அகரமுதலி வரலாறு

அகரம், ஆதி என்னும் இருசொற்களின் சேர்க்கையே அகராதி என்றானது. ஆதி என்பதற்கு முதல் என்பது உட்படப் பலபொருள்கள் உண்டு. ஒரு மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.

நிகண்டுகள்

தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப் பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.

நிகண்டுகளில் பழமையானது சேந்தன் திவாகரம். இதன் ஆசிரியர் திவாகரர்.

இந்நிகண்டினைத் தொடர்ந்து இருபத்தைந்து நிகண்டுகள் தோன்றியுள்ளன.இவற்றில் சிறப்பானது மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

  • பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர்
  • கயாதர நிகண்டு - கயாதார்
  • சிந்தாமணி நிகண்டு - வைத்திய லிங்கர் 
  • ஒரு சொற்கல பொருள் நிகண்டு - கனகசபைப் புலவர் 
  • பொதிகை நிகண்டு - சாமிநாத கவி 
  • பாரதி நிகண்டு - பரமானந்த பாரதி 
  • அரும் பொருள் விளக்க நிகண்டு - அருமருந்து தேசிகர்
  • திவாகர நிகண்டு - திவாகர முனிவர் 
  • உரிச்சொல் நிகண்டு - காங்கேயர் 
  •  வடமலை நிகண்டு - ஈசுவரகவி 
  • ஆசிரிய நிகண்டு - ஆண்டிப்புலவர் 
  • பிடவ நிகண்டு - ஒளவையார் 
  • சூடாமணி நிகண்டு - மண்டலபுருடர்

அகரமுதலி வரலாறு

திருமூலரின் திருமந்திரத்தில் அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடமபெற்றுள்ளது. 

அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் அகரமுதலி என வழங்கப்படுகிறது. 

நிகண்டுகளுள் ஒன்றான அகராதி நிகண்டில் இச்சொல் அடைமொழியாக அமைந்துள்ளது. இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இந்நூலில் சொற்களின் முதலெழுத்துகள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருக்கின்றன.

சதுரகராதி

வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி. இது கி.பி. 1732 ஆம் ஆண்டு வெளிவந்தது.

சதுர் என்பதற்கு நான்கு என்பது பொருள். இந்நூலில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வீரமாமுனிவர் தமிழ் - இலத்தீன் அகராதி, இலத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி, போர்த்துக்கீசிய - இலத்தீன் தமிழ் அகராதி ஆகிய அகரமுதலிகளை உருவாக்கினார்.

பிற அகரமுதலிகள்

தமிழ் - தமிழ் அகராதி ஒன்று லெவி - ஸ்பால்டிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம் கதிரை வேலனரால் தமிழ்ச் சொல்லகராதி வெளியிடப்பட்டது. இது சங்க அகராதி எனவும் அழைக்கப்பட்டது. இதில் சொல்லின்மூலம் தருதல், மேற்கோள் அமைத்தல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேரகராதி ஒன்றைக் குப்புசாமி தொகுத்து வெளியிட்டார்.

இராமநாதன் என்பார் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ அகராதி எனும் பெயருடன் வெளிவந்தது.

வின்சுலோ என்பவர் தமிழ் - ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டார்.

1925ஆம் ஆண்டு பவானந்தத்தின் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியும், 1937 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் வெளிவந்தன.

மு. சண்முகம் என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - தமிழ் அகரமுதலி 1985 ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி. இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது. இவ்வகரமுதலி தமிழ் லெக்சிகன் என்னும் பெயரில் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. 


 

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:

1985ஆம் ஆண்டு தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் முதல் தொகுதி வெளிவந்தது.

இரண்டாம் தொகுதி 1993 ஆம் ஆண்டு வெளியானது.

ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன. படங்களைத் தந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.

இன்றைய கல்விப்பரப்பிலும் அகரமுதலி உருவாக்கத்திலும் கணினியும் பயன்பட்டு வருகிறது. முழுமையாகக் கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் தமிழ் அகரமுதலி கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. விளக்கச் சொற்பொருளோடு வந்த முதல் அகரமுதலி இதுவே. தற்போது பல்வேறு பதிப்பகங்கள் அகரமுதலிகளை வெளியிட்டு வருகின்றன. 

கலைக்களஞ்சியம்

சொற்களுக்குரிய பொருளை அகரமுதலி மூலம் அறிந்து கொண்டபின் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள பெயர்கள், கதைகள், வரலாறுகள், பழக்கவழக்கங்கள் முதலியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவைகள் ஏற்பட்டன. இச்சிந்தனையின் விளைவாகத் தோன்றியவையே கலைக் களஞ்சியங்கள்.

அபிதான கோசம் தமிழ் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி. இது இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக் கொண்டு இலக்கியக் களஞ்சியமாகத் திகழ்கின்றது. இது 1902 ஆம் ஆண்டு வெளியானது.

அபிதான சிந்தாமணி இலக்கியச் செய்திகளோடு அரிய அறிவியல் துறைப் பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனைச் சிங்காரவேலனார் தொகுத்து ஆறு வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சிக்கழகம் முறையான முதல் கலைக் களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. இது பத்துத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல வெளியிட்டுள்ளது.

கலைச்சொல் அகரமுதலி : 

துறை பொருள் கலைக்களஞ்சியங்களைத் தொடர்ந்து, துறைசார்ந்த புதிய சொற்களுக்கு விளக்கம் தர, கலைச்சொல் அகரமுதலி தோன்றியது. கலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொது அறிவு, உளவியல், புவியியல், புள்ளியியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டன.

மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் வெளியிட்டுள்ளார். அகரமுதலிகளைத் தொகுத்து அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் தமிழ்க் கலைச் சொல்லுடன் விளக்கச் சொற்பொருள்களும் தரப்பட்டுள்ளன. இது தமிழ் அகரமுதலியின் வளர்ச்சியைக் காட்டுவதாய் அமைந்துள்ளது. பலதுறைகளில் பயன்படுத்தப்படும் பொழுது மொழி வளர்ச்சி அடைகிறது. மொழியின் வளர்ச்சி நம் வாழ்வின் வளர்ச்சியாகும். அவ்வகையில் காலந்தோறும் ஏற்படும் சொற்பொருள் மாற்றங்களை அகரமுதலிகள் பதிவுசெய்து சீர்மைப்படுத்தி மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றன. இன்றைய மக்களும் பண்டைய இலக்கிய இலக்கணங்களின் சொல்வளம், பொருள்வளம் போன்றவற்றைத் தெள்ளிதின் அறிந்து சுவைத்து மகிழத் துணை செய்வன அகரமுதலிகளே.


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. மேலே உள்ள அத்தனை அகரமுதலி சொற்களையும் நமது வலைதளத்தில் இணைத்துள்ளோம் பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி https://valluvarvallalarvattam.com/

    பதிலளிநீக்கு

Please share your valuable comments

Top Post Ad