வினைமுற்று இலக்கணம் - 8ம் வகுப்பு இயல் இரண்டு

வினைச்சொல் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

வினைமுற்று இலக்கணம் - 8ம் வகுப்பு இயல் இரண்டு  

  • படித்தான், 
  • ஆடுகின்றாள்,
  • பறந்தது,
  •  சென்ற, 
  • கண்டு 

ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும். 

வினைச்சொல் என்றால் என்ன?

செயலை வினை என்றும் குறிப்பர். 

இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

வினைமுற்று அல்லது முற்றுவினை

  • மலர்விழி எழுதினாள். 
  • கண்ணன் பாடுகிறான். 
  • மாடு மேயும்.

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. 

வினைமுற்று என்றால் என்ன அதன் வகைகள்?

இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். 

வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

வினைமுற்று தொடர்கள் எடுத்துக்காட்டு 

  • மலர்விழி எழுதினாள். 
  • கண்ணன் பாடுகிறான். 
  • மாடு மேயும்.

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவை வினைமுற்று தொடர்கள் ஆகும்.

வினைமுற்று வகைகள் 

வினைமுற்று எத்தனை வகைப்படும்?

வினைமுற்று 

  • தெரிநிலை வினைமுற்று, 
  • குறிப்பு வினைமுற்று 

என இருவகைப்படும்.

வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல்

தெரிநிலை வினைமுற்று

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். 

இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

தெரிநிலை வினைமுற்று எடுத்துக்காட்டு

  • (எ.கா.) மாணவி கட்டுரை எழுதினாள்.

செய்பவர் - மாணவி

கருவி - தாளும் எழுதுகோலும்

காலம் - இறந்தகாலம்

செய்பொருள்- கட்டுரை

செயல் - எழுதுதல்

நிலம் - பள்ளி

குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.

குறிப்பு வினைமுற்று எடுத்துக்காட்டு

பொருள் - பொன்னன்

இடம் - தென்னாட்டார்

காலம் - ஆதிரையான்

சினை - கண்ணன்

பண்பு (குணம்) - கரியன்

தொழில் - எழுத்தன்

ஏவல் வினைமுற்று

தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு.

  • பாடம் படி. 
  • கடைக்குப் போ.

இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. 

ஏவல் வினைமுற்று என்றால் என்ன 

இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். 

ஏவல் வினைமுற்று வகைகள்

ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

எழுது - ஒருமை

எழுதுமின் - பன்மை

பன்மை ஏவல் வினைமுற்று - எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.

வியங்கோள் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன 

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

 இவ்வினைமுற்று இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை) ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) காட்டும். 

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்

இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.

(எ.கா.) வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்

சிறப்புகள்

1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.

2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன.

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
முன்னிலையில் வரும். இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி பெற்றே வரும்.




கற்பவை கற்றபின்

'வாழ்க' என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.

(எ.கா.) 

ஐந்து பால்கள் 

அவன் வாழ்க. (ஆண்பால்)

அவள் வாழ்க - பெண்பால் 

அவர்கள் வாழ்க - பலர் பால்

அது வாழ்க - ஒன்றன் பால்

அவை வாழ்க - பலவின் பால்

மூன்று இடங்கள் 

நாம் வாழ்க. (தன்மை)

நீ வாழ்க- முன்னிலை 

அவன் வாழ்க - படர்க்கை 

நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


மதிப்பீடு - வினைமுற்று இலக்கணம் - 8ம் வகுப்பு இயல் இரண்டு  - வினா விடை 8th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது.-இத்தொடரிலுள்ள வினைமுற்று

அ) மாடு

ஆ) வயல்

இ) புல்

ஈ) மேய்ந்தது


2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

அ) படித்தான்

ஆ) நடக்கிறான்

இ) உண்பான்

ஈ) ஓடாது


3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்

அ) செல்க

ஆ) ஓடு 

இ) வாழ்க

ஈ) வாழிய


சிறுவினா

1. வினைமுற்று என்றால் என்ன?

பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். 

மலர்விழி எழுதினாள். 

கண்ணன் பாடுகிறான். 

மாடு மேயும்.

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. 


2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். 

இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.


3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்

இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.

(எ.கா.) வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்


4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
முன்னிலையில் வரும். இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி பெற்றே வரும்.




உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.

நட உண் உறங்கு
ஆண்பால் நடந்தான் உண்டான் உறங்கினான் 
பெண்பால் நடந்தாள் உண்டாள் உறங்கினாள் 
பலர் பால் நடந்தார்கள் உண்டார்கள் உறங்கினார்கள்
ஒன்றன் பால் நடந்தது உண்டது உறங்கியது
பலவின் பால் நடந்தன உண்டன உறங்கின 
தன்மை நடந்தேன் உண்டேன் உறங்கினேன் 
முன்னிலை நடந்தாய் உண்டாய் உறங்கினாய் 
படர்க்கை நடந்தாள் உண்டாள் உறங்கினான் 
இறந்த காலம் நடந்தான் உண்டான் உறங்கினான் 
நிகழ் காலம் நடக்கிறான் உண்கிறான் உறங்குகிறான் 
எதிர் காலம் நடப்பாள் உண்பான் உறங்குவாள் 


வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.

1. நடக்கிறது - நட

2. போனான் - போ

3. சென்றனர் - செல்

4. உறங்கினாள் - உறங்கு

5. வாழிய - வாழ் 

6. பேசினாள் - பேசு 

7. வருக - வா 

8. தருகின்றனர் - தா 

9. பயின்றாள் - பயில் 

10. கேட்டார் - கேள் 


Q வினைமுற்று example

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.