மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் - தமிழ்த்தொண்டு

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்; தமிழ், தமிழர் நலம் காப்பதனையே உயிர்மூச்சாகக்கொண்டவர். 

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் என்ற பகுதி வருகிறது.   

பாடத்தலைப்புகள்(toc)

தேவநேயப் பாவாணர் - குறிப்பு

பெற்றோர் :  ஞானமுத்து - பரிபூரணம் 

ஊர் :  சங்கரன்கோவில் 

கல்வி : பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்., 

காலம் : 07.02. 1902 - 15.01. 1981 

சிறப்புப் பெயர்கள் : மொழிஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்

  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்; 
  • உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.   

தேவநேயப் பாவாணர் - நாற்பத்துமூன்று நூல்

  • தமிழ் வரலாறு, 
  • முதல் தாய்மொழி, 
  • தமிழ்நாட்டு விளையாட்டுகள், 
  • தமிழர் திருமணம், 
  • வடமொழி வரலாறு, 
  • தமிழர் மதம், 
  • மண்ணிலே விண், 
  • பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், 
  • உயர்தரக் கட்டுரை இலக்கணம், 
  • சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், 
  • திருக்குறள் மரபுரை

தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவிய செம்மல் தேவநேயப் பாவாணர். 

உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் பாவாணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்களாம். 

அவர், தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறினார். 

கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெறவேண்டும் எனவும், பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் எனவும் பாவாணர் வலியுறுத்தினார். 

அவர், ஒருமுறை ஆசிரிய நண்பர் சிலருடன் தாரைமங்கலம் (தாரமங்கலம்) என்னும் ஊருக்குச் சென்று, அங்கே இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் திரும்பினார். அவரை அன்பர் சிலர் சூழ்ந்துகொண்டு, ஊர்சென்று வந்ததனைப்பற்றிக் கேட்டனர். அவருள் ஒருவர், ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன? எனக் கேட்டார். 

பாவாணர் பகலுணவு, பகல் உணவாகவும், இராவுணவு இரா உணவாகவும் இருந்தன என்றார். பகல் உணவு என்பதனில், பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுத்துண்ண நேர்ந்ததெனவும், இரா உணவு என்பதனில், அனைவரும் உணவின்றி இரவைக் கழிக்க வேண்டியிருந்தது எனவும் உணர்ந்துகொண்டனர். 

தமிழ் வளர்த்தால் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என எண்ணியவர் பாவாணர். 

சொற்றொகுப்புக் கருதி நீலமலைக்குச் (நீலகிரி) சென்றார் பாவாணர். ஆங்குப் பாவாணரிடம் பெரும்பற்றுக்கொண்டகிருட்டினையா என்பார் இல்லத்தில் தங்கியிருந்தார். காலை உணவுக்குப்பின் பாவாணரை வீட்டில் தங்கவைத்துவிட்டுக் காட்டுக்குச் சென்று திரும்பினார் கிருட்டினையா. மீள வந்தபோது பாவாணர் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு வீட்டின்முன்னால் கிடந்த விறகுக்கட்டையைக் கோடரியால் பிளந்து கொண்டிருப்பதனைக் கண்டு, “இதனை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் ? விடுங்கள்” எனத் தடுத்தார் கிருட்டினையா. ஒன்றுமில்லை, உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்தல் வேண்டும்; உட்கார்ந்துகொண்டு உண்டு செல்வது நன்றாகாது என்றார், பாவாணர். 

தேவநேயப் பாவாணர் பால்-வாங்கிக்கொண்டு தெருவில் வந்தவர்மீது மிதிவண்டியொன்று மோதியது; அதனால், அவர் செம்பிலிருந்த பால் சிந்தியது; கை கால்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. மிதிவண்டிக்காரர், "ஐயா, மன்னித்துக் கொள்க" என்றார். அதற்கு அவர், மன்னிப்பு உருதுச்சொல்; பொறுத்துக்கொள்க எனத் தமிழில் சொல்லுங்கள் எனக் கூறி, மிதிவண்டிக்காரரையும் சொல்லச் செய்தார். அவர்தாம் அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்றிய தேவநேயப் பாவாணர். 

தேவநேயப் பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி

பாவாணர், தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம், மண்ணிலே விண், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், உயர்தரக் கட்டுரை இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திருக்குறள் மரபுரை முதலான நாற்பத்துமூன்று நூல்களைப் படைத்துள்ளார். 

  • பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக 08.05.1974அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுதிகள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தார்; 

இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 

தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்தபோது, எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று வெளியேறிய தன்மானமிக்க பாவாணரின் உறுதியுரை நம்மை வியக்க வைக்கிறதே! 

அவர், வறுமையில் வாடினாலும் பணம் கைக்குக் கிடைத்தால் நூல்களே வாங்குவார்; புலமைச் செருக்கில்லாமல் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; அன்பு கசியும் நெஞ்சத்தில் ஆழமான நன்றியுணர்வுமிக்கவர். 

தேவநேயப் பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. 

இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையத்திற்கு அருகிலுள்ள முறம்பு என்னும் இடத்தில் பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

அவை, பாவாணரின் புகழ்பேசும் மையங்களாகத் திகழ்கின்றன. மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார். அஃது அவரின் நிறைவுப் பணியாகவும், நம் மனத்தில் நீங்கா நினைவாகவும் என்றும் நிலைத்திருக்கும். 

தமிழ்ச்சொல்வளம் 

சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும்.

"தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்).

மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகள் நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் இங்கு இடம்பெற்றுள்ளது. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். 

"தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது."

-தேவநேயப் பாவாணர்(alert-success)

பாவாணர், தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை,வேர்வகை, அரிதாள் வகை, காய்ந்த இலைவகை, இலைக்காம்பு வகை, பூமடல் வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ்வகை, காய்வகை, கனி வகை, உள்ளீட்டு வகை, தாவரக் கழிவு வகை, விதைத்தோல் வகை, பதர் வகை, பயிர் வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை, காய்ந்த பயிர் வகை. வெட்டிய விறகுத்துண்டு வகை, மரப்பட்டை வகை, பயிர்ச்செறிவு வகை, நிலத்தின் தொகுப்பு வகை, செய் வகை, நில வகை, நன்செய் வகை, வேலி வகை, காட்டு வகை ஆகியவற்றின் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார். 

நில வகைகளின் பெயர்கள்: தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல,அவல்.

தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப்பெறும்.

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார்

காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.

இதுகாறுங் கூறியவற்றால் தமிழ், சொல் வளமுடையதென்றும் தமிழ்நாடு பொருள் வளமுடையதென்றும் தெள்ளிதின் விளங்கும். ஒரு மொழி, பொதுமக்களாலும் அதன் இலக்கியம், புல மக்களாலும் அமையப்பெறும். தமிழ்ப் பொதுமக்கள் உயர்ந்த பகுத்தறிவுடையர். எத்துணையோ ஆராய்ச்சி நடந்துவரும் இக்காலத்திலும் எத்துணையோ மொழிகளினின்று கடன்கொண்ட ஆங்கில மொழியிலும் நூலிலும் இலையைக் குறிக்க Leaf என ஒரேசொல் உள்ளது. ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில் இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி, தமிழ்ப்பொதுமக்களைப் போல வன்மை மென்மைபற்றித் தாள், இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்தாரில்லை. இத்தகைய பாகுபாடு ஏனைய உறுப்புகளுக்குள்ளும் செய்யப்பட்டது முன்னர்க் காட்டப்பெற்றது. 

உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.

தமிழாசிரியர்; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்; பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்; தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர். விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர். பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள். அவர்தான். உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.


தமிழ்நாடு எத்துணைப் பொருள்வளமுடையதென்பது, அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில்வகைப்பட்டனவாகவுமிருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. 

எடுத்துக்காட்டாக, கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சிலவகைகளேயுண்டு. 

ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா,மட்டை,கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன. 

இவற்றோடு வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை. தமிழ்நாட்டுள்ளும் தென்னாட்டிலேயே அவை விளைகின்றன. பழங்காலத்தில் விளைந்த அளவு பொன்னும் மணியும் முத்தும் பவளமும் இன்று விளையாவிடினும் அருமையான கூலங்களும் சிறு கூலங்களும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருவது கண்கூடு. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.

நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருளைக் கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்து அவற்றிற்கேற்பப் பருப்பொருட் சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும்.  

தேவநேயப் பாவாணர் மேற்கோள்கள் quotes

தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்.

தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது.

எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு.

உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்தல் வேண்டும்; உட்கார்ந்துகொண்டு உண்டு செல்வது நன்றாகாது.

மன்னிப்பு உருதுச்சொல்; பொறுத்துக்கொள்க எனத் தமிழில் சொல்லுங்கள்.

கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெறவேண்டும் எனவும், பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும்.

தமிழ் வளர்த்தால் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும்.

பகலுணவு, பகல் உணவாகவும், இராவுணவு இரா உணவாகவும் இருந்தன.

கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெறவேண்டும் எனவும், பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும்.

உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் பாவாணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்களாம்.

தேவநேயப் பாவாணர் குறித்த சில TNPSC கேள்விகள்

1. மன்னிப்பு என்பது

உருதுச்சொல்

2. "மன்னிப்பு 
உருதுச்சொல்; பொறுத்துக்கொள்க" எனத் தமிழில் சொல்லுங்கள் என்றவர்

தேவநேயப் பாவாணர்

3. "எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு." என்றவர்

தேவநேயப் பாவாணர்

4. தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்றவர்

தேவநேயப் பாவாணர்

5. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார்

 மகாகவி பாரதியார்

6. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் 

தேவநேயப் பாவாணர்

7. தேவநேயப் பாவாணர் சிறப்புப் பெயர்களில் பொருந்தாதது
மொழிஞாயிறு
சொல்லின் செல்வர் (சரி - செந்தமிழ்ச் செல்வர்)
செந்தமிழ் ஞாயிறு
தமிழ்ப்பெருங்காவலர் 

8. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்

தேவநேயப் பாவாணர்

9. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்

தேவநேயப் பாவாணர்

10. கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெறவேண்டும் எனவும், பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றவர்

தேவநேயப் பாவாணர்

11. சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக பணியாற்றியவர்

தேவநேயப் பாவாணர்

12. தேவநேயப் பாவாணர் பெயரில் ..........யில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. 

சென்னை அண்ணாசாலை

13. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு 

1981

14. "தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள" என்கிறார் 

கால்டுவெல்

15. "திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்" எழுதியவர்

கால்டுவெல்

இரா.இளங்குமரனார் குறித்த சில TNPSC கேள்விகள்


1. திருவள்ளுவர் தவச்சாலை நிறுவியவர்

இரா.இளங்குமரனார்

2. பாவாணர் நூலகம் உருவாக்கியவர்

இரா.இளங்குமரனார்

3. தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்

இரா.இளங்குமரனார்

4. பாவாணர் வரலாறு என்னும் நூலை இயற்றியவர்

இரா.இளங்குமரனார்

5. இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்களில் பொருந்தாதது 

இலக்கண வரலாறு
தமிழிசை இயக்கம்
தனித்தமிழ் இயக்கம்
இளங்குமரனார் வரலாறு (சரி- பாவாணர் வரலாறு )

6. உலகப் பெருந்தமிழர் என்று அழைக்கப்பட்டவர்

இரா.இளங்குமரனார்





தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad