இலக்கியவகைச் சொற்கள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.

இலக்கியவகைச் சொற்கள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

இலக்கியவகைச் சொற்கள்

ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும்.

  • மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.
  • (எ.கா.) பூ,வா,அறம், புத்தகம்

சொல் பாகுபாடு

"இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர்வினை
எனஇரண் டாகும் இடைஉரி அடுத்து
நான்கு மாம், திசை வடசொல், அணு காவழி" - நன்னூல் 270


சொல் இலக்கணம் இரண்டு வகைப்படும்.

சொல்களை இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.

சொற்களின் இலக்கண வகை:

1.பெயர்ச்சொல், 2.வினைச்சொல், 3.இடைச்சொல், 4.உரிச்சொல் என நான்கு.

சொற்களின் இலக்கிய வகைகள்:

1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல்என நான்கு.

எனவே, (மேலே) குறித்த சொல், 1. பெயர் இயற்சொல், 2. பெயர்த் திரிசொல், 3.வினை இயற்சொல். 4. வினைத் திரிசொல், 5. இடை இயற்சொல், 6. இடைத் திரிசொல், 7. உரி இயற்சொல், 8. உரித் திரிசொல் என எட்டு வகைப்படும். அவற்றுடன் 9. திசைச் சொல்லும், 10. வடசொல்லும் சேர்ந்தால் சொல் பத்து வகைப்படும் என அறிக.


இலக்கிய அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

  1. இயற்சொல்,
  2. திரிசொல்,
  3. திசைச்சொல்,
  4. வடசொல்

என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இலக்கியவகைச் சொற்கள்

இயற்சொல்

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.

"செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்'' - நன்னூல் 271

செந்தமிழ் நிலத்து வழங்கும் சொல்லாகிக் கற்றோர்க்கும் கல்லாதார்க்கும் ஒரே தன்மையாய்ப் பொருள் தரும் தன்மையுடைய சொல் இயற்சொல்லாகும்.

செந்தமிழ் நாடு:தமிழ் முனிவராகிய அகத்தியரும் பாண்டிய மன்னர்களும் சங்கப் புலவர்களும் இருந்து தமிழ் வளர்த்த இடம் என்பதால் பாண்டிய நாடு செந்தமிழ் நிலம் எனப்படும்.

  • இயற்சொல் என்பது இயல்பாகப் பொருள் உணரும் சொல்லாகும்.

இயற்சொல் எத்தனை வகைப்படும்?

  1. பெயர்,
  2. வினை,
  3. இடை,
  4. உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

இயற்சொல் எடுத்துக்காட்டு

இயற்சொல் எடுத்துக்காட்டு இயற்சொல் வகைகள்
கடல், கப்பல், மண், பொன் பெயர் இயற்சொல்
நடந்தான், வந்தான் வினை இயற்சொல்
அவனை, அவனால் என்பனவற்றுள் ஐ, ஆல் என்பன இடை இயற்சொல்
அழகு, அன்பு, மாநகர் உரி இயற்சொல்

திரிசொல்

கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

  • பீலி -  மயில்தோகை; 
  • உகிர் - நகம்; 
  • ஆழி - கடல், சக்கரம்.

"ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்
பலபொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிதுஉணர் பொருளன திரிசொல் ஆகும்" - நன்னூல் 272

ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள்.

திரிசொல் எத்தனை வகைப்படும்?

  1. பெயர்,
  2. வினை,
  3. இடை,
  4. உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  • எயிறு, வேய், மடி, நல்குரவு - என்பன பெயர்த் திரிசொல் (எயிறு - பல்; வேய் - மூங்கில்; மடி - சோம்பல்; நல்குரவு - வறுமை). 
  •  வினவினான், விளித்தான், நோக்கினார் - இவை வினைத் திரிசொல் (வினவினான் - கேட்டான்; விளித்தான் - அழைத்தான்; நோக்கினார் - பார்த்தார்). 

ஒரு பொருள் தரும் பல சொற்கள்: சொல்லுதல் - பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்....

மேலும் திரிசொற்களை,

ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களாகியும், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல்லாகியும், கற்றோர் மட்டும் அறியக் கூடிய அரிய சொல் திரிசொல் எனப்படும்.

  • ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும்,
  • பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

எனவும் இருவகைப்படுத்தலாம்.

பொருள் குறித்த பல திரிசொற்கள் பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
வங்கம், அம்பி,நாவாய்- என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால்

திரிசொல் என்பது கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடியது என்பதும் இயற்சொல்லின் வேறுபட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

    திரிசொல் எடுத்துக்காட்டு

    திரிசொல் வகைகள் எடுத்துக்காட்டு
    ஒரு பொருள் குறித்த பல பெயர்ச் திரிசொல் கிள்ளை, சுகம், தத்தை என்பன கிளி என்னும் ஒரு பொருள்
    பல பொருளையும் குறிக்கும் ஒரு பெயர்த் திரிசொல் வாரணம் என்பது யானையையும் கோழியையும் சங்கு முதலிய பல பொருளையும் குறிக்கும்
    ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் கழறினான், செப்பினான், பகர்ந்தான் என்பன ஒரே பொருள்
    பல பொருள் குறித்த ஒருவினைத் திரிசொல் வரைந்தான் என்பது நீக்கினான், கொண்டான் என்னும் பல பொருள்
    ஒரு பொருள் குறித்த பல இடைத் திரிசொல் சேரும், வருதும் என்பனவற்றுள், உம், தும் என்பன விகுதிகள். தன்மை, பன்மை, எதிர்காலம் என ஒரு பொருள்
    பல பொருள் குறித்த ஓர் இடைத் திரிசொல் கொல் என்பது ஐயமும், அசைநிலையுமாகிய பல பொருள்
    ஒரு பொருள் குறித்த பல உரித் திரிசொல் சால, உறு, தவ, நனி, கூர், கழி என்பன மிகுதி என்னும் ஒரு பொருள்
    பல பொருள் குறித்த ஓர் உரித் திரிச்சொல் கடி என்பது காப்பு, கூர்மை, அச்சம், கரிப்பு, விளக்கம், சிறப்பு, மணம் முதலிய பல பொருள்

    • வங்கூழ் (காற்று),
    • அழுவம்(கடல்),
    • சாற்றினான்(சொன்னான்),
    • உறுபயன்(மிகுந்த பயன்)
    திரிசொல் வகைகள் எடுத்துக்காட்டு
    பெயர்த் திரிசொல் அழுவம்(கடல்), வங்கம்
    வினைத் திரிசொல் இயம்பினான், பயின்றாள்
    இடைத் திரிசொல் அன்ன, மான
    உரித் திரிசொல் கூர், கழி

    திசைச்சொல்

    வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.

    "செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும்
    ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
    தம், குறிப் பினவே திசைச்சொல் என்ப" - நன்னூல் 273

    செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலங்களிலும், பதினெட்டு மொழிகளுள்ளே தமிழ் நிலம் நீங்கலாக ஏனைய நிலங்களில் உள்ளோர் தம் கருத்துக்களைக் குறிக்கச் செந்தமிழ் நிலத்திற்கு வந்து வழங்குவன திசைச் சொல் எனப்படும்.

    கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டின் பெயர்கள் : 1. தென்பாண்டி நாடு, 2. குட்ட நாடு, 3. குட நாடு. 4. கற்கா நாடு, 5. வேள் நாடு, 6.பூழி நாடு, 7. பன்றி நாடு, 8. அருவா நாடு, 9. அருவா வடதலை நாடு, 10.சீத நாடு, 11. மலையமான் நாடு, 12. புனல் நாடு என்னும் சோழ நாடு.


    திசைச்சொல் எடுத்துக்காட்டு

    சாவி, சன்னல், பண்டிகை, இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும்.

    • முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.
    • பண்டிகை - திருவிழா 
    • அச்சன் - தந்தை 
    • வெள்ளம் - நீர்ப் பெருக்கு
    • ஜமக்காளம் - விரிப்பு
    • வியாபாரம் - வணிகம்
    • அசல் - மூலம்  
    • வேடிக்கை - காட்சி 

    வடசொல்

    தொல்காப்பிய உரையாசிரியர்களில் இளம்பூரணரும், நன்னூல் உரையாசிரியர்களும் தமிழ் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான வடசொல்லுக்கு இலக்கணம் கூறும்போது ஆரிய மொழி என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக வடமொழி என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர்.ஆரியர் பேசிய மொழி ஆரியம். அதன் சொல் தமிழில் கலக்கும்போது அந்தச் சொல் தமிழருக்கு வடமொழி.

    • வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
    • வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும்.

    "பொது எழுத்தானும் சிறப்பு எழுத் தானும்
    ஈரெழுத் தானும் இயைவன வடசொல்" (நன்னூல் 274 )

    ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலும் ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்துத் திரிந்த எழுத்தாலும், இவ்விரண்டு எழுத்தாலும் தமிழை ஒத்து வடதிசையிலிருந்து செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன வடசொல் எனப்படும்.

    வடசொல் எடுத்துக்காட்டு

    • அமலம், கமலம்(தாமரை), மேரு, காரணம், காரியம் என்பன பொது எழுத்தால் அமைந்த சொற்கள்.
    • சுகி, போகி, சுத்தி என்பன ஆரியச் சிறப்பெழுத்தால் அமைந்த சொற்கள்.
    • அரன், அரி, கடினம், சலம் என்பன பொது எழுத்தாலும் சிறப்பெழுத்தாலும் அமைந்த சொற்கள்.
    • கமலம்(தாமரை), விஷம்(விடம்-நஞ்சு), புஷ்பம்(புட்பம்-மலர்) - இவற்றைப் படியுங்கள். இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்ச்சொற்கள் அல்ல, வடமொழிச் (சமற்கிருதம்) சொற்கள் (கமலம் - தாமரை; விஷம் (விடம்) - நஞ்சு; புஷ்பம் (புட்பம்) - மலர்).

    வடசொல் எத்தனை வகைப்படும்?

    1. தற்சமம்,
    2. தற்பவம்

    என இருவகையாகப் பிரிப்பர்.


    தற்சமம் தற்பவம்
    கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர் லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்

    தொடர்புடையவை

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad