புறநானூறு

சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகும். சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூறு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

புறநானூறு விளக்கம்

புறநானூறு நூல் பற்றிய குறிப்பு

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூறு, தமிழகத்தின் அரசியல் நிலைமையையும், குடிவாழ்க்கையினையும், பொருளாதாரச் செழுமையினையும் புலவர் பெருமக்களின் உள்ளத்துணர்வுகளையும் தெரிவிக்கிறது.

  • புறநானூறு = புறம் + நான்கு + நூறு.

இந்நூல், புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. 

தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.

இக்காலத் தமிழ மக்கள் நெஞ்சில் அரசியற் சீர்திருத்தங்களைத் தோற்றுவிக்கும் நூல்களுள் இது தலையாயது. இது புறம் பற்றிய நூல் ஆகும்.

புறம் என்பது மறம் செய்தலும், அறம் செய்தலும் ஆகும். (alert-passed)

புறநானூறு நூலின் ஆசிரியர் குறிப்பு

இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த, புலவர்களாலும் மன்னர்களாலும் பாடப்பெற்றவை.

இதற்குரிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது.

புறநானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

  • கடவுள் வாழ்த்து உட்பட 400 செய்யுள்களைக் கொண்ட தொகுப்பு நூல்.
  • இது புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.
  • பாடியவர்கள் - 160
  • துறைகள் - 65

புறநானூறு வழங்கும் வேறுப் பெயர்கள்

  • புறம், புறப்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் பற்றி விரிவான தகவல்களை இலக்கிய வரலாற்றுப் பகுதியில் காணலாம்.

புறநானூற்றுச் செய்யுட்கள் தொன்மையும், இலக்கணவொழுக்கமும் இலக்கியச் செறிவும் உடையன. இத்தொகுப்பு நூலிலுள்ள செய்யுள்களைப் பல புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடியுள்ளார்கள்.  

புறநானூறு என்னும் தொகுப்பு நூல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களால் அச்சேற்றி வெளியிடப் பெற்றது.

மேலைநாட்டுத் தமிழ் அறிஞரான ஜி.யு.போப் அவர்கள் புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். 

புறநானூறு சிறப்புகள்

மிகத் தொன்மை நூல்களெல்லாவற்றிற்கும் தொன்மையானதெனக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னும், பின்னும் தோன்றிய செய்யுட்களைத் தன்னகத்தே கொண்டு தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு

புலவா் பெருமக்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பாக விளங்கும் இத்தொகை நூல், தொல்காப்பியப் புறத்திணையியலில் அடங்கியுள்ள புறத்துறைகட்கேற்ப, திணையும் துறையும் வகுக்கப் பெற்றுப் புறத்துறையிலக்கணத்துக்குச் சீர்த்த இலக்கியமாகவும் இலங்குகிறது. 

புறநானூற்றுப் பாடல்கள்மூலம் பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப் பெருமை முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் அறியவாம்.

இந்நூல் அக்கால மக்களின் எண்ணங்களும், சொற்களும் இலக்கணவொழுக்கமும், இலக்கியச் செறிவும் பெற்றுத் திகழ்கின்றது.  

TNPSC - General Tamil -Study Material

எட்டுத்தொகை 

இப்புறநானூற்றைப் போலவே, வேறு ஏழு தொகுப்பு நூல்கள் இப்புறநானூற்றுக் காலத்தனவாய் உள்ளன. அவற்றோடு கூட்டி நூல்களை எட்டுத்தொகை என இயம்புவது மரபு.

எட்டுத்தொகை எத்தனை வகைபடும்?

எட்டுத்தொகை வகைகள் 

அவை, 

  1. நற்றிணை, 
  2. குறுந்தொகை, 
  3. ஐங்குறுநூறு, 
  4. பதிற்றுப்பத்து, 
  5. பரிபாடல், 
  6. கலித்தொகை, 
  7. அகநானூறு, 
  8. புறநானூறு 

எனப்படும். 

இவையனைத்தும் பல புலவர்கள் பல காலத்திற் பாடிய பாட்டுக்களின் தொகையாகும். 

புறநானூறு மேற்கோள்கள் சிறந்த பாடல்கள் மற்றும் விளக்கவுரை

ஒளவையார் எழுதிய புறநானூறு


நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; 
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; 
எவ்வழி நல்லவர் ஆடவர் 
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

ஒளவையார்(code-box)

பொருள்


நிலமே! நீ நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? 

பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? 

எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ 

அங்கு நீயும் நல்லதாக இருக்கிறாய், நிலமே, நீ வாழ்க!

சொல்பொருள்


  • ஒன்றோ - தொடரும் சொல். 
  • நாடாகு ஒன்றோ - நாடாக இருந்தால் என்ன அல்லது... எனத் தொடரும். 
  • அவல் - பள்ளம்; 
  • மிசை - மேடு; 
  • ஆடவர் - ஆண்கள்; இங்கு மனிதர்களைப் பொதுவாசகக் குறித்தது. 
  • நல்லை - நல்லதாக இருக்கிறாய்.

ஒளவையார் பற்றிய குறிப்பு

ஒளவையார் சங்கப் புலவர்; அதியமானின் நண்பர். அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர். அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஔவையார். சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர்.

மோசிகீரனார் எழுதிய புறநானூறு படல்

நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே 

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால் யான்உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே


- மோசிகீரனார்(code-box)

பொருள்: 

இவ்வுலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிராகா. முறைசெய்து காத்தலினால் மன்னவனே உயிராவான். வேற்படை உடைய வேந்தனின் கடமை நாட்டைப் பேணிக் காப்பதே ஆகும்.

சொற்பொருள்:

  • அறிகை - அறிதல்வேண்டும்; 
  • தானை- படை;
  • கடனே- கடமை.

மோசிகீரனார் ஆசிரியர் குறிப்பு : 

இப்பாடலைப் பாடியவர் மோசிகீரனார். தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர். 

கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது. 

இவர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

ஒருமுறை சேரமன்னனைக் காண அரண்மனைக்குச் சென்றார்; மன்னனோ அரண்மனையில் இல்லை. அவருக்கு ஏற்பட்ட உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர். அக்கட்டில் முரசுக்கட்டில் என்பது அவருக்கு தெரியாது. முரசுக்கட்டில் மன்னனைவிட மேலான ஒன்றாகும். அக்கட்டிலில் படுத்தால் மரணதண்டனைதான் என்பது, களைத்திருந்த அவர் சிந்தைக்கு எட்டவில்லை.

சிறிதுநேரத்தில் திடீரெனச் சில்லென்ற காற்று அவர்மீது படவே கண்விழித்துப் பார்த்தார். ஐயோ, அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. முரசுக்கட்டிலில் படுத்துறங்கியதற்கு மரணதண்டனை அளிக்கவேண்டிய சேரமன்னன், அவருக்கு கவரி வீசிக்கொண்டிருந்தான். காரணம், அவர்மீதுள்ள அன்பைவிடத் தமிழ்மீதிருந்த அன்பு, அவரை அவ்வாறு செய்யச் செய்தது. இஃது அவர் வாழ்வில் மறக்கவியலாத நிகழ்வாகும்.

இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.

அரசனைக் குறிக்கும் வேறு பெயர்கள் : கோ, மன்னன், வேந்தன்(alert-success)

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise புறநானூறு மதிப்பீடு 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

அ) புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 

ஆ) நெல்லும் உயிரன்றே என்னும் பாடலைப் பாடியவர் மோசிகீரனார்

உரிய விடையைத் தேர்வு செய்க,

அ) மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னன்

 1. பாண்டியன் நெடுஞ்செழியன்

3.கோப்பெருஞ்சோழன்

2. சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

ஆ) மோசிகீரனார் பாடிய பாடல்கள் இடம்பெற்ற நூல்

இ) பழமொழி நானூறு

அ) புறநானூறு 

ஆ) ஐங்குறுநூறு

3. மோசிகீரனார் பாடிய நெல்லும் உயிரன்றே இடம்பெற்ற நூல் 

அ) புறநானூறு

ஆ) ஐங்குறுநூறு

இ) பழமொழி நானூறு

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைக்க.

நெல் - நெல் என்பது ஒருவகை தானியம் ஆகும்.

உயிர் - உயிர் இல்லாமல் உடல் இயங்க முடியாது.

நீர் - நீர் இன்றி அமையாது உலகு.

வேந்தன் - வேந்தன் என்பது அரசனைக் குறிக்கும்.

குறுவினாக்கள்

1. புறநானூறு - சிறு குறிப்பு எழுதுக.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூறு, தமிழகத்தின் அரசியல் நிலைமையையும், குடிவாழ்க்கையினையும், பொருளாதாரச் செழுமையினையும் புலவர் பெருமக்களின் உள்ளத்துணர்வுகளையும் தெரிவிக்கிறது.

2. மோசிகீரனாரைப் பற்றிக் குறிப்புத் தருக.

நெல்லும் உயிரன்றே என்னும் புறநானூறு பாடலைப் பாடியவர் மோசிகீரனார். தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர். கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது. இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.

சிறுவினா

வேந்தனின் கடனாகப் புறநானூறு குறிப்பிடும் செய்தி யாது ?

வேற்படை உடைய வேந்தனின் கடமை நாட்டைப் பேணிக் காப்பதே ஆகும்.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பற்றிய புறநானூறு பாடல் 

பாண்டியருள் நெடுஞ்செழியன் என்னும் பெயருடைய வேந்தர் பலர் இருந்தனர். அவர்களுள் இவரை வேறுபடுத்துவதற்கு 'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என இம்மன்னரது வெற்றிச் செயலைச் சான்றோர் சிறப்பித்துள்ளனர். 

இவர் புவிமன்னராகவும், கவிமன்னராகவும் விளங்கினார். 

இப்பாடலில் கல்வியின் சிறப்பை இவர் விளக்குகிறார். 

இது புறநானூற்றில் 183ஆம் செய்யுளாகும். 

"உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னற்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே" - பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (code-box)

திணை

பொதுவியல் 

துறை 

பொருண்மொழிக் காஞ்சி 

சொற்பொருள் விளக்கம் 

ஆறு - நெறி 

உறு - மிகுதி 

சிறப்பு - இங்கு கல்வியின் மேன்மையினைக் குறித்தது 

பிற்றை - பிற்பட்ட தன்மை (தாழ்வு)

முனி - வெறு

வேற்றுமை - வேறுபாடு

பொதுவியல் திணை 

வெட்சித்திணை முதல் பாடாண்திணை முடிய அமைந்த புறப்பொருட்டிணைகளுள் கூறப்படாதனவும் அகத்திணைகளுக்குப் பொதுவானவையுமாகிய புறவொழுக்க நிகழ்ச்சிகளைக் கூறுவது பொதுவியல் திணையாகும். 

பொருண்மொழிக் காஞ்சித் துறை 

இவ்வுலக மக்களின் வாழ்விற்கு இன்றியமையாதனவும், இம்மை, மறுமைக்கு உறுதி பயக்கக் கூடியவையுமாகிய பொதுக்கருத்தினை ஆன்றோர் கூறுவதாக அமைந்தது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும்.

பொருள் விளக்கம் 

பிறப்பினால் ஒரே தன்மை கொண்ட ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களுக்குள்ளும், கல்விச் சிறப்புக் காரணமாகப் பெற்றெடுத்த தாயும் மனம் வேறுபடுவார். 

ஒரு குடியிலே பிறந்த பலருள்ளும் கல்வி கற்காத காரணத்தால் மூத்தவனை வருகவென்று அழைக்காமல் அவர்களுள் அறிவுடையவன் செல்லும் வழியிலேயே மன்னர் தன் அரசியலை நடத்துவர். 

வேறுபாடுள்ள நான்கு குலங்களுள்ளும் கீழாகக் கருதப்படும் குலத்துள், பிறந்த ஒருவர் கல்வி கற்றால் மேலாகக் கருதப்படும் குலத்துள் ஒருவரும் அவரை வணங்குவார். 

ஆதலால் ஒருவர் தம் ஆசிரியர்க்குத் துன்பம் நேர்ந்தவிடத்து அவர்க்கு உதவி செய்தும், மிக்க பொருளைத் தந்தும், அவர்க்கு வழிபாடு செய்யும் தன்மையை வெறுக்காமலும் கற்பது நலம், இச்செய்யுள் கல்வியின் மேன்மையினை எடுத்துக் காட்டுகிறது. 

சங்ககாலத்திலேயே கல்வியின் மேன்மை உணரப்பட்டதை இச்செய்யுள் தெரிவிக்கிறது. இச்செய்யுள் அடிகள் உணர்த்தும் கருத்தினைப் பிற இலக்கியங்களும் கொண்டுள்ளன. 

திருக்குறள், நான்மணிக்கடிகை, வெற்றிவேற்கை, நாலடியார், மணிமேகலை ஆகிய இலக்கியங்களிலும் இச்செய்யுள் தரும் அறவுரைகள் உணர்த்தப்படுகின்றன. 

'பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே' - புறநானூறு (code-box)
இந்த அடிக் கொண்டுள்ள கருத்தினை,
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்' -  (குறள் 395)(code-box)

எனும் திருக்குறளிலும் நோக்கலாம்.

"ஒரு குடிப்பிறந்த..... வருக (அடி5-6) (code-box)

இவ்வடிகள் கொண்டுள்ள கருத்தினை, 31

'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்' - வெற்றிவேற்கை (code-box)

என வெற்றிவேற்கை எனப்படும் நறுந்தொகை வலியுறுத்துகிறது. 

கல்லாது முத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமை பாராட்டும் உலகு - நாலடியார் (செய்யுள் 66) (code-box)

என உலக இயல்பு பற்றி நாலடியார் கூறுவது நோக்கத்தக்கது. 

பிறப்பிள் பாலார் மக்க ளல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு (மணிமேகலை காதை 23:வரி 31-32) (code-box)

எனும் மணிமேகலையின் அடிகளும் கல்வியின் மேன்மையினைச் கட்டுகின்றன.

அரசியல் பற்றிய புறநானூறு பாடல்

இயற்கை அல்லது செயற்கைக் காரணங்களால் மக்களுக்குத் தீங்கு நேரினும் மன்னனே அதற்குப் பொறுப்பேற்றான். தன் குடிகளையும் படைகளையும் காத்து நிற்க வேண்டியது அரசனது கடமை. தன் குடிகளைக் காக்கத் தவறும் மன்னனை உலகம் பழிக்கும் என்று புலவர்கள் நேரடியாக மன்னனுக்கு அறிவுறுத்திய காட்சிகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. 

யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே. - புறநானூறு (code-box)

ஆசிரியர்: பிசிராந்தையார்  

திணை: பொதுவியல் 

துறை: பொருண்மொழிக் காஞ்சி

பாடல்பொருள்:

"தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்பீரானால், சொல்கிறேன். 'நற்குணத்தளாகிய என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். என்னிடம் பணி புரிபவர்களும் நான் நினைப்பதையே தாங்களும் நினைத்துச் செயல்களைச் செய்து முடிப்பர். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டைக் காப்பவனாக விளங்குகின்றான்.

நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர். ஆதலால் எனக்கு நரை தோன்றவில்லை யானும் முதுமையடையாதவனாய் உள்ளேன்" என்று பிசிராந்தையார் கூறுகின்றார்.

கையறுநிலை பற்றிய புறநானூறு பாடல் 

தம் மன்னன் இறந்ததற்குக் குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும்.

எந்த இழப்பையும் எண்ணி வருந்துவது கையறுநிலைத் துறைக்குரியது. 

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே - புறநானூறு (code-box)

ஆசிரியர்: குடவாயிற் கீரத்தனார் 

திணை: பொதுவியல் 

துறை: கையறுநிலை 

பாடல் பொருள்: 

ஒல்லையூர் நாட்டை ஆண்ட அரசன் பெருஞ்சாத்தன். அவன் இறந்த பின்னர் அந்நாட்டில் பூத்துக்கிடந்த முல்லைப் பூவை யாருமே சூடவில்லையாம். இளைய வீரர் சூடவில்லை. வளையல் அணிந்த மகளிர் சூடுவதற்காகப் பறிக்கவில்லை. பாணர் தம் வளைந்த யாழைப் பயன்படுத்திக் கீழே இழுத்துப் பறித்துத் தலையில் சூட்டிக்கொள்ளவில்லை. பாடினியும் அணிந்துகொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது, முல்லைப்பூவே! ஒல்லையூர் நாட்டில் எதற்காகப் பூக்கிறாய்?

வீரம் 

சங்க காலத்தில் வீரம் முதன்மையாகப் போற்றப்பெற்றது. ஆடவரும், மகளிரும் இயற்கையிலேயே மறப்பண்பு மிக்கவராய் விளங்கியதால் எண்ணற்ற போர்கள் நடைபெற்றன. சமுதாயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசனுக்கு இருந்தது. தன் நாட்டுமக்களின் வாழ்க்கை வளமாக அமைவதற்குப் பிறநாட்டுடன் போர் மேற்கொண்டான். போரில் புறமுதுகிடுதல் பெரும்பழியாகக் கருதப்பட்டது. போரில் விழுப்புண்பட்டு உயிர்விடுவதைப் பெருமையாகக் கருதினர். புறப்புண் பெற்றவர்கள் வடக்கிருந்து உயிர்நீத்தலைப் புகழெனக் கருதினர். இவ்வாறு வடக்கிருந்து உயிர் நீத்தலைச் சிறந்த வீரமாக வெண்ணிக்குயத்தியார் பாடுவது இங்கு நோக்கத்தக்கது.  

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க்கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே - புறநானூறு (code-box)

ஆசிரியர்: வெண்ணிக்குயத்தியார் 

திணை: வாகை. 

துறை: அரசவாகை. 

பாடல் பொருள்: 

களிநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளர் வழி வந்தவன் நீ. போரில் வென்றாய், அதனால் நீ நல்லவன். எனினும் வெண்ணிப்பறந்தலைப் போரில் உன் வலிமைமிக்கத் தாக்குதலால் புறப்புண்பட்டு அதற்காக நாணி அப்போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த பெருஞ்சேரலாதன் உன்னைக்காட்டிலும் நல்லவன் அல்லனோ?

மனிதநேயம் பற்றிய புறநானூறு பாடல் 

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை,

தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென

முயலுநர் உண்மையானே 

-புறம்-182(code-box)

என்னும் புறநானூற்று அடிகள் உணர்த்துகின்றன.

ஐவர் கடமை பற்றிய புறநானூறு பாடல் 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

- புறநானூறு(code-box)

நினைவு கூர்க 

புறநானூற்றைக் கற்பதனால், தமிழர்தம் பழங்காலப் புறவாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து பெருமிதம் கொள்ளலாம்.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 4. புறநானூறு  பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad