அடிப்படைத் தமிழ் இலக்கணம் வகைகள்

தமிழ் மொழி உலகின் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று. பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் வழக்கில் இருந்து வருவது; சிறந்த தொன்மையான இலக்கிய இலக்கணங்களை உடையது. மொழி அமைப்புப் பற்றிய வரையறைகளை, விளக்கங்களைக் கூறுவதோடு தமிழ் இலக்கணம் நின்றுவிட வில்லை; மேலும் மாந்தரின் படைப்புணர்வுக்கான நெறிமுறைகளைக் கொண்டுள்ளது; அவர் செம்மையாக வாழ்வதற்கான வழிகாட்டியாக விளங்குகிறது. இதனை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளே நன்குணர்த்தும்.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

இலக்கணம் குறித்த நூல்கள் விளக்கமாக உள்ளே

பாடத்தலைப்புகள்(toc)

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை செய்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.

  • மொழிக்கு ஒழுங்கையும் சீர்மையையும் தருவது இலக்கணம்.
  • ஒரு மொழியின் பல்வேறு கூறுகளை எடுத்துரைக்கிறது:
  • மொழியின் இயக்கத்தைப் பல விதிகளாகப் பாகுபடுத்திக்காட்டுகிறது.

இலக்கணம் விளக்கம்

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது மொழி. ஒருவர் தம் கருத்தை வெளிப்படுத்தவும், அதனைக் கேட்போர் புரிந்துகொள்ளவும் கருவியாக அமைவதும் மொழியே.அம்மொழியைப்பிழையின்றிப் பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவும் துணைசெய்வது இலக்கணம்ஆகும்.

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்றுநோக்கினான். இயல்புகளை அறிந்துகொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான், மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை செய்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.

  • தமிழ்மொழியின் இலக்கண அமைப்பானது, தனிச் சிறப்புடையது;
  • நுண்ணிய அறிவை உண்டாக்கவல்லது.

தமிழ் இலக்கணம் குறித்த நூல்கள் விளக்கம்

தமிழ் இலக்கணம் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் முதலானவையாகும். 

எழுத்து, சொல் இலக்கண நூல்கள்

தொல்காப்பிய எழுத்து , சொல் ஆகிய அதிகாரங்களை அடிப்படையாகக்கொண்டு, நன்னூல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.

சொல் இலக்கண நூல்கள்

சொல்லதிகாரம் மட்டும் அமைந்த இலக்கண நூல்கள் பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து என்பனவாகும்.

பொருள் இலக்கண நூல்கள்

பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களுள் அகத்திணையியல் சார்ந்து இறையனாரகப்பொருள், நம்பியகப்பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் தோன்றின.

தொல்காப்பியப் புறத்திணையியல் சார்ந்து, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு படலம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.

செய்யுளியல் - யாப்பிலக்கணம் நூல்கள்

செய்யுளியல் சார்ந்து யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலிய யாப்பிலக்கண நூல்களும்,

உவமவியல்- அணியிலக்கணம் நூல்கள்

உவமவியல் சார்ந்து தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலிய அணியிலக்கண நூல்களும் எழுதப்பட்டன.

உரைநடை வடிவில் இலக்கண நூல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னர், உரைநடை வடிவில் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இலக்கணச் சுருக்கம், இலக்கணச் சுருக்க வினாவிடை முதலான நூல்கள் உரைவடிவில் அமைந்தவை. கால்டுவெல்லின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல், தமிழின் தனிச்சிறப்புகளைத் தமிழறியாத மேனாட்டினருக்கும் எடுத்துக்காட்டி. விளக்கியுள்ளது.

தொல்காப்பியம், அகத்தியம்

நமக்குக் கிடைத்த, தமிழில் மிகப் பழைமையானது இலக்கண நூல் தொல்காப்பியம். இஃது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகின்றது.தொல்காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியர் எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதினார். அந்நூலுக்கு அகத்தியம் என்பது பெயர்.

அறிவியல்முறையில் அமைந்த இத்தகைய இலக்கண நூல்கள் தோன்றவேண்டுமென்றால், குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ்மொழி தோன்றிச் செம்மைநிலை பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய இலக்கிய இலக்கண வளமுடையது, நம் தமிழ்மொழி.

ஐவகை தமிழ் இலக்கணம் - வகைகள்

இலக்கணம் - ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

1.எழுத்து 2.சொல் 3.பொருள் 4. யாப்பு 5. அணி



தமிழ் இலக்கணம் வகைகள்

எழுத்து இலக்கணம்

எழுத்துக்களின் பிறப்பு, வகை, தொகை, அவை சொற்களில் இடம் பெறும் முறை முதலானவற்றைக் விளக்கங்களையும் கூறுவது எழுத்து இலக்கணம். 

ஒலி வேறுபாடுகளே வெவ்வேறு எழுத்துகள் தோன்றக் காரணம். மொழிக்கு ஒலி, வரி ஆகிய இரு வடிவங்கள் உள்ளன.ஒலி வடிவம் என்பது பேச்சு மொழியாகும்.வரி வடிவம் அல்லது உருவம் என்பது எழுத்து மொழியாகும்.

எழுத்து இலக்கணம் பிரிவுகள் விரிவாக

சொல் இலக்கணம்

சொல் என்றால் என்ன என்பதையும், அச்சொல்லின் வகை பற்றிய விளக்கங்களையும் கூறுவது  சொல்லிலக்கணம்.

தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.

சொல் இலக்கணம் பிரிவுகள் விரிவாக

பொருள் இலக்கணம்

மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் வகுத்துக்காட்டி விளக்குவது பொருள் இலக்கணம். 

அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர். பொருள் என்பது ஒழுக்கமுறை.

பொருள் இலக்கணம் பிரிவுகள் விரிவாக

யாப்பு இலக்கணம்

தமிழ்ச் செய்யுள்களின் வகைகள் அவற்றை இயற்றும் முறைகள் பற்றி விளக்குவது யாப்பிலக்கணம். 

நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் யாக்கப்பட்ட (கட்டப்பட்ட) உடலை யாக்கை என்பர். அதுபோல் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்புக்களால் கட்டப்படுவதால் பாடல் யாப்பு எனப்படும்.

யாப்பு இலக்கணம் பிரிவுகள் விரிவாக

அணி இலக்கணம்

செய்யுள் அமைந்திருக்கும் அழகை விளக்குவது அணியிலக்கணம். 

இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.

அணி இலக்கணம் பிரிவுகள் விரிவாக

பொது-இலக்கணம்

நினைவுகூர்க

தமிழின் சிறப்பையும் காலந்தோறும் பெற்றுவரும் வளர்ச்சியையும் அறிந்து பயன்படுத்திக் கொள்ளத் இலக்கண அறிவு பெரிதும் துணை செய்யும். எனவே தமிழ் இலக்கணத்தை ஆழ்ந்து கற்க வேண்டியது தமிழ் படிக்கும் மாணவரின் முதற்கடமை என்பதை நினைவுகூர்க.

TNPSC- ல் கேட்கப்பட்ட கேள்வி

1. தமிழில் மிகப் பழைமையானது இலக்கண நூலின் பெயர் என்ன ?

2. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலின் ஆசிரியர் பெயர் என்ன ?

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad