ஆறுவகைப் பெயர்ச்சொற்கள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.

பெயர்ச்சொற்கள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

பெயர்ச்சொற்கள்

  • ஒரு பெயர் தனிச்சொல்லாக வரும் பொழுது சொற்பொருளைக் குறிக்கும்.

மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

  • பெயரையும், இடத்தையும் குறித்து வந்ததால் அது பெயர்ச்சொல் ஆகும்.

    பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

    அவை,

    1. பொருட்பெயர்
    2. இடப்பெயர்
    3. காலப்பெயர்
    4. சினைப்பெயர்
    5. பண்புப்பெயர் 
    6. தொழிற்பெயர்
    என ஆறுவகைப்படும்.

    இந்த ஆறுபெயர்களின் அடியாகவும் ஆகுபெயர் தோன்றும் என்பதறிக.

    நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

    பெயர்ச்சொற்கள் எடுத்துக்காட்டு

    மல்லிகை பொருள் பெயர்
    வகுப்பு இடப்பெயர்
    பொழுது காலப்பெயர்
    கொழுந்து சினைப்பெயர்
    கார்(கருமை) பண்புப்பெயர்
    ஆட்டம் தொழில் பெயர்

    திணை அடிப்படையில் பெயர்ச்சொற்கள்

    திணை அடிப்படையில், பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் எனப் பிரிக்கிறோம். 

    • வீரன், அம்மா, நடிகன், கண்ணகி - உயர்திணைப் பெயர்கள்
    • பூ, மரம், பூனை, குருவி - அஃறிணைப் பெயர்கள்

    பெயர்ச்சொல்லை உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டாகப் பிரிக்கலாம்.

    பெயர், வினைச்சொற்களை ஆண்பால், பெண்பால், பலர்பால், பலவின்பால், ஒன்றன்பால் எனவும் பிரிக்கிறோம்.


    ஆறுவகைப் பெயர்ச்சொற்கள்

    பொருட்பெயர் :

    பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர்.

    (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

    பொருட்பெயர் இருவகைப்படும்.

    • உயிருள்ள பொருள்: (எ.கா.) குமரன், தென்னை, ஓணான், மலர்க்கொடி, செம்பருத்தி, வெள்ளாடு....
    • உயிரற்ற பொருள்; (எ.கா.) அடுப்பு, தட்டு, நீர், மண், நாற்காலி, எண்ணெய், காற்று...
    • மல்லிகை

    மல்லிகை என்பது மணம்மிக்க மலரை உடைய ஒரு கொடியின் பெயர். கொடி என்பது ஒரு பொருள் ஆதலால் அது பொருள்பெயர் ஆகும்.

    இடப்பெயர் :

    ஓரிடத்தைக் குறிப்பது இடப்பெயர் ஆகும்.

    (எ.கா) 

    • வீடு, தெரு, பள்ளி, கோவில், மக்கள் வாழிடம், தோட்டம், காடு, மலை...
    • அன்பகம், பெரியார் தெரு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருநின்றவூர் தாயார் கோவில், திருமழிசை, வாழைத்தோட்டம், ஆர்க்காடு, கொல்லிமலை.
    • வகுப்பு

    வகுப்பு என்பது மாணவர் பலர் சேர்ந்து கல்வி பயிலும் ஓர் இடத்தைக் குறிக்கும். எனவே இச்சொல் இடப்பெயர் ஆகும்.

    காலப்பெயர் :

    கண் இமைக்கும்நொடி பொழுது முதல் ஊழிக்காலம் வரை எல்லாமே காலத்தைக் குறிக்கும் பெயர்கள்.

    (எ.கா.) 

    • நொடி, வினாடி, மணி, பொழுது, கிழமை, வாரம், திங்கள், ஆண்டு, பருவகாலம்
    • ஐந்துநொடி, முப்பது வினாடி, பன்னிரண்டு மணி, விடியற்பொழுது, நீங்கள்கிழமை, ஒருவாரம், தைத்திங்கள், ஓராண்டு, மழைக்காலம்
    • பொழுது

    பொழுது என்பது கால அளவைக் குறிப்பிடுவதால் காலப்பெயர் ஆகும்.

