நூலகம் - TNPSC General Tamil

"கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு" என்பர். உலக அறிவை நாம் பெறுவதற்குப் பாடநூல்கள் மட்டும் போதாது. பல்வேறு துறை சார்ந்த நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அதற்குத் துணைபுரிவன நூலகங்களே ஆகும்.

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் நூலகம் பற்றிய செய்திகள் என்ற பகுதி வருகிறது.  

பாடத்தலைப்புகள்(toc)

நூலகம் பற்றிய செய்திகள்

நூலகம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையான உணர்வு தோன்றும். நூலகத்தில் நிலவும் அமைதி, நூல்களின் ஒழுங்கான வரிசையமைப்பு, பழைய, புதிய நூல்களின் கலப்படமான மணம், நேரம் கடந்தது தெரியாமல் அங்குள்ள நூல்களைப் படித்துப் பரவசமடைவது என நூலகம் பற்றிப் பலவகையான எண்ணங்கள் மனத்தில் எழும்.

நூல்களின் தோற்றம்

பழங்காலத்தில் மக்கள் தமது எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துவதற்குக் கற்பாறைகள், களிமண் பலகைகள், மரப்பட்டைகள், தோல்கள், துணிகள், பனை ஓலைகள் முதலிய பலவகைப் பொருள்களைப் பயன்படுத்தினர். தமிழகத்தைப் பொருத்தமட்டில் ஓலைகளே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. 

பனை ஓலைகளைப் பதப்படுத்தி எழுதத்தக்க ஓலைச்சுவடிகளாக்கினர். சுவடிகளில் எழுதிய பின்பு, சுவடிகளின் மேலும் கீழும் துண்டுப் பலகைகளை வைத்துக் கட்டினர். அவற்றைப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்ததுடன் பூச்சிகள், கரையான்கள் முதலியன அரிக்காமல் இருப்பதற்குத் துளசி, வேப்பிலை முதலிய பொருள்களையும் இட்டு வைத்தனர். ஓலைச்சுவடிகளை மஞ்சள் நீரில் நனைத்துப் பாதுகாக்கப்படுவதும் உண்டு. 

உலக இலக்கியத் துறையில் நிகழ்ந்த ஒரு மாபெரும் புரட்சி, காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்திலும் கடந்த சில நூற்றாண்டுகளாக எழுதவும் அச்சிடவும் காகிதங்களையே பயன்படுத்தத் தொடங்கினர்.

நூலகத்தின் பண்டைய நிலை

பண்டைக்காலத்தில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனவே, மக்களிடையே நூல்களின் புழக்கமும் அரிதாகவே இருந்தது. அரண்மனைகளிலும், மாளிகைகளிலும், மடங்களிலும், கோவில்களிலும் படிக்கும் நோக்கின்றிப் பெருமை சேர்க்கும் நோக்கோடு மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

ஆனால், பிற்காலத்தில் இந்த நிலை மாறியது. நூல்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தழைத்து, அதன் விரிவாக்கமாக நூலகங்கள் உருப்பெற்றன.

நூலகத் தோற்றம்

கல்வி, மக்களைத் தத்தம் எண்ணங்களையும், அதனால் விளைந்த அறிவையும் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது. இதுவே புதிய இலக்கியங்களும், இலக்கண நூல்களும் தோன்றக் காரணமாயிற்று. நாடு முன்னேற மக்களைக் கல்வியறிவு பெற்றவர்களாகவும், நற்சிந்தனையாளர்களாகவும் பல்வேறு துறைகளில் வல்லுநர்களாகவும் ஆக்குதல் இன்றியமையாதது. இது மெய்ப்படப் பல்துறை நூல்கள் அடங்கிய பொது நூலகங்கள் நாடு முழுவதிலும் திறக்கப்படவேண்டும் என்ற சிந்தனை வலுப்பெற்றது. நூல் ஒன்று தனி ஒருவரிடம் இருந்தால், அதன் பயன் பிறருக்குக் கிடைக்காது. ஆனால், அதே நூல், பொதுநூலகத்தில் வைக்கப்பட்டால், பயன்மரம் உள்ளூர்ப் பழுத்ததைப் போன்று அது பலர்க்கும் பயன்படும். அதனால் இந்தியா உள்பட, உலகநாடுகள் அனைத்திலும் மக்களுக்கான பொதுநூலகங்கள் திறக்கப்பட்டன. 

ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால்தான் அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாகக் (Informative man) கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.(alert-passed)

நூலகத்தின் பல்வேறு பெயர்கள்

  • புத்தகச்சாலை, 
  • ஏடகம், சுவடியகம், 
  • சுவடிச்சாலை, 
  • வாசகசாலை, 
  • படிப்பகம், 
  • நூல்நிலையம், 
  • பண்டாரம் 

என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. 

நூலகம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் 'லைப்ரரி' என்னும் சொல் வழங்குகிறது. 

இலத்தீன் மொழியில் 'லிப்ரா' என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பொருள்.

நூலகமும் பொதுநூலகத் துறையும்

‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பது பழமொழி. அவ்வண்ணமே நூலகமில்லா ஊருக்கு அறிவு பாழ் என்னும் புதுமொழியும் உண்மையை விளம்புகிறது என்பதனை அறிஞர் ஏற்றுக்கொள்வர். 

ஓர் அரசின் தலையாய கடமை மக்களை அறிவுடையோர் ஆக்குதலே. அதற்கிணங்க, ஊர்தோறும் நூலகம் அமைத்தல் வேண்டும் என்பதனை முதன்மைக் குறிக்கோளாகக்கொண்டு பொது நூலகத்துறை செயல்படுகிறது. அவ்வப்பகுதியில் வாழும் மக்கள் தொகைக்கு ஏற்பப் பலநிலைகளில் பொது நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தனியாள் அல்லது நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நூலகங்களை அவற்றுக்கு உரியோர் மட்டுமே பயன்படுத்த இயலும்; பொதுமக்கள் பயன்படுத்த இயலாது. ஆனால், சமுதாயத்தின் எந்நிலையைச் சார்ந்தவராயினும் சிறியோர் முதல் பெரியோர்வரை வயது வேறுபாடின்றி உறுப்பினராகவும், அங்கிருந்து நூல்களை எடுத்துப் படிக்கவும் பொதுநூலகங்கள் வழிவகுத்துள்ளன. 

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழக அரசுதான் 1948ஆம் ஆண்டு சென்னைப் பொதுநூலகச் சட்டத்தை இயற்றி, நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்டது.(alert-success)

பள்ளியும் நூலகமும்

பள்ளி என்பது பாடநூல்களைக்கொண்டு அறிவை விதைக்கும் களம். ஆனால், நூலகமோ அந்த அறிவை வளர்த்துச் செழுமைப்படுத்தும் மற்றொரு களமாகும். பள்ளியும் நூலகமும் இணைபிரியாதவை. இதனால்தான், அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் இடம் பெற்றுள்ளது. 

பள்ளியில் மாணவர்கள் ஓரிடம், நூலகம் வேறிடம் என்ற நிலையை மாற்ற, நம் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து" என்னும் வகுப்பறை நூலகத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. வகுப்பறை நூலகத்தில் மாணவர்களின் வயதிற்கும், மனநிலைக்கும் ஏற்ப அறிவுசார் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

புகழுக்குரிய நூலகம்

  • கிரீஸ் நகர அரசுகளே முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
  • இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது. இதில், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
  • உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
  • இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது திருவனந்தபுரம் நடுவண் நூலகம். 
  • உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.

தமிழகத்திலுள்ள மிகப் பழைமையான நூலகங்கள். 

  1. சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820) 
  2. அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை. 
  3. கன்னிமாரா நூலகம், சென்னை. (1869), 
  4. சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907), 
  5. அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் (1929), 
  6. டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை (1947), 
  7. மறைமலை அடிகளார் நூலகம், சென்னை (1958), 
  8. மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966), 
  9. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம், சென்னை (1970), 
  10. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981)

சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

நூலக விதிகளை உருவாக்கியவர் முனைவர் இரா. அரங்கநாதன். 


நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்த சீர்காழி சீ. இரா. அரங்கநாதன், இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.(code-box)

நூலகமும் பயன்பாடும்

மாணவப் பருவம் கற்றலுக்கு ஏற்றது. இப்பருவத்தில் பலவகைத் துறைகள் பற்றி அறிந்து கொள்ளுதல் வேண்டும். இதற்குப் பெரிதும் துணை நிற்பது நூலகமே. 

நூலகத்தில்,

  • இலக்கியம், 
  • இலக்கணம், 
  • திறனாய்வு, 
  • தத்துவம், 
  • அறிவியல், 
  • கணிதம், 
  • வரலாறு, 
  • பொருளியல், 
  • வாணிகம், 
  • மருத்துவம், 
  • கலை, 
  • மொழிபெயர்ப்பு, 
  • பொது அறிவு

முதலிய பல்வகைத் தலைப்புகளிலான நூல்கள் இடம் பெற்றிருக்கும். 

  • செய்தித்தாள்கள், 
  • வார மாத இதழ்கள், 
  • சிற்றிதழ்கள், 
  • சிறப்பிதழ்கள், 
  • வேலைவாய்ப்புச் செய்தி இதழ்கள் 

போன்றனவும் காணப்படும்.

மாணவர் ஒவ்வொருவரும் நூலகங்களுக்குச் சென்று அங்குக் கிடைக்கும் அறிவுச் செல்வத்தினைத் தவராமல் பெறுதல் வேண்டும். 

உள்ளூர்ச் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை பல்வேறு பொது அறிவுச் செய்திகளையும் பெற்றுப் பயனடைய வாய்ப்பு நல்குவது நூலகமே. மாணவர்களாயினும் மற்றோராயினும் அனைவரது அறிவுப்பசியையும் போக்கும் சிறப்பான இடம் நூலகமாகும்.

மின்னணுக் காலமான தற்காலத்தில் நூலகங்களில் உள்ள நூல்கள் மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. 

  • இணையத்தள நூலகம், 
  • குறுவட்டுகள், 
  • மின்னணு ஒளிவட்டு, 
  • நுண்சுருள் 

முதலிய வேறுசில வடிவங்களிலும் நூல்கள் உருமாற்றம் பெற்று, நூலகப் பயன்பாட்டில் உள்ளன.



பாபிலோனியாவில் உள்ள நிப்பூர் என்ற ஊரில் கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.(code-box)

நூலகத்தினால் விளையும் நன்மைகள்

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் அதிக விலையுள்ள நூல்களைச் செலவின்றிப் படித்துப் பயன் பெறலாம். எத்துறை சார்ந்த நூலையும் அச்சில் இல்லாத பல அரிய புத்தகங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. பலதுறை நூல்களையும் ஒரே இடத்திலும் வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கும் வசதியும் உள்ளது. வீட்டிலிருந்தபடியே நூல்களைப் படிக்க வகைசெய்யும் மின்னணு நூலகங்களும் உள்ளன.

நூலகமும் நாமும் 

நூலகத்தில் உள்ள நூல்களைக் கிழியாமலும், சிதைவுறாமலும் பாதுகாத்தல் நமது கடமையாகும். அஃது அடுத்தவருக்குப் பயன்பட ஏதுவாக இருக்கும். வாழ்வில் வெற்றிபெற நூலகங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். அறிவு வளரவும் ஆற்றல் மிளிரவும் நூல்களைப் படிப்போம். நூல்களைப் பேணிக் காக்கும் நூலகங்களைப் போற்றிக் காப்போம்.

இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 21. நூலகம் பற்றிய செய்திகள் என்ற தொகுப்பிற்காக பழைய 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நூலகம் நோக்கி...

நூலகம் இல்லாத ஊரில் தமிழக அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர்

  • அறிஞர் அண்ணா
  • ஜவஹர்லால் நேரு 
  • அண்ணல் அம்பேத்கர்
  • காரல் மார்க்ஸ்

நூலகங்கள் வகைகள்

  • மாவட்ட நூலகம், 
  • கிளை நூலகம், 
  • ஊர்ப்புற நூலகம் 
  • பகுதி நேர நூலகம், 
  • தனியாள் நூலகம் 

எனப் பலவகைப்படும். 

