மயிலை சீனி வேங்கடசாமி வாழ்க்கை வரலாறு & TNPSC முக்கிய வினாக்கள்

ManiMegala 0

Last Updated: May 5, 2026 | 5 நிமிட வாசிப்பு

12-ஆம் வகுப்பு (12th Standard Tamil) பயிலும் மாணவர்கள் மற்றும் TNPSC Group 2, 2A, Group 4 (VAO), TET போன்ற அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்காக, பொதுத்தமிழ் பகுதியில் உள்ள அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காக தமிழ் ஆய்வுலகின் மாபெரும் ஆளுமையான 'ஆராய்ச்சிப் பேரறிஞர்', 'களப்பிரர் கால வரலாற்றை மீட்டெடுத்தவர்', 'நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர்' என்று போற்றப்பட்ட மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை (Biography) இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இக்கட்டுரையில், தேர்வுக்கு மிக முக்கியமான அவரது வரலாற்று ஆய்வுகள், சமய நூல்கள் மற்றும் கலையியல் கண்டுபிடிப்புகள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில் (Offline) பதிவிறக்கம் செய்து படிக்கும் வகையில் முழுமையான இலவச PDF வழிகாட்டியும் (Free PDF Download), தங்களின் சுயமதிப்பீட்டைச் செய்து பார்க்க உதவும் 10 முக்கிய வினாக்களைக் கொண்ட ஆன்லைன் மாதிரித் தேர்வும் (Interactive Quiz with Option E) இதில் இணைக்கப்பட்டுள்ளது. TNPSC பொதுத்தமிழில் 100% வெற்றி பெற இந்த வழிகாட்டி பெரிதும் துணையாக இருக்கும்.

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர்

தொன்மையான தமிழ்மொழி, தோன்றிய காலம் தொட்டு மக்களாலும் அறிஞர்களாலும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இலக்கண இலக்கிய நூல்களும் அவற்றுக்கான உரைகளும் தமிழின் மேன்மையை உயர்த்தின. பிற்காலத்தில் ஆய்வாளர்கள் பலர் தமிழின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் ஆய்வுகளை வெளியிட்டனர். கல்வெட்டுகளை ஆய்ந்தும் தமிழைச் செழுமைப்படுத்தினர். அப்படிப்பட்ட ஆய்வாளர்களுள் ஒருவரான மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தமிழ் மொழியின் பன்முக ஆற்றலைப் புலப்படுத்தியுள்ளார். 

தமிழ் மொழியின் பெரும் பரப்பு இவர்தம் ஆய்வுகள் வழி வெளிப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகிய தரவுகளின் அடிப்படையில் தேடித் தொகுத்து எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன.

சிற்பி பாலசுப்பிரமணியம் - முக்கிய தகவல்கள்

மயிலை சீனி வேங்கடசாமி - முக்கிய தகவல்கள்

முழு பெயர்: மயிலை சீனி வேங்கடசாமி
பிறப்பு: 16 டிசம்பர், 1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
பணிகள்: சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிராமி, கிரந்தம் மற்றும் வட்டெழுத்து முறைகளைத் தாமாகவே கற்றுணர்ந்தவர்.
சிறப்பு: வரலாற்று ஆய்வாளர், தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர். கல்வெட்டு ஆய்வில் சிறந்து விளங்கியவர். களப்பிரர் கால வரலாற்றை மீட்டெடுத்தவர்.
சிறப்பு பெயர்: ஆராய்ச்சிப் பேரறிஞர், தமிழ்ப் பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பன்முக அறிவு: வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம்
மொழிகள்: மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்
முக்கிய ஆய்வு: களப்பிரர் கால வரலாறு, சமண, பௌத்த சமயங்கள்
முக்கிய நூல்கள்: கிறித்தவமும் தமிழும் (இவரது முதல் நூல் - 1936), பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (வரலாற்று ஆய்வில் மிக முக்கியமானது), மறைந்து போன தமிழ் நூல்கள், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், இறைவன் ஆடிய ஏழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள், சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் (அரசியல்)
விருதுகள்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
மறைவு: 08 மே, 1980
காலம்: டிசம்பர் 16, 1900 – மே 8, 1980.
மயிலை சீனி வேங்கடசாமி வாழ்க்கை வரலாறு - தமிழ் ஆய்வாளர், நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் | 2026

மயிலை சீனி வேங்கடசாமி வரலாறு TNPSC (Mayilai Seeni Venkatasamy Biography)

தந்தை சீனிவாசன் சித்த மருத்துவராகவும் , அவருடைய அண்ணன் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும் விளங்கியமையால், இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும் நுணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத் திகழ்ந்தார். 