    சினைப்பெயர் :

    சினை என்பது ஒன்றன் உறுப்பைக் குறிப்பது. மனித உறுப்புகள், விலங்கு உறுப்புகள், தாவர பகுதிகள், பொருள்களின் பகுதிகள் என முழுமையான ஒன்றின் பகுதிகளை குறிக்கும் பெயர்கள் சினைப் பெயர்களாகும்.

    (எ.கா.) கண், கை, இலை, கிளை

    • மனித உறுப்புகளின் பெயர்கள் - தலை, கண், மூக்கு, செவி, நாக்கு, பல், வயிறு, கை, கால், விரல், நகம்....
    • தாவரப் பகுதிகளின் பெயர்கள்- 
    • வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி,  விதை
    • கொழுந்து

    கொழுந்து என்பது இலையின் இளமை அல்லது தளிரின் பெயரைக் குறிப்பதாகும். தளிராக உள்ள இலை தாவரத்தின ஒரு பகுதி ஆகையால் இது சினைப்பெயர் ஆகும்.

    பண்புப்பெயர் (குணப்பெயர்) :

    • பண்புப்பெயரைப் குணப்பெயர் எனவும் கூறுவர்.

    குணப்பெயர்கள் நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.

    (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

    • பத்து மீட்டர் துணி, ஐந்துபடி எண்ணெய், பத்து கிலோ அரிசி, வட்டப் பலகை, சதுரவீடு, செவ்வகப் புத்தகம், முக்கோணக் கூம்பு,
    • கார்

    கார் என்னும் கருமை என்பது வண்ணத்தின் பெயரைக் குறிப்பதாகும். வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியன பண்புப் பொருள் தருவன. எனவே கார் என்பது பண்புப் பெயர் ஆகும்.

    பண்புப்பெயர் வகைகள் 

    பண்புப்பெயர் ஐந்து வகைப்படும். 

    அவை, 

    • குணம்,
    • சுவை, 
    • நிறம், 
    • அளவு, 
    • வடிவம். 

    குணம்

    • அன்பு, 
    • வெறுப்பு 
    • சினம் (கோபத்திற்கான தமிழ்ச்சொல்)

    சுவை

    • இனிப்பு, 
    • கார்ப்பு

     நிறம்

    • கருமை, 
    • சிவப்பு

    அளவு 

    1. எண்ணல் அளவைப் பெயர் - ஒன்று, இரண்டு 
    2. எடுத்தலளவைப் பெயர் - ஒரு கிலோ
    3. முகத்தலளவைப் பெயர் - ஒரு லிட்டர்
    4. நீட்டலளவைப் பெயர் - ஒரு மீட்டர்

    வடிவம்

    • சதுரம், 
    • வட்டம்

    பண்புப்பெயர் விகுதிகள் - குணப்பெயர் விகுதிகள்

    மை,சி,ஐ,பு,உ,கு,றி,று,அம், நர் போன்ற பத்தும் பிறவும்.

    பண்புப்பெயர் விகுதிகள்
    நன்று நல் + று
    நலம் நல் + அம்
    நன்னர் நல் + நர்
    வெண்மை வெள்ளை + மை
    தொல்லை தொல் + ஐ
    மாட்சி மாண் + சி
    மாண்பு மாண் + பு
    மழவு மழ + உ
    நன்கு நல் + கு
    நன்றி நல் + றி


    தொழிற்பெயர் :

    செய்யும்தொழிலைக் குறிக்கும் பெயர்களெல்லாம் தொழிற்பெயர்கள்.

    (எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

    • கற்பித்தல், நடத்தல், ஆடல், பாடல்,
    • ஆட்டம்

    ஆட்டம் என்பது ஆடும் செயலைக் குறிக்கும் பெயர்ச்சொல். செயல், வினை, தொழில் என்பன ஒரு பொருள் குறித்த சொற்கள். எனவே ஆட்டம் என்பது தொழிற்பெயர் ஆகும்.

    தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?

    அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம்.

    காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்

    காவியா பள்ளிக்குச் சென்றாள்- இடப்பெயர்

    காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்

    காவியா தலை அசைத்தாள்- சினைப்பெயர்

    காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெயர் 

    காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும்- தொழிற்பெயர்

    நினைவு கூர்க 

    இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 1 பகுதி - அ இலக்கணம் கீழ் இலக்கண குறிப்பறிதல் பகுதிக்காக 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


    7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - ஆறுவகைப் பெயர்ச்சொற்கள் மாதிரி வினாக்கள்

    உரிய விடையைத் தேர்வு செய்க.

    அ. மதுரை என்பது ......... பெயர்.  

    1. காலப்பெயர்

    2. குணப்பெயர்

    3. இடப்பெயர்

    ஆ.பூங்கொடி பூப்பறிக்கிறாள். இத்தொடரிலுள்ள 'பூ என்பது........பெயர்.

    1. பொருட்பெயர் 

    2. சினைப்பெயர் 

    3. தொழிற்பெயர்

    இ. சதுரம் என்பது.........பெயர்.

    1. பொருட்பெயர் 

    2. காலப்பெயர்

    3. குணப்பெயர்

    கோடிட்ட இடங்களில் ஏற்ற பெயர்ச்சொற்களை எழுதுக.

    அ. மரம் அசைகிறது.

    ஆ. கோவிலில் பூசை நடக்கிறது. 

    இ. நேற்று பள்ளிக்கு விடுமுறை.

    ஈ. கிளை உடைந்துவிட்டது.

    உ. முக்கோணம் மூன்று கோணங்களை உடையது.

    ஊ. ஏய்தலில் வல்லவன் இராமன்.

    குறுவினாக்கள்

    1. அறுவகைப்பெயர்கள் யாவை ?

    2. காலப்பெயர்கள் நான்களை எழுதுக.

    3. சினைப்பெயர்கள் நான்கனை எழுதுக.

    4. இடப்பெயர்கள் நான்களை எழுதுக.

    சிறுவினாக்கள்

    1. அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.

    2. நும் பாடப்பகுதியில் உள்ள பெயர்ச்சொற்களைத் தொகுத்து வகைப்படுத்துக.

    ஆகுபெயர் என்றால் என்ன?

    ஒரு பெயர் தன்னோடு தொடர்புடைய தொடர்ப் பொருளைத் தொன்று தொட்டு உணர்த்தி வந்தால் அதனைத் தமிழ் இலக்கணம் ஆகுபெயர் எனக் கூறுகிறது.

    ஒரு பொருளின் இயற்பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குப் பெயராகி வருவது ஆகுபெயராகும்.

    ஆகுபெயர் எடுத்துக்காட்டு

    • ஊர் சிரித்தது

    இதில் 'ஊர்' என்ற சொல் ஊரைக் குறிக்காமல் அதோடு தொடர்புடைய ஊர் மக்களைக் குறிப்பதால் இஃது ஆகுபெயராகும்.

    "பொருள்முதல் ஆறோடளவைசொல் தானி
    கருவி காரியம் கருத்த னாதியுள்
    ஒன்றன் பெயரான அதற்கியை பிறிதைத்
    தொன்முறை உரைப்பன ஆகு பெயரே" - ந.நூற்பா 290


    இவற்றால்,

    • ஒரு பெயர்ச் சொல்தான் ஆகுபெயராய் வரும்.
    • அப்பெயர்ச்சொல் தன் சொற்பொருளை உணர்த்தாது.
    • அச்சொல் தன்னோடு தொடர்புடைய தொடர்ப் பொருளை இடம் பெறும் வாக்கியத்தின் பொருள் சூழலுக்கு ஏற்ப உணர்த்தும்.
    பெயர்கள் தாம் ஆகுபெயராக வரும் என்பது முன்னதாகக் கூறப்பட்டது. அதேபோல் பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் என்பதும் விளக்கப்பட்டது. இவற்றால் ஆகுபெயர் ஆறுவகையாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் கருதலாம். ஆனால் நுட்பமான பொருள் விளக்கம் கருதி ஆகுபெயர்கள் வகைகள் பலவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    எந்தப் பெயர் தன்னோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்கு ஆகி வருகிறதோ அந்தப் பெயரால் ஆகுபெயர் குறிக்கப் பெறுவதை கவனிக்க.

    பொருள்பெயர் ஆகுபெயரானால் பொருளாகுபெயர், இடப்பெயர் ஆகுபெயரானால் இடவாகுபெயர், காலப்பெயர் ஆகுபெயரானால் காலவாகுபெயர், இவ்வாறே ஏனைய ஆகுபெயர்களும் பெயர் பெறக் காணலாம்.

    ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

    பொருளாகு பெயர் அல்லது முதலாகு பெயர்

    • மல்லிகை சூடினாள்

    என்னும் வாக்கியத்தில் 'மல்லிகை' என்பது பொருள்பெயர்,ஆனால் அது வேர், தண்டு, இலை, பூ ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு பொருளான கொடியைக் குறிக்கவில்லை. மாறாக அக்கொடியின் ஒரு பகுதி அல்லது உறுப்பு (சினை) ஆகிய பூவை மட்டும் குறித்து வந்துள்ளது. அதாவது ஒரு முழுப்பொருள் அதன் ஓர் உறுப்பை மட்டும் இங்கு உணர்த்துகிறது. இவ்வாறு ஒருவாக்கியத்தில் ஒரு பொருள் பெயர் தன்னோடு தொடர்புடைய வேறு பொருள் குறித்து வருமானால் அதனைப் பொருளாகுபெயர் என்பர்.

    • இதனை முதலாகு பெயர் என்றும் கூறுவர்.

    பொருளாகு பெயர் அல்லது முதலாகு பெயர் என்பதில், முழுப் பொருளின் பெயர் அதன் ஒரு சினையைக் குறித்து வரும் என்பதறிக

    இடவாகுபெயர்

    • வகுப்புக் கலைந்தது

    என்னும் வாக்கியத்தில் 'வகுப்பு' என்பது இடப் பெயர். அந்த இடத்தில் கல்வி கற்கும் மாணவரைக் குறிப்பதாக வாக்கியத்தில் பொருள்படுகிறது. இங்கு வகுப்பு என்னும் இடப்பெயர் அதனோடு தொடர்புடைய மாணவரைக்குறித்தமையால் இடவாகுபெயர் ஆயிற்று.

    காலவாகுபெயர்

    • பொழுது சாயந்தது

    என்னும் வாக்கியத்தில் 'பொழுது' என்னும் சொல் காலப்பெயர். ஆனால் பொழுது சாயந்தது என்னும் தொடரில் காலத்தைக் குறிக்காமல் சூரியனைக் குறிக்கிறது. எனவே காலவாகுபெயர் ஆயிற்று.

    சினையாகுபெயர்

    • கொழுந்து நட்டனர்

    இலையின் தளிர்ப்பருவத்தைக் குறிக்கும் பெயர் 'கொழுந்து' ஆகும். இலை என்பது தாவரத்தின் ஓர் உறுப்பு அல்லது சினையாகும். 'கொழுந்து நட்டனர்’ என்னும் வாக்கியத்தில் கொழுந்து என்னும் இலைப்பெயர் 'மருக்கொழுந்து' என்னும் செடியைக் குறிப்பிடுகிறது. இதனால் இது சினையாகுபெயர் ஆயிற்று. ஓர் உறுப்பின் பெயர் முழுப்பொருளையும் ஒரு தொடரில் குறித்து வந்தால் அச்சொல் சினையாகுபெயர் என அழைக்கப்படும்.

    இது பொருளாகுபெயர் அல்லது முதலாகுபெயரின் மறுதலையாக அமைந்துள்ளமை காண்க.

    பொருளாகுபெயர் முழுப்பொருள் உறுப்பைக் குறித்தல் (மல்லிகை - பூ) மல்லிகை சூடினாள்
    சினையாகுபெயர் ஓர் உறுப்பு முழுப் பொருளைக் குறித்தல் (கொழுந்து - மருக்கொழுந்து) கொழுந்து நட்டனர்

    தொழிலாகுபெயர்

    • ஆட்டம் முடிந்தது

    ஆடும் செயலை அல்லது தொழிலைக் குறிப்பிடும் பெயர் 'ஆட்டம்' என்பதாகும். 'ஆட்டம் முடிந்தது' என்னும் வாக்கியத்தில் ஆட்டம் என்பது தொழில் பெயரைக் குறிப்பதற்காக வரவில்லை. ஆடும் செயலோடு தொடர்புடைய கலை நிகழ்ச்சியைக் குறித்து வந்துள்ளது. அதனால் ஆட்டம் என்பது தொழிலாகுபெயர் ஆயிற்று.

    பண்பாகுபெயர்

    • கார் பெய்தது

    பண்புப் பெயர் என்பது வண்ணம், ,வடிவம், அளவு, சுவை, தன்மை ஆகியனவற்றைக் குறிக்கும் சொல்லாகும். கார் என்பதற்குக் கருமை என்பது பொருள். எனவே இது வண்ணப் பண்புப் பெயர் எனப்படும்.

    'கார் பெய்தது' என்னும் தொடரில் 'கரிய வண்ணம் உடைய மேகம்' எனக் கார் என்னும் சொல் பொருள்படுகிறது. எனவே இது பண்பாகுபெயர் ஆயிற்று.

    நினைவுகூர்க:

    பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.


    1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர் - சினைப்பெயர்

    2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும் - தொழிற்பெயர்

    3. குழந்தை தெருவில் விளையாடியது - இடப்பெயர்

    4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார் - 
    பொருட்பெயர்

    5. மாலை முழுதும் விளையாட்டு - காலப்பெயர்

    6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் - குணப்பெயர்

    பெயருக்கேற்ற வினைச்சொற்களையும் வினைக்கேற்ற பெயர்ச்சொற்களையும் கண்டறிந்து எழுதுக..

    (நிரம்பியது, மின்னியது, இடித்தது, கறுத்தது, வீசியது, பெய்தது, பெருகியது, ஊர், வளம், வயல்)


    வானம் கறுத்தது.

    வெள்ளம் பெருகியது.

    காற்று வீசியது.

    ஏரி நிரம்பியது.

    மின்னல் மின்னியது.

    வயல் விளைந்தது.

    இடி இடித்தது.

    வளம் கொழித்தது

    மழை பெய்தது.

    ஊர் செழித்தது.

    பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.


    விடியலில் துயில் எழுந்தேன் - காலப்பெயர்

    இறைவனைக் கை தொழுதேன்  - சினைப்பெயர்

    நான் மதுரைக்குச் சென்றேன் - இடப்பெயர்

    புத்தகம் வாங்கி வந்தேன் - பொருட்பெயர்

    கற்றலைத் தொடர்வோம் இனி - தொழிற்பெயர்

     நன்மைகள் பெருகும் -பண்புப்பெயர்

    குறுவினா

    1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    பெயர்ச்சொற்கள் ஆறு வகைப்படும்.
    அவை,
    1. பொருட்பெயர்
    2. இடப்பெயர்
    3. காலப்பெயர்
    4. சினைப்பெயர்
    5. பண்புப்பெயர் 
    6. தொழிற்பெயர்

    சிறுவினா

    1.  பெயர்ச்சொற்களை எழுதுக.
    அறுவகைப் பெயர்ச்சொற்கள்
    1. பொருட்பெயர்
    2. இடப்பெயர்
    3. காலப்பெயர்
    4. சினைப்பெயர்
    5. பண்புப்பெயர் 
    6. தொழிற்பெயர்

    2. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

    பொருட்பெயர் பொருளைக் குறிக்கும் காவியா புத்தகம் படித்தாள்
    இடப்பெயர் ஓரிடத்தைக் குறிப்பது காவியா பள்ளிக்குச் சென்றாள்
    காலப்பெயர் காலத்தைக் குறிக்கும் காவியா மாலையில் விளையாடினாள்
    சினைப்பெயர் ஒன்றன் உறுப்பைக் குறிப்பது காவியா தலை அசைத்தாள்
    குணப்பெயர் குணப்பெயரைப்
    குறிக்கும்
    காவியா இனிமையாகப் பேசுவாள்
    தொழிற்பெயர் தொழிலைக் குறிக்கும் காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும்

    தொடர்புடையவை

      கருத்துரையிடுக

      0 கருத்துகள்
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

      Top Post Ad