திருக்குறள் சில - 8ம் வகுப்பு தமிழ்

திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்; எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல். திருக்குறளின் பெருமையை விளக்க, 'திருவள்ளுவ மாலை' என்னும் நூல் எழுதப்பட்டிருப்பதே அதற்குச் சான்றாகும். இத்தகைய பெருமை கொண்ட திருக்குறளைப் பயில்வோம்.

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்"

என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம்.

திருக்குறள் அதிகாரங்கள்

திருவள்ளுவர், திருக்குறள் நூல் குறிப்பு இங்கே (link)

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி தமிழ்நாடு அரசின் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வாழும் நெறி குறித்த சில திருக்குறள் 

வாழ்வியல் குறித்த சில குறள்கள் 

திருக்குறள் சில - 7ம் வகுப்பு

பாடத்தலைப்புகள்(toc)

திருக்குறள்

நடுவுநிலைமை

1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.


பொருள் : நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.


2. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் 

கோடாமை சான்றோர்க்கு அணி.


பொருள் : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

அணி : உவமை அணி.


கூடா ஒழுக்கம்

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

 புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.


பொருள் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

அணி : இல்பொருள் உவமை அணி.


4. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன 

வினைபடு பாலால் கொளல்


பொருள் : நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.


கல்லாமை

5. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்.


பொருள் : கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.


6. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

 கற்றாரோடு ஏனை யவர்


பொருள் : கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது. மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.


குற்றங்கடிதல்


7. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 

வைத்தூறு போலக் கெடும்.


பொருள் : பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.

அணி : உவமை அணி.


8. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் 

என்குற்றம் ஆகும் இறைக்கு


பொருள் : தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு எந்தப் பழியும் ஏற்படாது.


இடனறிதல்


9. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 

இடங்கண்ட பின்அல் லது


பொருள் : பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது: இகழவும் கூடாது.


10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் 

நாவாயும் ஓடா நிலத்து


பொருள்: வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.

அணி : பிறிது மொழிதல் அணி.


நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


நூல் வெளி - திருவள்ளுவர், திருக்குறள் நூல் குறிப்பு

பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.

திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. 

அறத்துப்பால் என்பது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது.

பொருட்பால் என்பது அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. 

இன்பத்துப்பால் என்பது களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.


மதிப்பீடு - திருக்குறள் இலக்கியம் - 8ம் வகுப்பு இயல் இரண்டு  - வினா விடை 8th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ..........

அ) அடக்கமுடைமை

ஆ) நாணுடைமை

ஈ) பொருளுடைமை

இ) நடுவுநிலைமை


2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்

அ) வலிமையற்றவர்

ஆ) கல்லாதவர்

இ) ஒழுக்கமற்றவர்

ஈ) அன்பில்லாதவர்


3. 'வல்லுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வல் + உருவம்

ஆ) வன்மை + உருவம்

இ) வல்ல + உருவம்

ஈ) வல்லு + உருவம்


4. நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) நெடுதேர்

ஆ) நெடுத்தேர்

இ) நெடுந்தேர்

ஈ) நெடுமைதேர்


5. 'வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி

அ) எடுத்துக்காட்டு உவமை அணி

இ) உவமை அணி

ஆ) தற்குறிப்பேற்ற அணி

ஈ) உருவக அணி


குறுவினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.


2. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு எந்தப் பழியும் ஏற்படாது.


3. 'புலித் தோல் போர்த்திய பசு' என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

 

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

 

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 

இடங்கண்ட பின்அல் லது

 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் .............

 புலியின்தோல் ..............மேய்ந் தற்று.


வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.


2. விலங்கொடு ............ அனையர் ...........

கற்றாரோடு ஏனை யவர்.


விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 

கற்றாரோடு ஏனை யவர்.


சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன 

வினைபடு பாலால் கொளல்

 

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

 

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.


கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் 

நாவாயும் ஓடா நிலத்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.