இளமைக்கால வாழ்க்கை

தந்தையின் சித்தமருத்துவப் பின்புலம், அண்ணனின் தமிழ்ப் பின்புலம் ஆகியவையே தன்னை வரலாற்று ஆய்வாளராக உருவாக்கியது என்பதை இவ்வாறு கூறுவார்:

📕"தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன்: எதுவும் புரியாது. பின்னால் இவற்றை எல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய, வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன்" .

கல்வி மற்றும் பணி

ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத்தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார். கட்டுரையோ, நூலோ எழுதும்முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார். 

விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க., தெ.பொ.மீ., ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் கொண்டிருந்த தொடர்பு காரணமாக அவரது ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின. 

தொடக்ககால ஆய்வுகள் - Tamil Literature Research - இயற்றிய நூல்கள் - முதல் நூல்

1934இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.

அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் 'கிறித்துவமும் தமிழும்' என்னும் நூலை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்

தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, 'பௌத்தமும் தமிழும்', 'சமணமும் தமிழும்' ஆகிய நூல்களை அவர் இயற்றினார். அச்சமயத்தார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளமானவை. அவற்றை, அவர் காழ்ப்புணர்வின்றி நடுநிலைநின்று இந்நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்.

சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார். குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம்; தமிழ் எழுத்தியவின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். 

வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்கமுடிந்தது. 

வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது மயிலை சீனி. வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது. மயிலை சீனி., ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாகின.

வரலாற்று ஆய்வுகள் Tamil Historical Research - மன்னர்கள் பற்றிய ஆய்வுலகில் மயிலை சீனி வேங்கடசாமி

தமிழில் மூன்றாம் நந்திவர்மன் பற்றி எழுதப்பட்ட முதல் நூல்

1950களில், பொ.ஆ. (கி.பி.) 3ஆம் நூற்றாண்டு தொடங்கி பொ.ஆ. (கி.பி.) 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சி புரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார். இது, தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது. 

இவைதவிர, சங்ககால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார். மேற்குறித்தவற்றுள் வரலாற்றை மட்டும் எழுதாது அதன் அரசியல், பண்பாடு மற்றும் கலை வரலாறுகளையும் பதிவு செய்தார்.

களப்பிரர்கள்- History of Kalabhras - The scholar who recovered Kalabhra history

சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம். தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வுகள்

கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் மயிலை சீனி. வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார். கலை ஆராய்ச்சிக்கு அவருடைய பல்துறை அறிவும் இளமைப்பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றதும் உதவியாக அமைந்தன. கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச்சமூக தமிழரது கலைத்திறனை எடுத்துரைக்கும் வரலாற்றுக்குப் புதிய வரவுகளாக அமைந்தன. 

புகழ்பெற்ற நூல்கள்

'தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்' என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும். இந்நூல், தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இறைவன் ஆடிய ஏழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும். தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

இலக்கிய ஆய்வுகள் - Mayilai Seeni Venkatasamy Books

1962ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை மயிலை சீனி. வேங்கடசாமி நிகழ்த்தினார். இத்தகைய சொற்பொழிவுகள் மூலம் அவரது ஆய்வுப்பயணம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் ஆகியவற்றை நோக்கி நகர்ந்தது. அதன் விளைவாக, சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.

மயிலை சீனி வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பு

"ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்: அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு: பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி: காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப்பையில் மூக்குக்கண்ணாடி: பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல்துண்டு; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி.

தமிழ்நாட்டு வரலாறு

ஆய்வுலகில் மயிலை சீனி.வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் எடுத்துரைத்ததைக் குறிப்பிடலாம். 'தமிழ்நாட்டு வரலாறு' என்னும் நூல், இம்முயற்சிக்குச் சரியான சான்றாகும். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக்கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார். அத்துடன் துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். குறைந்த ஆதாரங்களைக்கொண்டு ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிய இவரது நுண்ணிய அறிவிற்குச் சான்றாக இந்நூல் விளங்குகிறது.

