பழமொழி நானூறு பற்றிய குறிப்புகள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. 

பாடத்தலைப்புகள்(toc)

பழமொழி நானூறு நூல் குறிப்பு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. 

மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தைச் சுருக்கமாகக் கூறியதே பழமொழியாகும்.

வேறு பெயர்கள் - பழமொழியை 

  • மூதுரை, 
  • முதுமொழி, 
  • உலக வசனம்,
  • பழமொழி 

எனவும் கூறுவர்.  

இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. 

இது தமிழறிஞர்களால் நாலடியாருக்கு இணையாக வைத்து மதிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம்,மன இயல்பு ஆகியவற்றை அறிவதற்குரிய செய்திக் குறிப்புகளை இந்நூல் பெற்றுள்ளது.

பாவகை :

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம் பெறுமாறு பாடப்பெற்ற பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும். 

34 அதிகாரங்களில் அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

சிறந்தத் தொடர்கள் 

  • ஆற்றுணா வேண்டுவது இல்
  • ஒன்றுறா முன்றிவோ இல்
  • பாம்பறியும் பாம்பின் கால்
  • முள்ளினால் முள் களையுமாறு
  • இறைத்தோறும் ஊறுங்கிணறு
  • தனிமரம் காட்டாவதுஇல்
  • ஆயிரங் காக்கைக் கோர்கல்
  • திங்களை நாய் குரைத்தன்று
  • கற்றலின் கேட்டலே நன்று 

கீழ்காணும் இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல் என்பது. இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள்.

பழமொழி நானூறு பாடல்கள் விளக்கம் 

பழமொழி நானூறு கூறும் கல்வியின் சிறப்பு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

 நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

 வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்

 ஆற்றுணா வேண்டுவது இல்.


- முன்றுறை அரையனார் (code-box)


பாடல்பொருள்

கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; தம்முடைய நாடுகளே. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

எந்நாட்டிற்குச் சென்றாலும், அந்நாட்டில் கற்றோரை வரவேற்று உணவு அளிப்பர் என்பது பாடல் உணர்த்தும் கருத்து.

சொல்பொருள்

ஆற்றவும் - நிறைவாக; 

நாற்றிசை - நான்கு + திசை;

தமவேயாம் - தம்முடைய நாடுகளே; 

ஆற்றுணா -ஆறு + உணா; 

ஆறு - வழி; 

உணா - உணவு. 

வழிநடை உணவு. இதனைக் 'கட்டுச்சோறு' என இக்காலத்தில் கூறுவர். 

பழமொழி நானூறு ஆசிரியர் குறிப்பு

முன்றுறை அரையனார் ஆசிரியர் குறிப்பு TNPSC

பழமொழி என்னும் இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். 

  • முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
  • அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். 

இவர் பாண்டிய நாட்டு முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.

இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 2. அறநூல்கள் பழமொழி நானூறு  பகுதிக்காகப்  பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad