யாப்பு : செய்யுள் உறுப்புகள் - அடி

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே. இதில் உறுப்பியல்,செய்யுளியல் என இருவகைகள் உள்ளன.யாப்பு உறுப்பியலில் ஆறு செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.யாப்பு செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

சீர்கள் பல அடுத்து நடப்பது அடி எனப்படும்.

அடி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பிற இலக்கணம் வகை பதிவுகளை நினைவுகூர்க.

யாப்பிலக்கணம் எழுத்துகள் அசை சீர் தளை

பாடத்தலைப்புகள்(toc)

அடி என்றால் என்ன?

இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது' அடி' எனப்படும்.

அடி எத்தனை வகைப்படும்?

அவை ஐந்து வகைப்படும்.

1. குறளடி,

2, சிந்தடி,

3. அளவடி (அ) நேரடி,

4.நெடியடி,

5. கழிநெடிலடி

அடிப்படைத் தமிழ் இலக்கணம் யாப்பிலக்கணம் அடி

குறளடி - இருசீர்

அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது குறளடி எனப்படும்.

முக்தி வேண்டுமேல்
பக்தி வேண்டுமால்
சத்தி யம்இது
புத்தி நெஞ்சமே.

சிந்தடி - முச்சீர்

அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது சிந்தடி எனப்படும்.

பழுதி லாத பயிர்த்தொழில்
பழுதி லாது பயிற்றவே
பழுதி லாது பலதொழில்
பழுதி லாது பயிற்றினர்.

அளவடி (அ) நேரடி - நாற்சீர்

அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி அல்லது நேரடி எனப்படும்.

தாய்மொழி தாயினும் தகவிற் போற்றுவன்
ஆய்மொழி யாளர்தம் அன்புக்கு ஏற்றவன்
காய்மொழி யாவதுங் கடிந்து மாற்றுவன்
வாய்மொழி தப்பிடா வகையில் ஆற்றுவன்

நெடியடி - ஐஞ்சீர்

அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது நெடிலடி எனப்படும்.

ஆடும் கடைமணி நாஅசை யாமல் அகிலமெங்கும்
நீடும் குடையைத் தரித்த பிரானிந்த நீள்நிலத்தில்
பாடும் புலவர் புகழ்ஒட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவரே!

கழிநெடிலடி - ஆறும் அதற்கு மேலும் சீர்கள்

அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவதனைக் கழிநெடிலடி எனக் கூறுவர்.

வாழ்வினில் செம்மை வேண்டும் வாய்மையே பேசல் வேண்டும்
பாழ்ச்செயல் விலக்கல் வேண்டும் பண்பினைக் காத்தல் வேண்டும்
தாழ்வினை அகற்ற வேண்டும் தருக்கினை விடுதல் வேண்டும்
சூழ்நிலை உணர்தல் வேண்டும் சோம்பலைப் போக்க வேண்டும்

இப்பாடல் அடிதோறும் ஆறுசீர்கள் பெற்றுள்ளதனால், இதனைக் கழிநெடிலடி என்பர்.

  • பாடலிலுள்ள சீர்களை எண்ணி, இதனை அறுசீர்க்கழிநெடிலடி என்பர்.
  • இதுபோல் ஏழுசீர்கள் இருந்தால் எழுசீர்க்கழிநெடிலடி என்றும்,
  • எட்டுச் சீர்கள் இருந்தால் எண்சீர்க்கழிநெடிலடி என்றும் கூறுவர்.

நினைவுகூர்க

குறளடி சிந்தடி அளவடி (அ) நேரடி
நெடியடி கழிநெடிலடி
இருசீர் முச்சீர் நாற்சீர்
ஐஞ்சீர் ஆறும் அதற்கு மேலும் சீர்கள்

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

  1. அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவதனைக் ------------- எனக் கூறுவர்.
  2. அளவடி வின் மற்றொரு பெயர் எது?

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.