நிறுத்தக்குறிகள் - Punctuation in Tamil

நிறுத்தக்குறிகள் (Punctuation in Tamil)

இன்றுமுதல், தோசைக்குத் துவையல் இல்லை.

இன்று, முதல்தோசைக்குத் துவையல் இல்லை.

இத்தொடர்களைப் பொருள்விளங்குமாறு படித்துப் பார்க்க. இருதொடர்களுக்கும் வேறுபாடு அறியமுடிகிறதல்லவா?

முதல் தொடர் இன்றுதொடங்கித் தோசைக்குத் துவையல் இல்லை எனவும், அடுத்ததொடர் முதல் தோசைக்கு மட்டும் துவையல் இல்லை எனவும் வெவ்வேறு பொருள் தருகிறதன்றோ? இரண்டு தொடரும் ஒன்றே ஆயினும், இருவேறு பொருள்கள் தரக் காரணம் நிறுத்தக் குறியீடு தானே! அக்குறியீடுகள் குறித்து இங்குக் காண்போம்.

பாடத்தலைப்புகள்(toc)

நிறுத்தக்குறிகள்

நிறுத்தக்குறிகள் என்றால் என்ன?

செய்யுளையோ உரைநடையையோ படிக்கும்போது, பொருளைத் தெளிவாகப் புரிந்து படிக்கவும், உரிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பயன்படுத்துவது நிறுத்தக்குறிகளாகும். நிறுத்தக்குறிகளுள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

காற்புள்ளி (,) - (Camma in Tamil)

பல பொருள்களைத் தொடர்ந்து சொல்லும்போது, ஒவ்வொன்றின் பின்னும் காற்புள்ளி இடுதல் வேண்டும். (கடைசிச் சொல்லுக்குப்பின் காற்புள்ளி தேவையில்லை)

(எ.கா.) மா, பலா, வாழை முக்கனிகள்.

பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம், மேற்கோள் குறிகளுக்குமுன், ஆதலால், ஆகவே முதலிய சொற்களின்பின், முகவரியில் இறுதிவரி தவிர்த்த பிற இடங்களில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.

1.பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.

(எ.கா) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.

2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.

(எ.கா.) அன்புள்ள நண்பா,

3.வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.

(எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.

4. மேற்கோள் குறிகளுக்கு (") முன் காற்புள்ளி வரும்.

;(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து," நிலா நிலா ஓடி வா" என்று பாடியது.

5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.

(எ.கா.) ச.ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.

அரைப்புள்ளி (;) - ( Semi colon in Tamil)

ஓர் எழுவாய், பல பயனிலைகளைக் ( வினைமுற்றுகளை )கொண்டு முடியும்பொழுது, ஒவ்வொரு பயனிலைக்குப் பின்னரும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.

(எ.கா.) சிந்தனைச்செல்வன் நன்றாகப் படித்தான்; முதல் மதிப்பெண் பெற்றான்; பரிசு கிடைத்தது.

1.தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.

(எ.கா.) ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள்

 கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.

2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.

(எ.கா.) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.

முக்காற்புள்ளி ( : ) - ( Colon in Tamil )

சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்.

(எ.கா.) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.

முற்றுப்புள்ளி (.) - ( Full stop in Tamil )

ஒரு தொடர் முற்றுப்பெற்றதனைக் குறிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

(எ.கா.) கண்ணன் பள்ளிக்குச் சென்றான்.

1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.

(எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.

(எ.கா.)
  • திரு.வி.க.
  • மா.க.அ.
  • ஊ.ஒ.ந.நி.பள்ளி.

3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும். (எ.கா.) நெ.து.சுந்தரவடிவேலு.

வினாக்குறி (?) - (Question Mark or Interrogation Mark in Tamil)

ஒரு வினாத்தொடரின் இறுதியில் வினாக்குறி இடுதல் வேண்டும்.

(எ.கா.) பொற்கொடி பாடம் படித்துவிட்டாயா?

வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும்.

(எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?

வியப்புக்குறி அல்லது உணர்ச்சிக்குறி (!) - (Exclamation Mark in Tamil)

ஒரு செய்தியை உணர்ச்சியாகக் கூறும்போது உணர்ச்சிக் குறியிடுதல் வேண்டும்.

(எ.கா.) என்னே, இப்பூவின் மணம்!

மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.

(எ.கா.)

  • தமிழின் இனிமைதான் என்னே! வியப்பு
  • பாம்பு! பாம்பு!
  • அந்தோ! இயற்கை அழிகிறதே!

ஒற்றை மேற்கோள் குறி (' ')

ஓர் எழுத்தையோ சொல்லையோ சொற்றொடரையோ தனியே குறிக்கும் இடத்திலும், ஒரு சொற்றொடரில் நூலின் பெயர், பழமொழி முதலியன வருமிடத்திலும் ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.

 'எழில்' என்றால் 'அழகு' என்பது பொருள்.

பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்' மிகச் சிறந்த படைப்பு. 

'சுத்தம் சோறு போடும்' என்பது பழமொழி. 

வண்ணமிடும்போதும், தடித்த எழுத்துகளில் எழுதும்போதும், அடிக்கோடு இடும்போதும் இக்குறி இடத் தேவையில்லை.

தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.

(எ.கா.)

  • 'நல்ல' என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
  • கூட்டத்தின் தலைவர், "அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது 'தலைப்பில்லை' என்னும் தலைப்பில் பேசுவார் " என்று அறிவித்தார்.

இரட்டை மேற்கோள்குறி (" ") - (Quotation Mark in Tamil)

ஒருவர் கூறியதனை நேர்கூற்றாகக் கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகக் கூறும்போதும் இரட்டை மேற்கோள் குறியிடுதல் வேண்டும்.

 "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்றார் ஒளவையார்.

  • நேர்கூற்றுகளிலும்
  • செய்யுள் அடிகளையோ
  • பொன்மொழிகளையோ

குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) திரு. வி. க. மாணவர்களிடம்," தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்; இன்பம் நுகருங்கள் " என்று கூறினார்.

பின்வரும் தொடர்களுக்குப் பொருத்தமான நிறுத்தக்குறியிட்டு எழுதுக.

1. உன் பெயர் என்ன

உன் பெயர் என்ன?

2. என்னே இமயமலையின் உயரம்

என்னே, இமயமலையின் உயரம்!

3. இயல் இசை நாடகம் முத்தமிழாகும்

இயல், இசை, நாடகம் முத்தமிழாகும்.

4. எழிலி என்னும் சொல் மேகம் என்னும் பொருளில் வரும்

'எழிலி' என்னும் சொல் 'மேகம்' என்னும் பொருளில் வரும்.

5. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி

 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது பழமொழி.

6. இயல் இசை நாடகம் எனத் தமிழ் மூவகைப்படும்

இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூவகைப்படும்.

7. திருக்குறளை இயற்றியவர் யார்

திருக்குறளை இயற்றியவர் யார்?

8. தமிழ்மொழி ஓர் உயர்தனிச் செம்மொழி

தமிழ்மொழி ஓர் உயர்தனிச் செம்மொழி.

9. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!

10. அந்தோ இஃது என்ன கொடுமை

அந்தோ! இஃது என்ன கொடுமை!

விண்ணப்பம் கடிதம் எழுதுதல்

விண்ணப்பம் வரைதல்

கூட்டு விண்ணப்பம் பொருள்

விண்ணப்பம் என்றால் என்ன

குடிநீர், சாலை, தெருவிளக்கு, நூலகம், மருத்துவமனை, பேருந்து முதலியன நாம் வாழும் பகுதிக்கு வேண்டிய வசதிகளாம். இவற்றைப் பெறவேண்டிப் பகுதிவாழ் மக்களின் சார்பாக உயர் அலுவலர்களுக்கும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கும் விண்ணப்பம் வரைதலே கூட்டு விண்ணப்பம் எனப்படும்.

கூட்டு விண்ணப்பம் எழுதும் முறை

கூட்டுவிண்ணப்பம் நடைமுறைக்குரிய விண்ணப்பம்; ஆதலின், அதற்குரிய வடிவத்தில் அமைந்திருத்தல்வேண்டும். 

  • விடுநர்,
  • பெறுநர், 
  • விளித்தல், 
  • பொருள், 
  • உள்ளடக்கப்பகுதி, 
  • முடித்தல், 
  • கையொப்பம் 

ஆகியவை விண்ணப்பத்தில் அமைந்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் மாதிரி 

கூட்டு விண்ணப்பம் (மாதிரி)

நூலக வசதி வேண்டி விண்ணப்பித்தல்

விடுநர்

              ஊர்ப் பொதுமக்கள்,

              கன்னேரிமந்தணை, தங்காடு ஓரநள்ளி, 

              நீலகிரி மாவட்டம் - 643 003.


பெறுநர்

                இயக்குநர்,

                பொது நூலகத்துறை,

                சென்னை - 600 002.


ஐயா,

பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல் சார்பு.


எங்கள் ஊர் கன்னேரிமந்தணை. இவ்வூரில் மூவாயிரம் பேர் வாழ்கிறோம். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் உள்ளோம். அன்றாடம் செய்திகளை அறிந்துகொள்ளவும், பொது அறிவைப் பெருக்கிக்கொள்ளவும், பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கவும், நூலகம் ஒன்றை எங்கள் ஊரில் அமைத்துத்தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.               

கன்னேரிமந்தணை              

17. 01. 2011.                                                              

தங்கள் உண்மையுள்ள,

கன்னேரிமந்தணை

ஊர்ப் பொதுமக்கள்

உறைமேல் முகவரி

                                    பெறுநர்

                                                   இயக்குநர்,

                                                  பொது நூலகத்துறை,

                                                  சென்னை - 600 002.


கடிதம் எழுதுதல் - Letter writing format in tamil

கடிதத்தில் இடம்பெற வேண்டியவை

கடிதம் எழுதுவோரின் முழு முகவரி

கடிதம் எழுதும் நாள்

தெரிவிக்க வேண்டிய செய்தி

கடித உறையில் கடிதம் பெறுபவரின் முழு முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

கடிதம் வேறு பெயர்கள்

தூது

பண்டைக் காலத்தில் புறா, கிளி, நாய் முதலியவற்றின் மூலமாகக் கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இதனைத் 'தூது' என்பர்.

சீட்டுக்கவி

பாடல்கள் மூலமாகக் கடிதம் எழுதியதும் உண்டு. இதனைச் 'சீட்டுக்கவி' என்பர். பாரதியார் எழுதிய சீட்டுக்கவி இதற்குச் சான்றாகும்.

கடிதம் எழுதும் முறை - கடிதம் எழுதுவது எப்படி

தற்போது தொலைபேசி, செல்பேசி முதலான தகவல் தொடர்புச் சாதனங்களால் கடிதம் எழுதும் முறை குறைந்து வருகிறது.

கடிதம் தலைப்புகள்

  • உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தவும், 
  • கண்டு மகிழ்ந்த காட்சிகளை நேரில் கண்டதுபோல் தெரிவிக்கவும், 
  • அறிவுரை கூறும் பகுதியாகவும் 

கடிதங்கள் பல வகையில் அமையும்.

அறிஞர் அண்ணா முதலானோர் எழுதிய கடிதங்கள், மு.வ. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என எழுதிய கடிதங்கள், நேரு தம்மகள் இந்திராபிரியதர்சினிக்கு எழுதிய கடிதங்கள், காந்தியடிகள் கடிதம் இன்றைக்கும் படித்துப் போற்றத்தக்கவை. 

மாதிரி கடிதங்கள் - Sample letter writing 

1. கண்டு களித்த இடம் குறித்து, நண்பனுக்குக் கடிதம்

15, குங்குமப்பூத் தெரு,

திருவள்ளூர், 

21.06.2011.

அன்புள்ள எழில்,

நலம், நலமறிய ஆவல். உன் வீட்டில் அம்மா, அப்பா, தங்கை ஆகியோர் நலமறிய ஆவல். நாங்கள் 20.05.2011 அன்று கூடியம் மலைக்குகையைக் காணச் சென்றோம்.

கூடியம் என்பது திருவள்ளூர்க்கு மேற்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர். காலை ஆறு மணிக்கே திருவள்ளூரைவிட்டுப் புறப்பட்டோம். சீத்தஞ்சேரி என்னும் ஊரைக் கடந்து எங்கள் மகிழுந்து புறப்பட்டது. வழிநெடுகிலும் சிற்சில பகுதிகளில் பசுமைநிறக் குறுங்காடுகள்; தைலமரத் தோப்புகள், மாங்கனிகள் தாழத்தொங்குகின்ற மாந்தோப்புகள் ஆகியனவற்றைக் கண்டு மகிழ்ந்தோம். கூடியம் ஊரை நெருங்கினோம். அப்பொழுது மணி காலை 8.30 ஆயிற்று. நாங்கள் சிற்றுண்டி உண்டோம். பிறகு, அங்கிருந்து குறுங்காட்டுவழியாக நடந்தோம். ஒரு கிலோமீட்டர் நடந்ததும் எம் கண்முன்னே குகையிருக்கும் மலை தென்பட்டது. சிறிது தொலைவு நடந்தோம். அடேயப்பா... எவ்வளவு பெரிய மலை! முட்டையைப் பாதி உடைத்தாற்போல மலையைக் குடைந்து வைத்துள்ளான் ஆதிகால மனிதன். உள்ளே சுமார் ஈராயிரம் பேர் தங்கும் அளவிற்கு மலை குடையப்பட்டுள்ளது.

குளிர்ந்த காற்று, சுற்றிலும் பசுமை மாறாக் காட்டுச் சூழல், ஆரவாரமில்லாத அமைதி நிறைந்த சூழல் கண்டோம்; களித்தோம்; அனைவரும் மெய்ம்மறந்து உட்கார்ந்தோம் ! வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, உலகின் முதல் மாந்தரினம் வாழ்ந்த பகுதி இதுவெனத் தொல்லியலார் கூறுகின்றனர். அங்கு வாழ்ந்த மனிதன் கற்களைக் கூராக்கிக்கொண்டு, அவற்றையே தற்காப்புக் கருவியாகக் கொண்டு வாழ்ந்துள்ளான். அக்குகையைச் சுற்றித் தேனடைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றுக்கு ஊறு செய்தால், உருப்படியாக ஊர்போய்ச் சேர முடியாது.

அக்குகைக்குள் மனத்தச்சம்மன் என்னும் தெய்வச்சிலை உள்ளது. அவ்வம்மனை வழிபடுவதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதாக அப்பகுதியினர் நம்புகின்றனர். சிவராத்திரி அன்று, அப்பகுதிவாழ் மக்கள் அக்குகைக்குச் சென்று, அன்றிரவு முழுவதும் அங்கேயே தங்கிவிட்டுத் திரும்புவதாகக் கூறுகின்றனர். குகைக்காட்சிகளை எல்லாம் கண்ட நாங்கள், மனநிறைவோடு மாலை வீடு வந்து சேர்ந்தோம். கூடியம் குகையையும் வழியிடைக் காட்சிகளையும் கோடைவிடுமுறையில் கண்டுகளிக்க எம்மில்லம் வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மறவாமல் மடல் எழுதுக.

இன்னணம்,

மோ. அன்பரசு,

உறைமேல் முகவரி

                                   க. எழில், 

                                   த/பெ. வ.கண்ணன்,

                                   27, வ.உ.சி. தெரு, 

                                  அடையாறு, 

                                  சென்னை 600 020.


2. (வெளியூரில் உள்ள நண்பனுக்கு/ தோழிக்கு எழுதும் கடிதம்)

6/2.அ, நொரப்பங்காடு, 
அழகாபுரம் பெரிய புதூர், 
சேலம் - 636 016. 
20. 01. 2014


அருமைத்தோழி சாவித்திரிக்கு,

நான் இங்கு நலம். நீ நலமா? உன் பெற்றோர் நலமா ? நீ ஊருக்குச் சென்றதிலிருந்து இங்கு எனக்குப் பொழுதே போகவில்லை. நான், நம் தோழிகள் கயல்விழி, கலா, சாந்தா, அனிதா, காயத்திரி, சோனியா, ஜெனிபர், ஷமீம், அமிதா, இரமாதேவி, சுமதி, சங்கீதா எல்லாரும் உன் வரவுக்காகக் காத்திருக்கிறோம். வரும் முழுமதி நாளில், நீ வந்தால் மகிழ்ச்சியாக விளையாடலாம்.

அன்புடன், இரமணி

(கையொப்பம்)

உறைமேல் முகவரி

   பெறுநர்

         செல்வி மா. சாவித்திரி,
         நாகோஜிப்பட்டி,
         நரியனூர் - 636 458, 
         மேட்டூர் வட்டம், 
         சேலம் மாவட்டம்.


3. அலுவலகக் கடிதம் - Official letter format 

அலுவலகக் கடிதம் எழுதும்போது சில விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

மாதிரிக் கடிதம்

அனுப்புநர்

    நா. மெகருன்னிசா,

    17, திமிரிச் சாலை, 

     கலவை - 632 506,

    வேலூர் மாவட்டம்.

பெறுநர்

வட்ட வழங்கல் அலுவலர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

ஆர்க்காடு,

வேலூர் மாவட்டம்.

ஐயா,

பொருள்: குடும்ப அட்டை புதுப்பித்தல் - தொடர்பாக.

குடும்பத்துடன் நாங்கள் வெளியூர் சென்றிருந்ததனால், எங்கள் குடும்ப அட்டையைப் புதுப்பிக்க இயலவில்லை. குடும்ப அட்டையின் ஒளிநகலை இத்துடன் இணைத்துள்ளேன். குடும்ப அட்டையைப் புதுப்பித்துத் தர வேண்டுகிறேன். நன்றி. 