மறைந்து போன தமிழ் நூல்கள்

தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இவருடைய பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல். ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூலாகும். இதுபோல, 'மறைந்து போன தமிழ் நூல்கள்" என்னும் நூல், மயிலை சீனி. வேங்கடசாமியின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாகும். இந்நூலில், மறைந்துபோன 333 இலக்கிய, இலக்கண நூல்கள் தொடர்பான குறிப்புகளை நமக்குத் தருகிறார். இது தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

பன்மொழிப் புலமை

தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறுகொண்ட மொழியின் சொற்களில் ஆய்வுக்குரிய சான்றுகள் மிகுதியாக இருக்கும். மயிலை சீனி. வேங்கடசாமி இத்தகைய சொல்லாய்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார். 'செந்தமிழ்ச் செல்வி' என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள், 'அஞ்சிறைத் தும்பி' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய 'மத்த விலாசம்' என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தார்.

தமிழக வரலாற்றுக்கு அவர் ஆற்றிய தொண்டு

தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை, அதிலிருந்து மீட்டுத் திராவிட இயலாக அடையாளப்படுத்தியதில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது.

மயிலை சீனி வேங்கடசாமி பற்றி பாவேந்தர் பாரதிதாசன்

"தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட லாற்றா அண்ணல் வேங்கட சாமி என்பேன் விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விழைதல் இல்லான்" - பாவேந்தர் பாரதிதாசன்

📌"நாள் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன், வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை; இதை மிகச் சிறுபான்மையோரே படிக்கின்றனர் என்பதை நன்றாகத் தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகிறேன்" என்று மயிலை சீனி. வேங்கடசாமி வருந்தி எழுதியுள்ளார். 

இது, வரலாற்றின் மீதுள்ள அவருடைய ஈடுபாட்டையும் உழைப்பையும் எடுத்துக்காட்டுவதோடு, தமிழர், தம் வரவாற்றைப் பொருட்படுத்தாத போக்கினையும் உணர்த்துகிறது.

ஆராய்ச்சிப் பேரறிஞர்

மயிலை சீனி. வேங்கடசாமியின் பல ஆய்வுகள் தமிழுவருக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை; அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்து படைத்தவை: பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை.

தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய மயிலை சீனி. வேங்கடசாமியைப் பாராட்டி 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கியது. 

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற விருதினை அளித்தது. தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்திய இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடி மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கினர்.

திருமணமே செய்துகொள்ளாமல் இல்லறத் துறவியாக வாழ்ந்து, தம் வாழ்வை முழுமையாகத் தமிழியல் ஆய்வுக்கு ஒதுக்கியவர் மயிலை சீனி. வேங்கடசாமி. நமது பெருமைகளை ஆய்வுநோக்கில் விரித்துரைத்தவர்; நமது அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.

✅புதிய செய்தி காணும் ஆய்வு

சேரன் கொடிக்கு வில், சோழன் கொடிக்குப் புலி, பாண்டியன் கொடிக்கு மீன் என்று மரபான சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்ற சின்னங்கள் பற்றிய குறிப்புகள் ஆய்வுலகு அறியாதவை. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருத்தான் என்ற செய்தி, அகநானூற்றில் (162) இருப்பதை முதன்முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி, வேங்கடசாமி இப்படி அவர் வெளிப்படுத்திய அரிய செய்திகள் பற்பல.

Sources & References

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

மயிலை சீனி வேங்கடசாமி - ஆன்லைன் மாதிரித் தேர்வு (10 Questions)

1. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் முதல் ஆய்வு நூல் எது?

2. "தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட லாற்றா அண்ணல்..." என்று மயிலை சீனி வேங்கடசாமியைப் புகழ்ந்தவர் யார்?

3. தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல் எது?

4. "இருண்ட காலம்" என்று அழைக்கப்பட்ட தமிழக வரலாற்றின் பகுதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நூல் எது?

5. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கு 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டம் வழங்கிய அமைப்பு எது?

6. மயிலை சீனி. வேங்கடசாமி எத்தனை மறைந்து போன தமிழ் நூல்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்துள்ளார்?

7. "மகேந்திரவர்மன்", "நரசிம்மவர்மன்" ஆகிய வரலாற்று நூல்கள் எந்த வம்சத்தைப் பற்றிய ஆய்வுகள்?

8. நாரண துரைக்கண்ணன் விவரித்தபடி, மயிலை சீனி. வேங்கடசாமி எங்கு ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

9. மயிலை சீனி. வேங்கடசாமி எந்த மொழியுடன் தமிழை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்?

10. "இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்" என்ற நூல் எதனைக் குறித்த ஆய்வு?

🎯 உங்கள் மதிப்பெண்: 0 / 10

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad