தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
சொற்களின் இலக்கண வகை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்
பாடத்தலைப்புகள்(toc)
இலக்கண அடிப்படையில் தமிழில் நால்வகைச் சொற்கள் - Four types of words in Tamil
தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும்.- ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
சொல் எடுத்துக்காட்டு
- ஈ,
- பூ,
- மை,
- கல்,
- கடல்,
- தங்கம்.
இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
சொல் பாகுபாடு
இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர்வினை
எனஇரண் டாகும் இடைஉரி அடுத்து
நான்குமாம், திசை வடசொல், அணு காவழி
- நன்னூல் 270(code-box)
சொல் இலக்கணம் இரண்டு வகைப்படும்
சொல்களை இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.
சொற்களின் இலக்கண வகை:
1.பெயர்ச்சொல், 2.வினைச்சொல், 3.இடைச்சொல், 4.உரிச்சொல் என நான்கு.
சொற்களின் இலக்கிய வகைகள்:
1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
எனவே, (மேலே) குறித்த சொல், 1. பெயர் இயற்சொல், 2. பெயர்த் திரிசொல், 3.வினை இயற்சொல். 4. வினைத் திரிசொல், 5. இடை இயற்சொல், 6. இடைத் திரிசொல், 7. உரி இயற்சொல், 8. உரித் திரிசொல் என எட்டு வகைப்படும். அவற்றுடன் 9. திசைச் சொல்லும், 10. வடசொல்லும் சேர்ந்தால் சொல் பத்து வகைப்படும் என அறிக.
பெயர்ச்சொல்
பெயரையும், இடத்தையும் குறித்து வந்ததால் அது பெயர்ச்சொல் ஆகும்.- ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
- சான்று: பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
அவை,
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- குணப்பெயர்
- தொழிற்பெயர்
என ஆறுவகைப்படும்.
இந்த ஆறுபெயர்களின் அடியாகவும் ஆகுபெயர் தோன்றும் என்பதறிக.
பெயர்ச்சொல் எடுத்துக்காட்டு
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
மல்லிகை | பொருள் பெயர் |
வகுப்பு | இடப்பெயர் |
பொழுது | காலப்பெயர் |
கொழுந்து | சினைப்பெயர் |
கார்(கருமை) | பண்புப்பெயர் |
ஆட்டம் | தொழில் பெயர் |
வினைச்சொல்
வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். வினைச்சொல் என்பது செயலையும்
காலத்தையும் காட்டும்; வேற்றுமை உருபு ஏற்காது.
- செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
- சான்று: வா, போ, எழுது, விளையாடு.
வினைச்சொல் எடுத்துக்காட்டு
- இராமன் வந்தான்
- கண்ணன் நடந்தான்
இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள். அவையே எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள். இவையே பயனிலைகளாகவும் (முடிக்கும் சொற்களாகவும்) உள்ளன. இவ்வாறு, எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.
இடைச்சொல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
இடைச்சொல் என்பது பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொற்களிலிருந்து வேறுபட்டது: இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது; தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது.
- பெயர், வினைச் சொற்களை இடமாகக் கொண்டு நடப்பதால் இடைச்சொல் எனப்பட்டது.
சான்று
இது பெயர், வினைச்சொற்களுக்கு உள்ளும், அவற்றின் முன்னும் பின்னும் ஒன்றுபட்டு நடக்கும் தன்மை உடையது; ஓர் இடைச்சொல்லோ அல்லது பலவோ பெயர் வினைச் சொற்களின் அக, புற உறுப்பாக இடம்பெறும்.
- இது தனியாக வந்தால் பொருள் தராது
- பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களைச் சார்ந்தே வரும்.
இடைச்சொல் எடுத்துக்காட்டு
- இராமனைப்(ஐ) பார்த்தேன்,
- தம்பியும்(உம்) வந்தான்.
இதிலுள்ள 'ஐ' , 'உம்' என்பது இணைப்பு இடைச்சொல் சொல்லாக
வருகிறது.
- உண்ணாய்
வினையின் அகத்துறுப்பாய்த் 'ஆய்' என்னும் விகுதி இடைச்சொல் பெற்று வந்தது.
- அதுமன்
பெயரின் புறத்துறுப்பாய் 'மன' என்னும் இடைச்சொல் பின்னால் வந்தது.
உரிச்சொல்
பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு
பெயர் சொற்கள், வினைச் சொற்களைவிட்டு நீங்காது
செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன உரிச்சொற்கள்.
- பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது.
சான்று
இசையும் குறிப்பும் பண்புமாகிய பலவேறு வகைப்பட்ட தன்மைகளை உணர்த்தும் சொல்லாக விளங்குவது உரிச்சொல் ஆகும்.
- இசை என்பது ஓசை;
- குறிப்பு என்பது மனத்தால் உணரப்படுவது;
- பண்பு என்பது ஐம்பொறிகளால் உணரப்படுவது.
இவ்வாறு உரிச்சொற்கள் பெயர் வினைகளுக்கு அடையாக வரும். செய்யுளுக்கு உரிமை உடையனவாய் இச்சொற்கள் பயின்று வரும்.
- ஓர் உரிச்சொல் பல குணங்களைக் குறித்தும் வரும்.
- பல உரிச்சொற்கள் ஒரு குணத்தைக் குறித்தும் வரும்.
உரிச்சொல் எடுத்துக்காட்டு
- மா- மாநகர் (மா - இதன் பொருள் பெரிய),
- சால- சாலச்சிறந்தது
ஒரு குணத்தைக் குறித்து வரும் பல உரிச்சொற்கள்
எடுத்துக்காட்டு | பொருள் | உரிச்சொற்கள் வகைகள் |
---|---|---|
சால, உறு, தவ, நனி, கூர், கழி | மிகுதி | ஒரு குணத்தைக் குறித்து வரும் பல உரிச்சொற்கள். |
பல குணங்களைக் குறித்து வரும் ஓர் உரிச்சொல்
எடுத்துக்காட்டு | பொருள் | உரிச்சொற்கள் வகைகள் |
---|---|---|
கடி | காப்பு, கூர்மை, நாற்றம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல, கரிப்பு | பல குணங்களைக் குறித்து வரும் ஓர் உரிச்சொல். |
நினைவுகூர்க:
கீழ்க்காணும் சொற்றொடர்களில் பெயரையும் வினையையும் சுட்டுக.
பெயர் | வினை | |
---|---|---|
மரம் ஆடியது | மரம் | ஆடியது |
குமரன் வருகிறான் | குமரன் | வருகிறான் |
கீழ்க்காணும் சொற்றொடர்களில் பொருத்தமான பெயர்ச்சொல்லை இட்டு நிரப்புக.
1. அமுதன் தூங்கினான்.
2. பூ பூத்தது.
3. தமிழ்நாடு மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்றது.
4. மல்லி அழுதாள்.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் பொருத்தமான வினைச்சொல்லை இட்டு நிரப்புக.
1. கூட்டம் கூடியது
2. ஆந்தை அலறியது
3. வின்செண்ட் பாடம் கற்பித்தார்
4. இசுமாயில் தண்ணீர் குடித்தான்.
பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக.
1.வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.
உம் - இடைச்சொல்
2. நாள்தோறும் திருக்குறளைப் படி.
ஐ - இடைச்சொல்
3. 'ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது" என்றார் ஆசிரியர்.
சால - உரிச்சொல்கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
இடைச்சொல்- மற்று
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - நால்வகைச் சொற்கள் மதிப்பீடு
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக.
1.அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு
சொல்வகை - இடைச்சொல்
2. அ) ஓடினான் ஆ) மதுரை இ) கால் ஈ) சித்திரை
சொல்வகை - பெயர்ச்சொல்
3. அ) சித்திரை ஆ) வந்த இ) நடந்து ஈ) சென்றான்
சொல்வகை - வினைச்சொல்
4. அ) மா ஆ) ஐ இ) மற்று ஈ) உம்
சொல்வகை - உரிசொல்
குறுவினாக்கள்
1. சொல் என்றால் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
2. சொற்களின் வகைகளை எழுதுக.
சொற்களின் இலக்கண வகை:
1.பெயர்ச்சொல், 2.வினைச்சொல், 3.இடைச்சொல், 4.உரிச்சொல் என நான்கு.
சொற்களின் இலக்கிய வகைகள்:
1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.
3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
தொடர்புடையவை
- ஆறுவகைப் பெயர்ச்சொற்கள் வகைப்படுத்துக
- இலக்கண அடிப்படையில் தமிழில் நால்வகைச் சொற்கள்
- இலக்கியவகைச் சொற்கள்
- வழக்கு எத்தனை வகைப்படும்?
- தொழிற்பெயர்
- ஆகுபெயர்
Please share your valuable comments