தங்கள் உண்மையுள்ள,

நா. மெகருன்னிசா

கலவை,

20.01.2014

உறைமேல் முகவரி

     பெறுநர்

                வட்ட வழங்கல் அலுவலர், 

                வட்டாட்சியர் அலுவலகம், 

                ஆர்க்காடு,

                வேலூர் மாவட்டம்.



கட்டுரைப் பயிற்சி - Essay writing format in tamil 

கட்டுரை எழுதும் முறை

முதலிய நெறிமுறைகளைப் பின்பற்றிக் கட்டுரை எழுதப் பழகுதல்வேண்டும்.

கட்டுரை வகைகள்

  • செய்தி விளக்கக் கட்டுரை, 
  • வருணனைக் கட்டுரை, 
  • தன் வரலாற்றுக் கட்டுரை, 
  • பயணக் கட்டுரை, 
  • வரலாற்றுக் கட்டுரை 

முதலியன கட்டுரையின் வகைகள் ஆகும்.

கட்டுரை - நான் விரும்பும் கவிஞர் - பாரதியார் பற்றிய கட்டுரை

வரவேற்பு மடல் - Welcome letter in tamil 

அரசு உயர்நிலைப் பள்ளி,

கூனிப்பாளையம், 

இலக்கியமன்ற ஆண்டு விழாவிற்கு வருகைதந்த தொல்காப்பியச் செம்மல் உயர்திரு புலவர் தமிழன்பன் அவர்களுக்கு அன்புடன் வாசித்தளித்த வரவேற்பு மடல்,

தமிழன்னை ஈன்ற தவப்புதல்வரே!

வருக வருக எனத் தங்களை வரவேற்பதில் பெருமகிழ்வடைகிறோம். பெருமையையும் சங்கத்தமிழன் வாழ்வியல் கோட்பாடுகளையும் தாங்கள் கூறக் தமிழின் கேட்கும்பேறு, இன்று யாம் பெற்றோம்.

நயம்பட உரைக்கும் நாவலரே!

‘இலக்கணப்' பாடப்பகுதியை, எளிதாக யாவரும் புரிந்துகொள்ளும்வகையில் சுவைபட உரைக்கும் திறங்கண்டு வியந்தோம். திங்கள்தோறும் தாங்கள் நடத்திவரும் தொல்காப்பியத் தொடர்வகுப்பும், நன்னூல் வகுப்பும், திருக்குறள் வகுப்பும் கேட்போர்க்கு நல்விருந்தாக அமைவதை உணர்ந்து மகிழ்கிறோம்.

வறுமையிலும் செழுமையாய் வாழும் பெருந்தகையே!

வள்ளுவத்தை வையகமெல்லாம் வாழ்வியலாக்கப் புறப்பட்ட தெள்ளுதமிழ்ச் சான்றோன் நீ! நடத்துபவனல்லன் நீ! நடந்து காட்டும் நற்றமிழறிஞன் நீ! வருகை புரியும் தங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம்.

கூனிப்பாளையம்,

28.06.2011

இன்னணம்,

இலக்கிய மன்றத்தார்.


கவிதை எழுதும் திறன்பெறுதல்

எழுதுதல் திறனில், கவிதை எழுதுதல் ஓர் உயர்நிலைத் திறனாகும். இக்காலக் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்புகளைப் பள்ளி நூலகத்தில் திரட்டலாம். அக்கவிதைகளில் அமைந்துள்ள பொருள்நயம், சொல் நயம், சந்த நயம் முதலிய 7 படித்துச் சுவைக்கலாம். உங்களில் பலர் கவிதை எழுதக்கூடிய திறன் படைத்தவர்களாய் இருக்க சிலர் கவிதை எழுத ஆர்வத்துடன் இருப்பீர்கள். உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த கூட எழுதப் பழகுங்கள். எளிய சொற்களைக்கொண்டு எழுதத் தொடங்குங்கள். நான்கு வரிகளில் கூட, அக்கவிதை அமையலாம்.

பள்ளி பற்றிய கவிதை

பள்ளி என்னும் கூடம் - நம் 

பண்பை உயர்த்தும் அன்றாடம்

சிலையாய் நம்மைச் செதுக்கும் - நல்ல 

விடையைக் கொடுக்கத் தோணும் 

வினா கேட்கும் ஞானம் – அங்கு

கலையாய் நம்மைப் புதுக்கும் 

வேற்றுமை அகற்றும் பந்தம் – நம் 

ஒற்றுமை ஒன்றே சொந்தம்.(code-box)

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.