அண்ணா நூற்றாண்டு நூலகம் 

நூலகம் முழுவதுமே குளிர்பதன வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதே வசதியுடன் கூட்ட அரங்கு, கலையரங்கு, கருத்தரங்கச் கூடம், கண்காட்சி அரங்கு போன்றவையும் உள்ளன. 

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.(alert-success)

ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.

தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. 

இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். 

தரைத் தளம் 

தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள். குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு.

முதல் தளம் 

முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. சிறுவர்கள் மட்டுமல்ல அனைவரின் மனத்தை கொள்ளைகொள்ளும் பகுதி இது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

ஏழாம் தளம்

இத்தளத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் உள்ளது. இங்குப் பழைமையான ஓலைச் சுவடிகள் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. இதே தளத்தில் வரலாறு, புவியியல், சுற்றுலா நூல்களும் உள்ளன.

இங்கு அனைத்துவகைப் போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான நூல்கள் உள்ளன. மின் நூலகமும் உள்ளது. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும் உள்ளன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்

  1. தரைத்தளம்- சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
  2. முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
  3. இரண்டாம் தளம் - தமிழ் நூல்கள்
  4. மூன்றாம் தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  5. நான்காம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  6. ஐந்தாம் தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
  7. ஆறாம் தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  8. ஏழாம் தளம் - வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
  9. எட்டாம் தளம் - கல்வித் தொலைக்காட்சி. நூலகத்தின் அலுவலகப் பிரிவு
இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 21. நூலகம் பற்றிய செய்திகள் என்ற தொகுப்பிற்காக புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Explained Here - விவரிக்கப்பட்டுள்ளவை

  •  library composition  in tamil
  • library essay in tamil
  • நூலகம் கட்டுரை
  • நூலகம் பற்றி சில வரிகள்

TNPSC- Previous Year Questions

விடைகள்: BOLD செய்யப்பட்டுள்ளது. 

1. இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுபவர்

(A) சீ. இரா. அரங்கநாதன் (B) புகழேந்தி (C) சிவஞானம் (D) குமரகுரு

2. இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது

 (A) கல்கத்தா தேசிய நூலகம் 

(B) சரசுவதி மகால் நூலகம்

 (C) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம்

 (D) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் 

3. நூலகத்தின் பல்வேறு பெயர்களுள் பொருந்தாதது? 

 (A)   ஏடகம் 

 (B)   வாசகசாலை

 (C)   படிசாலை (சரி- படிப்பகம்) 

(D)  பண்டாரம்  

4. இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழக அரசு சென்னைப் பொதுநூலகச் சட்டத்தை இயற்றிய ஆண்டு எது?

  (A)   1948  (B)   1984 (C)   1988  (D)  1944  

5.  'லிப்ரா' என்னும் சொல் எந்த மொழியில் உள்ளது?

  (A) ஆங்கிலம்  (B)  உருது (C)   இலத்தீன்   (D)  ஈப்ரு 

6. ஒரு மனிதன் ஆண்டுக்கு எத்தனை பக்கங்களாவது படித்தால்தான் அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாகக் (Informative man) கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது?

(A) 2000  (B) 200  (C) 20   (D) 20000 

7. நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்தவர்

சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்

8. இலத்தீன் மொழியில் 'லிப்ரா' என்னும் சொல்லிற்குப் ........ என்பது பொருள்.

புத்தகம்

9. நம் பள்ளிக்கல்வித்துறை .............. என்னும் வகுப்பறை நூலகத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது?

புத்தகப்பூங்கொத்து

10. பாபிலோனியாவில் உள்ள ...... என்ற ஊரில் கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.

நிப்பூர்

11. .......... நகர அரசுகளே முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.

கிரீஸ்

12. தமிழகத்திலுள்ள மிகப் பழைமையான நூலகம்

சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820) 

13. சிறந்த நூலகர்களுக்கு ........ விருது வழங்கப்படுகிறது.

டாக்டர் சீ. இரா. அரங்கநாதன்




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad