அயோத்திதாசப் பண்டிதர் - தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை

எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் இணைந்து, எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்னும் நற்சிந்தனை மலர அரும்பாடுபட்டவர்களை நாம் சமூகச் சீர்திருத்தவாதிகள் என்கிறோம். 

“உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். குறள், 294 (code-box)

என்கிறது வான்மறை என்று அழைக்கப்படும் குறள். 

பாடத்தலைப்புகள்(toc)

கூடிவாழும் இக்குவலயத்தில் எத்துணை ஏற்றத் தாழ்வுகள்! சாதியால், மொழியால், மதத்தால், இனத்தால், நிறத்தால் உலகம் மாறுபட்டுக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டபோது, ஞான ஒளியாய் இந்நானிலத்தில் உரிமைக்குக் குரல் கொடுத்த நல்லோர்களையே நாம் சீர்திருத்தச் செம்மல்கள் எனச் சிந்தை மகிழப் பாராட்டுகிறோம். அத்தகைய வரிசையில் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவரே  அயோத்திதாசப் பண்டிதர்.

காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர். இவரை மக்கள் எல்லாரும், தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்றே போற்றிப் புகழ்ந்துள்ளனர். 

இவரது நற்கருத்துகள் தமிழகம், மைசூர், ஆந்திரம், திருவிதாங்கூர், பர்மா, மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை முதலிய நாடுகளில் பசுமரத்தாணியாய்ப் பதிந்துள்ளன.

அயோத்திதாசப் பண்டிதர் வரலாறு - Iyothee Thass history in tamil

தோற்றம்

  • பிறப்பிடம் - சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, மக்கிமா நகரில், 
  • பிறந்தநாள் - 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் பிறந்தார். 
  • தந்தையார் பெயர் - கந்தசாமி. 
  • இயற்பெயர் - இவரின் பெற்றோர் இவருக்குக் காத்தவராயன் என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். 
  • இதழ் -  ஒருபைசாத் தமிழன்
  • ஆசிரியர் - வீ. அயோத்திதாசப்பண்டிதர்

கல்விநிலை 

பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும்போது, அவர் பிஞ்சு நெஞ்சில் நஞ்சாய் இறங்கியது தீண்டாமைக் கொடுமை. ஆம்! தீண்டாமை என்பது பெருங்குற்றம் என்றும், மனிதநேயமற்ற செயல் என இன்றும் பேசப்பட்டாலும், அன்றே அவர் உள்ளத்தை அது வாட்டியது.


குருவைப் போற்றிய குருமணி

  • ஆசிரியர் - வீ. அயோத்திதாசப்பண்டிதர் என்பாரிடம் காத்தவராயன் கல்வி கற்றார்; 

சித்த மருத்துவமும் பயின்றார். இவர், குருவிடம் பற்றும் பாசமும் கொண்டிருந்தார். தம்முடைய குரு எழுதிய பாடலை, உயர் பிரிவைச் சார்ந்த ஒருவர் குற்றம் என்று சுட்டிக்காட்ட, அதனைக் கேட்டுக் கொதித்தெழுந்தார். சென்னைப் புரசைவாக்கத்தில், தம் ஆசானுக்கும் குற்றம் கூறியவருக்கும் நேரடிக் கருத்துமோதலுக்கு ஏற்பாடாகியது. குற்றம் கூறியவர் போட்டிக்கு வராமையால், இவர்தம் ஆசிரியரே வெற்றி பெற்றார். அவர் படைத்த கவிதையைப் பிற்காலத்தில், தாம் தொடங்கிய ஒருபைசாத் தமிழன் இதழில் வெளியிட்டார். 

தம்முடைய காத்தவராயன் என்ற இயற்பெயரை விடுத்து, ஆசிரியர் பெயரையே தம் பெயராகச் சூட்டிக்கொண்டு அயோத்திதாசப் பண்டிதர் ஆனார்.

திருமணம்

சமூகச்சீர்திருத்தக் கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர். இவர், நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துகொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார். அக்காலத்தில் தேயிலை பறிப்போர், விவசாயக் கூலிவேலை செய்வோர், மரம் அறுப்போர் ஆகியோரின் முன்னேற்றத்திற் காக அரும்பாடுபட்டார்.

புத்தநெறி

அயோத்திதாசர் இந்துமதக் கருத்துகளை ஆழ்ந்து கற்றவர்; புத்தநெறியால் கவரப் பெற்றார். அதனால், புத்தமதக் கருத்துகளை எல்லாருக்கும் எடுத்துரைத்தார். 

  • தமக்குப் பிறந்த மகன்களுக்குப் பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 
  • புத்தரை விரும்பிச் சார்ந்த இவர், தம் மகள்களுக்கு அம்பிகாதேவி என்றும், மாயாதேவி என்றும் பெயரினைச் சூட்டினார்.

சமூகப்பணி

இவர் மனித வாழ்க்கைக்குத் தேவையற்ற சாதி மதப் பிரச்சினைகள் தீர, மக்கள் அடிப்படை உரிமைகள் பெற, அல்லும்பகலும் அயராது உழைத்தார்.  

  • சித்த மருத்துவத்தில் கைதேர்ந்ததால், மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப் பெற்றார். 

அவர் வாழ்ந்த காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களைத் தரக்குறைவாய் நடத்தியதும், உரிய ஊதியம் கொடுக்காது, கால்வாய் வெட்டச் செய்ததும் அவர் உள்ளத்தைத் தீயாய்ச் சுட்டெரித்தது.

அயோத்திதாசர் தாமே முன்னின்று, தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைக்கு அரும்பாடுபட்டார். எவரையும் சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பது தவறு என்றார். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி வசதியோடு கல்வி உதவித்தொகை அளிக்கவும் கல்வியில் தேர்ச்சி பெற்றவருக்கு அரசுவேலையும் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும், பொது இடங்களில் நுழைய உரிமையும், கிராம அலுவலராய்ப் பணியமர்த்த ஆணைகளும் வேண்டுமென்று துணிவோடு வலியுறுத்தி வெற்றி கண்டார். 

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்ட சூழலில் பிரம்ம ஞானசபை ஆல்காட் (1832 – 1907) தொடர்பால், சென்னையில் முக்கியமான ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் எனத் தலித்துகளுக்கு இலவசப் பள்ளிகளை நிறுவினார்.

இதழ்ப்பணி

  • அன்றைய காலணா விலையில் ஒருபைசாத் தமிழன் என்ற இதழை வெளியிட்டார். 
  • அது, 19.06.1907 முதல் சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன்தோறும் நான்கு பக்கங்களுடன் வெளிவந்தது. 

உயர்நிலையும் இடைநிலையும் கடைநிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைச் செய்திகளாக்கினார்.

தீபாவளி - புதியதோர் விளக்கம்

புதிய தீபாவளி தீபங்களின் வரிசை தீபாவளி. 

  • கண்ணன் நரகாசுரனைக் கொன்று வெற்றி பெற்ற நாளே இத்திருநாள் என்றும், 
  • மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளி என்றும் 

இன்றுவரை பேசப்படுகிறது. 

ஆனால், பௌத்த சமயத்தில் ஆழங்கால்பட்டவரான அயோத்திதாசப் பண்டிதர், தமது மருத்துவ ஆராய்ச்சியின்படி, 

  • எள்செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதியதோர் விளக்கம் தந்தார். 

அதற்கு ஆதாரமாக சப்பான் நாட்டில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத்தான் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று சான்று காட்டினார்.

இயற்றிய நூல்கள்

புத்தரது ஆதிவேதம் என்னும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதினார். 

இதற்குச் சான்றாகப்,

  • பெருங்குறவஞ்சி, 
  • வீரசோழியம், 
  • நன்னூல் விளக்கம், 
  • நாயனார் திரிகுறள், 
  • சித்தர் பாடல்கள், 
  • வைராக்கிய சதகம், 
  • மச்சமுனிவர் ஞானம் 

முதலிய நூல்களைத் துணை நூல்களாகக் கொண்டார். 

ஆதிவேதத்தைப் பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் துணையுடன் எழுதியுள்ளார். 

இவரது இந்திரதேச சரித்திரம் என்னும் நூலும் பாராட்டத்தக்கது. இவை தவிர, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறு நூல்களை வெளியிட்டார். 

  • வீரமாமுனிவரைப்போல் எழுத்துச் சீர்திருத்தமும் செய்துள்ளார்.
  • இவர், திருவாசகத்திற்கும் உரை எழுதியுள்ளார்.

நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது, உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய், நம் உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தார். (alert-passed)

இறப்பு

இத்தகு நற்சான்றோர் 1914 மே மாதம் ஐந்தாம் நாள் பொன்னுடல் நீத்துப் புகழுடம்பு எய்தினார். சமூக ஒருங்கிணைப்பாளராய் வாழ்ந்து மக்களுக்கு உழைத்த உத்தமரைப் போற்றுவோம்; அவர்தம் சீரிய செயல்களைத் தொடர்வோம்.

இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய செய்திகள் என்ற தொகுப்பிற்காக பழைய 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Explained Here - விவரிக்கப்பட்டுள்ளவை

  • ayothidasar pandithar,
  • ayothidasar pandithar books in tamil, 
  • ayothidasar pandithar tamil
  • iyothee thass tnpsc 
  • iyothee thass history in tamil

TNPSC- Previous Year Questions

விடைகள்: BOLD செய்யப்பட்டுள்ளது. 

1. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்

(A) அயோத்திதாசப் பண்டிதர் 

(B) காயிதேமில்லத்

 (C) சிவஞானம்

 (D) முத்துராமலிங்கர்

2. உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்றவர்

(A) அயோத்திதாசப் பண்டிதர் 

(B) முத்துராமலிங்கர் 

(C) காயிதேமில்லத் 

(D) குமரகுரு

3. காலணா விலையில் அயோத்திதாசப் பண்டிதர் என்ற இதழின் பெயர்?

(A)   ஏடகம்  

(B)   ஒருபைசாத் தமிழன்  

(C)   குயில் 

(D)  இந்தியா

4. எள்செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்றவர்?

(A) அயோத்திதாசப் பண்டிதர்

(B) காளமேகப் புலவர் 

(C) எச்.ஏ.கிருட்டிணனார்

 (D) காயிதேமில்லத்

5.  அயோத்திதாசப் பண்டிதரின் இயற்பெயர் ?

  (A) செல்லப்பா  

(B)  கந்தசாமி 

(C)   காத்தவராயன்

(D)  சிவப்பிரகாசம்  

6. திராவிட மகாஜன சபா யாரால் தோற்றுவிக்கப்பட்டது? 

(A) அயோத்தி தாச பண்டிதர்

(B) S.ஸ்ரீனிவாச ராகவ ஐயங்கார் 

(C) தியாகராய செட்டி

 (D) நடேச முதலியார்

7. சென்னையில் முக்கியமான ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் எனத் தலித்துகளுக்கு இலவசப் பள்ளிகளை நிறுவியவர் 

(A) அயோத்திதாசப் பண்டிதர்

(B) காளமேகப் புலவர் 

(C) எச்.ஏ.கிருட்டிணனார்

 (D) காயிதேமில்லத்

8. இந்திரதேச சரித்திரம் என்னும் நூலை எழுதியவர் 

அயோத்திதாசப் பண்டிதர்

9. புத்தரது ஆதிவேதம் என்னும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதியவர் 

அயோத்திதாசப் பண்டிதர்

10. புத்தரை விரும்பிச் சார்ந்த இவர், தம் மகள்களுக்கு அம்பிகாதேவி என்றும், மாயாதேவி என்றும் பெயரினைச் சூட்டியவர் 

அயோத்திதாசப் பண்டிதர்

11. அயோத்திதாசப் பண்டிதரின் ஆசிரியர் பெயர்

வீ. அயோத்திதாசப்பண்டிதர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad