முன்னிரவு நேரம், சென்னை நகரத்து இலிங்கிச் செட்டித்தெருவில் புராணத்தொடர் சொற்பொழிவைக் கேட்க மக்கள் கூட்டம் ஆர்வத்துடன் கூடியிருந்தது. அன்று வரவேண்டிய சொற்பொழிவாளர் வரவில்லை. ஆனால், வந்தவரோ வெள்ளாடை அணிந்து அழகொழுகும் திருமுகத்துடன்கூடிய ஒன்பது வயது சிறுவர்; அச்சிறுவர், அனைவரையும் வணங்கித் தம் அண்ணன் வர இயலாமையைக் கூறி, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்னும் பெரியபுராணப்பாடலைப் பாடினார்; அனைவரது மனத்தையும் கவரும் வண்ணம் நெடுநேரம் அதற்குப் பொருள் கூறினார்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் அமைந்த அச்சொற்பொழிவை மெய்ம்மறந்து கேட்டனர் பெரியோர்; அடுத்து வரும் நாளெல்லாம் அவரையே சொற்பொழிவாற்றுமாறு அன்புக் கட்டளை இட்டனர்.
யாவரும் வியக்கும் வண்ணம் அன்று உரை நிகழ்த்தியவர்தாம் பிற்காலத்தில் சாதிகளிலும் மதங்களிலும் சமயச் சடங்குகளிலும் உழன்று கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து மீண்டு வரச் சமரச சுத்த சன்மார்க்கப்பாதை அமைத்த, வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள்.
பாடத்தலைப்புகள்(toc)
இராமலிங்க அடிகள் குறிப்புகள் - Ramalinga Adigalar in Tamil
- பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர்.
அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப் பெற்றவர் வள்ளலார்.
பிறப்பு
- பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூர்
- பிறந்தநாள் - 05.10.1823
- பெற்றோர் - இராமையா, சின்னம்மை இணையர்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார்.
- ஆசிரியர் - சபாபதி
- சிறப்புப்பெயர் அல்லது வேறு பெயர்கள் - புதுநெறிகண்ட புலவர், திருவருட் பிரகாச வள்ளலார், வள்ளலார், பசிப்பிணி மருத்துவர், அருட்பா அருளிய அருளாளர், உத்தம மனிதர்
தில்லையில், இறைவழிபாட்டின்போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்துச் சிரித்ததைக் கண்ட ஆலய அந்தணர், "இக்குழந்தை இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டினார்.
"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த"(code-box)
இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறுவார் வள்ளலார்.
இராமலிங்கர் பிறந்த ஆறாவது திங்களில் தந்தையார் மறைந்தார்; குடும்பத்தினர் சென்னைக்குக் குடிபெயர்ந்தனர். இராமலிங்கத்தின் தமையனார் புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதன்மூலம் கிடைத்த வருவாயே குடும்ப வருமானமாயிற்று. இராமலிங்கருக்கு ஐந்து வயதானவுடன், கல்வி கற்க அவரைத் தம் ஆசிரியர் சபாபதியிடம் அண்ணன் அனுப்பி வைத்தார். இராமலிங்கருக்கோ படிப்பில் நாட்டமில்லை; ஆயினும், ஒன்பது வயதிலேயே பாடல் புனையும் திறன் பெற்றிருந்தார்.
உத்தம மனிதர்
திருவொற்றியூர்ச் சன்னதி வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த திகம்பர சாமியார், அவ்வழியில் செல்லும் மனிதர்களைக் கண்டு, “அதோ மாடு போகிறது; ஆடு போகிறது; நாய் போகிறது; நரி போகிறது" என்று, அவரவர்களின் குணத் தன்மைகளுக்கேற்ப விலங்குகளின் பெயர்களால் கூறுவார். ஆனால், இராமலிங்கர் அவ்வழியே சென்றபோது, 'இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்' என்று கூறினார்.
ஒருமையுணர்வு
தருமமிகு சென்னையிலுள்ள கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி மனமுருகப் பாடி மகிழ்வார். இப்பாடல்களின் தொகுப்பே தெய்வமணிமாலை.
"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்றஉத்தமர்தம் உறவு வேண்டும்உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்"(code-box)
என்பன போன்ற அற்புதமான பாடல்கள் கற்போரை மனமுருகச் செய்யும்.
இராமலிங்கர் பாடல்கள்
இராமலிங்கர்,
- வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும்,
- திருவொற்றியூர்ச் சிவபெருமான்மீது, எழுத்தறியும் பெருமான் மாலை என்னும் நூலையும்
பாடினார்.
இவர் பொதுமை உணர்வுடன் பிற தெய்வங்களின் மீதும் பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் எளிய, இனிய பாடல்கள்; கல்லார்க்கும் கற்றவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் கருத்து நிறை பாடல்கள்.
வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்
- சிறந்த சொற்பொழிவாளர்
- போதகாசிரியர்
- .உரையாசிரியர்
- சித்த மருத்துவர்
- பசிப்பிணி போக்கிய அருளாளர்
- பதிப்பாசிரியர்
- நூலாசிரியர்
- இதழாசிரியர்
- இறையன்பர்
- ஞானாசிரியர்
- அருளாசிரியர்
வள்ளலார் பதிப்பித்த நூல்கள்
- சின்மய தீபிகை
- ஒழிவிலொடுக்கம்
- தொண்டமண்டல சதகம்
இயற்றிய உரைநடை நூல்கள் - எழுதிய நூல்கள் யாவை?
- மனுமுறை கண்ட வாசகம்
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
- திருவருட்பா ( ஆறு திருமுறைகள் )
புரட்சித் துறவி
மூடநம்பிக்கைகளாலும் சாதி மத வேறுபாடுகளாலும் மக்கள் துன்புறுவதனைக் கண்டு மனம் பதைத்த வள்ளற்பெருமான்,
"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக"(code-box)
எனப் பாடினார்.
ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பிய வள்ளற்பெருமான்,
“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்" (code-box)
என வற்புறுத்தினார்.
“சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்"(code-box)
என்றார்.
இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்றும் இகழ்ந்தார்.
“பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும்(code-box)
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி"
என ஆணும் பெண்ணும் சமமென்று அன்றே உரைத்தார்.
பசிப்பிணி மருத்துவர் வள்ளலார்
- சங்ககாலத்தில் ஒரு முல்லைக்கொடியின் துயர் நீக்க, பாரிவள்ளல் தன் தேரையே ஈந்தார்.
பல நூற்றாண்டுகள் கழித்துப் பாரி வள்ளலைப்போல வள்ளலார்,
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'(code-box)
என்று பயிர்வாடத் தாம் வாடினார்.
வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்தவரையும், நீடிய பிணியால் வருந்துவோரையும், ஈடில் மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு இளைத்தோரையும் கண்டு வருத்தத்தால் உயிர் இளைத்தார் வள்ளற்பெருமான். இவ்வருத்தம் நீங்கவே, வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவிச் சாதி, மத வேறுபாடின்றிப் பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார். அங்கு, அவர் ஏற்றி வைத்த அடுப்பின் கனல், இன்றும் பல்லோர் பசிப்பிணியைப் போக்கி வருகின்றது.
வள்ளலார் காட்டும் உயர்நெறி
ஆணும் பெண்ணும் சமம் என்பதனையும், மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மைகொண்டு, மனிதநேயத்துடன் வாழவேண்டுமென்றும் என்பதைக்கு உணர்த்தினார் வள்ளலார்.
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்குஏவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ."(code-box)
இப்பாடல், எல்லா உயிர்களையும் தம்முயிராய்க் கருதித் தொண்டு செய்பவர் உள்ளத்தில்தான், இறைவன் அன்புருவாய் நடம் புரிவான் என்பதனை விளக்குகிறது.
பேரின்ப வீட்டின் திறவுகோல்
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்''(code-box)
என்றார் வள்ளலார்.
அவர், கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்வதனை அறவே வெறுத்தார்; பலிகொள்ளும் சிறுதெய்வக் கோவிலைக் கண்டு நடுங்கினார்; போரினால் உண்டாகும் கொடுமைகளை அறிந்து வருந்தினார்; போரில்லா உலகைப் படைக்க விழைந்தார்.
இதனை,
-----------உலகரசு ஆள்வோர்உறைமுடி வாள்கொண்டு ஒருவரை ஒருவர்உயிர்அறச் செய்தனர் எனவேதறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்தளர்ந்துஉளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்" (code-box)
என்னும் அவர்தம் பாடல் உணர்த்தும்.
- வள்ளலார் அன்பின் ஊற்று;
- அன்பே அவர் உயிர்;
- அன்பே அவர் வடிவம்;
மண்ணுலகத்திலே உயிர்கள்படும் வருத்தத்தைக் கண்டும் கேட்டும் அவர் பொறுத்திட மாட்டாமல்,
“அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்"(code-box)
என்று உளமுருக வேண்டினார்; அவ்வுயிர்களின் வருத்தத்தை நீக்கிடவே துடித்தார்.
பொதுமை நெறி
வள்ளலார், இறைவன் ஒருவனே; அவன் ஒளி வடிவினன் என்பதனையும் அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிப்பெருங்கருணையே கருவி என்பதனையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை வடலூரில் நிறுவினார்.
சங்கத்தின் நோக்கங்கள்
- சாதி, மத, சமய, இன வேறுபாடு கூடாது;
- எவ்வுயிரையும் கொல்லலாகாது;
- புலால் புசித்தல் கூடாது;
- எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணுதல் வேண்டும்;
- ஏழை மக்களின் பசியைப் போக்குதல் வேண்டும்;
- உலக மக்கள் அனைவரையும் உடன்பிறப்புகளாய் நேசித்தல் வேண்டும்
என்பன இச்சங்கத்தின் நோக்கங்களாம்.
அருட்பா அருளிய அருளாளர்
இராமலிங்கர் அருளிய பாடல்கள் அருட்கருணை நிறைந்தவை.
- ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களைத் திருவருட்பா என மக்கள் போற்றுகின்றனர்.
இவர் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார். அதற்காகவே வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். மேலும், மக்கள் அறியாமை நீங்கி அறிவு ஒளிபெற, அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார்.
- இதனால்தான் பாரதியார் இவரைப் "புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றினார்.
தமிழ்ப்பற்று
வள்ளலார் மொழிப்பற்று மிக்கவர்; தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார். "பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை மிகவும் எளிமையாக அறிவிப்பதாய், திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம்பற்றச் செய்து, அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப்பாட்டுகளைப்பாடுவித்தருளினீர்" என்று உண்மை உரைத்தார்.
எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று வள்ளலார் அருள்கிறார்.(alert-success)
இறைநிலை அடைதல் - இறப்பு
உலகெலாம் உய்ய உயரிய நெறிகண்ட அருட்பிரகாச வள்ளலார்
- 1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளன்று
இறவாநிலை எய்தினார்.
திருவருட் பிரகாச வள்ளலார் பாடல்கள் - மேற்கோள்கள் - பொன்மொழிகள்
- 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்'
- “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்"
- "உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்'
- “பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி"
- 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'
- அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்"
- அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்துஇருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த
- கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக - ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:
- தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
- குருவை வணங்கக் கூசி நிற்காதே.
- வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
- மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
- நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே.
- பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
- ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
- பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
- இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
- தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனிதநேயம்
நினைவு கூர்க
அருளாளர் அருளிய வழிகளைக் கடைப்பிடித்தொழுகினால் சாதி, மத, இனவேறுபாடுகள் நீங்கும்; போரும் பூசலும் அகலும்; அமைதி உலகம் உருவாகும்; மனித நேயம் மலரும்; அன்பே நிறைந்து ஒருமையுள் உலகம் நிலைக்கும்.
இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 20. இராமலிங்க அடிகளார் பற்றிய செய்திகள் என்ற தொகுப்பிற்காக பழைய 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Explained Here - விவரிக்கப்பட்டுள்ளவை
- Vallalar Ramalinga adigal
- Ramalinga adigal books in tamil,
- Ramalinga adigal tamil
- Ramalinga adigal tnpsc
- Ramalinga adigal history in tamil
- Ramalinga swamigal
10ம் வகுப்பு தமிழ் வினா விடை - 10th standard tamil book back exercise
கோடிட்ட இடங்களைத் தகுந்த சொற்களால் நிரப்புக.
அ) இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம் - வடலூர்
ஆ) இராமலிங்கர் தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார்.
இ) சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை நிறுவிய இடம் - வடலூர்
உரிய விடையைத் தேர்ந்து எழுதுக
அ) “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
1.கந்தபுராணம் 2.சீறாப்புராணம் 3.பெரியபுராணம்.
ஆ) வள்ளலாரின் இயற்பெயர்
1.சம்பந்தர் 2.இராமலிங்கர் 3. தாயுமானவர்
சந்திப்பிழை நீக்கி எழுதுக
1. வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
விடை - வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
2. அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசன புதுமையை புகுத்தினார்.
விடை - அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார்.
குறுவினாக்கள்
1. இராமலிங்கர் எங்கு, எப்போது பிறந்தார் ?
- பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூர்
- பிறந்தநாள் - 05.10.1823
2. சத்திய தருமச்சாலையில் வள்ளலார் செய்த தொண்டு யாது ?
வீடுதோறும்
இரந்தும் பசியறாது அயர்ந்தவரையும், நீடிய பிணியால் வருந்துவோரையும், ஈடில்
மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு இளைத்தோரையும் கண்டு வருத்தத்தால் உயிர்
இளைத்தார் வள்ளற்பெருமான். இவ்வருத்தம் நீங்கவே, வடலூரில் சத்திய தருமச்சாலையை
நிறுவிச் சாதி, மத வேறுபாடின்றிப் பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார். அங்கு,
அவர் ஏற்றி வைத்த அடுப்பின் கனல், இன்றும் பல்லோர் பசிப்பிணியைப் போக்கி
வருகின்றது.
TNPSC- Previous Year Questions
விடைகள்: BOLD செய்யப்பட்டுள்ளது.1.. இராமலிங்கரை 'உத்தம மனிதர்” என்று போற்றியவர்?
திகம்பர சாமியார்2. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
பெரியபுராணம்
3. சமரச சுத்த சன்மார்க்கப்பாதை அமைத்தவர்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள்
4. இராமலிங்கரின் ஆசிரியர் பெயர்?
சபாபதி
5. 'இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்' என்று இராமலிங்கரை கூறியவர்?
திகம்பர சாமியார்
6. தெய்வமணிமாலை பாடல்களின் தொகுப்பை இராமலிங்கர் யார் மீது பாடினார்?
சென்னையிலுள்ள கந்தகோட்டத்து இறைவன்
7. வள்ளலார் பதிப்பித்த நூல்களில் இல்லாதது?
1. சின்மய தீபிகை 2.ஒழிவிலொடுக்கம் 3. தொண்டமண்டல சதகம் 4. தெய்வமணிமாலை
8. வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவிய இடம்?
வடலூர்
9. வள்ளலாரைப் "புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றியவர்?
பாரதியார்
திருவருட்பா பாடல்கள் விளக்கம்
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
- இராமலிங்க அடிகளார்(code-box)
பாடல்பொருள்
கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான்;
என் சிந்தனையில் கலந்து இருக்கிறான்;
என் எண்ணத்தில் கலந்து இருக்கிறான்;
என் பாட்டில் கலந்து இருக்கிறான்;
பாட்டின் இசையில் கலந்து இருக்கிறான்;
அவன், என் உயிரில் கலந்து இருக்கிறாள்.
திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பற்றிய 10 அடிகள்
- இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
- இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
- பெற்றோர் இராமையா-சின்னம்மையார்.
- ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை.
- இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
- சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர். அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர்.
- அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
- வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
- வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடிய மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், பசிப்பிணி தீர்த்து வருகிறது.
- இவர் வாழ்ந்த காலம் 05. 10. 1823முதல் 30.01.18.
இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 20. இராமலிங்க அடிகளார் பற்றிய செய்திகள் என்ற தொகுப்பிற்காக பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise
பிரித்து எழுதுக.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் மருதூர் என்னும் ஊரில் பிறந்தார்.
2. இராமலிங்க அடிகளாரது பாடல்கள் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
3. திருவருட்பாவை இராமலிங்க அடிகளார் இயற்றினார்.
குறுவினாக்கள்
1. யாரை நாம் வள்ளலார் என அழைக்கிறோம் ?
இராமலிங்க அடிகளார் அவர்களை நாம் திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கிறோம்.
2. இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதிய உரைநடை நூல்கள்
இ) சிறுவினாக்கள்
1. இராமலிங்க அடிகளார் பற்றிக் குறிப்பு எழுதுக.
இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
பெற்றோர் இராமையா-சின்னம்மையார்.
ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை.
இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர். அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர்.
2. இறைவன் எங்கெங்கு இருப்பதாக இராமலிங்க அடிகளார் கூறுகிறார் ?
கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான்; என் சிந்தனையில் கலந்து இருக்கிறான்; என் எண்ணத்தில் கலந்து இருக்கிறான்; என் பாட்டில் கலந்து இருக்கிறான்; பாட்டின் இசையில் கலந்து இருக்கிறான்; அவன், என் உயிரில் கலந்து இருக்கிறாள்.
சரியா, தவறா ?
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வள்ளலார் கூறியுள்ளார் - சரி
Please share your valuable comments