தொடர் வகைகள் - 8ம் வகுப்பு


பாடத்தலைப்புகள்(toc)

தொடர்

ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.

அவை,

1. எழுவாய் (the subject)

2. பயனிலை (the predicate)

3. செயப்படுபொருள் (the object)

தொடர் வகைகள் - TNPSC 

தொடர் வகைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.

தொடர் வகைகள் எடுத்துக்காட்டு

செய்தித் தொடர்

செய்தித் தொடர் என்றால் என்ன?

ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.

செய்தித் தொடர் எடுத்துக்காட்டு

  • (எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத்தொடர்

வினாத்தொடர் என்றால் என்ன?

ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.

வினாத்தொடர் தொடர் எடுத்துக்காட்டு

  • (எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர்

விழைவுத் தொடர் என்றால் என்ன?

ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத்தொடர் ஆகும்.

விழைவுத் தொடர் எடுத்துக்காட்டு

(எ.கா.) 

  • இளமையில் கல் - (ஏவல்) 
  • உன் திருக்குறள் நூலைத் தருக - (வேண்டுதல்) 
  • உழவுத்தொழில் வாழ்க - (வாழ்த்துதல்) 
  •  கல்லாமை ஒழிக - (வைதல்)

உணர்ச்சித் தொடர்

உணர்ச்சித் தொடர் என்றால் என்ன?

உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.

உணர்ச்சித் தொடர் எடுத்துக்காட்டு

(எ.கா)

  •  அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! - (உவகை) 
  • ஆ! புலி வருகிறது! - (அச்சம்) 
  • பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! - (அவலம்) 
  • ஆ! மலையின் உயரம்தான் என்னே! - (வியப்பு)


கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் - செய்தி தொடர்

2. கடமையைச் செய் - விழைவுத் தொடர்

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! - உணர்ச்சித் தொடர்

4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? - வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)

நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)

ஆ! காட்டின் அழகுதான் என்னே!

2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக)

பூனையின் காலில் அடிபட்டு விட்டது.

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

அதிகாலையில் துயில்.

4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)

முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக)

காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.