பாவலரேறு பெருஞ்சித்திரனார் - தமிழ்த்தொண்டு

சின்னக் குழந்தையின் சிரிப்பும் ஆனவள்; பழுத்த நரையின் பட்டறிவும் ஆனவள்; வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவள்; உணர்ந்து கற்றால் கல்போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள்; அறிவைப் பெருக்குபவள்; அன்பை வயப்படுத்துபவள், செப்புதற்கரிய அவள் பெருமையைப் போற்றுவோம் என தமிழ் மொழின் சிறப்பை உணர செய்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாடத்தலைப்புகள்(toc)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றிய குறிப்பு

பெரியார்பாவேந்தர்பாவாணர் கொள்கை வழிப் பீடுநடைப் போடும் பெரும்பாவலர். தமிழகம் தனி நாடாக வேண்டும் என்ற அழுத்தமான கொள்கையர். 

  • தற்கால நக்கீரர் எனல் தகும். 

தனித்தமிழ் மறவர், தமிழின் தனித்தன்மையில் தணியா ஆர்வலர், பாவலரேறு.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.

இயற்பெயர் - துரை மாணிக்கம்

ஊர்- சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்

பெற்றோர் - துரைசாமி, குஞ்சம்மாள்

பிறப்பு - 10.03.1933

சிறப்பு பெயர்கள்- பாவலரேறு, தற்கால நக்கீரர்

இதழ் - தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் 

இறப்பு - 11.06.1995

காலம் - 10.03.1933 - 11.06.1995

மேற்கோள்கள் 

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் புகழ்பெற்ற சிலமேற்கோள்கள் 

  • வாயுண்ணல் நற்றமிழே! வாழ்ந்துபடல் செந்தமிழ்க்கே!, 
  • கனிச்சாறு (அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!), 
  • பள்ளிப் பறவைகள் (ஓய்வும் பயனும் - ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ)

சிறப்பு பெயர்கள்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் சிறப்புப் பெயர்கள் 

  • பாவலரேறு, 
  • தற்கால நக்கீரர்

நூல்கள்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் 

  • கனிச்சாறு (அன்னை மொழியே), 
  • ஐயை, 
  • கொய்யாக்கனி, 
  • பாவியக்கொத்து, 
  • எண் சுவை எண்பது, 
  •  மகபுகு வஞ்சி, 
  • அறுபருவத் திருக்கூத்து, 
  • கனிச்சாறு (8 தொகுதி) ,
  • நூறாசிரியம், 
  • கற்பனை ஊற்று,
  • உலகியல் நூறு, 
  • பள்ளிப் பறவைகள் - குழந்தைப்பாடல் (ஓய்வும் பயனும்) 

முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். 

இதழ்கள் 

பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்

தென்மொழி  எனும் தனித்தமிழ் இலக்கிய ஏடும், தமிழ்ச்சிட்டு என்ற தூய தமிழ் சிறுவர் இதழும், 'தமிழ் நிலம்' இதழும் செம்மையும் செறிவும் மிக நடத்தி உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க இவர் பாடுபட்டார். 

சிறப்புகள் 

இவர் தம் இலக்கிய நடையினை படிக்கும்போது புல்லரிப்பும் புத்துணர்வும் பொங்கும்.

வாயுண்ணல் நற்றமிழே! வாழ்ந்துபடல் செந்தமிழ்க்கே!

உலக நாடுகள் பலவற்றில் தமிழ் இயக்கம் செய்தவர். இவர் படைப்புகளைப் பலர் எம்.பில்., டாக்டர் பட்டங்கட்கு ஆய்வு செய்து வருகின்றனர்.

இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.

இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றிய TNPSC கேள்விகள்

1. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருந்தாதது

தென்மொழி, 
தமிழ்ச்சிட்டு, 
தமிழ்நிலம் , 
தென்நிலம்

2. பெருஞ்சித்திரனார் நடத்திய சிறுவர் இதழ்

தமிழ்ச்சிட்டு

3. பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களில் பொருந்தாதது

கனிச்சாறு 
ஐயை
மாங்கனி,  (சரி- கொய்யாக்கனி)
பாவியக்கொத்து

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - பாடல் 1

ஓய்வும் பயனும்! 

ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ

ஓவியம் வரைந்து பழகு!

தூய்மையோ டமைதி சேரும் ! - நன்கு

தோன்றிடும் உள்ள அழகு!

பாக்களும் இயற்றிப் பழகு - நல்ல

பாடலைப் பாடி மகிழ்வாய்!

தாக்குறும் துன்பம் யாவும் - இசைத்

தமிழினில் மாய்ந்து போகும்!

அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ

அன்றாடச் செய்தி படிப்பாய்!

செறிவுறும் உன்றன் அறிவு - உளச்

செழுமையும் வலிவும் பெறுவாய்!

மருத்துவ நூல்கள் கற்பாய் - உடன்

மனநூலும் தேர்ந்து கற்பாய்!

திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந்

தீமையும் பொய்யும் களைவாய்!(code-box)



நூற்குறிப்பு :

இப்பாடல், பள்ளிப்பறவைகள் என்னும் குழந்தைப்பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நூலிலுள்ள பாடல்கள் பலவும் தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இந்நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை என முப்பிரிவாக அமைந்துள்ளது.

பொருள் 

மாணவர்களே! ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டால் தூய எண்ணங்களும் அமைதியும் சேர்ந்து உள்ளத்தின் அழகு வெளிப்பட, அது காரணமாக அமையும். 

தமிழில் பாடல்கள் எழுதவும் பாடவும் பழகிக்கொள்ளுங்கள்; இசைத்தமிழின் இனிமையால் வாழ்வின் துன்பங்கள் தொலைந்துபோகும். 

அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள்; அன்றாட நிகழ்வுகளைச் செய்தித்தாள் வாயிலாக அறிந்துகொள்ளுங்கள்; உலகநிகழ்வுகளை அறிவதன்மூலம் அறிவுத்திறன் மேம்படும்; உள்ளம் வளமும் வலிமையும் பெற்றுச் சிறக்கும்; 

மருத்துவ நூல்களையும் மனநல நூல்களையும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்; அவை உடலையும், உள்ளத்தையும் பாதுகாக்கத் துணைபுரியும். தமிழ் நீங்கள் வாழ்க்கைக்கு உதவும் தத்துவ நூல்களைக் கற்றால், அதன்வழித் தீமையையும் பொய்ம்மையையும் விடுத்து நல்வாழ்வு வாழலாம். 

எனவே, ஏட்டுக்கல்வியுடன் கலையறிவும் தொழிற்கல்வியும் அறிவியற் சிந்தனையும் இருந்தால், நீங்கள் வாழ்வில் வெற்றிபெறலாம்; ஆதலால், ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டு வாழ்வில் வளம்பெறுங்கள்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - பாடல் 2

அன்னை மொழியே!

அழகார்ந்த செந்தமிழே!

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!


தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! 

மன்னுஞ் சிலம்பே! மணிமேகலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

 

செப்பரிய நின்பெருமை

செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!(code-box)


 

பாடலின் பொருள் 

அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமிழே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே ! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம். சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் செழுமை மிக்க தமிழே! எமக்குயிரே! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான் விரித்துரைக்கும்? பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே! வியக்கத்தக்க உன்னுடைய நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன. எம் தனித்தமிழே! வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

நூல் குறிப்பு

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன.   

விடையளி 

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

அ) எந் + தமிழ் + நா

ஆ) எந்த + தமிழ் +நா

இ) எம் + தமிழ் + நா

ஈ) எந்தம் + தமிழ் +நா

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - பாடல் 3

கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள்! தமிழில் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம்; இசையோடு பாடலாம்; கும்மி கொட்டி ஆடலாம்.

தமிழ்க்கும்மி

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்

    கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்

எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்

    எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!


ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு

    ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் - பெரும்

ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்

      அழியாமலே நிலை நின்றதுவாம்!


பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு

     பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் - உயிர்

மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த 

      மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !


- பெருஞ்சித்திரனார்(code-box)


சொல்லும் பொருளும்

ஆழிப் பெருக்கு - கடல் கோள்

மேதினி - உலகம்

உள்ளப்பூட்டு- உள்ளத்தின் அறியாமை

ஊழி- நீண்டதொருகாலப்பகுதி 

பாடலின் பொருள்

இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைக்கொட்டிக் கும்மியடிப்போம். 

பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி. 

தமிழ், பொய்யை அகற்றும் மொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி: உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி : உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி

நூல் வெளி

இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

6ம் வகுப்பு தமிழ்(6th Class Tamil Solution)- தமிழ்க்கும்மி வினா-விடை மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தாய் மொழியில் படித்தால் ----------- அடையலாம்

அ) பன்மை

ஆ) மேன்மை

இ) பொறுமை

ஈ) சிறுமை


2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ---------- சுருங்கிவிட்டது

அ) மேதினி

ஆ) நிலா

இ) வானம்

ஈ) காற்று


3. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) செந் + தமிழ் 

ஆ) செம் + தமிழ் 

இ) சென்மை + தமிழ் 

ஈ) செம்மை + தமிழ் 


4. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) பொய் + அகற்றும்

ஆ) பொய்+கற்றும்

இ) பொய்ய + கற்றும் 

ஈ) பொய் + யகற்றும்


5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல். 

அ) பாட்டிருக்கும் 

ஆ) பாட்டுருக்கும் 

இ) பாடிருக்கும் 

ஈ) பாடியிருக்கும்


6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எட்டுத்திசை

ஆ)எட்டிதிசை

இ) எட்டுதிசை

ஈ) எட்டிஇசை


நயம் உணர்ந்து எழுதுக

1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.

  • எட்டுத் - எட்டிடவே
  • அறிவு - அன்பு 
  • ஊழி - ஊற்றெனும்

2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக. 

  • ஊழி - ஆழி
  • கண்டதுவாம் - கொண்டதுவாம்  
  • பூட்டறுக்கும் -  பாட்டிருக்கும்

3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.

  • கண்டதுவாம் - கொண்டதுவாம்
  • காலத்திற்கும் - பெருக்கிற்கும்
  • மெய்புகட்டும் - கிட்டும்

குறுவினா

1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவது 

  • தமிழ், பொய்யை அகற்றும் மொழி; 
  • அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி;
  • உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி ;
  • உயர்ந்த அறத்தைத் தரும் மொழி;
  • இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி.

2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

சிறுவினா

1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?

கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் 

  • பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி.
  •  அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. 
  • பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி. 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - பாடல் 4 தமிழ் படித்தால்...

அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளிபெருகும் 

திறம் பெருகும் உரம் பெருகும், தீமைக் கெதிர் நிற்கும் 

அறம் பெருகும் ஆண்மை வரும் மருள்விலகிப் போகும் 

புறம் பெயரும் பொய்மை யெலாம், புதுமை பெறும் வாழ்வே!

- பெருஞ்சித்திரனார்(code-box)

நினைவு கூர்க 

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் தேவநேயப்பாவாணர்-அகரமுதலிபாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் என்ற பகுதி வருகிறது.   

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad