஞ்சுதனைச் சூழும் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றதென் முன்.
இப்பாடலில், திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய நஞ்சினைச் சிவபெருமான் உண்டு தேவர்களைக் காத்தார் என்பது புராணக் கதை.
இதனைக் காளமேகப் புலவர் சிறிது மாற்றி, ஒருவன் கல்லால் அடித்ததற்காகவும், இன்னொருவன் காலால் உதைத்ததற்காகவும், வேறொருவன் வில்லால் அடித்ததற்காகவும் வெட்கமடைந்து உயிர்வாழ விரும்பாமல் நஞ்சை உண்டார் எனப் பழிப்பதுபோல் சிவபெருமானைப் புகழ்ந்துள்ளார்.
எனவே, இது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆயிற்று.
வஞ்சப்புகழ்ச்சி அணி எத்தனை வகைபடும்?
வஞ்சப்புகழ்ச்சி அணி வகைகள் - இது இருவகைப்படும்.
அவை,
- மாறுபடு புகழ்நிலை அணி,
- புகழாப் புகழ்ச்சி அணி
என்பனவாகும்.
மாறுபடு புகழ்நிலை அணி
- புகழ்வது போல் பழிக்கும் வஞ்சப்புகழ்ச்சி அணி மாறுபடு புகழ்நிலை அணி.
இதனை 'மாறுபடு புகழ்நிலை அணி' எனக் கூறும் தண்டியலங்காரம்,
"கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு
வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை" -
தண்டிநூ.89
மாறுபடு புகழ்நிலை அணி எடுத்துக்காட்டு - புகழ்வது போலப் பழிப்பதும்
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
இப்பாடலில், தீயவர்களைத் தேவர்களுக்கு இணையாகப் புகழ்ந்து கூறுவதுபோலக் கூறித், தீயவர்கள் தம் மனம்போன போக்கில் தீய செயல்களைச் செய்து அழிவார்கள் எனப் பழித்துக் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் கயவர்களின் செயலைப் பார்க்கிறார். அவர்கள் எந்த விதி முறைக்கும் அடங்காமல் தாம் விரும்பியவற்றையெல்லாம் செய்கின்றனர். தேவர் என்னும் தெய்வ உலகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் அவ்வாறு நடப்பார்கள் எனக் கேள்விப்பட்ட வள்ளுவர் இக்கயவர்களை நில உலகத் தேவர்கள் எனக் குறிப்பிட்டுப் புகழ்வது போல் பழிக்கின்றார்.
- கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும்,
- கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது.
எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.
புகழாப் புகழ்ச்சி அணி
- பழிப்பது போல் புகழும் வஞ்சப் புகழ்ச்சி அணி புகழாப் புகழ்ச்சி அணி.
இதனைத் தண்டியலங்காரம் புகழாப் புகழ்ச்சி அணி எனக் கூறும்.
"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்படமொழிவது புகழாப் புகழ்ச்சி'' -
தண்டி நூ.84
புகழாப் புகழ்ச்சி அணி எடுத்துக்காட்டு - பழிப்பது போலப் புகழ்வது
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும்
உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
இப்பாடலின் பொருள்:
பறம்பு மலை மன்னன் பாரி. வள்ளல் தன்மையில் சிறந்தவன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். வந்தவர் கேட்பதற்கு முன்பே தானே முன்சென்று கொடுத்து மகிழ்பவன். கொடுப்பதில் அவனுக்கு இணையாருமில்லை என்ற புகழ் எங்கும்பரவிற்று.
கபிலர் பெரும் புலவர். இதனைப் பார்க்கிறார் அப்புலவர். 'மழையும் இவ்வாறு
வேண்டியவர் வேண்டாதவர் எல்லோருக்கும் பெய்து தழைக்கச் செய்கிறதே. ஏன் எல்லோரும்
பாரியை மட்டும் பாராட்டுகிறார்கள்?'. என மழையாகிய மாரியை உயர்த்திப் பாரியைப்
பழிப்பது போலப் பாடுகிறார். ஆனால் உண்மையில் பாரி மட்டுமே பயன்கருதாது மழைபோலப்
பிறர்க்கு உதவுகிறான் எனப் பாராட்டுவதே கபிலர் நோக்கம். அதனையே இப்பாடல்
காட்டுகிறது.
புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைமாறு கருதாமல் கொடுக்கின்றான்? மழையும்தான் கைமாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது.
இது பழிப்பது போலப் புகழ்வது ஆகும்.
இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.
நினைவுகூர்க:
வஞ்சப்புகழ்ச்சியணி | |
---|---|
மாறுபடு புகழ்நிலை அணி - புகழ்வது போலப் பழிப்பதும் | புகழாப் புகழ்ச்சி அணி - பழிப்பது போலப் புகழ்வது |
தேவ ரனையர் கயவர் அவருந்தாம் |
பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே |
எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும். |
புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைமாறு கருதாமல் கொடுக்கின்றான்? மழையும்தான் கைமாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது. இது பழிப்பது போலப் புகழ்வது ஆகும். |
தொடர்புடையவை
- இரட்டுறமொழிதல் அணி
- நவிற்சி அணி
- உருவக அணி
- உவமையணி
- பிறிது மொழிதல் அணி
- வஞ்சப் புகழ்ச்சியணி
- வேற்றுமை
- பின்வருநிலை அணிகள்
Please share your valuable comments