ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணத்தின் கூறுகளாக நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எண் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரித்து முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டு வகைப்படும்.

சார்பு எழுத்துக்கள்:

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

 ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.

குறுக்கங்கள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் (link) எழுத்திலக்கணம் (link) எண் (link) முதலெழுத்து (link) சார்பெழுத்து(link)

பாடத்தலைப்புகள்(toc)

ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள்

குறுக்கம் என்றால் என்ன?

ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர். ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை.

குறுக்கம் என்பதன் பொருள்

சொல்லின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வரும் சில எழுத்துக்கள் தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள் குறுக்கம் எனப்படும்.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

நால்வகைக் குறுக்கங்கள்,

  1. ஐகாரக்குறுக்கம்
  2. ஔகாரக்குறுக்கம்
  3. மகரக்குறுக்கம்
  4. ஆய்தக்குறுக்கம்
ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள்

ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?

  • 'ஐ' மாத்திரை அளவு - 2

'ஐ' என்னும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்துப் பாருங்கள். அது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும்.

  • ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை

ஐகாரக்குறுக்கம் எடுத்துக்காட்டு

  • ஐம்பது - சொல்லுக்கு முதலில் வந்து ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது
  • தலைவன் - சொல்லுக்கு இடையில் வந்து ஒரு மாத்திரையாகக் குறைந்தது
  • கடலை,வேட்கை - சொல்லுக்கு ஈற்றில் வந்து ஒரு மாத்திரையாகக் குறைந்தது
  • வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை- 'ஐ' சொல்லுக்கு ஈற்றில் வந்து ஒரு மாத்திரை

இவ்வாறு சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் ஐகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

ஒளகாரக்குறுக்கம் என்றால் என்ன?

  • 'ஔ' மாத்திரை அளவு - 2

'ஔ' என்னும் நெடில் எழுத்தும், 'ஐ' என்னும் நெட்டெழுத்தைப்போலவே தனியாக ஒலிக்கும்போது, இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதில்லை.

  • ஒளகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒன்றரை மாத்திரை
  • சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்.
  • சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஒளகாரம் வாராது.

அதுவே ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

ஒளகாரக்குறுக்கம் எடுத்துக்காட்டு

  • ஒளவை, வௌவால் - ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது.

மகரக்குறுக்கம் என்றால் என்ன

  • 'ம்' மாத்திரை அளவு - அரை மாத்திரை
  • மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை

‘ம்' என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும். அதாவது, 'ம்' என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து, கால் மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.

இரண்டு இடங்களிலும் குறைந்து ஒலிக்கும் மகரமே மகரக்குறுக்கம்.

இடம் 1

செய்யுளில் இடம்பெறும் போலும், மருளும் ஆகிய மகர ஈற்றுச் சொற்கள்,ஈற்றயல் உகரங் கெட்டு, போல்ம், மருள்ம் என்றாகிப் பின் போன்ம், மருண்ம் எனத் திரியும். இவ்வாறு திரியும் னகர, ணகரங்களின் முன்னுள்ள மகரம், தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.

மகரக்குறுக்கம் எடுத்துக்காட்டு

  • போலும் - போல்ம் - போன்ம், 
  • மருளும் - மருள்ம் - மருண்ம்

இடம் 2

மகர ஈற்றுச்சொல் முன் வகர (வ்) முதல்மொழி வந்து சேரும்போது, நிலைமொழி மகரம் குறைந்து ஒலிக்கும்.

மகரக்குறுக்கம் எடுத்துக்காட்டு

வரும் + வண்டி = வரும் வண்டி. 'ம்' தன் அரை மாத்திரையிலிருந்து குறைந்து, கால் மாத்திரையாக ஒலிக்கும். (வரும் இது மகர ஈற்று நிலைமொழி. வண்டி இது 'வ்' என்னும் வகர முதல் மொழி.)

ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?

  • 'ஃ' மாத்திரை அளவு - அரை மாத்திரை
  • ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு -கால் மாத்திரை

ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக்குறுக்கம். ( 'ஃ' என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது.)

நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் வருமொழியிலுள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆய்தமாகத் திரியும். இவ்வாறு திரிந்த ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். அதுவே ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக்குறுக்கம் எடுத்துக்காட்டு

வருமொழியிலுள்ள தகரம் (த்) நிலைமொழிக்கேற்ப றகரமாக (ற்) வும், டகரமாகவும் (ட்) மாறிப் புணரும்.
  • கல் + தீது = கஃறீது, (வருமொழி - கல்) (நிலைமொழி -தீது )
  • முள் + தீது = முஃடீது.

நினைவுகூர்க

ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம்
முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் 'ஐ' தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் 'ஒள' ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும் ‘ம்' என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தல் 'ஃ' என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது
'ஐ' மாத்திரை அளவு - 2 'ஔ' மாத்திரை அளவு - 2 'ம்' மாத்திரை அளவு - அரை 'ஃ' மாத்திரை அளவு - அரை
ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை,ஒன்றரை மாத்திரை ஒளகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒன்றரை மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு - கால்

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad